Tuesday, September 1, 2020

 

தமிழரும் தமிழும்

 

 தமிழ் என்னும் மொழிக்குரியோர் தமிழர் எனப்படுவர். தமிழ் மிகவலித்தலும் மிக மெலித்தலுமில்லாத இடைத்தரமான இன்பந் தரத்தக்க ஓசை யுடையதாய் நம்மவரது பேச்சு வழக்கில் உளதாய நம்மவர்க்குரிய மொழி. அம்மொழி வழங்கும் நிலப்பரப்பெல்லாம் தமிழகம் எனப்படும். அத்தமிழகம் எக்காலத்தும் ஒருபடித்தாயிருந்ததில்லை. ஆராய்ச்சிக்கு முற்பட்ட பண்டைக்காலத்தில், இத்தமிழகம் தென்கடலிலே நெடுந்தூரம் பரவியிருந்தது. முதலூழிக்காலத்து அந்நிலத்துப் பெரும் பரப்புத் தென்பகுதி கடலுள் மூழ்கியது. அதில் அழிந்த மக்கள் போக, ஒழிந்த மக்கள் குடியிருப்புக் கிடந்தேடிக் குமரிக்கு வடபாலுள்ள நாட்டில் குடி யேறினர். இரண்டாம் ஊழியிலும் தமிழகம் கடற்கோட்பட்டது. அக் காலத்து, குமரியளவுமிருந்த தென்னாட்டுப்பகுதி கடலுட்பட்டது. அங்கு நின்று எஞ்சிய தமிழர் குமரிக்கு வடபால் குடியேறி யிருந்த பண்டை முத லூழித் தமிழர் நாட்டிற்கு வடக்குப் பகுதியிலே பாலாறு அளவும் குடி யேறினர். அவருள்ளும் சிலர் இவ்விரு கூட்டத்தாரையும் சாராது, மேற் றிசை மலைநாடுகளிலே குடியேறித் தங்கிப் பரவினர். ஆகவே, தமிழரது குடி மூன்று வகைப்பட்டது. குமரிமுதல் வெள்ளாறு அளவும் வதிந்தோர் பண்டைக் குடியினர் பாண்டியராயினர்; வெள்ளாறு முதல் பாலாறு அளவும் சூழ்ந்து வதிந்த குடியினர் சோழராயினர்; மேன்மலைநாட்டு சேரரது பரவின் குடியினர் சேரராயினர். எனவே, தமிழ் நிலமக்கள் சரித்திரகாலத்தில் பாண்டியர், சோழர், சேரர் என முக்குடியினரா யிருந்தனர். இம் முக்குடி மக்களுள் தலைமைக் குடியினராய் அரசு செய்திருந்த குடும்பங்களுக்குப் பாண்டியர், சோழர், சேரர், எனப் பட்டப்பெயர் வழங்கின.

 

 இம்முக்குடியினரும் வாழ்ந்த நிலப் பகுதிகள் பாண்டிநாடு, சோழ நாடு, சேரநாடு எனவும், இன்னும் பிற்காலத்து, பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், சேரமண்டலம் எனவும் வழங்கின. பின்னர், வடநாட்டுப் பல பகுதிகளிலே கிளைத்துக் கூட்டங்கூட்டமாகத் தொகை சேர்ந்து தென்னாட்டில் புகுந்த பல்லவர் என்னும் ஒரு கூட்டத்தார் தங்களைத் தொண்டர் எனவும், தொண்டையர் எனவும் கூறிக்கொண்டு தாம் வதிந்த நாட்டுக்குத் தொண்டை மண்டலம் எனப் பெயரிட்டுக் கொண்டனர். அவர்களும் வீட்டில் வழங்கும் மொழி தமிழேயாய், தமிழ் மக்களோடு உறவாடிக் கலந்து கொண்டதால் தமிழர்களோடு ஒருங்கெண்ணப்படுவர். ஆதலின், தமிழ் நிலம் பிற்காலத்தில் நான்கு மண்டலங்களாகப் பகுக்கப்படுவதும் உண்டு. இலக்கண வமைதிக்குட்பட்ட சரித்திர ஆராய்ச்சிக்காடங்கிய பண்டைக்காலத்துத் தமிழ்நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என நிலம், காலம், மக்கள், ஒழுக்கம் இவற்றிற் கேற்றவகையால் பகுக்கப்பெற்று நானிலமெனவும், வெப்பமான கால நிலையும், துன்பந் தருதலாகிய நிலையும் சூறை ஆடல் முதலாகிய மக்கள் ஒழுக்க முறையும், எஞ்சி நின்ற வெப்பமே நிறைந்த புறம் போக்கு நிலப்பகுதி பாலை யெனவும் ஐந்தாவதாகப் பகுக்கப்பெற்று ஐந்து திணை ஒழுக்கமெனவும் பண்டைத்தமிழ் இலக்கண நூல்களில் வழங்கக் காணலாம். அவற்றுள்: -

 

1. குறிஞ்சி: மலையும், மலையைச்சார்ந்த இடமுமாம். அந்நிலத்தில் கூதிர் (குளிர்) காலம் சிறக்கும். அந்நிலமக்கள் குன்றவர், குறவர், கானவர் இறவுளாராதியோர்; இவர்களுள்ளே உயர்ந்த நிலையினரும் தாழ்ந்த நிலையின ரும் உளர். இவர்களது தொழில் அங்கேயே வித்திவிளைத்தல், தேனெடுத்தல், கிழங்ககழ்தல், வேட்டமாடுதல், சுனைகான்யாறு ஆடல், வெறியாட்டயர்தல் முதலியனவாம்.

 

2. முல்லை: காடும், காட்டைச் சார்ந்த இடமுமாம். இந்நிலத்தில் கார்காலமும் மாலைப்போதும் சிறந்த பொழுதுகளாம். ஆயரும், இடையரும் இந்நிலமக்களாவர். வித்தி விளைத்தலும், பசுக்காத்தலும், கான்யாறு ஆடலும், குரவைக் கூத்தயர்தலும், பண்டமாற்றுதலும், இவர்களது தொழிலாம். இவர்களுள்ளும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் கொள்கை உண்டு.

 

3. மருதம்: ஆறும், ஆற்றைச் சார்ந்த இடமுமாம். வேனிற்காலம் இந்நிலத்திற்குச் சிறந்த பொழுதாம். இந்நில மக்கள் உழுநரும் (வேளாளர்) கடையினரும் ஆவர். இவர்களுக்கு விளைத்தலும், பண்டமாற்றுதலும், புதுப்புனலாடலும் (நீராடல்), இந்திரவிழா அயர்தலும் முதலியவை தொழில்களாம்.

 

4. நெய்தல்: கடலும், கடலைச்சார்ந்த இடமுமாம். பனிக்காலம் இதற்குச் சிறந்தபொழுதாம். அளவரும், கரையாரும் (செம்படவர்), இந்நில மக்களாவர். இவர்கட்கு உப்பு அமைத்தலும், மீன் பிடித்தலும், கடலாடலும், மீன் உப்புப் பகர்தலும் முதலியன தொழிலாம். இவர்களுள்ளும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உளர்.

 

5. பாலை: எப்பொருளும் விளையாத வெப்பமிகுந்த மணல் வெளியாம்; முதுவேனில் சிறந்த பொழுதாம். மன்னவர்க்குத் துணை செய்யும் மறவரும், அரசு முறைக்கடங்காத குறும்பரும், கொன்றுண்டு வாழும் எயினரும் (வேடர்), இந்நிலமக்களாவர். வேந்து வினைபுரிதலும், பகற்சூறையாடலும், ஆறு அலைத்தலும், வேட்டமாடுதலும், கொற்றவை விழாவயர்தலும், இவர்களது தொழிலாம்.

 

நூலோர் தமிழருக்கு ஒழுக்கங் கூறுமிடத்து அவ்வந்நிலத்துக்குரிய தன்மையை ஒத்து அவ்வந்நிலப் பெயரால் திணை (ஒழுக்கம்) கூறுவர். எங்ஙனமெனில், மக்கள் ஆண் பெண் கூட்டம் (புணர்ச்சி) கூறும்போது குறிஞ்சிக்கேற்ற குளிர்ச்சியும், குளிர்ந்த உள்ளப் பண்பும் உடைமையால் அதனைக் குறிஞ்சித்திணை யென்பர். மக்கள் இல்வாழ்க்கை முறைமையில் கூடி வாழ்தலாகிய ஒழுக்கத்தை முல்லை நிலம்போலும் இனிமையும் வளமுந் தருதல்பற்றி முல்லைத்திணை யென்பர். மக்கள் கூட்டத்திற்கு இன்பம் பயக்கும் உழுதலாகிய ஒழுக்கத்தை ஓடுகின்ற ஆற்று நீரைச் சிறைப்படுத்திக் கழனிகளை வளஞ் செய்யும் மருதநிலம் போலும் பயன் தருதலால் மருதத்திணை யெனக் கூறுவர். நட்புச் செய்தோர் பிரிவுப்பட நேர்ந்தகாலத்து உள்ளத்துண்டாவதாய இரங்குதலாகிய ஒழுக்கங் கூறும் போது அது, எஞ்ஞான்றும் 'ஓ' என்னும் இரைச்சலையும், புலால் நாற்றத்தையுமுடைய நெய்தல் நிலப்பண்பை ஒத்திருத்தலால் அதனை நெய்தற்றிணை என்பர். காதல் மிக்குடையோர் உடன்போக்கு நிகழுங்காலத்து அவர்கள் ஒழுக்கத்தைக் கூறுங்கால், அதனை அக்காலத்து உள்ளக் கொதிப்புப் போலும் வெம்மையுடைய பாலைத்திணை யென்பர். இத்தகைய பொருட்பாகுபாடு (அகத்திணை யிலக்கணமுறை) செய்து முறை கொள்ளல் தமிழர்க்கும் தமிழ்க்குமே உரிய பண்பாம்.

 

மேற்கூறிய ஐந்துவகை நிலப்பகுதியுள்ளும் பலவகையான தொழில் பற்றிய குடிப்பெயர் பெற்ற தமிழ்மக்கள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் இரண்டு பகுதியில் அமைந்திருந்தாலும், பிற்காலத்து தொழில் முறைப் பொதுவகைப் பாகுபாட்டால் அரசர், வணிகர், வேளாளர், அந்தணர் என நான்கு வகையால் அமைந்தனர். அரசர் தலைமைக் குடியாயினர், ஆட்சி முறையும் காவல் முறையும் உடைமையின். இப்பகுதியில் அரசர்களும், அவர்கள் தலைமுறையார்களும், படைக்காவலர்களும், அடங்குவர். ஐந்நில மக்களுள்ளும் பண்டமாற்றுச் செய்தோர் வணிகர்கள் (செட்டிகள்) ஆவர். ஐந்நில மக்களுள் நில உரிமை பெற்று வளம் பெருகச் செய்வோர் உழுநர், வேளாளர். இவருள் உழுவிப்போர் உழுவோர் என இருவகையினர். உழுவிப்போர் வேளாளரும், உழுவோர் கடையரும் ஆவர். கல்வி, அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்து, இல்லறத்தை வெறுத்து, பொதுமக்கள் நன்மையை நாடி, செந்தண்மை பூண்டு ஒழுகுவோர் அந்தணராவர். இவர்கள் பண்டைக்காலத்துப் பல குடியினருள்ளும் தோன்றி, கடவுள் வழிபாடும், வழி பாடு பயிற்றலும் மேற்கொண்டு ஒழுகினர். இவர்களேயன்றிக் கல்வி முதிர்ச்சியால் இல்லறத்துள் நின்று மக்கட்கு வழிகாட்டிகளாயிருந்தோர் அறவோர் எனவும் பெயர் பெற்றிருந்தனர். இந்நால்வகைத் தொழில்களே யன்றி, கடவுட்பேணல், கல், மரம், உலோகம் முதலிய தொழிற் செய்தலாகிய வேலைகளுக்கு வேறு வேறு கூட்டத்தார் இருந்தனர். அவர்கள் பார்ப்பார் எனவும், கம்மியர் எனவும் பெயர் பெற்றனர். இக்குடிப் பெயர்கள் அனைத்தும் இக்காலத்தும் வழங்குகின்றன. பண்டைக்காலத்துப் பல வகைத் தொழில் சொய்வோருள் உயர்வு தாழ்வு அவரவர் நிலைமை கல்வி செல்வம் உடைமை முதலியவற்றால் குறிக்கப்பட்டனவே யன்றி ஒரு கூட் டம் உயர்ந்தது, ஒரு கூட்டம் தாழ்ந்தது என்ற நியதியாலன்று. இந்நிலைமை பின்னே நாட்செல நாட்செல் ஒற்றுமை குன்றுதலானும், அன்னியர் இடையே புகுந்து வேற்றுமை மல்குவித்தமையாலும், உயர்ந்த கூட்டம், தாழ்ந்த கூட்டம், தாழ்மை ஏற்றுக்கொள்ளாத கூட்டம், தீண்டாச் சாதி என்று இவ்வகைப்பட்ட பிரிவுகளும், அவற்றுள் சாதிக் கலகங்களும் மலிந்தன. இது தற்கால நிலை.

 

இனி, இந்நிலைமையால் நாம் எய்தியுள்ள துன்பங்களை, அந்நியராற் படும் அவமானங்களைப், பலப்பட விரித்துக் கூறுதற்கு இடமுங் காலமும் போதா. சுருங்கச்சொல்லின்: -

 

மக்கள் முதன்முதல் பேசத்தொடங்கி அவர்கள் அறிவோடு வளர்ந்து அழகு திருத்தமெல்லாம் பெற்றதற்காதாரமாய், என்றும் அழியாத உயர் நிலையெய்தியிருக்கின்ற நம் தாய்மொழியாகிய தமிழ் தன் நிலைமை கெட்டு ஆதரிப்போரின்றி ஒளி குறைந்திருக்கின்றது. அம்மொழியின் மக்களாகிய யாமும் தாய் என்னும் பற்றின்றி அதனைப் புறக்கணிக்கின்றோம். நம்மவ ரள்ளும் சிலர், தமிழும் ஒரு மொழியா? அதனைப் பயின்று வளர்த்தால் பயனும் உண்டோ? என்று ஏளனமுஞ் செய்வர். தமிழ்த்தாயை இந்நிலைமைக்கு வைத்திருக்கும் நாமும் அன்னியமொழியினர்க்கு அடித்தொண்டராய் நிலைமை குன்றி யிருக்கின்றோம். இதனை விரிககிற் பெருகும்.

 

இனி யாம் செய்யத்தக்கது யாது? அடிமைக்குடிகளாயிருத்தல் நம்மவர்க்குத் தகுமா? ஒற்றுமை வேண்டும். ஒற்றுமை யேற்படின் அவசியமாகிய சகல காரியங்களும் முடிவுபெறும். தமிழை வருந்திக் கற்று, அதனைப் போற்றி ஆதரித்தல் வேண்டும். தமிழ் மொழியை ஆதரிப்போர்பலர் முன் வருவாராயின், தமிழ் எங்கும் பரவும். தமிழைக் கற்கவும், ஆதரிக்கவும், பரவச் செய்யவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவாம்.


 தி. பொ. மாணிக்கவாசகம், வரகனேரி.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஏப்ரல் ௴

 

 

 

No comments:

Post a Comment