Friday, September 4, 2020

 பக்தியின் சிறப்பு

 

"பக்தி பண்ணிக் கொண்டிருந்தால்

முக்தி பெறலாமே. "

 

பக்தி யென்பது தெய்வ பக்தி, குரு பக்தி, பித்ரு பக்தி, மாத்ரு பக்தி எனப் பலவகைப்படும். பக்தி என்பது ஐம்புலன்களையும் அல்வழிச் செல்லவிடாமல் மனத்துடன் சேர்த்துச் சிந்தித்தலே யாம்.

 

அப்பியாசத்தினாலேயே பக்தி சித்திக்கும். இதை விட ஞானம் சிறந்தது என்றாலும் அந்த ஞானத்தை விட தியானமாகிய பக்தியே சிறந்த தென்று கீதையில் பகவான் சொல்லி யிருக்கின்றார். பகவான் பாராட்டிய பக்தியை என் ஒவ்வொருவனும் " நன்மை கடைப்பிடி " என்னும் முதுமொழிப்படி ஏற்றுக் கொள்ளக் கூடாது? அருணகிரி நாதரும் பக்தியின் சிறப்பைக் குறித்து,


''பத்தித் துறையிழிந் தானந்த வாரி படிவதினான்
 புத்தித் தரங்கந் தெளிவ தென்றோ?''


என்று எங்கி நின்றார். இன்னும் இதை விட மேலானது மானுடர்க்கு எதுவேண்டும்? மனிதர் கல்வி பயில்வதெதற்காக? யாவும் புத்தி தெளிவ்தற்கன்றோ! பின்னும் யோகமார்க்கமாய் வீடு பெறுவதைக் காட்டிலும் பக்தி மார்க்கமாய்ப் பெறுவது மிகவும் லேசானது என்பதை,


 " காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்
 வீட்டிற் புகுத மிக வெளிதே; விழி நாசி வைத்து
 மூட்டிக் கபால மூலாதார நேரண்ட மூர்ச்சை யுள்ளே
 ஓட்டிப் பிடித் தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே. "


என்று காட்டியுள்ளார் அப்பெரியார். பின்னும் அன்னாரே அதன் மகிமையை விவரித்துச் சொல்லுங் காலை


''பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
 விரும்புங் குமரனை மெய்யன்பினான் மெல்ல மெல்ல வுள்ள
 அரும்புந் தனிப்பர மானந்தந் தித்தித் தறிந்தவன்றே
 கரும்புந் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே''

என்றார். அந்த அரும்புந் தனிப்பரமானந்தமே பக்தி.

 

மணி வாசகப் பெருமான், '' பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்பரகதி கொடுத்தருள் செயும் பித்தன்" என்று கூறி யிருப்பதாலும் பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாம் என்பது திண்ணம். மற்றும் ''பத்திக் கடலுள் பதித்த பரஞ் சோதி'' என்றார். பக்தியை வியந்து பாடாதார் யாரே. இலலிதா த்ரிஸதியிலும் ''பக்தமானஸ ஹம்ஷிகா'' அதாவது பக்தர்களின் மனமாகிய தடாகத்தில் வசிக்கும் அன்னப்புள் என்றும் இலலிதா ஸஹஸ்ரத்தில் ''பக்த சித்த கேகி கனா கனா' அதாவது பக்தர்கள் மனமாகிய முகிலைக் கண்டு பரவசப்படும் மயூரமென்றும் வருணிக்கப்பட்டிருக்கிறது.

 

மணிவாசகரும்,


''முத்தி நெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்தி நெறி யறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணஞ்
சித்தமல மறிவித்துச் சிவமாக்கி யெனையாண்ட
வத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. "


என இரங்குகின்றார்.

 

வடமொழியில் பரம ஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய ஸ்ரீமத் சங்கரரும் பக்தி ஸ்வரூபத்தைச் சொல்லுங்கால் "அங்கோல விதையானது தரையில் வீழ்ந்து அது செடியாக முளைத்துப் பெரு மரத்தைச் சார்வது போலவும், ஊசியானது காந்தத்தினிடமும், உத்தம பதிவ்ரதை தன் புருஷனிடமும், சிறு கொடியானது விருக்ஷத்தினிடமும், நதியானது சமுத்திரத்தினிடமும் எந்த விதமாய்ச் சேருகின்றனவோ அது போல மனமானது ஈஸனது பாதகமல யுகளங்களில் சதா காலமும் பொருந்தி யிருப்பதுவே பக்தி யென்று சொல்லி யிருக்கின்றார். குழவியைத் தாய் காப்பாற்றக் கடமைப்பட்டிருப்பது போல பக்தனை ஈசன் காக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.

இன்னும் பக்தியால் செய்யக்கூடாத காரியம் இல்லை யென்பதை ஸ்ரீசங்கரர் அடியில் வரும் ஸ்லோகத்தால் நன்கு விளக்கியிருக்கிறார்.


''மார்க்காவர்த்திதபாதுகா பசுபதேரங்கஸ்ய கூர்ச்சாயதே
கண்டூஷாம்புநிஷேசனம் புரரிபேதிவ்யாபிஷேகாயதே
கிஞ்சித்புதமாம்ஸஸேஷகபளம் நவ்யோபஹாராயதே
பக்தி: கிம்னகரோஹோவனசரோ பக்தாவதம்ஸாயதே. "


அதாவது ஆஹா! என்ன விசித்ரம்! பல கோடி தரம் வழி நடந்த பழம்பாதரஷை அக்காளஹஸ்தீநாதருக்குக் கண் புருவ மத்ய ஸ்தானத்தில் சேர்க்கப்பட்டது. திரிபுரதஹன கர்த்தாவுக்கு, மிக்க அருவருப்பான உமிழ் நீர் கங்காபிஷேகத்தினும் சிலாக்கியமானதாயிற்று. உருசியை யுடையதோவென அச்சங் கொண்டு சிறிது உண்டெஞ்சிய ஊன் அண்டம் புதிய நிவேதனப் பொருளாயது. கிராதகனாகிய வேடன் உத்தமோத்தமனாகிய பக்தனானான். ஆனால் பக்தி என்ன தான் செய்யாது என்பதாம்.

 

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, பல மார்க்கங்களிலும் தன்னைச் சேருவதற்குப் பக்தி மார்க்கமே சிறந்தது என்றும் பக்தர்கள் தம்முடைய ஸ்தூல திரேகம் விட்டு நீத்தபின் தன்னிடம் ஐக்கியமாவார்கள் என்பதாகவும்


''மய்யேவ மன ஆதத்ஸவ மயி புத்திம் நிவேஸய
 நிவவிஷ்யஸிமய்யேன, அத ஊர்த்வம் நஸம்ஸய:''


என்ற ஸ்லோகத்தால் வாக்களித்துள்ளார்.

 

மேற் கூறிய ஆதாரங்களினால் பக்தி நெறியைக் கைவிட்டு வேறு மார்க்கத்தைக் கைக்கொள்ளுதல் - ''நல்ல ராஜபாட்டை யிருக்கச் சந்துகளில் செல்வது போலவும், " கனி யிருப்பக் காய் கவர்ந்தது'' போலவுமே யாம். மற்ற மார்க்கங்கள் கடினமானதால் கைவிட நேர்ந்து பயனில் உழவாய் முடியும். ஆதலின் பக்தியே முக்திக்குக் காரணம்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - டிசம்பர ௴

 

No comments:

Post a Comment