Sunday, September 6, 2020

 

மரண சுகம்

(வித்துவான்-எம். சாம்பசிவம்.)

 

‘மரணம், பயங்கரமானது என்று நினைப்பது பொறுக்கி எடுத்த முட்டாள் தனம்; அது, இன்பமாக இருக்கும் என்று ஏன் நினைக்கக்கூடாது? நன்றாகத் தெரிந்து கொள்ளாத ஓர் விஷயத்தைப் பற்றி மனிதர்கள் எதற்காகக் கயிறு கட்டி விட்டுப் புரளி பண்ணுகிறார்கள்?' என்றெல்லாம் மரணத்தைப்பற்றி மேனாட்டுப்புலவர் ஒருவர் கூறும்போது மூட மக்களின் மேல் சீறி விழுகின்றார்.

 

ஆமாம்; மரணத்தைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்கள், அது, அப்படி இருக்கும்; இப்படி இருக்கும்; மிகப் பொல்லாதது; சகிக்க முடியாதது' என்று கூறிக் காது கொடுத்துக் கேட்கும் மக்களை நிலைகலங்கச் செய்து விடுவதைக் காட்டிலும் வாய்மூடி மௌனியாகி' யிருப்பது உண்மையாக எவ்வளவோ மேல். அக்கரையாக முன்னெச்சரிக்கை செய்ய அதைப்பற்றி ஒன்றுமே தெரியாத இவர்கள் யார்?

 

ஆழ்ந்து நோக்கினால், 'மரண நிலையும், ஒருவித இன்பமே என்ற முடிவிற்கு யாரும் வரலாம். ஆனால், தற்கொலையும், அறியாமையால் ஏற்படும் மரணமும், தண்டனை மரணமும் எத்தகை எந்நிலையன என்பன பற்றிக் கூறுவது நோக்கமல்ல; எனினும், அத்தகைய செயற்கை மரணங்கள் உறுதியாகத் துன்பத்தைப் பயக்கின்றன என்பது சொல்லாமலேயே விளங்கும். அது பற்றித்தான் இயற்கை மரணத்தையும் தவறாக நினைத்தனர் போலும், மக்கள்!

 

ஐந்து வயதிலும் ஏற்படலாம், ஐம்பது வயதிலும் உண்டாக்லாம் இயற்கை மரணம்; நூறு வயதில் தான் இயற்கை மரணம் ஏற்படும் என்பது நியதியல்ல. காரணம், பழவினை வினை என்னும் அவரவர்களின் முன் வினையைப் பொறுத்ததே.

 

ஆகவே, சில மக்கள், துன்பம் வந்த காலத்து அதைச் சகிக்க சக்தி யில்லாமல், "ஆறிலும் சாவு! நூறிலும் சாவு" தானே! என்ற பொருளற்ற பழமொழியைக் கூறிக்கொண்டு, இறக்கத் துணிகின்றனர்; தற்கொலை செய்துகொள்ள முனைகின்றனர். இதற்குக் காரணம் என்ன?

 

இயற்கை மரணத்தையும், செயற்கை மரணத்தையும் மக்கள், சமமான நிலையில் வைத்து நினைப்பதே முக்கியமாகத் தற்கொலைக்கு அதிக ஏதுவாகிறது. இயற்கை மரணம் சுகமானது என்று அவர்கள் அறிவார்களானால், தற்கொலை என்பதே ஒன்று இல்லாமற் போய்விடும்.

'செயற்கை மரணம், பயங்கரமானது; பெருந்துன்ப முடை இயற்கை மரணம், மிகச் சுலபமானது; இன்ப முடையது என்பதை தெய்வப்புலவர் திருவள்ளுவனார் எங்ஙனம் கூறுகிறார் என்பதை நோக்குவாம்.

சாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை"                     -குறள் எண்-230.

 

‘ஒருவன், தற்கொலை செய்துகொண்டு இறப்பது போன்ற பெருந்துன்பம், வேறு ஒன்றுங் கிடையாது; என்றாலும், பிச்சைக்காரர், ஒரு பொருள் கேட்கும்போது, அதைக் கொடுக்க முடியாவிட்டால், தற்கொலை செய்து கொள்வதே மேல்' என்று, தருமஞ் செய்வது நல்லது என்னும் 'ஈகை' அதிகாரத்தில், செயற்கை மரணத்தின் பயங்கரத்தை விளக்குகிறார்.

 

அதே வள்ளுவராகிய பொய்யாமொழியார், ‘நிலையாமை' என்னும் அதிகாரத்தில், இயற்கை மரணத்தின் சுலபத்தைச் சொல்லும்போது எங்ஙனம் கூறுகிறார், பாருங்கள்.


“உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி,
விழிப்பது போலும் பிறப்பு.”                  - குறள் எண் 339.

 

'ஒருவனுக்குத் தூக்கம் வருவதுபோல, இறப்பு வருதல்; தூங்கி, விழிப்பு வருவது போல், பிறப்பு வருதல்.'

 

தாவது, ஒருவனுக்குத் தூக்கம் வருவதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவனைத் தூங்க வேண்டாமென்று தடுத்தால், எவ்வளவு எரிச்சல் வரும், தடுப்பவர்மேல்? ‘தூங்கு' என்று, அவனுக்கு ஒரு படுக்கையும் நாம் கொடுத்தால் அப்பொழுது அவன் எப்படி எவ்வளவு இன்பமாகத் தூங்குவான்? ஆகவே, தூங்குவதிலும் இன்பம் இருக்கிற தல்லவா? அதே போலத்தான், இயற்கையாகத்தானே வரும் இறப்பிலும், இன்பம் இருக்கிறதாம். தூக்கத்தில் நாம், எந்த இன்பத்தை அனுபவிக்கிறோம்? அந்த இன்பத்தைத்தான் இயற்கை மரணத்திலும் அனுபவிப்போம்!

 

பிறக்கும் போதும் அப்படித்தான்! தூங்கிவிட்டு, விழிக்கும் போது, எப்படி உடம்பு சுகநிலையில் இருக்கிறதோ, அப்படியே, இறப்பு வந்த பிற்பாடு வரக்கூடிய பிறப்பும்! பிறப்பில் துன்பம் இருப்பதா யிருந்தால் சிசுக்கள், துடித்து இறந்து விடாவா?

 

சிசுக்கள் பிறந்ததும், சில, கத்துவதற்குக் காரணம் வேறு: தாய் வயிற்றி லிருக்கும்போது இருந்த சீதோஷ்ண நிலைக்கும், பிறந்த பின் வெளியேயுள்ள சீதோஷ்ண நிலைக்கும் அதிக வேறுபாடு இருக்கிற தல்லவா? அதைத்தான் பிறந்ததும் குழந்தைகள் அழுவதற்குக் காரணமாகச் சொல்லுகிறார்கள்.

 

இன்னும், இயற்கைச்சாவு எதுபோலத் தெரியுமா? 'முட்டைக்குள் இருந்து குஞ்சு, வெளிவருவதுபோல! அல்லது கூண்டிலிருந்து பறவை, வெளியே பறந்து செல்வதுபோல! எது? உடம்பிலிருந்து, இயற்கை மரணத்தின் போது உயிர் வெளிப்படுவது தான்!
என்கிறார் நாயனார். உதாரணத்தின் மூலமாக, மரணம், சுலபம்; சுகம்' என்பதை எவ்வளவு அழகாகக் கூறுகிறார், அவர்?

 

“குடம்பை தனித்து ஒழிய புள் பறந்தற்றே;
உடம்பொடு உயிரிடை நட்பு.''                      குறள் 338.

 

ஆகவே, மரணம், எத்தகையது என்று தெரிகிற தல்லவா? ஐய மிருந்தால் கேளுங்கள்; திருக்குறள் இருக்கவே இருக்கிறது. பயம் என்ன?

 

ஆனந்த போதினி – 1943 ௵ - நவம்பர் ௴

 

 

No comments:

Post a Comment