Saturday, September 5, 2020

 

பேறு

 

பெரியார் பெறுவனவற்றைப் பேறென்ப, பெறுவனதாம் நன்மக்கள், பொன், புகழ் முதலாகப் பதினாறாமென அறிவுடையார் அருளிய நூல்கள் கூறும். அப்பதினாறனுள்ளும் ஒவ்வொன்றும் தன்றன் தன்மையால் மேம்பாடுடைய தெனினும் ஓரொன்று ஏனையவற்றினும் சிறந்ததாகும். சிறப்பினது, இது எனக் காட்டு முகத்தானே, இப்பொருள் இத்தன்மைத்தெனத் தம்மறிவான் உணர்ந்து உரைப்பவர் அறிவுடைய மக்களே யாவாராதலின் அவர் தம் சிறப்புக் கூறவே சிறந்த பேறாவது மக்கட்பேறு என்பது துணிய இக்கட்டுரை எழுந்த தாகும்.

 

உயர்திணை, அஃறிணை யென நூலோர் பகுத்த விரு திணையுள்ளும் நல்லறிவு, நல்லொழுக்கம் என்ற இவற்றாற் சிறந்து தமக்கும் பிறர்க்கும் பயனுண்டாக இசையுடன் வாழ்பவராய (இலக்கண முடையார் உயர்திணைப்பாற் படுத்துக் கூறும்) மக்களே சிறந்தவராவர்.
 

மக்கள் சிறத்தற் காரணங்களுள்ளும் ஒன்றாய அறிவாவது பொருள்களின் இயல்பு இது வென நிச்சயிக்கும் புலமையாம். இவ்வறிவு கல்வியின் பயனாய்க் கற்கும் அளவிற்குத்தகப் பெருகுந்தன்மையினதாம். இது இத்தன்மைத்தாதல் ''மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு'' (குறள் - கல்வி 6) என்றதாற் றெளிவாம்.

 

ஒழுக்கமாவது ஆன்றோர் ஆக்கிய நூல்கள் செய்தக்கன இன்ன தகாதன இன்ன எனவிளங்க உணர்த்துவன வாதலின், அவைதம்மை முறையிற் கற்றுப் பின் கற்ற வழியில் நிற்றலாம். இது " கற்றபின் நிற்க வதற்குத் தக(குறள் - கல்வி - 1) என்ற நந்தமிழ்மறையானே பெறப்படும்.

 

இங்குக் கூறிய இறுதி வாராமற்காப்பதாய்ப், பிறரால் அழிக்கப்படாத தாய், நன்மை தீமைகளை யறிந்து தீயதனின்று நீக்கி நல்ல தன்கட் செலுத்துவதாய அறிவினையும், எல்லாருக்கும் சிறப்பினைத் தருவதாய், இன்பம் பயப்பதாய ஒழுக்கத்தினையு முடையாரன்றோ வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய பொருளை நன்னெறியின் ஈட்டியும், காத்தும், வகுத்தும் இல்வாழ்க்கைக்கு உரிய இயல்போடும் கூடி, அன்பும் அறனுமுடையராய்ப் பயனுடைச் செய்கைகளைச் செய்பவராவர். அவர் செய்யத்தக்க பயனுடைச் செய்கைகளாவன, ஏற்றபெற்றியில் உணவு கொடுத்தல், கல்விக்கழகம் நிறுவுதல், பல் தொழிற்பயிற்சிப் பள்ளிகள் பலவமைத்தல், அறனறி ஆலய மமைத்தல், மருத்து மன்றம் நாட்டல் முதலியனவாம். இவையே யன்றித் தாய் மொழியினை வளர்த்தல், நிகழ்ச்சி அறிக்கை (வர்த்தமான பத்திரிகை) களை வெளியிடுதல், நாட்டிற் கூழியம் செய்தல் முதலியனவும் யாவரும் புகழத்தக்க முறையிற் செய்யத்தக்க பயன் தருசெய்கைகளாம்.

 

இனி, உணவு கொடுத்தல் தொடங்கி ஒவ்வொன்றனையும் பற்றிச் சொல்லிச் செல்லுவதாயின் கட்டுரை விரியுமாதலின் அவற்றினை விடுத்து, மொழியினை வளர்த்தல் தொடங்கிச் சிறிது கூறுங்கால் மொழியினை வளர்த்தல் தான் ஒருவர் தம் தாய் மொழியினை நாடெங்கும் பரவச் செய்தலாம். ஒரு நாட்டின் பெருமையும், மக்களின் அறிவொழுக்கங்களும் பிறவும் அந்நாட்டு வழங்கும் நூல்களானே அறியக்கிடப்பனவாம். இவை பண்டைப் பெரும்புலவர் தமக்கு இயல்பினமைந்த பேரருளான் எழுதிப் போந்த நூல்கள், தம்மை ஆய்ந்து பயிலுவார்க்கு, நாட்டின் வளம் முன்னோரின் பெருமை, செங்கோ லோச்சிய மன்னர்தம் பீடுடைமை முதலியவற்றை எளிதின் விளங்க உணர்த்துமாற்றான் அறியப்படும். மற்றும் அந்நூல்கள், தம்மை ஊக்கமுடன் உழைத்துப் படிப்பார்க்கு அளவில் அறிவினையும் பெருமையினையும் அளிக்கும் இயல்பின வென்பதை எவரே மறுக்க வல்லார்? சிலரே அவற்றின் இயல்புணர்ந்து முன்னைய நூல்களுள் மறைந்தொழிந்தன போக எஞ்சியவற்றைப் புகழ்வார் புகழும் புகழ்ச்சிக் கெல்லாம் இடனாகப் பல இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் பதித்தும், பதிப்பித்தும், உலகுக்கு உபகரித்தும், அவற்றை இக் காலத்தேயன்றி எதிர்காலத்தும் ஆராய்ச்சி செய்யுமவர், தாம் காணும் முறையே முறையாகக் கொள்ள ஆராய்ச்சி செய்வதிலேயே பொழுதினைப் போக்கியும், உரையின்றிக் கிடந்த பெருநூல்களுக்கு என்றும் ஒல்காப் பெரும்புகழ் சுரக்கும் உரை வகுத்தும் தமிழ் மொழி வளர்ச்சியைப் பெருக்குபவராய்த் தம் நாள் பயனுடைய நாளாகச் செய்து வருகின்றனர். ஏனையரோவெனின் தம்மைத் தற்காலத்து நாகரீகம் பெற்றவரென மதித்துச் செருக்காம் போர்வை போர்த்து அவை பயக்கும் பயனை இழப்பவரா யுழலுவர். அன்றியும், இவர் நூற்களின் எழுச்சியினைத் தாம் அறியாதவர் என்பதனையும் மறந்து முற்று மறிந்தவராக வீறுபேசி அவற்றை இழிவு படுத்தவும் தொடங்குகின்றனர். அறிஞர் இன்னார் பேதைமைக்கு இரங்குவதன்றி எண்ணுவதொன்றுண்டோ! அவ்வறிஞர் ஒருகால் அப்போதையரைத் திருத்த முயன்றாலும் அவர் தம்மால் இகழப்பட்டு அவர் தன்மையறியாது அறிவுறுத்தியது நமது போதைமயன்றோ' என்று தம்மைத்தாமே நொந்து கொள்ளும் நிலைமையை யடைகின்றனர். உலகம் உழல் உழலும் இப்போதையர் ஏனையோர் இயல்போடு தம் இயல்பினை, நடுநிலைமையினின்று ஆராய்வாராயின் தம் செருக்கினை யொழித்து மொழி வளர்ச்சிக் குரியவற்றைச் செய்தலில் ஊக்கங் கொண்டு உழைப்பவராவர் என்பது சொல்லலும் வேண்டுமோ?

 

அடுத்து, நிகழ்ச்சியறிக்கைகளை வெளியிடுதல் பற்றிப் பேசுமிடத்து அவைதாம் நூல்கள் போன்று மக்களுக்கு அறிவொழுக்கங்களைப் பயப்பனவாதலோடு பிறவழிகளாலும் உலகுக்கு உறுதி பயப்பனவாம்.

 

நூல்கள் தாம் கூறி முடிக்க வந்த பொருள் நோக்கத்துடனே அப்பொருவினை விளங்கச் சொல்லுங்கால் ஓரிடத்துச் சிறிது விரியவும், பிறிதோரிடத்துச் சுருங்கவும் உரையாநிற்கும். நிகழ்ச்சி அறிக்கைகளோ வெனின் உலகின் பலவிடத்து நிகழ்ச்சிகளையும் கூடிய விரைவில் விரிவாக வுரைப்பனவாம். அன்றியும், அவை, நூல்கள் சம்பந்தமான ஆராய்ச்சிக் குறிப்புக்களையும், ஆய்ந்தார்தம் கொள்கைகளினையும் தெளியச் செய்வனவாம். இத்தகைய நிகழ்ச்சி அறிக்கை வெளியீடுகள் உலகமெங்கும் பரவிப் பெரும்பயன் தருவனவாக விருத்தலின் அவையிற்றை வெளியிடுமவர் உலகிற்குப் பயன்படுமவற்றைச் செய்பவராவர் என்பது விளக்கமன்றோ, நிற்க:

 

நம் நாட்டில் ஏனைய நாடுகளைப் போன்று மிகுதியும் நிகழ்ச்சி யறிக்கை வெளியீடுகள் பெருகவில்லை. எனினும் இங்குமங்குமாகச் சுதேச மித்திரன் போன்ற சில நாள் வெளியீடுகளும், தமிழ்நாடு 'ஒத்த சில வாரவெளியீடுகளும், ஆனந்தபோதினி' போன்ற சில மாத வெளியீடுகளும் மக்களுக்குப பயனளித்து வருவனவாம். இவை யொத்த பலவெளியீடுகளை வெளியிடு மவர் சிறந்த மக்களாவார் என்பதனை உலகம் ஒப்பாதொழியுமோ?

 

இனி, முடிவாகக் கூறு மிடத்து நாட்டிற் கூழியஞ் செய்தலும் பயனுடைச் செய்கையாம். ஒருவன், தன்னுயிரை யிழத்தலான் பிறர் நலங்களைக் காக்கக்கூடுமாயின் தன்னுயிரையும் ஈத்துப் பிறர் வாழக்கொள்ளும் உள்ளத்தின் ஊக்கமே நாட்டிற் கூழியஞ் செய்தற்குச் சிறந்த குணமாம். இக்குணத்தினை இயற்கையாகப் பெற்ற நம் தமிழ்மக்கள் பல்லாயிரவர் நம் நாட்டில் வசை யொழித்து இசையினை நாட்டி வாழ்ந்தவராதல் பண்டை நூல்களை உய்த்துணர்வார்க்குக் குன்றின் மேலிட்ட விளக்செனத் தோன்றுதல் ஒரு தலை, மனிதர், பிணியானும் பிறவழியானும் வாளா யாதொரு பயனுமின்றி மாய்தலின் என்றும் இறந்துபடல் முடிந்ததாகலின், நாட்டிற்கூழியஞ் செய்தல்பற்றி உயிர் நீத்தார் இவரென உயர்ந்தார் வாய்ப்படூஉம் பெருஞ்சுட்டிற்கிலக்காகிப் பிறரும் தம் நெறியிற் செல்லச் செல்லும் சிறப்புடைய மக்களையே மெய்யூழியரென உலகம் போற்றாநிற்கும். ஆதலின் நாட்டிற்கூழியஞ் செய்தலை முன்னிட்டுச் செய்வன யாவும் பேறுகளுள் சிறந்தது மக்கட் பேறாமென்பதனைத் தெளிவிக்கும்.

 

இனி, மொழிந்தது கொண்டு முடிபு துணிவுழி ஆன்றவறிவுடையராய் நன்னெறியினின்று ஈட்டியதனைப் பகுத்துண்டு பல்லுயிரோம்பி மக்கள் அறிவுடையராதற் கேற்றன செய்து, இறுதிபயப்பினும் உறுதிபயப்பன இயற்றி, ஒழிந்த பேறுகளையெல்லாம் பெற்று வாழும் திறமையுடையார் மக்களே யாவாராதலின் பேறுகளனைத்தினும் சிறந்ததாவது மக்கட்பேறே என்பது துணிபாம்.


இது,

 

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்தமக்கட்பே றல்ல பிற''


 என்ற தேவர் வாக்கானுந் தெளிவாம்.


 
N. திருவேங்கடத்தையங்கார், தமிழ்ப்பண்டிதர்,
 C. R. C. High Scool, Purasawalkam.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - நவம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment