Friday, September 4, 2020

 

பக்தி

 “எண்ணரிய பிறவி தனின் மானிடப் பிறவி தான் யாதினும் அரிது அரிது காண், இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, ஏது வருமோ அறிகிலேன்," என்று நம் தாயுமானவர் திருவாய் மலர்ந்தருளியவாறு, எண்ணுதற்கரிய பிறவிகளாகப் பிறந்து, கடைசியில் ஜீவன் மானிடத்தை அடைகிறான். இம்மானிடப் பிறவிக்கும் மற்ற பிறவிகளுக்கும் உள்ள வித்தியாசமென்னவெனில், மற்ற பிறவிகளில் ஜீவன் தனக்கு இயற்கையாய் அமைந்துள்ள செய்கைகளைச் செய்கிறான். ஆனால் மானிடப் பிறவியில் ஜீவன் உலகத்திலுள்ள சராசர வஸ்துக்களில், இது சத்து, இது அசத்து, இது நன்மை, இது தீமை, இது பாவம், இது புண்ணியம், இது தர்மம், இது அதர்மம், என்று பகுத்தறிந்து கொண்டே போய், இவ்வுலகத்திற்கு மூலகாரணமாயும், சாசுவதமாயும் ரூபா ரூபமற்றதாயும், இரண்டற்ற ஒருவராயும், காண்டற் கரிய வஸ்துவாயும், அங்கு, இங்கு, எனாதபடி எங்கும் பிரகாசமாயும், ஆநந்த மயமாயும் இருக்கிற அப்பராபர சச்சிதானந்த சொரூபமாகிய எம்பெருமானை, ஒப்பற்ற கடவுளை, அன்போடு போற்றி, மனதாரத் துதித்து, வாயாரத் திருநாமங்களைச் சொல்லி, காதில் அவரது திருவிளையாடலாகிய லீலைகளைக் கேட்டுக் கையாற்றொழுது, இம்மானிடப் பிறவியாகப் பிறந்ததின் பலன் ஸ்ரீமத் சாக்ஷாத் சிவபெருமான் திருவடி நிழலில் கலந்து, பரமசாயுச்சியத்தை அடைய வேண்டுமென்ற இவ்வொன்றையே தான் தெரிந்து கொள்கிறான். அப்பேர்க்கொத்த கருணைக் கடலை அடைவதெப்படி? அதற்கு மார்க்கம் தேடுவது தான் மானிடப்பிறவியின் முக்கியமான வேலை.

 

ஜீவன் மானிடனாய்ப் பிறந்து, சம்சார மென்னும் சமுத்திரத்திற் கலந்து, மனமென்னும் சுழற்காற்றினால் அலைப்புண்டு, ஆசையென்னும் பல அலைகளினால் மோத் தாக்கப்பட்டுத் தத்தளிக்கும் இத்தகைய சங்கடத்தி'னின்று மோக்ஷமென்னும் கரை யேறுவதெப்படி? ஆனால் கடவுள் கரை யிலேற்றி விடுவாரா? அப்படியானால் நாம் எவ்விதம் நடந்து கொண்டால் அப்பத மளிப்பார்? என்று பலவாறு யோசிப்போமாகில் ஒரே நெடுவழி ஒன்று தான் புலப்படுகிறது. அது என்னவெனில் நாம் பஞ்சேந்திரியங்களையும் அடக்கி, மனதை ஒடுக்கி, சித்தத்தை முடுக்கி, முழு உண்மை யான மனதோடு கடவுளைத் தியானித்து அதினின்று நமக்குக் கடவுளிடத்தில் உண்டாகும் அன்பு என்பது தான் " பக்தி " என்று சொல்லப்படும்.

 

இத்தகைய பக்தி என்று சொல்லப்படும் வலை ஒன்றுக்குத்தான் கடவுள் சிக்குவார். பக்தனுடைய மனதில் ஐக்கியப்பட்ட கடவுள் அன்பர்க்கு அன்பனாயும், அடியார்க்கு அடியனாயும் தன் பக்தன் திருவுளம் போல் நடந்து கொண்டுவருவார். அப்படி பக்தி செய்து கடவுளது பரமபதத்தை அடைந்தவர்கள் யாவரேனும் உளரா என்று விசாரிக்கும் போது, அதற்கு அளவிலா உதாரணங்கள் இருக்கின்றன.

 

ஒவ்வொரு பக்தரும் எவ்வித பக்தி செய்து பரமசாயுச்சியத்தை அடைந்தனர் என்பதைப்பற்றிக் கல்வியறிவுடைய பெரியோர்களால் முன்னமே, சொற்சுவை, பொருட்சுவை, அந்தரங்க அர்த்தம் முதலியவைகளோடு பல நூற்கள் எழுதப்பட்டுள்ளன வாதலானும் இங்கு மீண்டு கூறுவது அசாத்திய மாதலாலும் அப்படிக் கூற முன்வரினும் அவைகளைப்போல் அமையாது என்பதற்கு அஞ்சி விடுத்தாம். ஆனால் அப்பக்த சிகாமணிகளுடைய திருநாமங்களை மாத்திரம் சொல்லலாம்.

 

பெரிய புராணத்திலுள்ள அறுபத்து மூவர், அவர்களுள் பிரக்யாதி பெற்ற நால்வர், தாயுமானவர், சங்கராச்சாரியார், கஜேந்திரன், நந்தனார் மார்க்கண்டேயர், இன்னும் கபீர்தாஸ், இராமதாஸ், துளசிதாஸ், புரந்தரதாஸ், பிரஹலாதன், துருவன், பக்த விஜயத்திலுள்ளவர்கள், ஆழ்வார்கள், அனுமார், இராமானுஜர் முதலிய பல சிரோன்மணிகளேயாவர்.

 

மேற்சொன்னவர்களது ஜீவிய சரித்திரத்தை வாசிக்கும் போது, கடவுள் தமது பக்தர்களுக்கு ஈடுபட்டு என்னென்ன காரியார்த்தங்கள் செய்தார் என்பது நன்கு விளங்கும்.

 

இவ்வித பக்தியைப் பெரியோராயினுஞ்சரி சிறியோராயினுஞ்சரி, கல்லாதவர்களானாலுஞ்சரி கற்றறிந்தவர்களானாலுஞ்சரி, நல்லாரானாலுஞ்சரி பொல்லாரானாலுஞ்சரி எல்லாரும் செய்யவேண்டியதே. அதற்குவரம்பு கிடையாது. இதற்கு உதாரணங்கள், வயதிற் சிறியவர் துருவன், மார்க் கண்டன், பிரஹலாதன். கீழான ஜாதியில் நந்தனார். கல்லாதவர்களில் கண்ணப்பர். பொல்லாதவர்களில் இராவணன். தான் இமயகிரியைப் பெயர்த்த பொழுது நீலகண்டன் தனது பெருவிரலை அழுத்த அதனால் கஷ்டப்பட்டவனாய்த் தனது நரம்புகளினால் வீணை நாதத்தில் சாமவேத கீதம்பாட அதற்குப் பசுபதி உடனே திருவுளமிரங்கி விடுவித்தது மன்றி அதர்மன் என்று தெரிந்திருந்தும் வரங்களைக் கொடுத்தனுப்பினார் என்று கூறப்பட்டுளது.

 

கடவுளுடைய வாசம் பக்தர்கள் இருதயத்தில் தான். அந்தோ பக்தியின் மகிமையும், அதன் பெருமையும், அதன் சீர்மையும், அதன் தகைமையும், பகரலரிது. அதைக் கடைப்பிடித்தவரை மோக்ஷமென்னும் கரையேற்றுவதில் அது தோணி போலவும், உலகமாகிய வீட்டை விட்டு மோக்ஷமென்னும் பேரின்ப வீட்டிற்கு ஏறிச் செல்வதற்கு ஏணி போலவும், ஆநந்த மயமாகிய கடவுளைத் தரிசிப்பதற்கு ஏற்படுத்திய நெடுவழி போலவும் உதவி புரிகின்ற இத்தகைய பக்தியின் பெருமையை அளவிட்டுஞ் சொல்லக் கூடுமோ.

 

ஆகையால் மானிடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் இப்பிறப்பில் தவறாது பக்தி செய்து இச்சென்மம் சாபல்யமாகும் வழியைத் தேட வேண்டும். இது இச்சமயம் தவரின் மறு சமயம் வாய்ப்ப தரிது. இதனால்தான் "இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ'' என்றார் தாயுமானவர்.'' பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை, அருளிலார்க்கு அவ்வுலகமில்லை "அருள் ஒன்றே மாந்தர்க்கு இன்றிமையாத தான பொருள்; அது ஒன்றே முத்தியளிக்கும். நாம் எடுத்த இம்மானிட ஜென்மம் வீணாகாவண்ணம், நமது வாழ்நாளை வீணாளாக்காமல், தினந்தோறும் உள்ளன்போடு கடவுளைப் பக்தி செய்து காலாந்தரத்தில் அவருடைய திருவடியை அடைய வேண்டும். சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான அச்சச்சிதானந்தப் பரம்பொருள் நமக்கு பக்தி வழிகாட்டி அருள் புரிவாராக. சுபம்.

 

பூ. அமிர்தலிங்கம்.

ஆனந்த போதினி – 1921 ௵ - ஏப்பிரல் ௴

No comments:

Post a Comment