Friday, September 4, 2020

 

பசுவின் சாணம்

பசுவின் சாணத்தின் இரகசியங்களை உணராதவர்களும், மேல் நாட்டுமுறைகளை மேன்மையாய்க் கொண்டாடுகிறவர்களுமாகிய சிலர்அதைப்பற்றிக் குறை கூறுகின்றார்கள். அதற்குக் காரணம் நம் நாட்டு வழக்கங்களின் உண்மையை யுணராத குறைவே என்று சொல்லலாம். 26 - 8 - 1927 - ல் சென்னை பிரம்ம சமாஜ மந்திரத்தில், சமுதாய சீர் திருத்தம் 'என்னும் விஷயத்தை, திருவாளர், கா. நமசிவாய முதலியார் அவர்கள் விமரிசையாகப் பேசினார்கள். அதில் மேல் நாட்டின் முன்னேற்ற ஊக்கத்தையும், கீழ் நாட்டு நம்மவர்களின் ஊக்கக் குறைவையும் எடுத்துக் காட்டி, நம்மவர் பழைய கீழ்மைக்கும் கீழ்மையாய்ப் போகக்கூடியதற்குக் காரணம் ஜாதி வித்தியாசமும், ஆலய சீர்திருத்தங்களும், விவாகச் சடங்குகளும், பெற்றோர்களால் நடத்திவரும் விவாக விஷயங்களுமே யென்றும், நம்மவர் முன்னேற்ற மடைய வேண்டுமானால், அவை ஒழிய வேண்டும் என்றும், தற்காலத்தில் விதவா விவாகம் அவசியமாயிருந்தாலும் அதற்கு முன் செய்ய வேண்டிய திருத்தங்கள் பல இருக்கின்றன வென்றும், அவற்றை முன் செய்ய வேண்டுவது அவசியமென்றும், ருஷியாதேசத்தில் கருப்பச் சின்னம் செய்ய ஆஸ்பத்திரிகளும், பிரான்சு தேசத்தில் குழந்தை பிறந்தால் 50 ரூபாய் கொடுப்பதான ஏற்பாடும் அமைந்திருக்கின்றன வென்றும், இவ்விடத்திலும் எலக்டிரிக் சிகிச்சை யொன்று ஏற்பட்டிருக்கிறதென்றும், அதன் மூலம் கருப்பப்பை இருக்குமிடத்தில் எலக்டிரிசிடி காண்பிப்பதால் 3 வருஷபரியந்தம் கருப்பம் தரியாதென்றும், இப்படி 3 வருஷங்களுக் கொரு முறை செய்தால் கருப்பமே தரியாதென்றும் சொல்லி, தேசங்களுக் கேற்றபடி ஜன சமுதாயம் அதிகரித்த இடத்தில் குழந்தைகள் வேண்டாமென்றும் ஜன சமுதாயம் குறைந்துள்ள இடத்தில் குழந்தைகள் விருத்தியடைய வேண்டுமென்றும் ஆங்காங்குள்ளவர்கள் பிரயத்தனப்படுவதாயும் தெரிவித்தார்கள். இவை தவிர நம் தேசத்தில் பண்டையகாலத்தில் விதவா விவாகம் இருந்ததாகவும், பெண்கள் புருஷர்களை விரும்பாத போது அவர்களை மருந்து முதலிய பல வகைகளால் கொன்று, தமக்கிஷ்டமான புருஷனை விவாகம் செய்யும் முறை அதிகரித்ததால் பின்னர் விதவைகள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதி ஏற்பட்டது என்றும், அத்தகைய காரியங்கள் நிகழாவண்ணம் தடுப்பதற்கு மேல் நாட்டாரைப்போல் நாமும் காதலித்த பின்பே கலியாணம் செய்யவேண்டும்; கலியாணம் செய்து கொண்டு காதலித்தல் தகுதியற்றதாகும் என்றும் கூறினாகள். மேலும் யுக்த வயது வந்த பிறகு விவாகம் செய்துகொள்ளுதலே நலம் என்றும் சொன்னார்கள். இவர்கள் சொல்லிய விஷயங்களை வாசிக்கும் நீங்களே கவனிக்குமாறு விட்டு விடுகின்றேன். ஆனால் மகம்மதியர்களில் விதவா விவாகம் நடக்கின்றது; அவர்கள் கலியாணம் செய்த பிறகே காதலிக்கின்றார்கள். சரித்திர பூர்வமாகவாவது அனுபவ பூர்வமாகவாவது இவ்வகுப்புப் பெண்களால் புருஷர்கள் மரணமடைந்தார்கள் என்பதற்கு நமது முதலியாரவர்கள் ஆதாரங்காட்டுவார்களா?

 

இன்னும் அன்று கூடிய கூட்டத்தில் தலைமை வகித்த திருவாளர். மாணிக்க நாய்க்கர் அவர்கள் பேசிய காலத்து நம் நாட்டில் பசுக்கள் பால், தயிர், மோர், நெய் இவைகளைக் கொடுப்பதால் அவற்றைத் தெய்வமாக முற்காலத்தில் உள்ளவர்கள் கொண்டாடினார்கள் என்றும், அவற்றின் மலத்தையும், நீரையும் வீடுகளில் மெழுகுவதும், தயிருடன் கலந்து பஞ்சகவ்வியமென உட்கொள்வதும் எவ்வளவு ஆபாஸம் பாருங்கள் என்றும், சைன்சின்படி சாணத்தில் புழுக்கள் அதிகரித்துத் துர்நாற்றமும் வீசி வியாதிகள் சம்பவிக்கின்றன வென்றும் சொன்னார்கள். இது முக்கியமான விஷயமாதலால்- இதைப்பற்றிச் சிலவற்றைக் கூறவேண்டியது அவசியமாயிருக்கின்றது.

 

ஆனால் இவர்கள் பால் தோஷம் கூற நான் முன்வரவில்லை. இவர்களுக்குச் சாணத்தின் பெருமை இன்னதென்பதையும், முன்னோர்கள் அதுமலம் என்பதை உணராதவர்களல்லர் என்பதையும் விளக்குவான் வேண்டியே நான் இவ்வியாசம் வரையத் துணிந்தேன்.

 

நம்தேசத்தில் சாப்பிட்ட விடங்களிலும், எச்சில் உமிழ்ந்த இடங்களிலும் சாணம் போடுவது வழக்கம். காலை 4 மணிக்கு வீதியில் சாணத்தை ஜலத்துடன் கலந்து தெளிப்பதும் தவிர அசுத்தமான இடங்களிலும் சாணம் கொட்டுவது வழக்கம். இவற்றின் காரணங்களை விசாரிப்பின் இதன் இரகசியங்கள் நன்கு விளங்கும்.

 

மேல் நாட்டார், காலையில் 3 மணிக்குப் பூமியில் ஒருவித விஷப் பூச்சிகள் உற்பத்தியாகிச் சூரிய ரஸ்மி பட்டவுடன் அவைகள் யாவும் மரணமடைகின்றன வென்றும், மனித சரீரத்தில் அக்கிருமிகள் பட்டால் வியாதியை உண்டு பண்ணும் என்றும், அத்தகைய கிருமிகள் சரீரத்தில் அணுகாமல் அவற்றைத் தடுப்பதற்காகவே நித்திரையிலும் பூட்சு போட்டுக் கொள்ளப்படுகிறதென்றும் சொல்லுகிறார்கள். அக்கிருமிகளைத் தடுப்பதற்குக் காலில் மாத்திரம் ஏதோ ஒன்றை அணிந்து கொள்வதைக் காட்டினும் அக்கிருமிகள் உண்டாகும் காலத்தில் (அதாவது காலை 3 - மணி முதல் 4 - மணி வரையில்) அக்கிருமிகளைக் கொல்லக்கூடிய சாணத்தை வீட்டின் வாசற்படியிலிருந்து வீதியில் கூடுமான வரையில் ஜலத்துடன் கலந்து தெளிக்கும்படி நம்முன்னோர்கள் விதி ஏற்படுத்தி அப்படித் தெளித்தால் கிருமிகள் நாசமடையும் என்றும், வீட்டிற்குள் மேற்படி கிருமிகள் பிரவேசிக்க இடமிராது என்றும் கூறியுள்ளார்கள்.

 

பசுவின் சாணத்தை எச்சில் பட்ட இடங்களில் தெளிக்கும்படி முன்னோர் கூறியவாறு அதைத் தெளிப்பதால் எச்சிலிலுள்ள கிருமிகள் நாசமடைகின்றன. சிறிதைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடிக் கருவியால் பார்க்கின் இதன் உண்மை விளங்கும்.

 

எச்சில் பட்ட பாத்திரங்களையும் சாணம் போட்டுச் சுத்திகரிக்க வேண்டுமென்னும் விதியேற்பட்டிருப்பதும் கிருமிகளை நாசம் செய்யும்படி ஏற்பட்ட உபாயமேயொழிய வேறன்று.

 

நாய்க்காரவர்கள் கூறியபடி சாணத்திலும் கிருமிகள் உண்டாகின்றனவே யென்று சிலர் கேட்கலாம். அவ்வாறுண்டாவது உண்மைதான். ஆனால் அவ்வாறு சாணத்தில் உண்டாகும் கிருமிகள் கெடுதல் செய்யக்கூடியனவல்ல.

 

 விருக்ஷங்கள் எப்படி நம்மிடத்திலிருந்து உண்டாகும் விஷவாயுவை உட்கொண்டு, தம்மிடத்திலிருந்து வெளிப்படும் விஷவாயுவால் நமக்கு யாதொரு கெடுதலும் செய்யாமல் நன்மையையே செய்கின்றனவோ அதுபோல் சாணமும் தன்னிடத்திலுண்டாகும் கிருமிகளால் நமக்குக் கெடுத்தலுண்டாக்காமல் நம்மிடத்திலிருந்து உண்டாகும் எச்சில் முதலியவைக்ளிடத்திலுள்ள கிருமிகளைக் கொன்றுவிடுகின்றன.

 

இதுவரையில் பூலோகத்தில் எந்த மதஸ்தர்களும், எந்தத்தேசத்தவர்களும் நம் தேசத்தில் வழங்கும் (டிஸ் இன்பெக்டெண்ட்) விஷத்தைப் பரவவொட்டாது தடுத்தல் என்பதற்குரிய சாணத்திற்குச் சமமான ஒளடதத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று சொல்லுதல் முடியாது; ஏனெனில்,

 

தற்காலத்தில் எங்கும் பரவி உயிர்களைக் கொள்ளை கொள்ளும் வியாதியாகிய க்ஷயம் (கன்சம்ப்ஷன்) என்னும் மேகசுரம் கண்டவர்களின் கோழை, எச்சில் இவைகளிலிருந்து பரவும் கிருமிகள் பொல்லாதவை யென்றும், அத்தகைய கோழைகளை லைசால் என்னும் திராவகத்தில் போட்டுப் பூமியில் புதைக்க வேண்டுமென்றும் மேல் நாட்டு வைத்திய நிபுணர்கள் சொல்லுகிறார்கள். அவ்வாறு சொல்வதோடு அவர்களே மேற்படி கிருமிகள் லைசால் முதலிய லோஷன்களால் மரணமடைவதில்லை யென்றும், அக்கிருமிகள் பரவி அநேகருக்கு க்ஷயம் சம்பவிப்பதாயும் சொல்லுகின்றார்கள். மேற்படி கோழையைப் பசுவின் சாணத்தில் போட்டால் அத்தகைய சகல கிருமிகளும் உடனே மரணமடைகின்றன. சிறிதைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடிக் கருவியால் பார்த்துச் சகலரும் இவ்வுண்மையை உணரலாம். இந்தக்கருத்தைக் கொண்டே வியாதியஸ்தர்களின் எச்சில்பட்ட இடங்களில் தண்ணீர் விட்டு அலம்பா விட்டாலும் அலம்பினாலும் சாணம் போடுதல் வேண்டும்; இல்லையேல் சுத்தமில்லை என்று பெரியோர் கூறியிருக்கின்றார்கள். இத்தகைய குணங்கள் பசுவின் சாணத்திலிருப்பதினாலேயே நம் பெரியார் சாணத்தை உயர்வாகக் கொண்டாடுகின்றார்களே யொழிய வேறுகாரணத்தால் கொண்டாடவில்லை.

 

பசுவின் சாணம் இக்காலத்து நம்மவர்களில் நாயக்கரவர்கள் போன்ற சிலருக்கு மாட்டுமலம் என்று தோன்றுவது போல் அக்காலத்தவர்களாகிய நம் பெரியோர்களுக்கும் தெரியாமலில்லை. அவ்வாறு தெரிந்திருந்தும் அதில் மேற்கூறிய உயர்குணங்கள் அமைந்திருப்பதனாலேயே அவர்கள் அதைக் கொண்டாடினார்கள். எப்படிப் புனுகு பூனையின் மலம் அப்பூனைக்கு நிஷேதமாயிருந்தாலும் நமக்கு வாசனை வஸ்துவாக மாறுகின்றதோ அதுபோன்று சாணமும் மாட்டுக்கு மலமானாலும் குணத்தால் நமக்குச் சிரேஷ்டமாகின்றது.
 

இன்னும் இதைப்பற்றி விரிவாக எழுத இஷ்டமிருந்தும் விரிவஞ்சி இம்மட்டோடு நிறுத்திக் கொண்டேன். இவ்வியாசத்தைக் கண்ணுறுவோர்களில் நமது திருவாளர் - மாணிக்க நாயக்கரவர்களைப் போன்ற அபிப்பிராயங் கொண்டவர்கள் யாவரும், சாணத்தின் பெருமையை உணரவேண்டுமாயின் (மைக்ராஸ்கோப்) என்னும் கருவியின் மூலம் மேற்சொன்னவாறு பரிசோதனை செய்து உண்மையை உணர்ந்து தங்கள் மனதிலுள்ள அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்வதுடன் சகலர்க்கும் சாணத்தின் பெருமையைத் தெளிவுறச் சொல்லிச் சிலர் கைநழுவ விட்டு விட்ட சாணம் தெளித்தலாகிய பழக்கத்தை மீண்டும் மேற்கொள்ளுமாறு பிரயத்தனம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுகின்றேன்.

டாக்டர். மே. மாசிலாமணி முதலியார்.

ஆனந்த போதினி – 1927 ௵ - செப்டம்பர் ௴

No comments:

Post a Comment