Saturday, September 5, 2020

 

பேதைமை

பேதைமை யென்பது யாதெனில்,

 
 “பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்
 டூதியம் போக விடல்

 

என்ற திருக்குறளிற் கூறியபடி, வறுமை, பழி, பாவம் முதலிய கேடுகளை யுண்டாக்கத்தக்க செய்கைகளைக் கைக்கொண்டு, செல்வம், புகழ், தர்மம் முதலியவற்றை யுண்டாக்கும் காரியங்களைக் கைவிடுதலாம். இத்தகைய குணமுடையார், குற்றியை மனிதனென்றும், இப்பியை வெள்ளியென்றும் கருதுவார்போல், தீமையை நன்மை யென்று கருதும் இயல்புடையவராதலின், பயனற்ற பிறப்புடையவராவர். இவர்கள் இத்தகைய விபரீதவுணர்ச்சியால், மனிதர்க்கு நன்மைதருதற்கு இன்றியமையாதனவாகப் பெரியோர்களால் வகுக்கப்பட்ட நூற்கருத்துக்களின் உண்மையை உணராமல் அவற்றை வெவ்வேறு வழிகளிற்றிருப்பித் தங்கள் மனப்போக்குக்குத்தக்க அபிப்பிராயங்களைக் கொண்டு இடர்ப்பாடுறுவர்; நன்மை தருபவைகளை யெல்லாம் கேடுதருபவைகளாக்கிக் கொள்வர்; இம்மை மறுமைப் பயன்களையிழப்பர்; பலராலும் இகழப்படுவர். இவர்கள், கல்வியைக் கற்றாலும், அறிஞரோடு பழகினாலும், இவர்களுக்குப் பிறப்பிலேயே இத்தகைய பேதைமைக் குணம் அமைந்திருப்பதனாலே நல்லுணர்ச்சி யுண்டாவதில்லை. இவர்களுடைய இயற்கை யறியாமையானது கல்வியையும் பேதைமையான வழியிற்றிருப்பி, அறிவையும் மழுக்கமடையச் செய்து, செய்கைகளையும் பயனற்ற செயல்களாகவே மாற்றிவிடுகின்றது. இத்தன்மை, தற்கால நாகரீக மயக்கத்தால் மனிதரிடம் தோன்றியிருக்கின்றது. அத்தோற்றத்தால் உண்டாகும் விபரீதச் செயல்களோ மிக்க விநோதமானவை; அறிஞர் வெறுக்கத்தக்கவை; உலகச் சிறப்பை வேரறக் களையக்கூடியவை; தம்மைச் செய்வார்க்கு இம்மையில் இகழ்ச்சியையும், மறுமையில் தீக்கதியையும் உண்டாக்கக்கூடியவை. எனினும், அவற்றை அநேகர் விருப்பத்துடன் செய்தே வருகின்றனர். எவ்வாறெனில்,

 

நம்பெரியார், மனிதர் நற்கதியடைதற்கு ஆலய சேவை, தீர்த்தயாத்திரை முதலியவற்றை ஏற்படுத்தி அவற்றிற்குரிய திருவிழாக்களையும் வகுத்திருக்கின்றனர். இவற்றின் முக்கிய நோக்கமாவது மனிதர் தேவசிந்தனையோடு சென்று, தீர்த்தஸ்நானஞ்செய்து, தெய்வத்தைத் தொழுது, கடவுள் கிருபை பெற்று வரவேண்டுமென்பதே பெரும்பான்மையோர் தங்கள் பேதைமையால் இவ்வுண்மைக் கருத்தினை யுணராமல், தீர்த்தயாத்திரைக்கோ, சுவாமி தரிசனைக்கோ செல்லும் போது, புறப்படுவதற்கு முந்தியே, "நாம் இன்ன இன்ன இடங்களில் இறங்க வேண்டும்; இன்ன இன்ன சாப்பாடு செய்ய வேண்டும்; முதல் நாள் மோர்க்குழம்பு வைக்க வேண்டும்; அங்கே நல்ல பிஞ்சுக்கத்தரிக்காய் கிடைக்கும்; இரண்டாநாள் கத்தரிக்காய்ச் சாம்பார் வைக்க வேண்டும்; மூன்றா நாள் சர்க்கரைப் பொங்கல் செய்ய வேண்டும்; நடுவில் இன்ன இன்ன இடங்களில் காப்பி பலகாரம் செய்து கொள்ள வேண்டும் " என்று நேரங்களையும், சாப்பாடுகளையும் குறித்துக்கொண்டு அவ்வாறே ஆங்காங்குச் செய்து, தீர்த்தமாடும் போதும், சுவாமிதரிசனஞ் செய்யும் போதும், அவைகளே முக்கியமானவைகளாயிருந்தும் அவற்றில் அதிக மனப்பற்றுதலின்றி, " சீக்கிரம் ஸ்நானஞ் செய்யுங்கள்; சீக்கிரம் சுவாமி தரிசனம் முடிய வேண்டும்; இவற்றில் நேரத்தைப் போக்கிவிட்டால் சாப்பாடு தட்டுக் கெட்டு விடும்'' என்று ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு தீர்த்தத்தில் ஒரு முழுக்கு முழுகிவிட்டுக் கோவிலுக்குப் போய்ச் சுவாமிக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுச் சாப்பாட்டிலும், வேடிக்கையிலும், விநோதங்களிலும் பொழுது போக்கிவிட்டு வீட்டிற்குத் திரும்புகின்றனர். இவர்களிடம் தெய்வ சிந்தனை சிறிது மிருப்பதில்லை. இவர்கள் பேச்சில் மாத்திரம் மிகுந்த தெய்வபத்தி யுடையவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள்.

 

உண்மை யுணர்ந்த மகாஞானிகளெல்லோரும், ''சமய கோடிகள் எல்லாம் தம் தெய்வம் எம் தெய்வமென், றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றது.....'' என்ற தாயுமானார் அபிப்பிராயத்தின்படி, '' கடவுள் ஒருவரே பல் வேறு சமயத்தினர்க்கும் அவரவர் தெய்வமாகவும் விளங்குகிறார்' என்ற உயர்ந்த ஞானத்தைப் போதித்துங் கூடச் சிலர், அதை விட்டு ஒவ்வொருவர்க்கும் தனித்தனியே ஒவ்வொரு தெய்வ மிருப்பதாக நினைத்துத் தங்கள் மதமும் தெய்வமுமே உயர்ந்தன வென்றும், மற்ற சமயங்களும் தெய்வங்களும் தாழ்ந்தவை யென்றும் பலரோடு தர்க்கஞ் செய்து பேதைமைக் குணத்தால் பெரும்போர் தொடுக்கின்றனர். தங்கள் மதக்குறியீடுகளை அலங்காரமாக அணிந்து புகழ்ந்து மற்ற மதக்குறியீடுகளை இகழ்ந்துரைக்கின்றனர். பிறமதத்தினரையும், கொள்கைகளையும் திட்டுவதுதான் தங்களுடைய தெய்வவணக்கமென்று கருதியிருக்கின்றனர். இப்பேதைமைத் தர்க்கமுடையார்க்கு எப்பொழுதும் சண்டையில் கருத்திருப்பதன்றி எட்டுணையும் தெய்வபக்தியில் இருப்பதில்லை.

 

மனிதர், தெய்வங்களை வழிபட்டுய்யும் பொருட்டு மேலோர் பற்பல விரதானுஷ்டானங்களை வகுத்திருக்கின்றனர். இந்த விரதங்களின் முக்கிய நோக்கம் தெய்வ சிந்தனையை மனத்தில் அதிகமாகக் கொள்வதே. அப்படியிருந்தும் பெரும்பான்மையோர் அவ்விரதங்களை வேறுவிதங்களில் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்; தெய்வபக்தியைச் சிறிதும் கருதாமல் உயர்ந்த சாப்பாடுகளும், பலகாரவர்க்கங்களும் செய்து சுவாமிக் கென்று பேர் பண்ணிச் சாப்பிடுவதும், குளித்து மடிகட்டிக் கொள்வதும், பிறரைத் தீண்டாமலிருப்பதுமே விரதமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு நினைத்து, "இன்றைக்குத் தித்திப்பு வடை சுடவேண்டும்; மிளகுப் பொங்கல் செய்ய வேண்டும்; சேமியா பாயசம் பண்ணவேண்டும்; பன்னிரண்டு மணிக்குள்ளாகவே படையல் போடவேண்டும்; நான் மடி; என்னை எவரும் தொட்டுவிடாதீர்கள்" என்று ஒருவரிடமொருவர் சொல்லிக் கொண்டு இவற்றிலேயே புத்தியைச் செலுத்தித் தெய்வ சிந்தனை சிறிதுமின்றி ஒவ்வொன்றையும் செய்துமுடித்து, 'நேரமாய்விட்டது; பசிக்கிறது; சீக்கிரம் ஆகட்டும்" என்று அவசரமாகத் தெய்வ படத்துக்கு முன்னே அவற்றை இலையில் வைத்துப் படைத்து ஒப்புக்குக் கற்பூரங் கொளுத்திக் காட்டிவிட்டு எல்லாவற்றையும் தின்று ஏப்பமிடுகிறார்கள். ஒரூரில் ஒரு பெண், விரதத்திற்கு மடிகட்டிக் கொண்டிருந்த பொழுது நோயிற்கிடந்த அவள் கணவன் உயிர் நீங்கும் சமயத்தில், அவளை அருகில் அழைத்ததாகவும், அவள் நான் மடி கட்டிக் கொண்டிருக்கிறேன்; என்னை நீங்கள் தொடலாகாது' என்று சொன்னதாகவும், உடனே அவனுயிர் அந்த ஏக்கத்துடன் நீங்கிவிட்டதாகவும் நாம் ஒரு வர்த்தமானம் கேள்விப்பட்டிருக்கிறோம்; கணவனுக்கு மனத்திருப்தியை உண்டாக்குவதே இவளுக்குரிய விரதமென்பதை இவள் உணராமல் மடியோடிருப்பதே மகாவிரதமென மதியீனத்தால் கருதினாள். ஏகாதசியில் தெய்வசிந்தனையில் புத்தியைச் செலுத்தித் தூக்கமின்றியிருப்பதால் தேவானுக் கிரகமுண்டென்று பெரியோர்கள் கூறியிருக்கச் சிலர் அவ்வுண்மைக் கருத்தினையுணர்ந்து, தெய்வபக்தி செலுத்துவதிலும், புண்ணியக் கதைகளைப் படிப்பதிலும் கண் விழிக்காமல் எவ்வகையினாலாவது தூக்கம் விழிப்பது புண்ணியமெனக் கொண்டு நாடகங்களிலும், பயாஸ்கோப்பிலும், சூதாட்டத்திலும், வேறு தூர்த்தச் செயல்களிலும், ஊர் சுற்றுவதிலும், இரவைக்கழித்து ஒரு பயனுமற்று இருகண்ணும் விழித்திருக்கின்றனர்.

 

உலகத்தில் ஊதியந்தேடுவதற்கு உயர்ந்த பல வழிகளைப் பெரியார் வகுத்திருக்க, சிலர், அவற்றையெல்லாம் பைத்தியக்காரத்தனமான மார்க்கங்களென்று ஒதுக்கித்தள்ளி விட்டு அதிகப் பணத்தைச் செலவு செய்து டிராமா, பயாஸ்கோப் முதலிய வேடிக்கைத் தொழில்களை நடத்தி நஷ்டமடைந்து வறுமைக்குள்ளாகின்றார்கள்; வேறு பல ஈனத்தொழில்களையும் ஏற்றமான தொழில்களென்று நினைத்துச் செய்து இழிவடைகின்றனர்.

 

இன்னும் பலர், நாங்கள் ஜீவகாருண்யக் கொள்கையுடையவர்கள்' என்று சொல்லிக்கொண்டே தங்களுக்கு மாறுபட்ட கக்ஷியினரோடு வம்பிட்டுச் சண்டை தொடுத்து அவர்களை ஹிம்சித்துப் பிராணாபத்துக் குள்ளாக்கி விடுகிறார்கள்.

 

சில சமயத்தினர் எங்கள் மதம் மகாசாந்தியுடையதென்று சொல்லிக் கொண்டே பிறமதத்தினரோடு மதச் சண்டையிட்டு உயிர்க் கொலை புரிகின்றனர்.

 

கல்வியில் தேர்ந்த பெரும்புலவர், எல்லா மத நூல்களையும் வேற்றுமை பாராட்டாமீற் கற்றுணர்ந்து அவற்றிலுள்ள நுண்பொருள்களை யுணர வேண்டியது அவர்களுடைய கடமையாயிருக்க, சிலர், தாங்கள் சிறந்த புலவர் என்று சொல்லிக்கொண்டு பிறமத நூல்கள் உயரிய கருத்துடையனவாயிருப்பினும் அவற்றைக் கையாலும் தொடக்கூடாதென்றும், கண்ணாலும் பார்க்கக் கூடாதென்றும் சொல்லி அவ்வாறே அவற்றை ஆராயாமல் அவற்றின் உயர்பொருள்களின் உணர்ச்சியற்றவர்களாயிருந்து, பொருள் நயத்துக்காக அவற்றை ஆராயும் அறிவுடையாரையும் அந்த அந்த மதத்தில் சார்ந்து விட்டார்கள் என்று இழித்துக்கூறி, ''ஐயா! நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள்?" என்று கேட்டுப் பரிகசித்துத் தாங்கள் சாமர்த்தியத்தோடு பேசிவிட்டதாக நினைத்து வீண் மகிழ்ச்சியடைந்து தங்கள் பேதைமையைக் காட்டுகிறார்கள்.

 

சிலர், சுதேச பாஷாபி விருத்திக்கென்று சங்கங்களையும், கூட்டங்களையும் நடத்தி அவற்றில் பேசுங்காலத்தில், குறித்தகாரியத்தை விட்டுத் தாங்கள் பிறரால் உபகாரம் பெறும் பொருட்டு அவர்களை முகஸ்துதியாகப் பேசத்தொடங்கி அளவற்றுப் புகழ்ந்து பேசுகிறார்கள்; அவர்களை உயர்த்திக் கூறுதற்கு வேறு பலரை இகழ்ந்துரைக்கின்றனர்; புறமதத்தினரையும், அவர் நூல்களையும் நிந்திக்கிறார்கள்; 'அவையல்கிளவி மறைத்தனர் கொளலே' என்ற நியாயத்தை உணராமல் இடக்கர் மொழிகளையெல்லாம் எடுத்து வழங்குகின்றனர்; முன்னோரின் உயர்ந்த கருத்துக்களையெல்லாம் பொருத்தமற்றன என்று தங்கள் குறுகிய நோக்கத்தால் மாற்றிப் புதிது புதிதாக எதை யெதையோ பேசுகின்றார்கள்; சரித்திரங்களை மனம் போனவாறே ஆதாரமின்றி மாற்றுகின்றார்கள்; எழுத்துக்களின் பேதத்தையும் உணராத எண்ணிறந்த பாமரரால், கண்ணால் பார்க்கத்தகாத விதத்திலும், காதால் கேட்கத் தகாத விதத்திலும் எழுதியும் பேசியும் கெடுக்கப்பட்டுச் சீர்குலைந்து வரும் தமிழை, எழுத்துப்பிழை யின்றியாவது எழுதும் நிலைமைக்குக் கொண்டுவர வேண்டிய முயற்சியை எடுத்துக்கொள்ளாமல் அதை அந்நிலையிலேயே விட்டு, மொழிப் பிரிவு கணிகளையும், வேறு ஏதோ நூதன முறைகளையும் ஏற்படுத்திக் கொண்டு தர்க்கமும் போரும் விளைவித்து வருகின்றனர். புதுத்துறைகளால் செய்யுள் இயற்றும் வழக்கத்தைப் போக்கியும், பண்டைச் செய்யுட்களை மாற்றியும், இலக்கணவிதிகளை மனம் போனவாறே திருப்பியும், பொருள்களை விபரீதப்படுத்தியும், பிரயோகிக்கத்தகாத சொற்களைப் பிரயோகித்தும் தமிழின் இயற்கை உயர்வைச் செயற்கையால் தாழ்த்திவிடுகின்றனர்.

 

பெரியோர்களாயிருப்பவர்கள், எப்பேர்ப்பட்ட மனிதர்களிடத்திலும் உண்டாகும் கெட்ட செயல்களைக் கண்டிப்பது நியாயமாயிருக்கச் சிலர் பெரியோர்களெனப் பட்டம் வகித்துக் கொண்டு, தங்களுக்குச் சகாயம்புரியும் சிலரிடமுண்டாகும் குற்றங்களைக் கண்டிக்காமல், மற்றவர்களை மாத்திரம் (அவர் சிறு குற்றம் செய்தவிடத்தும்) கண்டித்துக் கொண்டு வருகிறார்கள். தாங்கள் இச்சகம் பேசிச் சிநேகங் கொண்டிருப்பவர்களிடம் உள்ள குற்றத்தைப் பாரபக்ஷமின்றிக் கண்டிக்கும் அறிஞரையும் கண்டிக்கிறார்கள்.

 

சிலர், உலகத்தைச் சீர்திருத்தும் துறையிலிருப்பதாகப் பேர்பண்ணிக் கொண்டு, அதற்குரிய கல்வி, பெரியோர் கருத்துக்களையேற்றல் முதலியன இன்றித் தப்புந்தவருமான தமிழை எழுதி அதுதான் உயர்ந்ததெனக் காட்டுகிறார்கள்; எழுதத் தெரியாதவர்கள் எழுதிய உபயோக மற்ற விஷயங்களை யெல்லாம் உயர்ந்தவையென்று உரைக்கின்றனர்; உயர்ந்த கல்வியாளரால் எழுதப்படும் விஷயங்களை யெல்லாம் உளுத்த கட்டை என்று கூறுகின்றனர். சிலர், உயர்ந்த கல்விகற்பதாகப் பெருமை பாராட்டிக்கொண்டு தமிழ் வருஷப் பெயரும், மாதப் பெயரும், நக்ஷத்திரப் பெயரும், திசையும் கூடத் தெரியாத கல்வி கற்கின்றனர்.

 

முற்காலத்தில், ஜனங்களுக்குத் தெய்வபக்தி யுண்டாகுமாறு மனப்பரிசுத்தமுடைய பாகவதர்களால் பக்தர்களின் சரிதைகள் மிக உருக்கத்தோடு பாராயணஞ் செய்யப்பட்டுவந்தன. இப்போது பக்தஜன சபையார் எனப் பேர்வைத்துக் கொண்ட சிலர், பார்வைக்கு அழகாயிருப்பவர்களும், பாகவதத்தன்மைக்குப் பொருந்தாதவர்களுமாகிய சில பெண்மணிகளையும், சில ஆடவசிங்கங்களையும் சத்கதா காலக்ஷேபத்துக்கென்றேற்படுத்தி அதை வேடிக்கைத் தொழிலாக மாற்றி வருகின்றார்கள். அதன் உண்மைக்கருத்தை வேரறக்களைந்து விட்டார்கள். உண்மைப்பாகவதர் தங்களுக்குக் காலக்ஷேபமின்றிக் கண்கலங்கி நிற்கின்றார்கள்.

 

சிலர், உலகத்தவர்க்கு அறிவுறுத்துவோராக முற்பட்டு நின்று, ''நீதிசாஸ்திர வுரைகளை எழுதுவதும் சொல்வதும் பண்டைக்காலத்துப் பைத்தியக்காரர்களின் கொள்கை; புதிது புதிதாக உலக அனுபவஞானத்தை எடுத்துச் சொல்லவேண்டும்' என்று பெருமை பேசி, "பால் வெண்மையாயிருக்கும்; காக்கை கருமையாயிருக்கும்; கண்ணாடியில் முகந்தெரியும்; தேன் தித்திக்கும்; வேப்பெண்ணெய் கசக்கும்; சண்டைக்காரி சண்டை போடுவாள்; பிச்சைக்காரன் பிச்சை யெடுப்பான் " என்பன போன்ற விஷயங்களை வெகு அருமையானவைகளென்று வெளிப்படுத்துகிறார்கள்.

 

''பெண்களுக்குக் கல்வி போதிக்க வேண்டும்; ஆடவர்களைப் போலவே அவர்களையும் மேன்மைப்படுத்தவேண்டும்'' என்று அறிஞர் கூறி வருகின்றார்கள். இதன் உண்மைக் கருத்தென்னவெனில், ''பெண்மக்களுக்கு அறிவு விருத்தியாகத் தக்க கல்விகளைப் போதிக்க வேண்டும்; குடும்பத்தில் அவர்கள் முக்கியமான உரிமைகளைப் பெற்று மேன்மையுற்றிருக்கும்படி செய்ய வேண்டும்" என்பதே. சிலர் இக்கருத்தை உணராமல், கல்வி போதிக்க வேண்டுமென்று சொன்னதைக் கொண்டே ஆபாச முறையான கல்விகளை யெல்லாம் அவர்களுக்குப் போதிக்கின்றார்கள்; அவர்கள் தங்களுக்கு எக்காலத்திலும் உயர்வு கொடுத்து வந்த நாணம் முதலியவற்றை அடியோடு கைவிட்டு எங்கும் தனித்துலாவும் படிக்கும், எந்த ஆடவரோடும் பழகிப் பேசும் படிக்கும் செய்கிறார்கள். பெண்கள், தெய்வஸ்தோத்திரம் செய்யவும், தம்பதிகளோடு சந்தோஷமாகப் பொழுதுபோக்கவும் சங்கீதம் கற்றுக் கொள்வது நலமென்று அறிஞர் கூறுகின்றார்கள். இதைக் கொண்டு சிலர், அச்சங்கீதத்திற்கு வரம்பும் நேரமுமின்றிப் பெண்களைச் சதா சர்வகாலமும் அதிலேயே போது போக்கிக் கொண்டிருக்கும்படி செய்வதுடன் இன்னபாடலைத் தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என்னும் நியமமின்றி, "மருவ வாருமே - மன - மகிழச் சேருமே" என்பது போன்ற சிற்றின்ப நுகர்ச்சியை வெளிப்படையான வார்த்தைகளால் காட்டும் பாடல்களையே வாத்தியார்கள் மிகுதியாகக் கற்றுக்கொடுக்கும்படி செய்கிறார்கள். அப்பெண்கள் சிறிதும் நாணமின்றி அந்தப் பாடல்களைப் பல ஆடவர் முன்னும் பாடுகிறார்கள்; அப்பெண்களின் தாய் தந்தையரும் அவற்றைக் கேட்கிறார்கள். இது, மானக்கேடான செயலென்பது சிறிதும் இவர்கள் புத்தியில் படவில்லை. மான ஈனத்தை உணராத மிருக சுபாவத்திற்கும் இதற்கும் என்ன பேத மிருக்கிறது?

 

எல்லோரும் ஒற்றுமையுடனிருந்தால் தேசம் முன்னேற்றமடையும் என்று சில தேசபக்தராகிய பெரியார் கூறி வருகின்றனர். இதன் உட்கருத்தாவது எல்லோரும் ஒரே மனதுடனிருக்க வேண்டுமென்பதே. இதைச் சிலர் வேறுவிதமாக அர்த்தஞ்செய்து கொண்டு, உலக அமைப்புக்கும், பெரியோர் நோக்கத்திற்கும் விரோதமாக வெவ்வேறு புதிய கிளர்ச்சிகளை யுண்டாக்கி ஒற்றுமைக்குப் பதிலாகப் பிளவுகளை விளைவித்து வருகின்றார்கள். இவற்றால் பல கலகங்களுக்கே ஏதுவுண்டாகிக் கொண்டு வருகின்றது.

 

இன்னும் இவை போன்ற எத்தனையோ செயல்களிருக்கின்றன; அவற்றையெல்லாம் எழுதப்புகின் அவை மிகவிரிவெய்தும். அறிஞர் அவற்றை அனுபவத்தால் உணர்ந்தே யிருப்பார்கள். இவற்றால் உலகத்திற்கும், மனிதர்க்கும் கெடுதியுண்டாகுமேயன்றி நன்மையுண்டாகாது. நம் நாடு முன்னிருந்த தெய்விகச்சிறப்பை அடைய வேண்டுமானால், நம்மவர் இனியவாழ்க்கையைப் பெறவேண்டுமானால், தீமையை நன்மையெனக்கருதும் பேதைமைச் செயல்களையொழித்து நம் பெரியோரால் இயற்றப்பட்ட நூற்கருத்துக்களை உள்ளவாறு உணர்ந்து ஆன்றோரின் செவ்விய நெறியையே கடைப்பிடித்தொழுக வேண்டும். அறிஞருரைக்கு மாறு செய்யாமல் நடப்போரே ஆனந்த வாழ்வில் அமர்வர்.

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - பிப்ரவரி ௴

No comments:

Post a Comment