Tuesday, September 1, 2020

 

ஞானமும் ஞானமார்க்கமும்

 

மாந்தர்க்கு இன்றியமையாததிலு மின்றியமையாதது ஞானமே. அதனிலும் மேலானது ஒன்றுமில்லை. ஏனெனில் இம்மை மறுமை என்னு மிருமையிலும் மனிதனுக்குக் கீர்த்தியையும் ஆனந்தத்தையும் ஈவது ஞானமே.


 'இந்திரியக் குஞ்சரத்தை ஞானப்பெ ருங்கயிற்றால்
 சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பர்
 இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
 தம்மைத் தலைப்படுத் துவர்'


என்னும் அறநெறிச்சாரப் பாடலு மிப்பொருள் படைத்ததே. 'முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே' என்பது திருமூலர் வாக்கு. மேலும், நம்மாசார்ய சுவாமிகளின், சங்கராசாரியரின், சீடர்களில் ஒருவராகிய வார்த்திகக்காரரும் அவ்வாறே யருளியிருக்கின்றனர்.

இப்போது ஞானமென்பது என்ன? அதை எப்படி அடைவது? அப்படி அதை அடைவதனாலுண்டாகும் முக்கிய பலனென்ன? என்னும் கேள்விகள் மனதிற்பிறக்கும். அவைகளை ஒவ்வொன்றாய் விசாரிப்பாம்.


தத்வத்தை அறிவதே ஞானம்.

 

எது ஸத்யமாயிருப்பதோ, உண்மையோ, யதார்த்தமோ அதுதான் தத்வம்.


சுருதி முதலிய வேதவாக்கியங்கள் தத்வத்தைப் பின்வருமாறு விவரிக்கின்றன:

 

‘தேகாதிப் பிரபஞ்சமனைத்தும் மித்தை, மாயாசங்கற்பிதம்; கானலில் ஜலம் தோற்றுவது போலும், கிளிஞ்சலில் வெள்ளி தோற்றுவது போலும், பழுதையிற் பாம்பு தோன்றுவது போலும், கட்டையிற் கள்ளன் தோன்றுவது போலும் மதிமயக்கத்தாலேற்பட்ட பொய்த்தோற்றம்; அஞ்ஞானாந்த காரத்தில் அவித்தையாலேற்பட்ட மோகமென்னும் நித்திரையிற் றோன்றும் சொப்பனம். சாதாரண சொப்பனம் விழித்தபின் பொய்யாவது போல, ஞானோதயமானதும் பிரபஞ்சம் அஸத்தென்று நிரூபிக்கப்படும். வியவகாரிக தசையில் மெய்போற் றோற்றினாலும், பாரமார்த்திக தசையிற் பொய்யேயாகும்.

 

ஸத்யமாகவுள்ளது எதுவென்றால்: - ஸர்வாதீதமாய், பரிபூரணமாய், சச்சிதானந்த நித்ய நிர்மல சுத்தசைதன்யமாய், ஸர்வசூக்ஷ்மமாய், நிர்க்குணமாய், நிரஞ்சனமாய், கைவல்யமாய், த்ரிகுணரஹிதமாய், அவஸ்தாத்ரய சாக்ஷி யாய், பஞ்சகோசவிலக்ஷணமாய், அவ்யயமாய், பரமானந்த ஞான வடிவமாய், அத்வைதமாய், பரமாத்மாவாய் விளங்கும் ப்ரம்மமே ஸத்யம்.

 

பரம முக்யமாயும் பரம சிரேஷ்டமாயுமுள்ள இந்த ஞானத்தையடை வதற்கேற்பட்ட படிகளை இப்பொழுது ஒவ்வொன்றாக விசாரிப்பாம்.

 

ஸத்ஸங்கம் செய்தலே முதற்படி. ஸத்ஸங்கத்தில் விசேஷ பலன் இருக்கிறது. ஸத்ஸங்கமானது மனதை மேன்மேலும் ஸத்விஷயத்திலேயே பிரவர்த்திக்கச் செய்கிறது. தீயசேர்க்கையானது மனதைத் தீயவழியில் செலுத்துகிறது. ஸத்ஸங்கம் ஈற்றில் பரமசுகத்தைக் கொடுக்கின்றது. துர்ச்சங்கத்தின் பலன் துக்கமே. ஆகவே முதல் முதல் அதி ஜாக்ரதையாய் தீய கூட்டத்தை விலக்கி ஸாதுக்கள் ஸங்கத்தை அடைய வேண்டும். அப்படிச் செய்வதனால் மற்றெல்லாப் பேறுகளும் ஒவ்வொன்றாகத் தானே சித்திக்கும்.

 

'சம்சாரமென்னும் சாகரத்தைக் கடக்க ஸத்ஸங்கம் ஒன்றுதான் ஓட மாகவிருக்கிறது'என்று ஆசாரிய சுவாமிகளின் சீடர்களில் ஒருவராகிய பத்மபாதர் கூறினர்.

 
 'நல்லோரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
 நல்லோர் சொற் கேட்பதுவும் நன்றே
 நல்லோர் குணங்க ளுரைப்பதுவும் நன்றே
 அவரோ டிணங்கி யிருப்பதுவும் நன்று'


 என்னும் தமிழ்ப்பாவை பாலியத்திலேயே படித்திருக்கின்றோமல்லவா?

 

ஆசார்யஸ்வாமிகளுடைய ஆப்த வாக்கியமே யிதற்குப் பிரமாணம். அதே அவருடைய கட்டளை. ஆதலால் ஸத்சங்கம் செய்தல் பரம முக்கியம். அதுவே மோக்ஷத்தை அடைவிக்கக்கூடிய ஞானமார்க்கத்தில் முதல் படி.

 

நிஷ்காமகர்மம் செய்தல் இரண்டாவதுபடி. பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்குத் திரும்பவும் திரும்பவும் போதிக்கும் ஞானோபதேசங்களின் சாரம் இதுவே.

 

நிஷ்காமகர்மமாவது சத்கர்மங்களைச் சதா செய்து கொண்டு அவைகளின் பலன்களை ஈசுரார்ப்பணம் செய்தல். பலனை யபேக்ஷியாமல் கர்மஞ் செய்யவேண்டும். சந்நியாசமென்பது உண்மையில் காமத்தின் பலனைத் தியாகம் செய்வதே யொழிய, கர்மத்தை விடுதலன்று. இப்படி நிஷ்காம கர்மங்கள் செய்யும்போது அவைகளை, நானாகக்கண்டு செய்கிறேன் 'என்னும் அகங்கார மொழிந்து, நிரகங்காரியாய் செய்ய வேண்டும்.' சகலமும் ஈசன் செயலே' என்னும் எண்ணமே மேலிட்டிருக்க வேண்டும். நிஷ்காம கர்மத்தின் பலன் என்னவென்றால் நாளடைவிற் சித்த சுத்தியுண்டாகும். சித்தசுத்தித்வாரா ஞானம் சித்திக்கும். பகவான் அர்ஜுனனுக்கு சொன்ன தாவது: - "கருமஞ் செய்யத் தேவையில்லாத மஹாபுருஷர்கள் கூட வெகுகாலம் நிஷ்காமகர்மங்களைச் செய்தே தங்கள் உயர்ந்த பதவியை அடைந் திருக்கிறார்கள். அப்படி அடைந்தபின்பும் கூட லோகோபகாரமாக நிஷ்காமகருமங்களைச் செய்து வருகிறார்கள். அப்படியிருக்க ஏ பார்த்த! அந்த உயர்ந்த ஞானத்தையடையாதவனாயும் பேதபுத்தியுள்ளவனாயும் உள்ள நீ எப்படி நிஷ்காமகர்மஞ் செய்யாமலிருக்கக்கூடும்? அகத்தியம் செய்தே தீரவேண்டும்'' என்று அருளிச்செய்தார். ஆதலால் நிஷ்காம கர்மம்புரிதல் அத்யாவசியம். இது மோக்ஷமார்க்கத்தில் இரண்டாவது படி.

இராகாதிதணங்களைச் செயித்தல் மூன்றாவது படியாக விருக்கிறது. ஞானம் சித்திக்கும் பொருட்டு முக்யமாய் நீக்கத்தக்க குணங்கள் பதின்மூன்று.

 

அவை: 1. இராகம், 2. துவேஷம், 3. காமம், 4. குரோதம், 5. உலோபம், 6. மோஹம், 7. மதம், 8. மச்சரம், 9. ஈரிஷை, 10. அசூயை, 11. டம்பம், 12. தர்ப்பம், 13. அகங்காரம் என்பனவாம். இவை ஒவ்வொன்றையும் மனிதன் அவசியம் அப்பியாசத்தில் மெள்ள மெள்ள நீக்கிவிடவேண்டும். ஏனெனில், இவைகளில் ஒவ்வொன்றுமே மனிதனைத் துக்க சாகரத்தில் அமிழ்த்தி இவ்வுலகில் பழிப்பையும் மறு உலகில் நரகையும் உண்டாக்கக் கூடிய சக்தியுடைத்தானதாகவிருக்கிறது. மேலும் பூர்வத்தில் அப்படி இவைகளிலொவ்வொரு குணத்தினால் அநேகம் பேர் நாசமும் நரகமும் அடைந்ததாக நூல்களின் மூலமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி யிருக்க, இவைகளெல்லாம் ஒருங்குகூடி ஒருவனிடம் குடிகொண்டால், அந்த மனிதன் கதியென்னவாகும்? ஆதலால் இப்பதின்மூன்று குணங்களையும் விலக்குதலே மூன்றாவது படி.

 

சாதன சதுஷ்டய சம்பத்தி பெறல் நான்காவது படி, 1. நித்யாநித்ய வஸ்து விவேகம், 2. இகமுத்திரார்த்த பலபோகவிராகம், 3. சமாதிஷட்க சம்பத்தி, 4. முமுக்ஷத்வம் இந்நான்கும் சாதன சதுஷ்டயங்களாம். அத்வைத ப்ரம்மமொன்றே நித்யம், அதற்கன்னியமானவனைத்தும் அனித்திய மெனப் பகுத்தறிதலே நித்யா நித்யவஸ்து விவேகம். இகலோக பரலோக போகங்களிலிச்சையில்லாமை இகமுத்திரார்த்த பலபோக விராகம் எனப்படும்.

 

 சமாதி ஷட்சம்பத்தி என்பவை ஆறு. அவற்றில்: - (1) சமம் (மனோ நிகரஹம்), (2) தமம் (பாகியேந்திரிய நிக்ரஹம்), (3) உபாதி அல்லது விடல் என்பது பாகிய தர்மங்களினின்றும் நிவர்த்தியடைந்து ஸ்வதர்மானுஷ்டானத்தில் நிலைத்திருத்தலாம், (4) திதீக்ஷை அல்லது சகித்தல் (சீதோஷ்ண சுக துக்காதிகளைச் சமமாகச் சகித்தல்), (5) சிரத்தை என்பது குரு, வேதாந்தசாத்திரங்களில் விசுவாசம் வைத்தலாம், (6) சமாதானம் (சித்த ஏகாக்கிரத்தன்மை). மோக்ஷத்தையடைய வேண்டுமென்னு மிச்சையே மத்வம் எனப்படும். இச்சாதன சதுஷ்டயங்களையடைந்தவர்களே துவ விசாரம் செய்வதற் கதிகாரிகளாவார்கள். குரூபதேசத்தாலத் தத்துவ விவேகத்தை யவர்களடைய வேண்டும்.

 

ஆதலால் குருசேவையே ஞானமார்க்கத்தில் ஐந்தாவது படி. சாதனச துஷ்டய சம்பன்னனானவன் தனது பூர்வ புண்ணிய பலனாக சத்குரு தரிச னத்தை யடைவன், அவரைச் சரணாகதியடைந்து அவருக்குச் சீடனாகி, அவருக்கருளுண்டாகும்படி தொண்டு செய்து வருவன். அவனுக்குப் பக்குவ காலம் வந்ததும் அதையறிந்த சத்குருவானவர் அவன் பேரில் கிருபை கூர்ந்து அவனுக்குத ததவமஸி'முதலிய மகா வாக்யங்களின் இரகசியார்த் தமான தத்துவோபதேசஞ் செய்வர். அதனால் சீடன் தன்னியனாவன். அவனுடைய பேதபுத்தி நீங்கிவிடுகிறது. சமுசயங்கள் போய்விடுகின்றன. நிச்சயஞானம் உண்டாகிறது. ஆத்மதரிசனம் பெறுகிறான். அதாவது தன்னைத் தானறிகிறான். சொரூபஞானமுண்டாகிறது. சொரூபஞானத்தில் இலயமடைகிறான். அதாவது பிரம்மான்ம ஐக்கியஞானம் பெறுகிறான்.

 
 

ஆயினும் பூர்வவாசனையால் மறுபடியும் மறுபடியும் பந்தங்களும் உலக
 வாசனைகளுமிழுக்கலாகும். அதனால் இவனது மனது சலிக்கும். ஞானத்திற்கு ஓரசைவு ஏற்படும். இவைகள் தன்னைப் பாதிக்காமலிருப்பதற்காகவும் தன்னுடைய ஞானம் திடப்படும் பொருட்டும், குருசந்நிதானத்தில் சிரவணம் செய்த விஷயங்களை அடிக்கடி மனனம் செய்யவேண்டும். அதன் மேல் ஏகாக்கிர சிந்தையுடனிடைவிடாமல் குரூபதேசத்தில் லயித்திருப்பதாகிய நிதித்தியாசனம் அப்யாசிக்க வேண்டும். மெய்மறந்து பிரம்ம சொரூப மாய் தனக்குத் தானாகவிருப்பது சமாதி.

 

குரூபதேசத்தை யடைந்தபின்னேற்பட்ட சிரவண மனன நிதித்யாசன சமாதிகளென்னும் நான்கு படிகளையுடைய சுவானுபூதியினாலே, ப்ரம்ம வித்தானவன், சொரூபஞானமுண்டாய், சொரூபஞானத்தில் இலயித்து, சகல பந்தங்களினின்றும் விடுபட்டு, முக்தியடைகின்றான்.
 

இந்தச் சுவானுபூதி அவசியம் செய்யவேண்டும். ஏனெனில், அது சத்குருவானவர் நட்டவிதை செடியாய் முளைத்து முக்தியாகிய பலனைக் கொடுப்பதற்கு அவசியமாய் செய்ய வேண்டிய பாத்திகட்டல், தண்ணீர் பாய்ச்சல் முதலியன போன்ற பாங்குகளாகவிருக்கின்றது.
 

இதுபரியந்தம் ஞானமார்க்கத்தின் படிகளைப்பற்றிக் கூறப்பட்டது. இஞ்ஞானத்தின் பலனென்னவெனில், முக்தியே. முக்தியாவது பந்தத்தினின்றும் விடுபடுதல். அஞ்ஞானத்தினால் இல்லாததை உண்டென்று பிரமித்திருப்பதால் பந்தம் ஏற்படுகிறது. 'பரம்மைவ ஸக்யம்'ப்ரம்மாத் அன்யம் ந ப்ரமாக மேவ' என்னும் உறுதி, ஞானத்தாலேற்படுகிறது. இருட்டு நீங்கி வெளிச்சம் உண்டானது போலாகிறது. உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது. சூரியனுக்கு ப்ரகாசமும், ஜலத்திற்குக் குளிர்ச்சியும் அக்கினிக்கு உஷ்ணமும் எப்படிச் சுபாவமோ, அப்படியே ஆத்மாவிற்குச் சச்சிதானந்த நித்ய நிர்மலத்தன்மை சுபாவம். முக்காலமுமுள்ளது சத்துத்தன்மை. குன்றாத பிரகாசத்தன்மை, அதாவது ஞான சொரூபம் சித்துத்தன்மை மிகுந்த பிரியத்திற்கு விஷயமாந்தன்மை, ஆனந்தத்தன்மை. உற்பத்தி நாசமில்லாததன்மை, நித்தியத்தன்மை. அவித்தையாதி மலங்களில்லாததன்மை, நிர்மலத்தன்மை. இவை ஆத்மாவின் சுபாவம், அந்த ஆத்மா தானென்று அறிந்து, அபரோக்ஷமாய் ஆத்ம ஸ்வரூபத் தையறிந்து, சொரூபானந்தமாகிய இணையற்ற பேரானந்தக் கடலிலாழ்ந்திருப்பதே பரம்மானந்தம் என்பது. இதுவே ஞானத்தின் பலன்.

 

இம்முக்தியையடைய ஞானமார்க்கமல்லாது வேறு மார்க்கமில்லையா வென்றால் கர்மம் முதலிய சாதனங்களிருக்கின்றன. ஆயினும், எப்படி அக்நியின்றி பாகம் ஆகாதோ, அப்படி ஞானமின்றி மோக்ஷம் சித்தியாது. மோக்ஷத்திற்கு ஞானமே முக்கிய காரணம்.

 

கர்மமானது அஞ்ஞானத்திற்கு விரோதமானதன்று. அதுமட்டுமல்ல. கர்மமே அஞ்ஞானத்தின் ஓர் காரியம். ஆதலால் கர்மம் அவித்தையை நேராய் வேரோடு கெடுக்க மாட்டாது. ஞானமே அஞ்ஞானத்தைத் துலைக் கவேண்டும். வித்தைதான் அவித்தையைக் கெடுக்கும். வேறொன்றும் அப்படிச் செய்யாது. இருட்டைப் போக்கடிப்பது சூரியன் தானல்லவா? ஞான சூரியன் மனதிலுதித்ததும் தமசாகிய அஞ்ஞான இருள்போய்விடுகிறது. ஊனக்கண்ணுக்குச் சாத்தியமாய்த் தோற்றிய மாயா கற்பிதமாகிய ஜகத்ஞானக்கண்ணை விழித்தவுடன் சொப்பனத்திற் காணப்பட்ட பட்டணம் போல் மித்தையாய்விடுகிறது. அத்வைத ப்ரம்மமே ஸத்யமாய் விளங்குகிறது


 அ. நாராயணஸ்வாமி, BA., BL.,

 ஈரோட்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஜனவரி ௴

   

 

 

No comments:

Post a Comment