Sunday, September 6, 2020

 

மறந்துவிட்டோம்

 

நமது அருமைத் தமிழ்நாடு - மற்ற உலகப் பகுதிகளெல்லாம் காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும், காதிலும், மூக்கிலும் சங்குகளையும், வளையங்களையும் மாட்டிக்கொண்டு, தேகமெல்லாம் பச்சை குத்தியவர்களாய், மிருகங்களோடு மிருகங்களாய் வேட்டையாடிப் பச்சை ஊனையுண்டு காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்து வந்த அக் காலத்திலேயே தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடும் 'சரித்திரக்காரர்கள்' தெரியவில்லை, மிகமிகப் பழங்காலம்' என்று கூறி வியக்கும் அத்தகைய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே - தமிழர்களே உலகில் முதல் முதல் தோன்றிய ஜாதியரென்று மேல் நாட்டுக் கலைவல்லாரும் சந்தேகிக்கும் வண்ணமான மனித ஜாதியின் ஆரம்பச் சூரியோதயத்திலேயே நம் தமிழாசி நாகரிகம் பெற்ற நல்லெழில் வாய்ந்த நாட்டினளாய் விளங்கினாள் என்று நாம் பெருமை பாராட்டிக் கொள்ளுகின்றோம். மிகப் பழைய நாகரிகங்களாகிய பாபிலோனியா, கிரேக்க, ரோம், எகிப்திய நாகரிகங்கள் தோன்றியதையும், வான்முட்டும் புகழ்வீசித் தலை தூக்கி நின்றதையும், பின்பு அவை திடீரென வீழ்ந்து மறைந்ததையும் நம் தமிழரசி இருகண்ணாலும் கண்டு வருந்தினாள் என்பது வாஸ்தவமே. ஆனால் இவ்வாறெல்லாம் பெருமை பேசிக் கொள்ளும் நாம் நமது இன்றைய நிலையை மறந்து விடுகின்றோம் என்பதும் துக்ககரமான ஓர் உண்மையேயாகும்.

 

நமது அருமைத் தமிழரசி நம்மை எத்துணைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தாள். நம்மை வான மென்னும் தன் கையா லணைத்து, வையமென்னும் தன் மடிமீதிருத்தி, ஞானமென்னும் நற்பாலூட்டி, தீந்தமிழ்த் தென்றலென்னுந் தொட்டிலிற் தாலாட்டிபஞ்சியாலும், பட்டினாலும் பல்வகை யாடை யுடுத்தி, நமக்குத் தென்கடல் முத்தும், பவளமும், மேற்கு மலைப் பொன்னும், மணியும் அணிசெய்து பூட்டி, நமது ஆசைத் தமிழ்ச் சொல்லின் அற்புத மழலையில் மகிழ்ந்து, குன்றும், மலையும், குளிர்காவும், நறுநீரும், பண்ணை வெளியும், நந்தவனச் சோலையும், குயிலும், மயிலும், கிளியும், மானும், மரையும் விளையாட்டுத் தோழராயிருக்க வமைத்து, கம்பன்களித்த கதிர்நிலா காட்டி, கன்னலுந் தேனும் கனியுமின் பாலும், காதலியும் செந்நெலும் நல்கி 'எக்காலும் நம்மை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்து வந்த தமிழரசியை நாம் அறவே மறந்துவிட்டோம். அன்று முதல் இன்று வரை நமக்கு அவள் போதித்துள்ள நல்ல நல்ல நீதிகளும், கவிதைகளும், கானங்களும், வீரங்களும், வெற்றிகளும் எத்துணை? அவள் நமக்குப் 'பொய்யா நாவிற்' கபிலனது பொன்னுரைகள் புகட்டினாள். தீந்தேன் சுவையுள்ள கற்றோர்கள் ஏத்தும் கலித்தொகையைப் பருகக் கொடுத்தாள். இளங்கோவடிகளின் இன்பமயமான நெஞ்சை அள்ளுஞ் சிலப்பதிகார மென்றோர் மணியாரம் 'பூட்டினாள். வள்ளுவர் தந்த தெள்ளிய குறளைப் பாலோ டூட்டி மகிழ்ந்தாள். கம்பனார் இயற்றிய காவியச் சோலையில் நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிப் போய் ஆங்குள்ள மலைகளையும், ஏரிகளையும், நதிகளையும், வானத்து மீன்களையும், திங்களையும், பரிதியையும், சீதை ராமன் முதலியோரையும், அயோத்தியின் அருமையையும், மிதிலையின் பெருமையையும், வணங்காமுடி மன்னனாகிய ராவணேசனது ஆடம்பரத்தையும் எல்லாவற்றையும் காட்டிக் காட்டிக் களித்தாள். கம்பரது புது உலகு, இயற்கையைக் காட்டிலும் அழகுற மிளிர்ந்தது. தனது அருமைத் திருமேனி யெங்கணும் கோயில் கொண்டருளிய திருமாலையும், சிவபெருமானையும், தன்னுடைய அருமைக் குமாரனாகிய குமார தேவனையும், வள்ளித் தேவியையும் தில்லை நடனத்தையும், அரங்கத் தறிதுயிலையும், ஆழ்வார்களின் பரவசத்தையும், நாயன்மாரின் நற்செயல்களையும், தேவாரத் திருவாசகத் திருவாய் மொழிப் பொக்கிஷங்களையும் காட்டினாள். ஆணும் பெண்ணும், களிறும் பிடியும், சேவலும் பெட்டையும் ஈசனாகவே தோன்றின நம் அப்பர் பெருந்தகைக்கு. நம்மாழ்வார் கடலிலிலும், மலையிலும், வானத்திலும், வையத்திலும் கண்ணனையே கண்டு மகிழ்ந்தார். ஆனால் நாம் இன்று இவைகளையெல்லாம் மறந்துவிட்டோம். திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றி நமக்கொன்றும் தெரியாது. ஆனால் மார்க்கஸ் அரீலியஸ் அன்டோனினஸ் பயஸ் (Marcus Aurilius Antoninus Pius) என்பாரின் நீதி மொழிகள் நமக்கு நன்கு தெரியும். இளங்கோவும், கம்பனும் நம் எண்ணத்தை விட்டேகி விட்டனர்; மில்டனும் (Milton) ஷேக்ஸ்பியரும் (Shakespeare) அவர்களிடத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். கலித்தொகையும், அகநானூறும், குறுந்தொகையும் விட்டுப் பால்க்ரேவ் (Palgrave) பொன் பொக்கிஷம், (Golden Treasury) என்னும் கவிதைத் திரட்டில் நாம் இது காலைகளிக்கின்றோம். சமய சாத்திரங்களோ, பக்தி நூல்களோ சமயத்தை ஒதுக்கித் தள்ளும் மேனாட்டு நாகரிகத்தில் மூழ்கி விட்டன. ஆகவே இன்று நாம் நம் தாயை மறந்துவிட்டோம். அவள் கொடுத்துள்ள அருளை மறந்துவிட்டோம். மார்கஸ்ஸையோ, மில்டனையோ, ஷேக்ஸ்பியரையோ நாம் குறை கூறவில்லை. அவர்களை மனித தேவர்கள் என்று போற்றுகின்றோம். ஆனால் நம் நாட்டு நமது அருமைச் சகோதரராகிய கம்பர், இளங்கோ, வள்ளுவர் முதலான மானிடத் தேவர்களையும் நாம் மறந்து விடக்கூடாது என்பதே நமது வாதம். எம்மை மன்னிப்பீரேல் நாம் சிவவாக்யர் சொல்வது போல் பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகளாய் வாழ்கின்றோம் என்பதில் ஐயமில்லை. தன் வீட்டைக் கவனியாமல் அயல் வீட்டைச் செம்மை செய்யப் போவது அறிவுடைமை யாகாது. அதுமாதா வயிறெரிய மகேஸ்வர பூஜை செய்வதையே ஒக்கும்.

 

தமிழன்னை அன்று தம் புதல்வர்கள் அழியாத ஆண்மையும் அஞ்சாத வீரமும் படைத்த தீரர்களாய்த் திகழ்ந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். தான் செய்த குற்றத்திறகாகத் தன் கையை வெட்டிக் கொடுத்தான் அவளது மணிவயிற்றுதித்த ஓர் அரசச் சேய். ஒருநாள் காசிக்குச் செல்வான் ஒரு பார்ப்பனன் தன் மனைவி துணையின்றி வருந்துவதைப் பார்த்து 'அரசன் காப்பான்' என்று சொல்லிப் போனபின் அவனில்லா வேளையில் ஒவ்வொரு நாளிரவும் அரசன் அவன் இல்லத்தைக் காத்து வந்தான். அப் பார்ப்பனன் ஊர் திரும்பி மனைவியோடு இல்லத்தில் பேசிக்கொண்டிருக்குங் காலை அரசன் அவ்வுண்மையறியாதவனாய் வேறோர் மனிதன் அவ் வீட்டுள் புகுந்து விட்டான் எனக் கருதிக் கதவைத் தட்டினான். அந்தணன் தன் மனைவிபால் ஐயங்கொண்டு ஏதேதோ சொல்வதறிந்து அவன் ஐயங்கொள்ளா வண்ணம் வேந்தன் மற்ற வீடுகளின் கதவுகளையும் தட்டி விட்டுச் சென்றான். மறுநாள் வழக்குவரத் தன் குற்றத்திற்காக அரசன் தானே தன் கையை வெட்டிக் கொண்டான். இத்தகைய நீதி எங்கேனும் உண்டா? இவ்வரசனாகிய பொற்கை மாறனது வீரத்தை என்னென்று புகழ்வது. கோவலனைப் பொன் செய் கொல்லனது சொற்கேட்டுக கொலை புரிந்த பாண்டியன் தன் குற்ற முணர்ந்த காலை 'யானோ அரசன், யானே கள்வன்' என்று கீழ விழுந்து உயிர் நீங்கிய வீரம் யாருக்கு வரும்? மனுச்சோழன் தேர்க்காலில் தன் மகனை ஊர்ந்த கதை யாவருமே அறிந்த தொன்றாகும். கலிங்கம் வென்ற கருணாகா வீரனின் செவ்வியை என்னென்பது.


'விண்ணை யிடிக்கும் தலையிமையம் - - எனும்
 வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
 பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - திறற்
 பார்த்திவர் நின்ற தமிழ் நாடு'

 

என்று போற்றப்படுபவன் இத் தமிழ் வேந்தனன்றோ? வடநாட்டுப் பாடலீ புரத்திலும் மாண்பமைந்த தலைமைச் சேனையாய்த் திகழ்ந்தது தமிழ்ப் பெருஞ் சேனை யன்றோ? பாரி வள்ளல் வள்ளன்மையும், சிபிமன்னன் பெருங் கருணையும், காந்தமன் ககந்தன் முதலியோரின் நீதிமுறைகளும் நாம் எங்கு காண முடியும்? ஆனால் அந்தோ இன்று நாம் நமது முன்னோர்கள் வீரத்தைப் படித்தேனும் அறிந்து கொள்ள விருப்பமற்றவரா யிருக்கின்றோம். தமிழ்த் தாய் அது கண்டு கவலுகின்றாள். நமது மறப்பை நீக்கி வீரங் கொள்ள வேண்டுகின்றாள்.

 

மற்றும் பழங்கால நம் சோதரிகள் எத்துணை வீரஞ் செறிந்தவர்களாய் வாழ்ந்தனர். அவர்களைப் போன்று இது காலை மகனைப் பெறுதல் என் கடன், அவனை வளர்த்தல் தந்தையின் கடன், நல்ல நடை பயிற்றல் வேந்தன் கடன், வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனது கடன், போர் முகத்தில் யானை யெறிந்து வெற்றியோடு திரும்புதல் என் மகனின் கடன்' என்று யாவரே சொல்லத் துணிவர். தன் மகன் போர் முகத்திற் புறங்கொடுத்தான் என்று அவனைப் பெற்ற வயிற்றைத் துமித்த வீரப் பெண்டிர் தமிழ் மகளிரல்லரோ? இரண்டு நாட்கு முந்திய சண்டையில் தகப்பனிறக்கப் பின் மறுநாட்போரில் கணவனிறக்க அப்போதும் மயங்காமல் தன் ஒரே மகனைப் போர்க்களத்துக் கனுப்பிய புகழ் மிக்க வீரப் பெண்மணி தமிழ்ப் பெண்மணி யன்றோ? இன்று நாம் இவைகளையெல்லாம் மறந்து விட்டோமே. நம் அன்னைமார்கள் அறியாமைக் குழியில் அவலமாய் வாழுகின்றனரே. இதனைக் கண்டு தமிழன்னை கண்ணீர் விடுகின்றாள். நாமோ வாளாவிருக்கின்றோம்.

 

பின்னும் நம்மாசி தமிழ்த்தாய் நமக்குச் செய்துள்ள நன்மைகள் எண்ணித் தொலையா, ஏட்டில் அடங்கா. எத்துணை சிற்பச் செல்வங்கள், காவியங்கள், ஞான நல்லுரைகள் இவை யாவற்றிற்கும் மேல் எத்துணை அழகான அகவாழ்வு நெறி நமது நாட்டில் தழைத்திருந்தன. இன்று நாம் இவை யாவற்றையும் மறந்து காம வாழ்வினில் களிக்கின்றோம். தமிழச் சகோதரி சகோதரர்களே மறதியின்உறக்கத்தில் உறங்கியது போதும், உடனே எழுங்கள். 'எழுமின் விழிமின் கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்.

 

நாம் வெறுமனே பழங் காலப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பதில் மட்டும் பயனில்லை. புதுக்காலச் சக்திகளை, சாத்திரங்களை, கலைகளை, காரியங்களை யெல்லாம் கையாள முயல வேண்டும். தமிழன்னைக்கு இன்னும் புதுப் புது ஆடைகளும் அணிகளும் பூட்ட வேண்டும்.

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்
      மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் பயனுமில்லை
திறமான புலமை யெனில் வெளி நாட்டார்
      அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

 

தன் பெருமையைத் தானே சொல்லுதல் அகங்காரம். அதனைப் பிறர் கூறவேண்டும். எங்கள் பாட்டனார் ஒரு சிங்கத்தோடு சண்டையிட்டார், எங்கள் தகப்பனார் ஒரு யானையைத் தோற்கடித்தார் என்பதால் மட்டும் ஒருவன் நிரந்தரமான பெருமைக்குப் பாத்திரனாகான். நம் முன்னோர்கள் மூலம் நம் தமிழன்னை நமக்குச் செய்துள்ள நலன்கள் மிகப் பெருமை படைத்தவையே. ஆனால் அந்நலன்களை நாம் இன்று எவ்வாறு உபயோகிக்கிறோம். நம் தகப்பன் பாட்டனைப் போல் வீர தீரங்கள் செய்யாவிடினும் நாம் ஒரு பூனையோடாவது போர் செய்ய முடியுமா என்பது தான் கேள்வி? இன்று நாம் தமிழுக்கு யாது செய்துள்ளோம்? என்று எண்ணிப் பார்த்து ஆவன செய்ய முற்பட வேண்டும். இனியாவது நாம் மறந்திருக்கும் முன்னோர் செயல்களைக் கையாள மறவாதிருக்க வேண்டும். 'குந்தித் தின்றால் குன்றும் மாளும்' என்பது போல் பழைய தமிழ்ச் செல்வத்தைப் போற்றிக் காப்பது மட்டும் போதாது. புதுமைச் செல்வமும் சேர்க்க வேண்டும். முற்காலத்தவரின் வீரத்தையும், ஆண்மையையும் நாம் நம் நாட்டை நலமுறுத்துதலில் செலவு செய்வோமாக. நம் நாடும், மொழியும், நாகரிகமும் வளர்ந்து சிறந்து ஓங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

 

ஓம் தத் ஸத்.

ஆனந்த போதினி – 1929 ௵ - மே ௴

 

 

No comments:

Post a Comment