Wednesday, September 2, 2020

 

தமிழன் இலக்கியம்

(வித்வான்-எம். சாம்பசிவம்)

வாழ்க்கையின் வைகறைப் பொழுதிலிருந்து, மக்கள் அனுபவித்து வரும் சலன நிசழ்ச்சிகளும், மனோ தர்மங்களும் உருப் பெற்று, பல ஒன்று சேர்ந்து, ஓர் நூலாக மிளிரவரின், அது, அப்பொழுது இலக்கியம் எனப்படும். அல்லது, பல நீதகளின் தொகுப்பு, ஓர் ஆசிரியனின் கைத்திறனால் நீண்ட கதையாகப் பரிணமித்தாலும் இலக்கியம் ஆகலாம்.

ஓர் நாட்டில் எழுந்த-எழும் இலக்கியங்கள், அந்நாட்டின் மேன்மையை வரையறுத்துக் காட்டும்; அது மட்டுமல்ல; அந்நாட்டின் மக்களை உணர்ச்சி மிக்கவர்களாகக்கூட மாற்றும்.

இலக்கியமாக உருப்பெற்ற அனுபவங்கள், மனோதர்மங்கள், தனிப்பட்ட ஒரு மனிதனுடைய - ஆசிரியனுடையவல்ல; -- பரிவர்த்தனையாக நாட்டில் மிளிர்ந்து கிடக்கும் அவ்வளவும், சிதறித் தோன்றியவை. அவை யாவும் ஒரே உள்ளத்தில் குவிந்தெழலாம். அந்நிகழ்ச்சிக்குக் கருவியாயிருப்பது, இலக்கியம் - காவியம். அவற்றின் அதிக தொடர்பினால தான், மக்களோடு மக்களாய்க் கிடந்த அவன், குறித்து எண்ணும் ஆசிரியன்
ஆனான்.

கம்பர், சேக்கிழார், சாத்தனார், இளங்கோவடிகள் முதலிய இலக்கிய ஆசிரியர்களும், இலக்கியமும், இலக்கணமுமான- நீதி நூலாய திருக்குறளின் ஆசிரியர் வள்ளுவரும் அப்படிப்பட்டவர்கள் தாம் என்பது ஆராய்ந்த தமிழனின் எண்ணம், அந்த ஒரே காரணத்தால் தான் தமிழுலகம் அவர்களின் இலக்கியங்களைச் சிரமேற் கொண்டு காக்கின்றது,

கேவலம், அன்னிய நாட்டின் பழக்க வழக்கங்களை ஒரு நாட்டில் திணிக்கவேண்டும் என்பதற்காகவோ அன்னியாட்டு மகனொருவனைப் புகழ்ந்து, அதனால் தன் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளலாம் என்பதற்காகவோ இலக்கிய ஆசிரியன், பிறநாட்டுச் சம்பவங்களைத் தன் நாட்டு மொழியில் இலக்கியம் ஆக்கவில்லை. அவன் நோக்கமெல்லாம், தன் நாட்டில் நடவாதிருந்த-பிற நாட்டில் நடந்த ஓர் தனிப்பெரும் நிகழ்ச்சியைத் தன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்து, அவர்களை அனுபவ ஞானிகளாக்க
வேண்டுமென்பதே ஆகும். அதே காரணம் தான், கம்பராமாயணம் போன்றவை தோன்றியதற்குஞ் சொல்லவேண்டும்.

இந்த வுண்மையை யுணராது கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய சில நூல்களைக் குறித்துத் தவறான மனப்பான்மை கொண்டு, அவற்றைக் கொளுத்தப் புகுந்தனர், சு.ம. கட்சியில் ஒரு சிலர். அவர்களின் செயல், 'சீ இந்தச் சமுத்திரம், பூவுலகத்தின் பெரும்பாகத்தை அடைத்து கொண்டிருக்கிறது; இதனால் எம்மவர்க்கு இடம் இல்லாமல் அதிக சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இந்தச் சனியன் பிடித்த கிள்ளுக்கீரை சமுத்திரத்தை இதோ! ஒரு விநாடியில் நக்கிவிடுகிறேன்!' என்று முனைந்து துள்ளும் ஓர் சிற்றெரும்பின் செயல் போலும்.

எனென்றால், இந்தச் சு.ம. கட்சியினர் கையில் எத்தனைப் பெரிய புராணம், கம்பராமாயணம் உள்ளனவோ அத்தனையையும் வேண்டுமானால் நெருப்பில் போட்டுக் கொளுத்தி அவர்கள் வேடிக்கை பார்க்கலாம் - அல்லது குளிர் காயலாம்! உலகத்தில் எத்தனைக் கம்பராமாயண பெரிய புராண ஏட்டுப் பிரதிகள், கண்ணாடிப் பீரோக்களிலும், தங்கப் பேழைகளிலும் கொலுவீற்றிருக்கின்றன வென்று இந்தச் சு - ம – காரர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் ஏன் குன்று முட்டிய 'குருவி' ஆகின்றார்கள்?

சொல்வலாம், சு-ம-காரர்கள்: கம்பராமாயணம் ஆரியனின் கதை கூறுகிறது. அதனால், அதன்மேலுள்ள வெறுப்பை எப்படியாவது நாங்கள், காட்டவேண்டியது தானே? என்று,

உண்மை அதுவல்ல; கம்பராமாயணமோ, பெரியபுராணமோ, எதுவாயிருந்தாலுஞ் சரி; தமிழ் மொழியில் தோன்றிய எந்த இலக்கியமும் தமிழன் இலக்கியமே. அதில் எள்ளளவும் தவறில்லை. இதைத் தனித்திருந்து ஆராய்ந்தால் புலப்படும். இதைத் தவிர்த்து, எத்தனையோ வகையில் அறியாமை நிரம்பிய வெறுப்பைக் காட்ட நினைப்பது, பேரீனம்.

கம்பராமாயணத்தைப் பார்ப்போம். இராமனைத் தெய்வம் என்று புகழ்ந்தது அபத்தம்; அவன், ஓர் அரசகுமாரன்; வீரன். அப்படியே அதிலுள்ள பாத்திரங்களைத் தேவராக்கியும், மனிதராக்கியும், இராக்கதனாக்கியும், வானரங்களாக்கியும் கூறியுள்ளது கூடப் புனைந்துரையே. ஆனால், இந்தப் புனைந்துரையையோ, அபத்தத்தையோ நேரே கம்பன் உற்பத்தி செய்து கொள்ளவில்லை. மூல கதையில் உள்ளதைத் தழுவியது கம்பன் இராமாயணம். மற்றைப்படிக் கால தேச வர்த்தமானங்களைப் பொறுத்து, வேற்றுமைப்பட்டிருந்த இந்திய மக்களே, இராமாயணப் பாத்திரங்கள்; அவ்வளவுதான்.

இந்த உண்மையை வான்மீகி, தன் கைச் சரக்கால் வர்ணம் கொடுத்து வேறு வேறாக்கினான்! அவசியத்தை முன்னிட்டுத் தழுவி எழுதச் சென்ற கம்பன் நோக்கம், 'கதையின் பாவிகம் மட்டும் நமக்குப்போதும்’ என்று இருந்திருக்குமானால், அவன் இராமாயணம் அன்றே புறக்கணிக்கப் பட்டிருக்கும் மக்களால். காரணம், ஆரியர் மூலமாகத் தாம் காதால் கேட்ட கதைக்கும், கம்பராமாயணத்திற்கும் அதிக வித்தியாசம் இருந்திருக்கும். அதனால், சரியான வகையில் எழுதப்படவில்லை என்று இகழ்ந்திருப்பார்கள். மக்கள். தமிழ்க்கம்பன் புலமை பெருமை அப்பொழுதே அழிந்துபோ யிருந்தால் இன்று 'கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று, தமிழர்களால் பெருமை
பெற்றுக் கொள்ள முடியுமோ? ஆகவே, கம்பன் செய்ததும் யோசனையே!

அதற்காகவே கம்பன், மூல கதையை அப்படியே தமிழாக்கினான். ஆனால், கம்பராமாயாணத்தில் இன்று படித்த - அறிவுள்ள தமிழன் காணுவது, கேவலம் ஆரியன் கதையல்ல; பழக்கவழக்கமல்ல; பெருங்கீர்த்தியல்ல. அவன் காணுவதெல்லாம், அதில், தமிழனின் கலைத்திறம்! – இலக்கியம்! அவ்வளவு தான்!

ஆகவே, கம்பன், தன் கலைத்திறனை அப்பொழுது மக்கள் விரும்பிய ஓர் கதை மூலமாகக் காட்டினான். இப்பொழுதும், பெரும்பாலும் எந்த மக்களும், ராமாயணத்தைக் கலைத்திறனை அறியவும், இலக்கியத்தை அனுபவிக்கவும் படிக்கிறார்களே தவிர, கேவலம் பற்றுக்கோடாயமைந்த அந்தப் பாட்டிச் கதையைக் கேட்கவல்ல, படிப்பது.

தமிழ்மொழி எவ்வளவு நயமானது! இனிமையானது! பெருமையுடையது! என்பதை நன்கு அறிய ராமாயணம் ஓர் முதல் உதாரணமாகும், என்றும்! இராமாயணத்தின் ஒவ்வொரு செய்யுளும், ஏறக்குறைய திருக்குறளின் ஒவ்வொரு குறளுக்கும் இருக்கிற மதிப்பளவு மதிப்பு பெறத் தகுதியுண்டு. இன்று தமிழ் மொழியில் உள்ள மூல நூலாகிய உலகப் பொது நூலாந் திருக்குறளுக் கடுத்தபடி ஒரு தமிழ் நூலைக் குறிப்பிட வேண்டுமென்றால், நான், கம்பராமாயணத்தைத்தான் முதலில் முழுகனதோடும் குறிப்பிடுவேன். அத்தகையது, கம்பராமாயணம்.

கம்ப ராமாயணத்தில் எந்தச் செய்யுள், மக்களுக்குத் துர்ப்போதனை செய்கிறது? நீதியைத் தவிர – இனிமையைத் தவிர – சாதுர்யங்களைத் தவிர தாய்மொழிப்பற்றைத் தவிர!

இன்னும், ராமாயணம், ஓர் சிறந்த தமிழ் நாடகம்! அதில் நடிக்கும் சாத்திரங்கள், கம்பனின் நெஞ்சு அறையிலே குற்றமற படித்து வெளி வந்தார்கள் - கம்பனின் 'டைரக்ஷ'னாக் ஒளிரும் ‘நக்ஷத்திரங்’கள்!

உண்மையில் இன்றுவரை கம்பன் உயிரோடு இருந்திருப்பானானால்
அவனது 'டைாக்ஷ'னில் வரக்கூடிய தமிழ்நாட்டுப் படங்கள், உலக முழுமையையும் சுற்றிக்கொண்டிருந்திருக்கும். காரணம்: அவன் ஒருவனுக்குத் தான் தெரியும், கதையில் வரும் உபமானங்களை எப்படிச் சித்திரிப்பது - நினைவுகளை எப்படிக் காட்டுவது? – ‘ஸீன்’களை எப்படி அமைப்பது? - கற்பனைகளை எந்த வரம்புக்கு உட்படுத்துவது? - நடிகர்களை எப்படி உண்மையாக நடிக்கவைப்பது? என்பன போன்றவையெல்லாம்.

எனவே, கம்பராமாயணம், தமிழர்களின் முக்காலத்தின் கலைத்திறனையும் ஏககாலத்தில் நிரூபிக்கும் பெருமை வாய்ந்த தமிழ் இலக்கியம் என்பதோடு, அப்படிப்பட்ட இலக்கியம் எதிர்காலத்தில் தமிழனுக்கு மற்றும் ஓர் இலக்கியம் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை என்பதையும் கூறி, மேற் கூறிய காரணங்களால் - நுண்ணித்து ஆய்வார்க்கு - கம்பராமாயணமோ, பெரியபுராணமோ, தமிழில் தோன்றிய மற்றெந்த இலக்கியமோ அவை எல்லாம் 'தமிழன் இலக்கியமே' என்று முடிக்கிறேன்.

ஆனந்த போதினி – 1943 ௵ - பிப்ரவரி ௴

 



 

No comments:

Post a Comment