Saturday, September 5, 2020

 

பெரியோர்?

 

 கல்வி கேள்விகளாலாகிய நுண்ணூர்வு, அடக்கம், அன்பு, அருள், பரோபகாரம், மனோதிடம், சாந்தம், இனியவைமொழிதல், பிழை பொறுத்தல், தீங்கிழைத்தவர்க்கும் நலம் புரிதல், சுய நலத்தினும் பொதுநலத்துற்சாகம், உலகநடை யறிதல் முதலிய சற்குணங்கள் நிலைக்கப்பெற்று, அவ்வுத்தம குணங்களைத் தமது நித்திய ஒழுக்கத்தில் புலப்படுத்த வல்லவரே, பெரியோரென்னும் பதவிக்கு உரியோராவர். அவர்தம் பெருமை அளவு கடந்தது. அதிவிருஷ்டி (பெருமழை), அனாவிருஷ்டி (மழை பெய்யாமை), பெருங் காற்று, பெருநெருப்பு, பெரும்பிணி என்னும் தெய்வச்செயல்களால் நேரக்கூடிய துன்பத்தையும், பகைவர், கள்வர், சுற்றத்தார், ஏவலாளர் என்னும் மக்களால் நேரக்கூடிய பொல்லாங்கையும் முன்னதாகவே அறிந்து, அவை நேராதபடி அவற்றைத் தடுக்கத்தக்க சாமார்த்தியம் வாய்ந்தவர் அவரே. தெய்வச் செயலால் வருந்தீங்கை உற்பாதங்களாலுணர்ந்து தெய்வங்களையும் தக்கவர்களையும் நோக்கிச் செய்யும் சாந்திகளாலும், மக்களால் வரும் துன்பை அன்னோரது குணம், குறி, ஆகாரம் (குறிப்பின்றி நிகழும் வேறுபாடு), செயல் என்பவற்றாலுணர்ந்து, சாம, பேத, தான, தண்டம் என்கிற சதுர்வித உபாயங்களாலும் மாற்றுதற்கான ஆற்றல் பெரியோரிடமே குடிகொண்டிருக்கிறது. உயர்வு தாழ்வு, விருப்பு வெறுப்பு முதலிய உடன்பாடு எதிர்மறை இரண்டும் அவர்க்கு ஒன்றேயாம். வினைப்பயனால் உண்டாகும் சுகதுக்கங்களை அவர்கள் பொருட் படுத்துவதில்லை.

 

செல்வமுடையவர்க்குக் கள்வராலும், அரசர்க்குப் பகைவராலும், பிராணன்மீது நோக்கமுள்ளவர்க்கு எமனாலும் விளையக்கூடிய பயம் எப்போதுமுண்டு. இத்தகைய பயம் பெரியோரிடம் இல்லவே இல்லை. மற்றும், மனவிரக்கம் அவர்கள் பால் மிகுதியும் உண்டு. அது வஞ்சகரிடத்து மிருக்கின்றதே என்றாலும், வஞ்சகரிடத்திலுள்ள இரக்கம் மாதர்களைக் காதலிக்கும் போதுண்டாவது; பெரியோர்களுடையதோ பகவானுடைய அருட்கண்ணோக்கத்தைச் சார்ந்ததாம்.

 

அன்றியும், யௌவனத்தால் நிகழ்தற்பாலனவாய் இடையூறுகளை எளிதிற் கடக்குந் திறத்தைப் பெற்றவரே புருஷர். அவர்களே யாவரும் வணங்கத்தக்க பெரியோர். இப்பெரியோர் குடும்ப வியாபாரத்தில் கட்டுண்டிருக்கும்போது கிடைத்தவை யெவையோ அவற்றைத் திருப்திகரத்துடன் புசித்து வருவர்; கிடையாத பொருட்கு வருத்தப்படுவதில்லை. இது அவர்களது சுபாவீகம். எத்தன்மையான இடுக்கண் நேர்ந்தாலும் அவர்கள் தங்களுடைய நற்குணத்தைக் கைவிட மாட்டார்கள். அவர்களுடைய வாய்ச் சொல்லைக் கேட்கக் கேட்கக் கொதிப்புள்ள மனமுங் குளிர்ச்சியடையும்.

 

உலகத்திற் காணப்படும் வஸ்துக்கள் பலவற்றிலும், பூமி, கடல், மலை என்பவை பெரியவை. இம் மூன்றினும் * பெரியவையோ, முறையே காலத்திற்செய்த சிறு நன்றி, பிரதிபலனை எதிர் நோக்காத உதவி, மேற்கொண்ட நெறியினின்றும் பிறழாது அடங்கும் உயர்வு என்பனவாம். இப்பெருங்குணங்களைத் தம்மிடம் நடைபெறக் கொண்டிருத்தலால், பெரியோர் இவற்றினும் பெரியோராவர்.

*     "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
 ஞாலத்தின் மாணப் பெரிது.''


 "பயன்தூக்கார் செய்த வுதவி நயன் தூக்கின்
 நன்மை கடலிற் பெரிது.''


 “நிலையில் திரியா (து) அடங்கியான தோற்றம்
 மலையினும் மாணப் பெரிது."

 

 என்னுங் குறள்கள் ஈண்டறியத்தக்கன.

 

ஆபத்தான காலத்தில் செய்யப்பட்ட நன்மை அணுவாயினும், காலத்தை நோக்க அது மகத்தாகத் தோன்றுதலால், அதன் அளவு பூமியின் அளவிற்கும் மேற்பட்டதென்று கூறப்பட்டது. இவ்வுண்மையை யுணருந்தன்மை பெரியோர்க்கேயுண்டு.

 

“னைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்றெரிவார்."

 

என்று தமிழ்மறை பறை யறைகின்றது.

 

அல்லாமலும் பூமியின் விசேஷ குணம் பொறுமை. தன்னைத் தோண்டுதல், மிதித்தல், அசுத்தப்படுத்தல் என்னுந் தொழிலைத் தனக்குச் செய்கின்ற மக்களிடத்தும் தான் பொறுமை பாராட்டி அவர்களை வீழாதபடி தாங்கி நிற்கின்றது. அவ்வண்ணமே பெரியோர் தமக்குக் கேடு நாடினார்க்கும் பொறுமையோடிருந்து நன்மை புரிவர். அதனால் சேதனரான அவர் பெரிதாகிய அசேதன பூமியியினும் பெரியராவர்.

 

பின்னரும் அவர், எவ்வாறு சமுத்திரமானது பேராழங்கொண்டு கரையின்றியே கரையுள்ளது போலக் கட்டுப்பட்டிருக்கின்றதோ, அவ்வாறு சகலவல்லமை பெற்றிருந்தும் சாதாரண மக்களைப் போன்றே அம்மக்களுடன் கலந்திருந்து வேண்டும் நன்மைகளைச் செய்து வருவர்.  

 

இதனால் அவர் கடலினும் பெரியராவர். இன்னும் அவர், மலை எவ்விதம் கலங்காத நின்று கம்பீரமான தோற்றத்துடன் விளங்கு கின்றதோ அவ்விதமே உலகவியலுக் கசையாமலும் தமது நிலையிற் றளராமலுமிருந்து தானாகவே உண்டாகும் புகழ்க்குரிய காட்சியுடன் சஞ்சரிப்பர். தனக்குதவி நாடாது பிறர்க்குதவி செய்தலையே மேகம் விரும்புவது போலப் பெரியோரும் தமது நலனைக் கவனியாமல் பிறர் நலனைப் போற்றுவதிலேயே கருத்தாயிருப்பர். பகவானுடைய திருமேனியின் அமைப்பையும், பத்துத் திசைகளையும், ஐம் பெரும் பூதங்களின் தன்மையையும், அறிவின் மாட்சியையும், பேசும் பேச்சின் திறத்தையும், சமயங்களின் பிணக்கையும் அளவு படுத்தல் அசாத்தியமாவது போல, பெரியோரின் மகத்துவத்தையும் முடிவிட்டுப் பேச எவராலும் முடியாது.

 

இப்படிப்பட்டவரான பெரியோருடைய இணக்கத்தை நாம் பெறுவதற்கு முயற்சி செய்தல் வேண்டும். அப்போதுதான் நாம் சிறப்பை யடைவோம். பாற்கடல் கடைந்த போதுண்டாகிய படு விஷம் சிவபிரானது திருமிடற்றை யடைந்தல்லவா சிறப்புற்றது. ஆகையால் நாமும், பரிசுத்தவுள்ளத்தரான பெரியோரைச் சேர் வோமானால் அன்பின் வசத்தராவோம். அவ்வன்பினால் நல்லறிவு சித்தித்து மேன்மை யுறுவோம்.

 

"நல்லாரிணக்கமும் நின் பூசை நேசமும் ஞானமுமே, யல்லாது. வேறு நிலை யுளதோ? " என்றனர் பட்டினத்தடிகளும், இன்னும் பெரியோர், தம்மை யடைந்தவரை, நன்மார்க்கத்திற்றிருப்புவர்; சுவர்க்காதி பதவிகளிற் புகுத்துவர்; ஆதலின் இத்தகைய பெரியோரின் நேயத்தை நாம் அவசியம் கைக்கொள்ளுதல் வேண்டும்.

 

அப்படி நாம் பெரியவரைச் சேர்ந்து வாழ்வதை விடுத்து அவரைக் குறை கூறுவோமானால் அது, நமக்கு மிகுந்த தீங்கை யுண்டாக்கிவிடும். பெரியோர் நிந்தை யுடையார் எப்பொழுதும் கடைத்தேறுதல் முடியாது.

 

இஃதிங்ஙனமிருந்தும் தற்காலத்தில் சிலர் வரன் முறையான கல்விப்பயிற்சி யில்லாமையாலோ, தற்புகழ்ச்சியின் விருப்பத்தாலோ, தனச் செருக்காலோ, குலப்பெருமையாலோ, தமக்கு மிஞ்சினாரில்லை யென்னுந் துணிவாலோ, வேறெவ்வகைக் காரணத்தாலோ, முன்பின் பாராது நிரபராதியரும் அறிவாளருமாகிய பெரியோரைத் தம் மனம் போனவாறே யிகழ்ந்துரைக்கவும், பரிகசிக்கவும், தாம்பிடித்த முயலுக்கு மூன்றேகாலெனச் சாதிக்கு முறைமையில் நின்று பேசவும் துணிகின்றனர்.

 

இஃதவர் எவ்வகையிலும் முன்னேற்றமடைதலின்றிப் பிற்போக்குடையராதற்கும், தீக்கதியுட் சேர்தற்கும் உரிய கருவியாகுமே யன்றி அவர்க்கு எத்தகைய நற்பயனையுமளிக்காது. இதனால் பெரியோர்க்குண்டாகும் இழி வொன்று மில்லை. அப்பெரியாரைப் பழிக்கும் அத்தற்புகழ்ச்சியுடையாரையே உலகத்தார் பலரும் இகழ்வர். அவர் இம்மை, மறுமை இரண்டிடங்களிலும் பயனிழந்தவராவர். ஆதலின், இன்னார் பெரியார்ப்பழித்தலை விடுத்து அவரின் தண்ணருள் பெற்றுக் கடைத்தேறுதற்குரிய பேரறிவினை இறைவன் இவர்க்குதவி யருளுவானாக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - மே ௴

 

 

No comments:

Post a Comment