Tuesday, September 1, 2020

தமிழரின் கடவுட் கொள்கை 

 

கடவுள் என்னும் சொல்லைப் பற்றி முதன் முதல் ஆராய்வோம். தமிழர்கட்கு இச்சொல்லே தாம் வழிபடுந் தெய்வத்தைக் குறிப்பதாயிருந்தது. தமிழர்கள் ஆரியர் குடியேற்றத்திற்கு முன்னர்க் கடவுள் வணக்கம், ஒழுக்கம், உயர்வு முதலிய இன்றியும், இருந்தால் அவற்றில் குன்றியும் இருந்தவர்கள் அல்லர் என்பது முன்னை நூல்களில் தெள்ளத் தெளியக்காணக் கிடக்கின்றது. எனவே, தமிழர் தெய்வத்தை எவ்வாறாக வழிபட்டனர் என்பதைக் குறித்து ஆராய்வதும் பொருத்தமே யாகும். கட – உள் என்று பிரிவு செய்யப்படும். கட என்னுஞ் சொல் கடத்தல் என்பதன் முதனிலை. உள் என்பது விகுதி. செய்யுள், இயவுள் முதலியவற்றிலும் 'உள்' விகுதி வருதல் காண்க. எனவே, கடவுள் என்னும் கிளவி கடந்து நிற்பது என்னும் பொருட்டு. அற்றேல், யாவற்றைக் கடந்து யாண்டு நிற்பது எனின், மனம், வாக்கு, பற்று முதலியவற்றைக் கடந்து யாண்டும் இலங்குவது என்க.  கடவுள் எல்லாம் கடந்து நிற்பவர் என்பதும் யாண்டும் ஒருப்பட விளங்குபவன் என்பதும் தமிழர் உணர்ந்து கொண்ட கருத்துக்கள் என்பது பெறப்பட்டது. கடவுள் என்பது தனித் தமிழ்ச் சொல்லாகலின், இப் பொருண்மையில்சிறிதும் ஐயமின்று. ஆயின், கடவுளைக் குறித்து நம் முடிபுக்கு வரல் வேண்டுமாயின், தமிழர் கடவுளின் இயல்பை நன்கு ஆராய்ந்தவர்களாதல் வேண்டும். ஒன்றை ஆராய்ந்து உணர்வதற்கு முன்னர் அதைக் குறித்து யாதும் சொல்லவியலாது. எனவே, அங்ஙனம் ஆராய்வுழி, தமிழர் கடவுளை நன்கு ஆராய்ந்தவர்கள் என்பது போந்தது. ஆயின், எவ்வாறு அவர்கள் கடவுளை ஆராய்ந்தார்கள்? காணவும் ஒருவர் கூறக் கேட்கவும் படாத கடவுளைக் குறித்து எங்ஙனம் ஆராய்ச்சி இயற்றல் இயலும்? கடவுள் மன வாக்குக்கட்கு எட்டாதவர்என்னும் முடிந்த முடிவை வெளிப்படுத்தத்த் துணிந்தவர் அக்கடவுளை உணருமுறையான் உணர்ந்தவரா யிருத்தல்வேண்டும். ஆகவே, தமிழர் தம் உட்கருவிகளை அறவே அடக்கித் தனிப்பெரும் அமைதி நிலைமையை எய்தி அதன்வழித்தாகக் கடவுளை உணர்ந்தவர்கள் என்பதில் ஐயப்பாடு இல்லை. நிற்க.

 

கடவுளை உணர்வது என்றால் என்ன? அதிலும் பல்வேறான கருத்துடையார் உளர். சிலர் சைவ நெறிக்கண் நின்று சிவத்தை அடைவதே கடவுளைஅடையும் நெறி என்றும், தமிழர் அம்முறையே கடைப் பிடித்தனர் என்றும்கூறித் தமிழர் சமயம் சைவசமயம் என்று துணிப. ஈண்டு, தமிழர்க்குப்பிறிது சமய மின்றோ எனக் கடாவுகின்றோம். வேதாந்த நெறி தமிழர்க்கில்லை எனச் சிலர் கூறுவர். வேதம் ஆரிய நூல், அந்த வேதத்தின் அந்தத்தைப் பற்றித் தமிழர்க் கென்னை கவலை எனச் சிலர் கழறுவர். இவை முதலிய ஒரு தலைப்பட்டவற்றின் தடிப்பால் எழுந்த கருத்துக்கள் என்றே நாம் துணிதும். வேதம் வடமொழியா யிருப்பதனால் அது தமிழர்க் குரித்தல், அது தமிழர் கையாண்டது மல்ல என்று புதுக்கி விடலாம். ஆயினும், தற்போது வேதாந்தம் என்னும் உயர் நெறியை அவர் மறுத்தனர் என்று கூறவியலாது. தமிழர் சைவ நெறியைக் கொள்ளவில்லை எனலும் பொருந்தாது. மக்கள் எல்லாரும் எப்போதும் ஒரே கருத்துடையரா யிருப்பதில்லை. தற்போது தமிழர்க்குள் சைவ நெறியில் நிற்பாரையும் வேதாந்த நெறியில் நிற்பாரை யும் காண்கின்றோம். இஃதேபோன்று தமிழ் மக்கள் அக்காலத்தும் சைவ நெறிக்கண்ணும், வேதாந்த நெறிக்கண்ணும், புத்த நெறிக்கண்ணும், பல நெறிகளினும் நின்று ஒழுகி யிருத்தல் கூடும். ஆரியருடைய சைவமத நூல்களும், வேதாந்த நூல்களும், புத்தனுடைய பெளத்த நூலும் இவைபோன்ற பிறவும் முதலியன வெளிப்போந்த பின்னரே தமிழர் அவ்வந் நெறிகளைக் கடைப்பிடித்தனர் என்பது தவறு. புத்தமதக் கோட்பாடுகளை நூல்களிற் பொறிக்கு முன்னரும் பரப்பு முன்னரும் அவை இல்லாது போகவில்லை. வேதாந்தக் கோட்பாடுகளை ஆரியர் ஈண்டுத் தம் நூல்களிற் பொறிக்கு முன்னர் வேதாந்தம் உலகில் இல்லை என்று சொல்வதும் தவறு. உண்மைகள்எப்போதும் உள. அவற்றைச் சிலர் சில ஞான்று வெளிப்படுப்பதனால் அவை புதியயது போலத் தோன்றுகின்றன. அதுவே உண்மை. ஈண்டு ஒரு வினா எழலாம். தமிழர்க்கு வேதாந்தம் உடன்பாடாயின் இன்று ஒரு வேதாந்தநூலாயினும் தமிழில் உளதோ? என்பது. இயல்பாகப் பலர், கருத்துக்களை உன்னாது பொருள்களையே நோக்குகின்றமையால் தான் இத்தகைய கேள்விகள் உண்டாகின்றன. சில சைவர்கள் சைவமே தமிழர் சமயம் எனக் கூறுகின்றனர். ஆயின், இன்று தனித் தமிழில் ஏதேனும் சைவ நூல் உளதோ எனின், முன்னர் உண்டு இஞ்ஞான்று அவை எங்ஙனமோ ஆரியம் கலந்துளவாயின என்பர். அவ்வாறு நாம் ஈண்டுக் கூற வந்தேமில்லை. ஒரு நாட்டில் அந்நாட்டினர்க்குரிய ஒழுக்க நிலைகள் அந்நாட்டுக்குரிய மொழிகளிலேயே எழுதப்படுமன்றிப்யிற மொழிகளில் எழுதப்படமாட்டா. ஆயினும், பிறமொழிகள் அந்நாட்டில்பு குந்து பரவுமாயின், அவற்றைக் கற்றார் தந்நாட்டு வழக்க வரலாறுகளைத் தாம் கற்ற பிற மொழிகளிலும் புனைய முற்படுவர். ஒரு சிறு எடுத்துக்காட்டு ஈண்டுத் தருகின்றோம். நம் தமிழ் நாட்டில் வதியும் பண்டைத் தமிழர் குடியிற் பிறந்திலங்குவோர் பலர் இஞ்ஞான்று தம் நாட்டுக்குரிய ஒழுக்க வழக்க வரலாறுகளை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் பிறபாஷையிலும் வெளியிடுகின்றார்கள். வட நாட்டிலிருப்பவர்களும் தம் கருத்துக்களைத் தம் தாய்மொழியி லன்றி ஆங்கிலம் முதலிய மொழிகளிற் புனைகின்றார்கள். இதன் காரணமென்? அவர்க்குத் தம் தாய் மொழியின் மீதுள்ள பயிற்சிக் குறைவு, பற்றின்மை, தாய் மொழியின்மாட்டு அரசாங்க ஆதரவின்மை முதலியன அதற்குக் காரணமாகலாம். அஃதே போலத் தமிழருடைய ஒழுகலாறுகளும் பிற்காலத்தும் பல வடமொழி நூல்களிலும், பல வடசொற்கலந்த தமிழ் மொழியிலும் அமைவனவாயின. வேதாந்தம், சைவம் என்னும் இரு நெறிகளும் தமிழர்க்கன்றிப் பிறர்க்கு உடன்பாடில்லை என்று கூறுதலும் பொருந்தாது. ஆதலால் ஆரியரும் சைவம், வேதாந்த முதலிய நெறிகள் பற்றிய நூல்கள் வரைந்திருக்கலாம். அவ்வாறு வரைந்தது தமிழர்க் கிழுக்குமன்று. இஞ்ஞான்று தமிழர் தம் ஒழுகலாறுகள் ஆங்கில நூல்களில் அமைந்து விளங்குகின்றன. இன்னோர் இஞ்ஞான்று அவையெல்லாம் ஆங்கில நூல்கள், அல்லது ஆங்கிலம் கலந்த நூல்கள் எனக்கூறி அவற்றைத் தள்ளி விடுதல் சீரிதாகாது. அவ்வாறு செய்வது பொறாமையும் அறியாமையுமேயாய் முடியும். அவற்றைத் தமிழ்ப்படுத்துக் கற்க வேண்டும். உடல்கள் போன்ற மொழிகளின் வேற்றுமையைக் கருதி உயிர்கள் போன்ற கருத்துக்களைப் புறக்கணித்தல் சிறிதேனும் அறிவுடமையன்று. அவ்வாறாயின் தமிழர்களுடைய ஒழுகலாறுகளைச் சொல்கின்ற தனித் தமிழ் நூல் ஒன்றாயினும் இல்லாத தென்ன? எனச் சிலர் வினாவலாம். தமிழர்களின் ஒழுகலாறுகளைக் குறிக்கும் பண்டைநூல்கள் இன்றும் சில உள. அவற்றில் அவர் பல சமயத்தாராயிருந்தனர் என்பதைக் காட்டப் பல தொடர்களும் உள்ளன. நாளடைவில், ஆரியம் புகவே, தமிழ் ஆரியக் கலப்பின்றி இயங்க இயலாதாயிற்று. அதன் பின்னரே, தமிழர்களுடைய மத நூல்களும் ஆரியம் கலந்த தமிழில் அமைக்கப்படலாயின. உற்று நோக்குமிடத்து, அத்தன்மை தமிழ் மொழிக்கு ஓர் குறைவு என்றே கொள்ளத்தகும். இன்னும் சிலநாளில் நம் தமிழ்மொழி ஆரியத்தோடு நில்லாது பிற எம் மொழிகளோடெல்லாம் கலந்துலாவப் போகின்றதோ நாம் அறியோம்.

 

தமிழர் கடவுளை வழிபட்ட முறை எப்படி எனச் சிறிதாராய்தல் வேண்டும். சிலர் தமிழர்க்குக் கடவுள் வழிபாடு இயல்பாக இல்லை. எல்லாம் பார்ப்பனர் சூழ்ச்சியால் தமிழர் பிழைபட உணர்ந்த வழிபாட்டொழுக்கங்களே எனப் புகல்கின்றார்கள். இதனால், தமிழர்க்குக் கடவுள் ஒருவர் உண்டு என்ற உண்மையை அறியும் அறிவு கூட இல்லை என்று அவர்கள் முடிவு கட்டிவிட்டனர். தமிழர்க்கு உயர்வு கூற முற்பட்டுப் பழிபகரும் திறத்தினரை நாம் கூறுவது யாதுமில்லை. கோயில்களில் பார்ப்பனர் புகுந்தமையால் அவை பார்ப்பனச் சூழ்ச்சியால் கட்டப்பட்டன என்பது உண்மையாகாது. ஆண்டுச் 'சிவா' என வடமொழி விளம்புவதால் இறைவன் பார்ப்பனருடைமையு மல்லன். சிவலிங்கம் என்பது வடசொல் லாகலின் தமிழர் அதனை வழிபடல் தவறுமன்று. இவைபோலன வெல்லாம் கால வேறுபாட்டால் உண்டான மாறுதல்களே. தமிழ் நாட்டிற் கட்டப்பட்ட கோவில்கள் தமிழர்களின் உடைமையே. ஆனால் இறைவனிடத்தும் கடவுள் வழிபாட்டினிடத்தும் யார்க்கும் ஒத்த உரிமையுண்டு. சிவம், சிவலிங்கம், சுப்பிரமணியன், கணபதி முதலிய ஆரியச் சொற்கள் தமிழர் ஆரியரை ஆதரிக்கத் தொடங்கிய பின்னர் ஈண்டுப் புகுந்தனவேயாம். அதன் முன்னர் அவற்றிற்குப் பதிலான தமிழ்ச் சொற்கள் இருந்திருக்கலாம். இல்லை என யாரும் வரையறை கூறுதல் இயைபு அன்று.

 

தமிழர் ஆரியரை ஆதரிக்கத் தொடங்கியது கொண்டு ஆரியர் தமிழரை இழிவாகக் கருதுதல் ஆகாது. ஆரியர் தம்மால் ஆதரிக்கப்பட்டமை கொண்டு தமிழர் ஆரியரை உயர்வாகக் கருதுதலும் வேண்டுவதில்லை. ஆரிய நூல்கள் பலவற்றில் உலகநெறிக்குப் பொருந்தாத ஒழுக்கங்கள் புகலப்பட்டுள்ளன. அவை அக்காலத்துக்குப் பொருத்தமாயுள்ளன என்று தற்கால ஆரியர் உரைக் கின்றனர். அவை எக்காலத்துக்கும் பொருத்தமன்று என்பதே எமது கொள்கை. அத்தகைய கீழான கொள்கைகள் தமிழர் தம் மேலான கொள்கைகளுக்குச் சிறிதேனும் ஈடாமோ? எனினும், ஆரியர் தமிழரால் ஆதரிக்கப் பட்டமை நோக்க, ஆரியர் தமிழருடைய சேர்க்கையால் தமது இழிந்த ஒழுக்கங்கள் பலவற்றை அகற்றிக் கொண்டதாகத் தெரிகின்றது. தமிழர் தம் சீரிய ஒழுக்கத்தோடு ஒத்த பார்ப்பனர்க்கே சிறிது ஆதரவளித்தனரன்றி மற்றை ஆரியர்க்கல்ல. தமிழர் எப்பார்ப்பனர்க்கு ஆதரவளித்தனர்? என்பது ஓர் வினா. பார்ப்பனர், ஆரியர், பிராமணர் முதலிய சொற்கள் அனைத்தும் ஒரு தரத்தார்க்கே உரியனவல்ல. ஒழுகலாறு கருதியே அவை அமைக்கத் தகும். தற்போதைய பார்ப்பனருள் எத்துணையோ பேர் பள்ளர், பறையரினும் இழிவாக நடக்கின்றார்கள். அவருள் பலர் உண்மை அந்தணராகவும் ஒழுகுகின்றனர். ஆகலின், பெயர் உண்மையா, ஒழுக்கம் உண்மையா என்பது ஈண்டு ஆராயத் தக்கது. உண்மையான பிராமண னல்லாதவன் பிராமணன் என்னும் பெயரை விரும்புவானேன்? உண்மையான சூத்திரனல்லாதவன் சூத்திரன் என்னும் பெயரை விரும்புவானேன்? உண்மை அந்தணனைப் பிராமணன் என்றும் உண்மைச் சூத்திரனைச் சூத்திரன் என்றும் அழைத்தால் என்ன? ஒழுக்கத்திற்குரிய சிறப்பு அளித்தே தீர்தல் வேண்டும். உண்மைப் பார்ப்பனனைப் பாப்பனன் என்று கூறத் தற்காலத் தமிழர் பின்னிடைவார்கள் போலும். அது பொறாமையே. யார் யாராயினும் அவரவர்க்குரிய பெருமையை அளித்தலே மாண்பும் பெருந்தன்மையுமாம்.

.

இப் பெருண்மை பற்றிய பிறவற்றை மேல் ஆராய்வோம். இதுகாறும் ஆராய்ந்தவாற்றான் முடிவு போகிய பொருள்களை வாசகர்கள் ஒவ்வொருவரும் உள்ளுற உணர்ந்து வேற்றுமையின்றி ஒன்றுபட்ட வாழ்வெய்த முயற்சிப்பார்களாக.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - அக்டோபர் ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment