Saturday, September 5, 2020

 

 

பெரியோர் இலக்கணம்

 

ஸ்ரீ விசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகராக எழுந்தருளியிருந்த உடையவரது முக்கிய சிஷ்யரான அனந்தாழ்வார் என்னும் பெரியாரொருவர் 'அடைபவர் தீவினைமாற்றி அருடரும்' திருவேங்கடமெனும் திருமலையில் பகவானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அவ்வேளையில், பட்டர் எனும் ஆசார்யர் ஒருவரின் சீடர் ஒருவர், திருமலையடைந்து 'ஸ்ரீ வைஷ்ணவ லட்சணம்' எப்படிப்பட்டது?' என்று அவ்வனந்தாழ்வாரைக் கேட்டலும், அவரும் அதனை அறிவிக்கின்றோ மென்று கூறி, ஆறுமாதகாலமாக தம்மிடத்தில் அவரை இருத்திக்கொண்டார். அது வரை அனந்தாழ்வார் திருமாளிகையிலேயே பணிசெய்து வந்த அச்சீடர், தமது வினாவுக்கு பதில்கிடைக்கும் நாள் எந்நாளோ என்று, எதிர்பார்த்துக்கொண்டு வந்தார். ஓர்நாள் அவ்வில்லத்தில் சில பெரியோர்கள் அமுது செய்யுமளவிலே, அனந்தாழ்வார் அச்சீடரை ஓரிடத்திலிராத படி பெயர்த்துப் பெயர்த்துப் பின்னடியிலும் இடம் போதாதென்று கிளப்பி அதன் பின்னடியிலே இருமென்று வைத்தாலும், அவரும் சற்று மனவருத்தமின்றி, மிக்க பொறுமையுடனும் மகிழ்வுடனும் பொழுதுபோகும் வரையில் உண்ணாது காத்திருந்தார். அவரது பொறுமை கண்டு அகம் மகிழ்ந்த அனந்தாழ்வாரும், அச்சீடரைத் தம்முடன் வைத்துக் கொண்டு அமுது செய்து, அவரை நோக்கி "நீர் இவ்விடம் போந்து நெடுநாளாயிற்று. இனி, உமது ஆசிரியர் பட்டரிடம் செல்வீராக'' என்று கூறி, ஸ்ரீ வைஷ்ணவலட்சணமாவது,

 

1.   கொக்கைப் போலிருக்கும்;

2. கோழியைப் போலிருக்கும்

3. உப்பைப் போலிருக்கும்;

4. உம்மைப் போலிருக்கும்;

 

என்று உபதேசித்து, விடை கொடுத்தனுப்பினார். அப்பொன்மொழிகளின் பொருளறியாத அச்சீடர் தமது ஆசிரியராய பட்டரை அடைந்து, அவற்றின் உட்பொருளை உணர்த்தியருளுமாறு வேண்டி நின்றார். அவரும் பின்வருமாறு அருளிச் செய்வாராயினர்:

 

1 கொக்கைப்போல இருத்தலாவது.

 

"கொக்கு, மிக்க வெண்மைநிறமாக இருப்பது போல ஸ்ரீ வைஷ்ணவன் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் கள்ளமின்றி, தூய்மைமிக்க உள்ளத்தை உடையவனாக இருப்பான் . மற்றும், அப்பறவை குளம் முதலிய விடங்களில் பொறுமையோடு காத்திருந்து சிறிய மீன்கள் கரைக்கு வரும் போதெல்லாம் அவற்றைப் புறக்கணித்து, தனக்கு விருப்பமான பெரிய மீன் கரையை அணுகியவுடனே, சடக்கெனக் கவ்விக் கொள்ளும் இயல்புடையது. அதுபோல, வைணவனும் தனது வாணாளில் நண்பர், உறவினர் முதலிய பலரோடுங் கலந்து பழக நேர்ந்தாலும், புளியும், அதன் ஓடும் போன்றும், தாமரையிலைத் தண்ணீர் போன்றும் அத்தகையவரோடு கலந்தும் கலவாது வாழ்ந்திருந்து, தன்னை உய்விக்கும் உத்தமரான சற்குரு வந்து தோற்றப்படில், அவரது சரணார விந்தங்களையே உபாயமாகப் பற்றிக்கொண்டு ("செவிக் குணவில்லாத போழ்து - சிறிது - வயிற்றுக்கு மீயப்படும் " - என்ற குறளுக்கிணங்க) வயிற்றுக் குணவு அளித்தலிலும், செவிக்கு விருந்தளித்தலே சிறந்ததென்பதை உணர்ந்து, அவ்வாசிரியரிடத்திலிருந்து, 'உயிர்க்கு உறுதிபயக்கும்' உண்மைப் பொருள்கள் பலவற்றையும் கேட்டு, நன்னெறி மேற்கொண்டு ஒழுகுவான்.


2. கோழியைப்போல இருத்தல்.

 

கோழியானது குப்பையைக் கிளறி, தனக்கு உணவாகக் கிடைப்பனவற்றை எடுத்துக்கொண்டு, தானும் உண்டு தனது குஞ்சுகட்கும் ஊட்டும் இயல்புடையது. அதுபோல, ஸ்ரீ வைஷ்ணவனும் பலவித குழப்பங்களை விளைவிக்கும் சாத்திரக் குப்பைகளைத் துருவியாராய்ந்து துன்பப்படாது, நான்மறைகளிலுள்ள அரும் பொருள்களை விவரிப்பனவும், மனதிற்குத் தெளிவான பொருள்களைப் போதிப்பனவும், பக்தியை ஊட்டுவனவுமாய திருவாய்மொழி முதலிய தமிழ் வேதங்களை ஓதி, அவற்றின் அர்த்த விசேஷங்களை அறிந்து தானும் ஆனந்தித்துப் பிறருக்கும் உபதேசித்து உள்ளம் உவப்பான்.

 

3. உப்பைப்போல இருத்தல்.

 

உப்பானது, ஒரு பதார்த்தத்தில் கலக்கப்பட்டபோது, தான் கரைந்து போய் விட்டாலும், அப்பதார்த்தத்தை உருசியுள்ளதாக்குகின்றது. மற்றும், தான் அழிய மாறியும் தன்னை உபயோகிப்பவர்கட்கு உவப்பை அளிக்கும். அதன் உருவமே அழிந்து, அப்பதார்த்தத்தில் இரண்டறக் கலந்து போய்விடும். அதுபோல, ஸ்ரீவைஷ்ணவனும் ஆடம்பர வாழ்வைத் துறந்து, தன்னை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக வாழ்ந்து வந்தாலும், தனது சீடர்கள் பெரும்புகழ் பெற்று விளங்குவதற்குக் காரணமாயிருப்பான். (பெரியநம்பிகளையும், அவரது சீடர் உடையவரையும், ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸரையும், அவரது சீடர் விவேகானந்த சுவாமிகளையும் நினைவு கூர்க.) மற்றும், தான் பல துன்பங்களை அனுபவித்தாலும், தன்னைச் சார்ந்தவர்களிடத்தில் மிக்க சந்தோஷமாகவே நடந்து கொள்வான். இவ்வாறு, கீர்த்தியையும் ஆடம் பரத்தையும் விரும்பாமல் (''பெருக்கத்து வேண்டும் பணிதல், சிறிய - சுருக்கத்து வேண்டும் உயர்வு'' - என்ற குறளுக்கிணங்க)' யான் எனது' என்னும் செருக்கை ஒழித்து, இறுதியில் இறைவனோடு இரண்டறக்கலப்பான'' - என்று பொருள் விளக்கி யருளினார்.

 

பின் பட்டரும் அச்சீடரை நோக்கி, அனந்தாழ்வார் திருமாளிகையில் நடந்த செய்தியைக் குறித்து வினவுதலும், அவரும் அங்கு நிகழ்ந்தனவற்றை விவரமாக விளம்பினார். அதன்பின், பட்டரும் கீழ்வருமாறு பகரத் தொடங்கினார்: –


4. உம்மைப்போல இருத்தலாவது:

 

"உம்மை அவ்விடத்தில் போஜனகாலத்தில், ஓரிடத்திலிராவாறு இடம் விட்டு இடமாகப் பலவிடங்களிலும் பெயர்த்துப் பெயர்த்து அலக்கழித்தும், கொஞ்சமும் மனவருத்தமின்றி மிக்க மகிழ்ச்சியோடும் பொறுமையோடும், நீர்பொழுது போகும் வரையில் காத்திருந்தீரன்றோ? அவ்வாறே, வைணவனும் தன்னைப் பிறர் எவ்வளவு துன்புறுத்தினாலும் ("இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்-'' என்ற குறளுக்கிணங்க) சிறிதளவும் சினமேனும் வருத்தமேனும் கொள்ளாது, பொறுமையோடு சகித்திருந்து, தன்னைத் துன்புறுத்தியவர்களையும் வெட்கச் செய்வான்.''

 

குறிப்பு: - இவை, மணிப்ரவாள நடையிலுள்ள 'ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்' என்னும் சிறு நூலிலிருந்து, நண்பர்கட்குப் பயன்படுமாறு பற்பல சீர் திருத்தங்களோடு எளிய நடையில் எழுதப்பட்டது.


 ஆ. வ. பதுமநாபபிள்ளை,

"திருமகள் நிலையம்" ஆரியூர்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஜுன் ௴

 




.

No comments:

Post a Comment