Tuesday, September 1, 2020

 

ஞானப் பிரகாசம்

 

தண்ணீருக்குள் வைக்கப்பட்ட பாத்திரமானது, உள்ளும் புறம்பும் நீர் நிறைந்ததாகவே யிருக்கும்; அதைப்போலவே ஈசுரனிடத்திலே ஐக்கியமாயிருக்கும் ஆத்மா, எங்கும் வியாபகமாயுள்ள பரமாத்மாவை உள்ளும், புறம்பும் தரிசித்துக்கொண்டே யிருக்கும்.

 

நீ உன் மனதிற்குள்ளாகவே, "குடும்பக் கவலைகள் என்னுடையவையல்ல; இவை ஈசுரனுடையவையே; நான் அவருடைய தாசனே; அவரின் இச்சைப் பிரகாரம் நடக்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்'' என்று எப்பொழுதும் சிந்தனை செய்து கொண்டிரு; இச்சிந்தனை உறுதியடைந்துவிட்டால் உலகக்தில் உனக்குச் சொந்தமென்று கூறும்படி ஒன்றுமே யிராது; நீ ஈசுரனிடத்தே லயமாகிவிடுவாய்.

 

எடை கனமாயுள்ள தராசுத் தட்டு கீழே தாழ்கின்றது; இலேசான தட்டுமேலே கிளம்புகிறது; இவற்றைப் போலவே புத்திசாலித்தனமும், சாமார்த்தியமும் நிறைந்த மனிதன் எப்பொழுதும் அடக்கமும், வணக்கமு முடையவனா யிருக்கிறான்; அறிவில்லாத மூடன் கர்வங்கொண்டு எவரையும் மதியாமல் தலைநிமிர்ந்து திரிகிறான்.

 

சாதுக்களுடைய சங்கமானது அரிசிக் கழுநீர் போன்றது; அரிசிக்கழு நீரானது, காடி நீரினா லுண்டாகும் மயக்கத்தைப் போக்கும் வல்லமையுள்ளது; அதைப் போல் சாதுக்களுடைய சங்கமும் வீணான உலக ஆசையாகிய மதுபானத்தினா லுண்டாகும் மயக்கத்தைப் போக்கும் வல்லமையுள்ளது.

 

பக்தனுக்கு ஈசுவரன் பல வடிவங்களிலும் பிரசன்ன மாகிறார்; ஆனால், சமாதியிலே பிரஹ்மஞானாநுபூதி யடைந்தவனுக்கு அவர் நிர்க்குண பிரஹ்மமாகவே - நிராகார வஸ்துவாகவே - நிர்ப்பந்தப் பொருளாகவே யிருக்கிறார்; இந்நிலையில் தான் ஞானமும், பத்தியும் ஒற்றுமைப்படுகின்றன.

 

பிரபஞ்சலீலை எவருடையதோ அவருக்கே நித்தியத்தன்மையுண்டு; எவருக்கு நித்தியத்தன்மையுண்டோ அவருடையதே இந்தப் பிரபஞ்சலீலை.

 

குருவையும் அறியாத சிஷ்யனையும் அறியாத ஒருவித பரிசுத்த நிலை அதிக இரகசியமானது; அதுதான் பிரஹ்ம ஞானமென்று சொல்லப்படும்; அந்த ஞானம் ஒருவனுக்கு உண்டாய் விட்டால் குருவினிடத்திலும் சிஷ்யனிடத்திலும் வித்தியாசம் ஏற்படாது; எல்லாம் சமமே.

 

சில சமயங்களில் நாம் உடை தரித்துக் கொண்டும், சில சமயங்களில் ஆடையின்றியும் இருப்பது போல பிரஹ்மவஸ்துவானது சில சமயங்களில் சகுணமாயும், சில சமயங்களில் நிர்க்குணமாயும் இருக்கின்றது; சகுணப் பிரஹ்மம் சத்தியோடு கூடிய பிரஹ்மமெனப்படும்; அப்பொழுது அது ஈசுவரன் எனப்படும்.

ஈசுவாஞானத்தைப் புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகத்தான் அடைதல் கூடும், வேறு எவ்வழியினாலும் பெறல் முடியாது என்று பலர் நினைக்கிறார்கள்; இது சரியான அபிப்பிராயமன்று; சாஸ்திரங்களை வாசிப்பதைக் காட்டினும் உண்மையை, ஞானிகளிடம் கேட்பானால் அந்த ஞானம் எளிதிலேற்படும்; அதிலும் அநுபவத்தில் அதி எளிதில் அந்த ஞான தரிசன முண்டாகும். வீண் சாஸ்திரப்படிப்பைக் காட்டினும் சற்குருமூலமாக ஈசுவர ஞானத்தைக் கேட்டுணர்ந்து கொள்ளுதல் மனதில் நன்றாய்ப்பதியும்; அதைக்காட்டினும் பிரத்தியக்ஷ ஞான தரிசனம் நன்றாய்ப் பதியும்; காசியைப் பற்றி அறிவதற்கு அது சம்பந்தமான புத்தகத்தைப் படிப்பதைக் காட்டினும், காசிக்குச் சென்று அதை நேரில் பார்த்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நலம்; அதைக் காட்டினும் நேரிலேயே காசிக்குச் சென்று அதைத் தரிசிப்பது மேலாகும்.

 

குருநாதர்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment