Saturday, September 5, 2020

 

பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதன்

 

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நாட்டுப் பிரிவினை காரணமாகப் போர் நடந்த காலத்தில், தமிழ் நாட்டில், சேர நாட்டை அதியஞ் சேரலாதன் என்பவன் ஆண்டு கொண்டிருந்தான். அவன், பாண்டவர்களுடைய சேனைகளுக்கும், கௌரவர்களுடைய சேனைகளுக்கும். உணவு கொடுத்தான். ஆகையால், அவனுக்குச் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற பெயர் வழுங்குவதாயிற்று. இவனைப்பற்றி முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர் ஒரு பாடல் பாடி யிருக்கின்றார். அப்பாடல் புறநானூறுறென்னும் தமிழ் நூலில் இரண்டாவது பாடலாக இருக்கின்றது. அப் பாடலைக் கொண்டு இவனுடைய சிறந்த பெருமைகளை நன்கறியலாம்.

 

இம்மன்னவன், தன் பகைவர்கள் எத்துணைக் கொடிய துன்பங்கஜர்ச் செய்யினும், அவர்களை யழிப்பதற்குரிய சமயம் வரும் வரையிலும் பொறுத்துக் கொண்டிருப்பான். இவனுடைய பொறுமை பூமியைப் போன்றதாகும். எந்தச் செயலைச் செய்யத் தொடங்கினும், அதிலுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்தறிந்த பின்னரே செய்யக் தொடங்குவான். பரந்த அறிவுடையவன். இவனுடைய அறிவின் மிகுதிக்கு உதாரணமாக வானத்தைத் தான் கூறலாம். இவன் மிகுந்த மன வலிமையும் உடல் வலிமையும் உள்ளவன். அவ்வன்மைக் குக் காற்றை உவமானமாக உரைக்கலாம். தன்னோடு எதிர்த்துச் சண்டை செய்யும் பக்கவர்களை ஒரு நொடியில் அழிக்குந் திறமை யுடையவன். அவ்வகையில் இவனை நெருப்பிற்கு ஒத்தவன் என்று கூறலாம். மற்றும் யாரிடத்தும் இரக்கங்காட்டி அவர்களுக்கான நலங்களைப் புரியும் குணமுடையவன். இவனுடைய தண்ணனிக்குத் தண்ணீரையே உவமையாகக் கூறலாம். இவன் சோழ நாட்டையுந் தனதாட்சிக்குட்படுத்தி யாண்டு வந்தான். இவனுடைய நாட்டில் எப்பொழுதும் செல்வவளம் குறைவதில்லை. மேலும்மேலும் புதிய வருவாய்கள் வந்து கொண்டே யிருக்கும்.
 

இம்மன்னவனுடைய மந்திரிமார்கள், நட்பினர்கள் முதலிய சுற்றத்தார்கள், பால் புளிப்படைந்தாலும், சூரியன் இருண்டாலும், நால்வகையான மறைகளிற் கூறப்படும் உண்மையான ஒழுக்க நெறிகள் மாறுபட்டாலும், ஒரு சிறிதும் மாறுபடாத குணத்தை யுடையவர்கள்; இவர்கள் எப்பொழுதும் மன்னவனுடைய நன்மையிலேயே கண்னுங் கருத்துமாக இருப்பார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னர்களைப் பற்றிய மற்றைய வரலாறுகள் ஒன்றும் அறியக் கூடவில்லை.,

 

இவன் மீது முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவரால் பாடப்பட்ட பாட்டின் பொருளையும், அப்பாடலையும் படித்துணர்வதனால் இவன் வரலாற்றை யுணரலாம். -
 

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் பற்றிய பாடலின்
 பொருள்: -  

 

அணுக்கள் நிறைந்த நிலமும், அந்நிலத்தின் மேற்பாகமாகிய வானமும், வானத்தில் வீசிக் கொண்டிருக்கின்ற காற்றும், அக்காற்றுடன் நட்புடைய நெருப்பும், அந்நெருப்புடன் மாறுபட்ட நீரும் ஆகிய ஐவகைப்பட்ட பெரிய இயற்கைப் பொருள்களின் தன்மைகளைப் போல, பகைவர்கள் குற்றஞ் செய்தால் அக்குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும், எவற்றையும் ஆராயத்தக்க மிகுந்த அறிவும், உடல் வலிமை மனவலிமைகளும், பகைத்துப் போர் செய்ய வந்த பகைவரை அழிக்குந் திறமையும், தம்மை விரும்புவோரைக் காப்பாற்றும் தண்ணளியும் உடையவனே! உனது ஆட்சிக்குட்பட்ட கீழ்கடலில் எழுந்த சூரியன், மீண்டும் நினது ஆட்சிக்குட்பட்ட வெண்மையாகிய அலைகளையுடைய பல நீர் கலந்ததாகிய மேற்கடலிலேயே மறையும் படியானதும், புதிய வருவாய்களை யுடையதும் ஆகிய நல்ல நாட்டிற்குத் தலைவனே! வான வரம்பன் என்னும் பெயருடையவனே! பெருமையுடையவனே! நீ அசைகின்ற பிடறி மயிருள்ள குதிரைகளையுடைய பாண்டவர்கள் ஐவருடன் சினந்து, நாட்டைத் தமதாக்கிக் கொண்ட அழுகிய பொலிவு பெற்ற தும்பைமலர் மாலை யணிந்த கௌரவர்கள் நூற்றுவரும் சண்டை செய்து அதனால் அக்கூட்டத்தார் போர்க்களத்தில் இறக்கும் வரையிலும், அவ்விருவர் படைகளுக்கும், மிகுந்த சோறாகிய நல்ல உணவைக் கணக்கில்லாமற் கொடுத்தவனே! பால் புளிப்படைந்தாலும் சூரியன் இருண்டாலும், நான்கு மறைகளிலும் கூறப்பட்ட உண்மை வழிகள் மாறுபட்டாலும், ஒரு சிறிதும் வேறுபடாத துணைவர்களுடன் எப்பொழுதும் நீண்ட நாட்கள் புகழுடன் அழிவில்லாமல் வாழ்வாயாக! பாறைகளில், சிறிய தலையையுடைய கன்றுகளுடன் பெரிய கண்களையுடைய பெண்மான்கள், அந்திக் காலத்தில் பிராமணர்கள் தங்களுக்குரிய அரிய கடமையைச் செய்யும் மூன்று தீயாகிய விளக்கில் தூங்கிக் கொண்டிருக்கும். அழகிய சிகரங்களையுடைய இமயமலையைப் போலும், பொதியமலையைப் போலவும் நிலைத்து வாழ்வாயாக. மேற்கூறிய பொருளையுடைய பாடல் வருமாறு.

 

மண்திணிந்த நிலனும்,

நிலன் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்,

வளித்தலை இய தீயும்

தீ முரணிய நீரும் என்று ஆங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்,

போற்றார்ப் பொறுத்தலும்,

ஆழ்ச்சியது அகலமும். வலியும்,

தெறலும், அளியும் உடையோய்!


நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நல்நாட்டுப் பெரும்!
வானவரம்பனை! நீயோ! பெரும்!
அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினை இ
நிலம் தலைக் கொண்ட பொலம்பூம் தும்பை
ஈர்ஐம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெரும் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

பா அல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேதம் நிலைதிரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண்விளங்கி
நடுக்கின்றி நிலியர் (ஓ அத்தை) அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெரும் கண் மாப்பிணை,
அந்தி, அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமையமும் பொதியமும் போன்றே


 விளக்கவுரை.

 

பொறுக்குந் தன்மை நிலத்திற்குரியது. அளவு கடந்த விரிவானது வானம். காற்று வலிமையுள்ளது. தீ எதனையும் அழிக்குந் தன்மையுடையது. குளிர்ந்த தன்மையுடையது நீர்.

 

திணிந்த - நிறைந்த, தைவரு - தடவி வருகின்ற அதாவது வீசுகின்ற, வளி - காற்று, தலை இய - கலந்த. தலை இய என்பதில் ஐகாரம் அளபெடுத்தது, உயிரளபெடை, முரணிய - மாறுப்பட்ட, போற்றார் - பகைவர், சூழ்ச்சி -ஆராய்ந்து அறிதல்; தெறல் - அழித்தல். அளி - இரக்கம்; வெண்தலைப் புணரிக்குட கடல் - வெண்மையான அலையையுடைய பலநீர்கள் கலந்ததாகிய மேற்குச் சமுத்திரத்தில். யாணர்வைப்பு - புதிய வருவாய்களையுடைய இடம். நீயோ என்பதில் ஓ அசை; உளை - பிடறி மயிர்; சினைஇ - கோபித்து; தலைக்கொண்ட - முழுவதையும் தமதாக்கிக்கொண்ட. பதம் - உணவு. சுற்றம் -அமைச்சர், நண்பர் முதலியவர்கள். சேண் - நீண்ட நாட்கள். நடுக்கின்றி -அழிவில்லாமல். ஓ, அத்தை, இரண்டும் அசைச் சொற்கள். நவ்வி - மான்கன்று. மாப்பிணை - பெண்மான். இறுக்கும் - செய்யும். முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம் தெட்சணாக்கினி என்பன. துஞ்சும் - தூங்கும்.

 

சாமி. சிதம்பானார் எழுதுவது

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஜனவரி ௴

 

 

 

 

No comments:

Post a Comment