Friday, September 4, 2020

 பஞ்ச கிரக கூடம்

 

இந் நில வுலகத்தினர் சுபிட்சம், துர்பிட்சம், தனம், தானியம், ஆயுள் பலம், இம்மை, மறுமை முதலிய பலாபலன்களைப் பெற்றுய்தற்கு நவக்கிரகங்களே காரண பூதராவார்கள். எவ்வுயிரும் இலங்க இவர்களே ஆதாரமானவர்கள் என்பது வேதாகம புராணே திகாசங்களின் சம்மதமாகும். இவர்கள் வக்கிரம், அஸ்தமனம், கெட்ட இடங்கள் ஆகியவற்றை அடைந்தால் உலக சீவர்களுக்குப் பல துன்பங்கள் சம்பவிக்கு மென்பது திண்ணம். இதனை,


''கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்"


எனவரும் சிலப்பதிகாரக் கூற்றினாலும், 'மைம்மீன் புகையினும் தூமர் தோன்றினும், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்" எனவரும் புற நாநூற்றுக் கூற்றினாலும், "கோள் நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும், மாரிவறங்கூரின் மன்னுயிரில்லை'' எனவரும் மணிமேகலை கூற்றினாலும் நன்கு விளங்கும். மேலும் '' தூமகேது புவிக்கெனத் தோன்றிய, வாம மேகலை மங்கையரால் வரும்" எனப்புகல் கம்பர் திருவாக்கானும், “காய்சின வெய்யோன் சேயோன் முன் செலக் கதிர்கால் வெள்ளித்தேசிகன் பின்பு சென்று நடக்குமிச் செயலான் முந்நீர், தூசின உலகிற் பன்னீராண்டுவான் சுருங்கு மென்று, பேசின நூல்கள்” எனப் புகல் பரஞ்சோதி முநிவர் திருவாக்கானும், "மகத்திற் புக்கதோர் சனியெனக்கானாய் மைந்தனே மணியே மணவாளா" எனப் புகல் சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருவாக்கானும் நன்கு அறியலாம்.

 

கிரக்கூடமென்பது சிற்சில கிரகங்கள் ஓரிடத்தில் (ஒரு இராசியில்) ஒன்றாகக்கூடி நிற்ப தென்னப்படும். இவ்வாறாய கிரக்கூடம் சம்பவிக்கின் பிரஸ்தாப ஆன்றோர் திருவாக்கின்படி உலகத்திற்கே பெரும் பீடை சம்பவிக்கு மென்பது திண்ணம். அப்படிக் கூடும் கிரகங்களின் எண்ணிக்கையால் அக்கூடத்தின் பெயர் வழங்கப்படுவது நூன்முறை. ஆகவே நிகழும் சுக்கில வருடம் மார்கழிமீ 11s புதவாரம் 22 நாழிகை முதலாக ஷ மீ 14. சனிவாரம் 20 நாழிகை வரையில் தனுவிராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகிய ஐவரும் ஒன்று கூடி சஞ்சரிகின்றார்கள். எனவே இது "பஞ்ச கிரக்கூடம் " என்று வழங்கப்படும்; அதாவது ஐந்து கிரகங்களின் சேர்க்கை என்பது இதன் பொருளாகும். இப்படி கிரக்கூடங்கள் மூன்று முதல் எழுவரை ஓரோர் காலங்களில் சம்பவிக்கும். உலக துன்பத்திற்குக் காரணமாகிய கிரக்கூட நிகழ்ச்சியினாலுண்டாம் பெருந் தீமையைமக்கள், சாந்தி, தெய்வ வழிபாடுகளின் மூலமாக நிவர்த்தி செய்து கொண்டு நன்மையை அடைய முயலுதல் மிகமிக அவசியமாகும்.

 

துர்பிக்ஷாதி பயம்சைவ சதுர்க்ரஹ ஸமந்விதே,
மஹாரோகபயம்ராஷ்ட்ர க்ஷயோவ்ருஷ்டி விநாஸநம்,
பஞ்சக்ரஹ ஸமாயோகே துர்பிக்ஷம் ஸங்கராதிகம்,
ந்ரூபவைரம் கர்பநாஸோ ஜாயதே ஜந்நாஸநம்,
வெளக்ரஹௌ ஜநஸம்க்ஷோபம் த்ரயோக் நந்து நராதிபம்,
சாத்வாரோ ராஷ்ட்ர நாஸாய ஹந்தி பஞ்ச ஜகத்ரயம்.

 

என்றபடி ஐந்துகிரக சேர்க்கையினால் சுவர்க்க மத்ய பாதளம் என்னும் மூன்றுலகத்திற்கும் தீங்குண்டென்பதும், துர்பிட்சம் (பஞ்சம்) இராஜாக்களுக்குள் வைரம், கர்ப்பஸ்திரீகளுக்குப் பீடை யுண்டென்பதும் மதனரத்தின வசனம் விளக்குதலா லுணர்க. இப் பஞ்ச கிரக்கூடமானது மூலம், பூராடம், உத்திராடத்து முதற்பாகங் கொண்ட தனுவிராசியில் சம்பவித் தலின்.

 


 "தத்ருக்ஷஜாதஜந்தூநாம் மஹாரோகோமஹாபயம்
 அர்த்தநாஸ் ஃ ஸ்தாநநாஸோ மாநஹாநிர் ந்ருபீடநம்
 ஷண்மாஸாப் யந்தரே வாபிஹ் யாயுர்ஹாரி: ஸ்ரீயஸ்த்தா,
 ஜந்மாஷ்டமத்வாதஸேராஸௌ சதுர்த்தே பஞ்சமே அபிவா,
 பூர்வோக்த பலமே வாதஸ் தஸ்யா ஸாந்திம் ப்ரயத்ந்த''

 

இப்பலன் ஆறுமாதம் வரை உண்டு. ஆதலால் மக்கள் அவசியம் சாந்தி செய்து கொள்ள முயலுதல் நலம். முன் கூறிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களும், மீனம், மேடம், கடகம், விருச்சிகம் இந்த இராசிகளைச் சந்திரலக்கினமாக வுடையவர்களும் முன்னே கூறியுள நான்கு தினங்களில் எதிலேனும் சாந்தி, ஜப, தப, தான, தருமங்களைச் செய்தல் நலம்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஜனவரி ௴

 

 

   

No comments:

Post a Comment