Wednesday, September 2, 2020

 

தமிழர் விவாகச் சடங்கு

 

நேயர்காள்!

 

            விவாகம் என்பது இந்நில உலகில் மக்களாய்ப் பிறந்த ஆண், பெண் எனும் இருவரும் இல்லற தருமத்தை வழுவாது நடத்த நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓர் பஹிரங்க உடன்படிக்கையேயாகும். விவாகத்தால் தான் இல்லறத்தார் இகத்திற்கும் பரத்திற்கும் சாதனமான போகபாக் கியங்கள் அடையப்பெறுவர் என்பது மறைநவில் வழக்கு. ஆனதுபற்றியே இச்சடங்கினுக்கு, திருவிவாகம், வேட்டல், மன்றல், சுபம், மங்களம், திருமணம் எனும் பல மங்களகரமாய பெயர்கள் வழங்கப்படுகின்றன. நிற்க,

உலகில் எவ்விதம் இருளினால் ஒளியும், வெயிலினால் நிழலும், இரவி னால் பகலும், சந்திரனால் சூரியனும் மேன்மை யடைகின்றனவோ அது போலவே பெண்களால் புருடரும் மேன்மை யடைய வேண்டுமென்பது ஈசுவர ஆக்ஞை. அதை நாம் கடப்பது மரிதே. பெண்கள் உலகில் இல்லா விட்டால் உலகின் அபிவிருத்தியே குறைந்து விடுமென்பது யான் சொல்லி நீவிர் அறிய வேண்டிய தொன்றன்று. பெண்களில்லாவிட்டால் உலகமே நசித்துவிடுமென்பது வெளிப்படை.

 

இத்தகையதோர் பெண்ணும் அவள் தன் வாழ்க்கைத் துணைவனாம் ஓர் ஆடவனும், இல்லறமென்னும் இயல்புடைய வான் சகடத்தை இழுக்கத் தொடங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட சடங்கே இவ்விவாகம் அல்லது மன்றல் எனப்படும். இச்சடங்கை, எச்சாதியினரும், எம்மதத்தினரும், எத்தேயத் தினரும், கையாண்டு வருகின்றனர் என்பது வெளிப்படை. இவ்விதம் சடங்கு ஒன்றும் நடத்தாமல், "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்'' என்பதொப்ப தம்தமிஷ்டப்படியே கூடிக் களிப்பார்களானால் அவர்கள் விலங்கினமாகவே கருதப்படுவர்.

 

இச்சடங்கை ஒவ்வொரு தேயத்தினரும், ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு ஜாதியினரும் அவரவர் அனுஷ்டானத்திற்கேற்ப நடத்திவரு கின்றனர். சிலர் மாலை மாற்றிக்கொள்வர், சிலர் மோதிரம் மாற்றிக்கொள்வர், சிலர் துண்டு (சீலை) மாற்றிக்கொள்வர், இன்னுஞ் சிலர் பெண்ணிடமிருந்தும் ஆடவனிடமிருந்தும் சம்மதமெனச் சாத்தியம் வாங்கிக்கொள்வர்.

 

இவை யெல்லாமோர்புறம் நிற்ப, நம் பண்டைக்காலத் தமிழர், ஏன்? ஹிந்துக்கள் எல்லோருமே விவாகம் என்னும் ஓர் பெருஞ்சடங்கினை நடத்தி வருகின்றனர். அதில் ஏற்படுகிற பணச்செலவும் வீணாடம்பரங்களும் பலருமறிந்ததே எனினும் அதை யாராய யான் இப்பொழுது வந்தவனல்லனாகலின் அதை அறிஞர் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன். ஆனால் இவ் வீண் ஆடம்பரத்தையும் பணச்செலவையும் பிறர்பார்த்தே நம் மணவினைச் சடங்கை கேலிபண்ணுகின்றனர் என்பது மறுக்கற்பால தன்று. இது நிற்க, அச்சடங்கின் ஒவ்வொரு பாகத்தையும் உண்மையாயுணர்ந்தவரில்லை. உண்மை யுணர்ந்தோர் எவரும் உண்மையறியாது எவ்விடயத்தையும் ஏளனம் செய்யார். நமது சடங்குகளனைத்தும் மதசம்பந்தமானவையும், ஆழ்ந்த கருத்துடையவையுமே யென்பதை அறிவாளிகள் நன்கறிவர்.

 

அறிஞர்காள்!

 

நம்மில் அநேகர், நமது மணவினைக்காலத்தில் நடத்தும் பெருஞ் சடங்குகளைப் பற்றியே யாராய்வதில்லை. இச்சடங்குகளெல்லாம் ஏன் செய்கிறார்கள்? என்று கவனித்தல் கூட, கவனித்துத் தெரிந்துகொள்ளாவிட்டாலும் விசாரித்தல் கூடச் செய்கிறதில்லை. நம்மானந்தனின் நண்பர்கள் அவ்விதம் இரார் என்றே எண்ணுகின்றேன். அவ்விதம் சிலரேனும் இருப்பார்களானால் அவர்களாவது இனிமேல் தெரிந்து கொள்ளட்டும் என்றே இவ்வியாசம் வரையப்புகுந்தேன். எல்லா மதத்தினருடைய சடங்குகளையும் பற்றி விவகரிக்கப் புகுந்தால் அது மிகைப்படக் கூறல் என்னும் குற்றத்தின் பாற்படு மென அஞ்சி, அதை வாளாவிடுத்து, நம்மவர் யாவருக்கும் பொதுவான சில விடயங்களை மாத்திரம், விவகரிக்கப் புகுந்தேன்.

 

மணவினைச் சடங்கில், முதலாவதாகத், தத்துவக்கூடல் அல்லது சதுஷ்கூடமெனப்படும் சதுரமானதோர் பந்தலமைத்து, அதனுள் அமையும் எட்டுத்திசையிலும், முறைமுறையே அந்தந்தத் திக்குப்பாலகரை ஏதாவதோர் உபமானமுகத்தால் நிறுவுவர். கீழ்த்திசையில் கிளை விளக்குவைப்பர். அத்திசையதிபனான தேவேந்திரன் ஆயிரங்கண் பெற்றவனானதாலே அவன்றன் ஆயிரங்கண் போன்று பல வெளிச்சம் தரும் கிளை விளக்குகளை வைப்பர். தென்கீழ்த்திசையில் அத்திக்குப்பாலகனான அக்னியை நிறுத்த வேண்டி குடவிளக்கை மர உரலின் மீது ஏற்றித் தையிலையால் மறைப்புக் கட்டிவைப்பர். தென் திசையில், தென் திசையோனான இயமன் பாவ புண்ணியத்தை நிர்வஹித்து அதற்கேற்ப சுவர்க்க நரகங்களைத் தருபவனாதலால் அவன் போன்று பாபத்திற்குப் பிராயச்சித்தமும் புண்ணியத்திற்கு ஆசீர் வாதமும் தருகின்ற புரோகிதரை அல்லது அந்தணரை வைப்பர். தென் மேற்குத் திசையில், இராக்ஷ தத்தலைவனான நிருதியின் அறிகுறியாய் பாப கர்மங்கள் புரியும் தாசியை வைப்பர். மேல் திசையில் மழை பொழிந்து உலகைச் க்ஷேமமடையச் செய்யும் வருணன் போன்று ''இயல்புடைய ழவர்க்கும் நல்லாற்றில் நிற்கும்'' துணைவன் துணைவியாய் இல்லற தருமத்தை நடத்தப்போகும் மணமகனையும், மணமகளையும் வைப்பர். வடமேற்கு திசையில் வாயுவின் பிரதிரூபமாய் மாப்பிள்ளைத் தோழன் ஒருவன் கையில் விசிறியேந்தி மணமகனுக்குக் காற்றுவரப் பண்ணிக்கொண்டிருக்கும்படி வைப்பர். வடதிசையில் நவநிதியம் படைத்த குபேரனொத்து மணமக்களின் உறவோனொருவன் கையிற் பணப்பையேந்தி விவாகச் சடங்கினுக்கு வேண்டும் நாணயங்களைக் கொடுத்து வருவன். வடகீழ்த் திசையில் ஈசானனை நிறுவவேண்டி, அம்மியும் குழவியும் வைப்பர். இத்தகைய உபமான முகத்தால் உபமேயங்களாகிய திக்குபாலகர்கள் விளக்கப்படுவர். இவர்களெல்லாம் சாட்சியாக முடிக்கும் மணமே தெய்வசாட்சியாக முடிவு பெற்ற மணமாகும். இக்காரணத்தைக் கொண்டே இந்துக்கள் முடிக்கும் மணம் தெய்வசாட்சி பெற்றது எனக் கூறுவர்.

 

இனி மணவினை யாரம்பித்ததும், முதலில் மணமகன் மணமகளிரு வருக்கும், கங்கணங்கட்டுவர். இதன் நோக்கமாவது, மணமகள் கன்னிகையாயிருந்து பரிபக்குவமடைந்த பொழுது (அதாவது எட்டாவது வயது முதல்) இருந்து முதலில் காந்தர்வனும், இரண்டாவது அக்கினிபகவானும், மூன்றாவது சோமனும் அவடன் கணவராயிருந்து இன்பம் நுகர்வர் என்பது புராதனக் கொள்கை. அக்கன்னியை கன்னிமைக்காப்பில் நின்றும், அத்தேவர்கள் மூவரினின்றும் விடுவித்தற்பொருட்டுக் கட்டப்படும் இரக்ஷாபந்தனம் போன்றதே கங்கணங் கட்டுதலாகும்.
 

இதன்பிறகு மணமக்களைப் பாதித்துள்ள, அல்லது பாதிக்கக்கூடிய நவக்கிரஹ தோஷத்தினின்றும் நீக்குதற்பொருட்டு நவதானியங்களை முளைக்கச்செய்து, மணமுடிந்தபின்னர் ஏழாவது நாளில் நதியில் கொண்டுவிட்டு நவக்கிரகதோஷத்தினின்றும் நீக்கிக்கொள்வர். பின்னர் சப்தநதிகள் அல்லது எழுவகைக் கடலிலுள்ள தீர்த்தத்திலும் மணமக்கள் நீராட வேண்டுமென்ற குறிப்பினை யுட்கொண்டே சிவாலயம், விஷ்ணு ஆலயம், பிராமணர் அகம், பசுத்தொழுவம், நந்தவனம், நதி, நதம் முதலியவைகளினின்றும் கொண்டு வந்த தீர்த்தத்தை மணமக்களின் மேல் புரோகிதர் புரோக்ஷிப்பர்.
 

பின்னர் பிரம விஷ்ணு ருத்திரர்களை நிகர்க்கும், ஆல், அரசு, கல்யாண முருக்கு எனும் மூவகை மரத்தின் கொம்புகளையும் ஓர் கம்பத்தில் கட்டி, சரஸ்வதி, இலக்குமி, பார்வதியை நிகர்க்கும் மூன்று மங்கிலியப் பெண்டு களைக்கொண்டு தென்மேற்கு திசையில் உள்ள பந்தல் கம்பத்தின் பக்கத்தில் நாட்டிவைப்பர். அம்மணமக்கள் ஆல்போல் தழைத்து அரசுபோல் வேரோடி முருங்கை போல் பூப்பூத்து, குடி யோங்கிவாழவேண்டுமென்று விரும்பியே இச்சடங்கைச் செய்கின்றனர் போலும்.

 

இத்தகைய முகூர்த்தங்கள் நடந்த பின்னரே மங்கலநாண்பூட்டுச் சடங்கு நடைபெறும். மணமகன் தன்னுயிரையே மணமகளுயிருடன் ஒன்றுறப் பிணிப்பான் போன்று மங்கல நாணை மணமகள் கழுத்தில் கட்டுவன். மாங்கில்யத்தை மஞ்சட் கயிற்றிற் கோத்துக் கட்ட வேண்டுமென்பது மறை நவில் வழக்கு. அந்நாணின் முதல் முடிச்சுப் போடுங்கால் பிரம்மமந்திரத்தையும், இரண்டாவது முடிச்சில் விஷ்ணு மந்திரத்தையும், மூன்றாவது முடிச்சில் ருத்திர மந்திரத்தையும் ஓதவேண்டும். அதன்பின்னர் மணமகளின் பிதா தனக்கும் தன் மகளுக்கும் இனிமேல் யாதொரு பாத்தியமும் கிடையாதென்றும் அவள் தன் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவள் தன் கணவனே கர்த்தன் எனவுங் கூறித் தன் மகளைத் தாரை வார்த்துக் கொடுப்பான்.

 

இதனையடுத்து மணமகன், மணமகளை யழைத்துச் சென்று அம்மியை மிதிக்கச்சொல்லிக் கற்புத் தவறிய அகலிகையின் கீழ்மையையும், சப்த ரிஷிகளின் நக்ஷத்திரத்தை யடுத்த அருந்ததி நக்ஷத்திரத்தைக் காட்டி கற்பின் திண்மையை விளக்கிய அருந்ததியின் மேன்மையையும் விளக்குவன். இதன்பின்னர் நடத்தப்பெறும் நலுங்கு, ஊசல், மலர்ச்செண்டடித்தல், மஞ்சள் நீராடல் முதலியவெல்லாம் மணமகனுக்குப் பெண்களின் ஸ்பரிச உணர்ச்சியின் தன்மையைக் காட்டும் சடங்குகளேயாதலால் யான் அதைக் கவனிக்கப் புகுந்தேனில்லை.

 

கடைசியாக மணமக்களை நகர்வலஞ் செய்வித்தல் மணமகன் மணமகளை உரிமை கெண்ட விடயத்தை உலகுக்கு அறிவிக்க வேண்டி நடத்தப்பெறும் ஓர் ஆடம்பரமேயாகும். பின்னர் கங்கண விசர்ஜனம் என்னும் விழா நடைபெறும்.

இத்தன்மையான சடங்குகள் இன்றைக்கும், தமிழ்நாட்டினர் பலர் வீட்டிலும் நடைபெற்று வருகின்றது. ஆனால் எத்தனைபேர் அதனதன் உண்மைத் தாத்பரியங்களை அறிந்திருப்பர் என்பதை மட்டும் யாமறியோம். பலர் அறியார் என்பது மாத்திரம் உண்மை. ஆதலினானே இவ்விடயம் எழுதப் புகுந்தோம். குற்றங் காணின் பொறுக்க. சுபம்.
 

தொ. மு. பாஸ்கரன்,

 ''சித்திராலயம்" திருநெல்வேலி.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment