Tuesday, September 1, 2020

 

தமிழரும் இலக்கிய வளர்ச்சியும் 

ஒரு நாட்டின் பண்டைக்காலச் சிறப்பைக் காட்டும் ஓவியமாயும், எதிர்கால ஏற்றத்திற் கோர் ஏணியாயும் மிளிர்வது அந்நாட்டின் இலக்கியங்களே. இலக்கியமென்பது ஒரு நாட்டில் அவ்வப்போது தோன்றும் மக்களில் சிலர் உழவு, வாணிபம், மருத்துவம், சிற்பம், ஓவியம், இசை, விஞ்ஞானம், அரசியல், இலக்கியம் ஆகிய இவைகளில் ஒவ்வொன்றில் புலமை மிக்கோராய், தத்தம் அறிவும் ஆராய்ச்சியும், அனுபவமும் எட்டிய நிலையில் தாம் தாம் கண்ட நுணுக்கத்தை, நுட்பத்தை, பெற்ற அனுபவத்தை வரிவடிவில் ஏற்றி, மிக மிகக் கருத்துடனும், அருணோக்குடனும் நூல்வடிவாக்கி, மக்கள் உய்யவேண்டியே வைத்துள்ள பெருஞ் செல்வமாகும். ஆகவேதான் இத்தகைய அருஞ் செல்வத்தை எந்நாட்டினரும் ஏற்ற முறையில் போற்றி வருகின்றனர். எந்நாட்டினராயினும் சரி அவர்கள் தம் நாட்டின் இலக்கியச் சிறப்பை அறியாதிருப்பின் அந்நாடும், அதன் வாழ்க்கைமுறையும், அங்குள்ள மக்களின் குறிக்கோளும் அழிந்து பட்டு, முடிவில் விலங்கு நீர்மையே தலைப்பட்டு நிற்கும்.

 

ஆகவே இலக்கியமில்லா நாடு எதுவாயினும் சரி அது உயிரில்லாத உடலையே ஒக்குமென்று யான் எடுத்துரைக்க வேண்டியதில்லை. இன்று செல்வவகையிலும், மற்றெல்லாச் சிறப்புகளிலும் தலைசிறந்து நிற்கும் நாடுகளெல்லாம், இந்நிலை யெய்தியதற்குக் காரணமாய் நிற்பது அந்நாட்டின் இலக்கியங்களே. ஐரோப்பா கண்டத்தில் அயர்லாந்து போன்ற சிறு தேசங்களெல்லாம் இன்று தமது தாய்மொழி வளர்ச்சியில் நாட்ட மனைத்தையும் செலுத்தி வருவதும், அவை தம் அன்னை மொழிகளையே அரசியல் மொழிகளாக மாற்றி விட்டதும் தத்தம் இலக்கிய வளர்ச்சி கருதியே யாம். ஏன்? ஜப்பானை எடுத்துக்கொள்வோம். அது சென்ற நூற்றாண்டுகட்கு முன்னர் இருந்தவிடம்
தெரியா திருந்தது. ஆனால், இன்று அது சுதந்தரப் பேரரசியாய், தனியரசு புரியம் பல வல்லரசுகளுடனும் தோளோடு தோள் தட்டி, ஓர் ஒப்புயர் வில்லாப் பேரரசு ஒன்றை நிறுவப் பார்க்கின்றது. அது இந்நிலை யெய்தியதற்குக் காரணம் என்னை எனின், இலக்கியமும் கலைகளும் வளர்க்கத் தொடங்கியதே யாகும் என்க. சென்னை மாகாணக் கல்லூரியல் தமிழாசிரியராயிருந்த திருவாளர், கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் சில வாண்டுகட்கு முன்னர் பெங்களூரில் தலைமை வகித்து நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில், "ஜப்பானியப் படித்த மக்களில் பலரும் பிறநாட்டுக் கலைகளிலுள்ள பயன் றருவன வனைத் தையும், தங்கள் மொழியில் மொழி பெயர்ப்பதென்பது ஒரு கடமையாகக் கொள்ளப்பட்டு வருவதால், ஜப்பான் இன்று வாழ்க்கைப் பிரயாணத்தின் முன்னணியில் செல்கின்றது. ஆனால் நமது சென்னை மாகாணத்தில் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆண்டுதோறும் ஆயிரம் மாணவர்க ளாயினும் குறைந்த பட்சம் பட்டம் பெற்று வெளி வருகின்றனர். இதுகாறும் ஒவ்வொருவரும் ஒரு நூல் வீதம் நமது தமிழ் மொழியில் மொழிபெயர்த் திருப்பினும் ஆண்டுதோறும் ஆயிரம் நூல்களும், இற்றைக்குச் சுமார் ஐம்பதினாயிரம் நூல்களும் பிறமொழிகளினின்றும் நமது மொழிக்கு வந்திருக்கும்'' என்று உள்ளம் உருகும் வகையில் எடுத்துரைத்தார்கள். என்னே ஜப்பானியருக்கு மொழிப்பெருக்கத்திலுள்ள மோகம்!

 

நமது இலக்கியத்தைச் சிறிது ஆராய்வோம். புராணங்களில் தமிழைப் பற்றிச் சொல்லுவதை மக்களிற் பலர் மறுக்கலாம். ஆனால் முச்சங்கங்கள் இருந்ததையும், அவற்றின் முதற்சங்ககாலம் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்பதையும் யாரும் எளிதில் மறுக்க முடியாது. எனவே தமிழர் நாகரீகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்திருக்கிறது. தமிழர் நாகரீகத்தைச் சார்ந்து நின்ற தமிழ் இலக்கியத்தின் பழமையும், பாங்கும் வியப்பை யளிப்பதா யுள்ளன. ஆனால் தமிழிலக்கியத்தின் பழமை இவ்வளவே என்று மாத்திரம் சொல்லி விடுவதற்கில்லை. சித்தவைத்திய முறை தமிழகத்தில் பிறந்து தமிழர்களாலேயே வளர்க்கப்பட்டு வந்திருப்பதாய் அறிஞர் கருதுவதை யாராயினும் மறுக்கின்றனரோ? இச் சித்த மருத்துவமுறை பதினான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விருந்து வந்ததாக அறிஞர்கள் ஒருபுறம் சொல்லும் போது சிலவாண்டுகட்கு முன்னர் டாக்டர். முத்து என்பார் ஈழத்தில் நிகழ்த்திய சொற்பொழி வொன்றில் “இருபத்தேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவமுறை இருந்ததாகக் கூறினார். சித்த மருத்துவத்தைப்பற்றி டாக்டர். முத்து அவர்கள் குறிப்பிடும் காலத்தை யொப்புவதாயின், தமிழ் இலக்கியமும் அப்போது இருந்ததாக ஒப்ப வேண்டியது தான்.

 

தமிழ் இலக்கியத்தின் சிறப்பு இன்றும் ஒளி குறையாது நின்று நிலவுகின்றது. தமிழ் நிலத்தில் மணிமுடி தாங்கிய மன்னர் மன்னர்கள் எல்லாம் ஆட்சி செய்த காலத்தும் தமிழிலக்கியம் தன்சுவை குன்றாது சுவைத்திருந்த தென்பதை அவர்கள் ஆட்சிமுறை அளந்து காட்டவில்லையோ? மூவேந்தர் முடிதாங்கிய காலை அரசியல் தத்துவங்களிலும், ஆட்சிமுறையிலும் குறைபாடின்றி யிருக்கவில்லையோ? இவ்வளவுக்கும் ஆதரவா யிருந்தது தமிழிலக்கிய மென்று யான் எடுத்துக் காட்டவேண்டியதில்லை.

 

ஆனால் இன்று நமது இலக்கியத்தின் நிலை யென்ன? அது சக்களத்திபிள்ளையாகவே கருதப்படுகிறது. ஒரு புறத்தில் அடிமைமொழி யெனப்படுகின்றது. மற்றொருபால் சூத்திரமொழி யென்று அலக்கழிக்கப்படுகின்றது. இத்தகுதியற்ற எதிர்ப்புக்களுக் கிடையில் தன்னம்பிக்கை யிழந்த தமிழர்கள் செய்வதொன்றும் அறியாராய், எடுப்பார் கைப்பிள்ளைகளாய்க் கிடக்கின்றனர். இவர்கட்கு இறந்தகால நினைவுமின்றி, எதிர்கால வாழ்க்கைக்கு வகுக்க வேண்டிய திட்டங்களுமின்றி அன்றைய உணவிற்கு அலைந்து திரியும் பறவை, விலங்கினை யொத்துளார்.

 

இந் நிலையிலுள்ள நமக்கும் நமது வருங்கால தலைமுறையினருக்கும் ஜப்பானியருக்குள்ள உணர்ச்சி கால் கொள்ளுவ தெங்ஙனம்? நமது மாணவர்கட்குத் தாய்மொழி யுணர்ச்சி யென்பதே சிறிதும் இல்லையாதலால், கல்லூரிக்கட்டிடத்தில் கால் வைத்ததுமே உலகையே அடியுடன் மறந்து விடுகின்றனர். உடனே தங்களுக்கென ஓர் தனியலகைப் படைத்துக் கொள்கின்றனர். அவ்வுலகில் அவர்கள் உடை வேறு, நடை வேறு, எண்ணங்கள் வேறு, வாழ்க்கை முறை வேறு, குறிக்கோள் வேறு, யாவும் வேறே. வை யாவும் மக்கள் சமூகத்தையே அழித்து விடவல்ல பேய்த்தன்மை வாய்ந்தனவாய் உள்ளன. உருப்போட்டு ஒப்பித்த பாடம் தவிர்த்து வேறு பிழைக்க வழியறியாத அவர்கள், பட்டம் பெற்று வெளிவந்ததும் வேலைதேடி அலைந்து, அலைந்து, கண்ணும் கருத்தும் இளைத்தவர்களாய் முடிவில் ஓர் வேலைபெற்று காலை முதல் காரிருள் வருமட்டும் உழைத்து நாள் கழிக்க வேண்டியவர்களாகின்றனர். இதுவே அவர்கட்கு வான் வாழ்க்கையாய்த் தோன்றுவதால் தங்கள் நாட்டைப்பற்றியோ, மக்களைப்பற்றியோ, தங்கள் சுதந்தரவாழ்வைப் பற்றியோ யாதொன்றும் தோன்ற இடமில்லை. இப்படியே இவர்களை விட்டு விடின் இன்னும் கொஞ்சகாலத்தில் நமது நாட்டின் கதி என்னவாகு மென்பதை எண்ணுவதற்கும் நெஞ்சம் திடுக்கிடுகிறது.

 

இவர்களை மேற்கூறிய ஆபத்தான வழியினின்று திருப்ப முயல வேண்டும். இதற்கு நமது இலக்கியத்தின் மூலமாய்த்தான் வழி செய்யவேண்டும். நமது இலக்கியத்தை தினசரி வாழ்க்கையில் போற்றவேண்டும். பட்டினங்கள் தோறும் ஊர்கள் தோறும், வீதிகள் தோறும், இல்லங்கள் தோறும் இலக்கியப் பயிற்சி வளர்தல் வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் ஒவ்வொரு தமிழ் மகனும், தமிழ்மங்கையும் நமது பழந்தமிழர் கல்வி, ஒழுக்கம், வாழ்க்கை முறை, குறிக்கோள் ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு, அக்காலத்துத்
தமிழ் அரசர்களும், அவர்களின் வீரமும், ஆட்சிமுறையும், பழியஞ்சிய பண்பும், அவர்கள் கலை வளர்த்த நேர்மையும், கற்றோர் பால் மதிப்பும், குடிகள் பால் குன்றா அன்பும், கடவுள் பால் இடையறா அன்பும் மற்றும் பிறவும் அறியப்படல் வேண்டும். அன்றியும் அப்போதிருந்த பெரும் புலவர்களும், அவர்கள் கல்வித்திறனும், ஒழுக்கத்தின் சிறப்பும், இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட உழைப்பும், அவர்கள் ஆக்கிய நூல்களும், அவற்றின் ஆழ்ந்த உட்கருத்துக்களும் ஏனையவும் அறியப்படல் வேண்டும். தலை சிறந்த வீரர்களைப்பற்றியும், அவர்கள் தீரம் பற்றியும், தியாகம் பற்றியும் தெரிவதும் இன்றியமையாமை. அக்கால மங்கை நல்லாரையும், அவர்கள் கலைப்பயிற்சியையும், ஒழுக்கத்தின் உறுதியையும், கற்பின் திண்மையையும், அதைக் காக்க உயிர்த் தியாகம் செய்த ஒப்புயர்வில்லா மாண்பினையும் ஆக பிறவெல்லாப் பழந் தமிழர் செய்திகளையும் அறிந்து கொள்வது எளிதாகும். இதுவே இப்போதைய எல்லாத் தமிழ்மக்களின் கடமையுமாகும்.

 

மேற் கூறப்பட்டவையும், இவை போன்ற மற்றனைத்தும் எல்லான ருக்கும் தெரிய வேண்டுமாயின் தமிழ்த் திருமறையாகிய திருக்குறள், கம்பராமாயணம் முதல் ஆத்திச்சூடி உள்ளிட்ட எல்லாத் தமிழ் நூல்களும் வீதிக்கு வரவேண்டும். தமிழ்ப்புலவர் பெருமக்கள் இவைகளை யெல்லா மக்களுக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துக் கூறுதல் வேண்டும். தமிழகத்தில் இப்படி யொரு சந்தர்ப்பம் வாய்க்க வேண்டுமென்று கருதிய கவிவேந்தர் பாரதியார், “சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்'' என்று அழுத்தமாகக் கட்டளை யிடுகின்றார். இப்போது தமிழகத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடத் தொடங்கியுள்ளது கலை வளர்ச்சிக்கு ஓர் நல்ல சகுனம். இது போன்று கம்பர் முதல் மற்றெல்லாப் புலவர் பெருமக்களின் திருநாட்களும் கொண்டாடுங் காலம் அதிதூரத்தில் இல்லை. அண்மையிலேதான். இங்ஙனம் ஆண்டுதோறும் பெரும்புலவர்களின் திருநாள் கொண்டாடுவதோடு, அவர்களால் ஆக்கப்பட்டுள்ள அரும்பெருங் காவியங்களும், உரைநடை நூல்களும் ஒவ்வோர் ஊரிலும் மக்களுக்கு பிரசங்க வாயிலாக எடுத்துச் சொல்லப்பட்டு வருவது பெரும் பயனை அளிக்கும்.

 

உலக முழுதுமுள்ள அரசியல்வாதிகளும், சீர்திருத்தக்காரர்களும் தங்கள் கொள்கைகளைப் பெருமக்களிடைப் பரப்புவதற்குச் சொற்பொழிவைச் சிறந்த கருவியாகப் பயன்படுத்துகின்ற செய்தி எவருமறிந்தது தான். ஆகவே, நாமும், நமது தமிழகத்தில், நமது தமிழிலக்கியங்களை எல்லாம் பிரசங்கங்கள் வாயிலாக வெளியிட்டு, மக்களுக்கு இலக்கியச் சுவையை வளர்ப்பது முடியாத தன்று. சான்றாக, கம்பராமாணயத்தைப் பிரசங்கம் செய்யத் தொடங்கின் அதற்குச் செவிசாயாது கண்ணுறங்கும் தமிழ்மகனும், தமிழ் மக்களும் தமிழகத்திலேயே பிரார். ஆடவரினும், மகளிரே முன்னணியில் நின்று பெரிதும் ஆதரவளிப்பர். இதற்குப் பொருட்செலவும் பெரும்பாலும் நேராது. எங்ஙனமெனின் தமிழாசிரியரும், தமிழபிமானிகளும் முறையே பிரசங்கங்களும், பொருளுதவியும் செய்து ஆங்காங்கு நேரிடும் சிறு தேவை களைச் சரி செய்து கொள்வர்.

 

எனவே, முதன் முதலாய்க் கம்பராமாயணக் காலட்சேபத்தை உடனே தமிழகமனைத்தும் தொடங்கி நடத்தி மக்கள் உள்ளத்தைக் கிளர்ந்து, கவர்ந்து கொள்ள வேண்டும். இப்பிரசங்கத்தின் மூலம் கம்பர் காலமக்கள், அவர்கள் கல்வி, ஒழுக்கம், வாழ்க்கைமுறை, கலைவளர்ச்சி, அரசியல், அக்காலத் திருந்த மூவேந்தர், குறுநில மன்னர், பெருநிலக்கிழவர் ஆக மற்றும் பல தமிழகச் செய்திகளை மக்களறிந்துகொள்ள ஏதுவாகும். தமிழர் வாழும் சென்னையில் வடமொழி சுலோகங்களைக்கொண்டு இராமாயணம் பல விடங்களில் சொல்லப் படுகின்றது. ஆனால் ஓரிடத்திலும் கம்பன் சேர்த்துவைத்துள்ள இன்ப பொக்கிஷம் வழக்கப்படக் காணோம். என்னே தமிழர்களின் ஏமாந்த தன்மை!

 

அரியணையில் அமர்ந்து அரசியற்றிய தமிழன்னை இன்று அலங்கோலமாய் புலம்பும் ஒலி நமது செவிகளைப் பிளக்கின்றது. அரசியாய் வாழ்ந்த அன்னை இன்று ஆண்டிச்சியாய்த் திரிவதை நமது கண்கள் காண்கின்றன. தாய் நிலை இதுவாயின் மக்கள் நிலை என்னாகும்? என தன்புடைத் தமிழ்ச் சகோதரி, சகோதார்காள்! என்னே நமது கண்மூடித்தனம்! விழிமின்! எழுமின்! அன்னையை அரியணை யேற்றுமின்! அவள் தனிச்செங்கோ லோச்சத் தவங்கிடமின்! தமிழ் மன்றத்தில் அன்னையின் தாண்டவச் சிலம்பொலி எழட்டும். இதுவே நமது வீரம், இதுவே நமது வெற்றி, இதுவே நமது பயன், இதுவே நமது இன்பம். பின்னா தமிழ்ப்புலவன் மதிக்கப்படுவான். இன்றியமையாத பல புதுக்கலைகளும் தற்காலத்திற் கொத்த முறையில் தோன்றும். அது,


''புத்தம் புதிய-கலைகள் பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.”


என்று எவனோ ஓர் வழிப்போக்கன் கூறியதற்குத் தக்க பதிலாகும்.

 

“தாய்மொழியின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு பணி செய்யின்

போய் ஒழியும் பொல்லாத பிறநாட்டு வழக்கங்கள்,

வாய்மைமிகு புதுக்கலையின் வளங்களும் பல்வளங்களொடு

தூய்மையுற வாழ்ந்திடும் தன் சுதந்தரத்தின் கொடி பறக்க.”

 

ஆனந்த போதினி – 1936 ௵ - நவம்பர் ௴

 



No comments:

Post a Comment