Sunday, September 6, 2020

 

மதுரைச் சொக்கநாதர் உலா

மு. த. வேலாயுதம்

 பிரபந்த வகைகளில் உலா ஒரு நல்ல இலக்கியம். படித்தின்புறுவதற்கு வேண்டிய சொல் நயமும், கவிஞரின் சொல் சாதுரியமும், அழகான வர்ணனைகளும் நிறையப் பொதிந்து கிடக்கும் உலாக்கள் அதேகம் இருக்கின்றன. அதில் ஒன்று, 

பேரறிவு படைத்த நம் பெரியோர் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறாகப் பிரித்திருக்கின்றனர். அவைகளுள் உலா என்பது ஒன்றாம். உலர் வென்பது என்ன என்பதை ஆராய்வாம்: இலக்கண விளக்க ஆசிரியர் உலர்வின் இலக்கணத்தைக் கூறவந்த விடத்து,


"குழை மகனைக் கலி வெண்பாக் கொண்டு
விழை தொல் குடிமுதல் விளங்கவுரைத் தாங்
கிழைபுனை நல்லா ரிவர்மணி மறுகின்
மற்றவன் பவனி வரவேழ் பருவ
முற்றமா னார்தொழப் போந்த துலாவாம்.''


எனக்கூறுகிறார். இதற்கு உரையாசிரியர் கூறுவதாவது. “இளமைப் பருவமுற்ற தலைவனைக் குலத்தானுங் குடிப்பிறப்பானும் மங்கலங்களானும் பரம்பரை யானும் இன்னானென்பது தோன்றக் கூறி, அணிகலன்களான் அலங்கரித்துக் கொண்டு முதன்மை பெய்திய மானார் நெரு தங்கிய அழகிய வீதியிடத்து அன்னோன் பவனிவரப் பேதை முதலிய ஏழ்பருவமானார் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண்) கண்டு தொழ உலா வந்தது உலாவாம்.” - மேற் கூறப்பட்ட் ஏழு மாதர்களும் விலைமாதர்களாவர்.

 

இங்கு ஆராய்வதற்கு வேண்டி எடுத்துக் கொண்ட மதுரைச் சொக்கநாதருலா வென்பது, மதுரையிற் கோயில் கொண்டெழுந்தருளிய சொக்கநாதக் கடவுள் விஷயமாக யாக்கப்பட்டது. மதுரையில் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு அரசு புரிந்து வந்த வீரமாறன் என்னும் அரசன் விருப்பத்திற் கிணங்க, புராணத் திருமலைநாதரென்னும் புலவர் சிகாமணியால் இயற்றப் பெற்றது.

 

இந்நூல் கலி வெண்பாவால் யாக்கப் பட்டது. மொத்தம் கண்ணிகள் 516. உவமைகள், உருவகங்கள், சிலேடைகள், நீதிகள் முதலியன அணிகலனாக விளங்குகின்றன. படிப்போர்க்கு மிகச் சுவை பயக்கும் நூல் என்பதில் ஐயமில்லை.


உவமை.

சொக்கநாதர் வீதியுலா வருகிகின்றார். அப்போது அவர் தம் ஆடையாபரணங்களைப் பற்றிக் கூறுமிடத்து,



“திகழ்வாள் வயிரமணி சேருதர பந்தம்
அகல்வான் கதிரை மதியாக்கப்-புகலளிகள்
சாலத்திரண்டு சூழ் தாமரைபோற் செங்கைமேல்
நீலக்கடக வொளி நின்றிலங்கக்-கோலமணிச்
சுந்தரமார் திண்புயமேற் சோதிமணிக் கேயூரம்
மந்தரஞ் சூழ் வாசுகியின் வாய்ப்புதவ ...


என அழகு படுத்தி யிருக்கின்றார் புலவர்.

 

சொக்கநாதருக்கு உதர பந்தம் என்னும் ஓர் அணியை வயிற்றின் மேல் அணிவித்திருக்கின்றனர். அதில் பதித்திருக்கும் கற்கள் பிரகாசம் பொருந்திய இரத்தினக் கற்களாகும். சூரியனைச் சந்திரனாக்குதல் போல மிக்க பிரகாசம் பொருந்திய உதரத்தில், மதியின் ஒளி யன்ன மாணிக்கக் கற்களாலான அணியை அணிவித்திருக்கின்றனர். கைக்குத் தாமரையை உவமை கூறுவது மரபு. தாமரை மலரில் வண்டுகள் சூழ்ந்திருத்தல் இயற்கை. இவ்வாறே சொக்கநாதரின் கைத்தாமரையில், நீலக் கடகத்தை அணிவித் திருக்கின்றனர். இந்நீலக் கடகம் வண்டுகள் போல் காணப்படுகின்றன. எனவே தாமரை மலரில் வண்டுகள் சேர்தல் இயற்கை யன்றோ? இதையே நீலக் கடகமணிந்த கைக்கு உவமையாகக் கூறுகிறார் புலவர் பெருமான். 

 

மற்றோரிடத்தில், பெதும்பைப் பருவத்தாள் ஒருத்தி வீதியுலாவைக் காண்கிறாள். அவள் நெகிழ்ந்த தன்மையை எடுத்துக் கூறப்படுகிறது.

 

இளமையுடையவள்; தாமரை அரும்புகள் போல் அவள் ஸ்தனங்கள் (நகில்கள்) காணப்படுகின்றன. வடவாக்கினி எத்தகைய கொடுமையுடையது? எத்தனை உலகத்தை அழிக்க வல்லது? அந்த வடவர்க்கினியே அழகுடன் இரண்டு நகில்களாகத் தோன்றின அவள் மார்பகத்தின் கண். இவைகள் ஐம் பொறிகளையும் தம்வய்ப்படுத்தி அரிய தவஞ்செய்யும் தவயோகிகளின் கைகளை முகிழ்த்துத் தவத்தைக் கெடுக்கவல்லன. கொடிய காலனும் கண்ணைத் திறந்து ஆநந்திக்கச் செய்யுந் தகுதியுடையன. கரமுதல் மெய்யெலாம் புளகாங்கிதம் கொள்ளும் விதம் செய்யும் ஆற்றலுடையன. ஈதன்றி அவள் இடையோ மிகச் சிறியது. தவம் செய்யும் யோகிகளின் தீவினைகளெல்லாம் எவ்வாறு காலத்தான், யோகத்தின் பலனால் அருகி வருகின் றனவோ அது போலவே இவள் இடையும் சுருக்க முடையது. புனிதமான திருப்பாற் கட்லில் எவ்வாறு ஆலகால விஷம் தோன்றிற்றோ அவ்வாறே இவள் கண்ணிடத்துகிகளவு என்னும் விஷம் தோன்றிற்று. அன்றலர்ந்த மலரை முடித்தவள். காமனின் வலையில் அகப்படா திருந்தவர்கள் இனித் தப்பமாட்டார்கள். காமனுக்கே ஜெயத்தைக் கொடுப்பவள். கொடிய இருள்போன்ற குழலை வாரி முடித்துக் கொண்டிருக்கும் பாவை. அத்துடன் அவள் தன் இளநகை பெருமையுற்றது. அவள் இளம் பற்களின் ஒளி முன்னர் முல்லையரும்பு எதிர் நிற்குமா? மயிலிறகின் அடிக் குருத்துக்குத்தான் அத்தகைய ஒளியுண்டர்? என்று கண்டோர் கருதும் பேரொளி வாய்ந்த பற்களையுடையாள். காரிருள் சூழ்ந்த வானத்தின்கண் உள்ள மின்னலைக் கண்டிருக்கிறோம். அம் மின்னல் அழகிய பாதங்கள், கைகள் இன்னும் மற்றேனைய உறுப்புக்கள் கொண்டு, வடிவம் யெய்தி, மேன்மேல் வள்ரப் பெற்றால் எத்தகைய பொலிவுடைத்தோ, அவ்வண்ணமே இவள் பொலிந்து விளங்குகிறாள் எனப் புலவர்,

"முற்றாத வல்லி முளரி முகி ழிரண்டு
பெற்றாலென வழியாப் பேருலகம் - செற்றழிக்க
வேண்டிப் பிறக்குமெழில் வெள்ளத்துடன் வடவை
மூண்டிங் கிரண்டாய் முகிழ்த்ததென-மாண்டவத்தோர்
கைமுகிழ்க்க வெங்காலன் கண் முகிழ்க்கக் காமுகர்தம்
மெய் முகிழ்க்க மேன் முகிழ்க்கு மென்னகிலாள் - தண்மை
விளைக்குத் தவமடைந்தோர் வெவ்வினை போனாலும்
இளைக்க வடிக்கொண்ட விடையாள்-விளைந்த
அளவிலரும் பாலாழி யாலால மென்னக்
களவு பிறந்துடைய கண்ணாள் - அளிகள்
கடியாத தார் முடிக்கக் காமன் றனக்கு
முடியாத வெல்லா முடிக்கப்-படி முழுதும்
கூடி முடிக்குங் கொடிய விருள் போல முடிக்
கூடி முடிக்குங் குழலினாள்- நீடிவளர்
முல்லை யரும்புக்கும் முருந்துக்கும் பேரொளிகள்
இல்லையென வீறு மிளநகையாள்- தொல்லுலகில்
மின்னுக்கொரு வடிவ மேன்மேல் வளந்தேறல்
என்னப் பொலிந்து வளர் வெய்தினாள்."


என்று அழகாகக் கூறியிருக்கிறார். நகில், இடை, கண, குழல், இளநகை, பொலிவு ஆகிய இவைகட்கு எடுத்துக் கூறும் உவமைகள் சிந்தித் தின்புறத் தக்கன.


உருவகம்

 

இந்நூலில் உருவகங்கள் ஆங்காங்கே சிறப்பளிக்கின்றன. உருவகம் என்பது யாதெனின், உவமானப் பொருளையும் உவமேயப் பொருளையும் வேறுபாடொழிவித்து ஒன்றே யென்பதோர் உணர்வு தோன்ற ஒற்றுமை கொடுத்தலாம்.

 

மங்கைப் பருவ மெய்தினாள் ஒருத்தியின் மனப் பான்மையை எடுத்துக் கூறுமிடத்து,


--திங்கண் மதி
சூழுஞ் சடையான் றுணைத்திண் புயாசலமேல்
வாழும் கருத்தே வளர் தோகை''


எனக் காணப்படுகிறது. திங்கட்பிறையைச் சூடிய சடாபாரத்தையுடைய சிவ பெருமானின் இரண்டு வன்மை பொருந்திய தோள்க
ளாகிய மலையின் மேல் வாழுங் கருத்தையுடைய வளர் மயில் எனப்படுகிறது. மயில் குறிஞ்சி நிலத்துக்குரிய கருப்பொருள். அந்நிலத்தில் மலையின்கண் வாழும் கருத்தையுடைய மயில் முற்கூறிய மங்கைப் பருவத்தாளர்கிய பெண். எனவே சிறந்த இடத்தில் உருவகப் படுத்திக் காட்டும் வன்மை நோக்கி இன்புறத் தக்கதாம்.

அமுதம் எங்கே பிறந்தது எனின் திருப்பாற் கடலில் என்பார் பெரியோர். இவ்வாறு உண்டான அமுதம் யாருக்குப் பயன் பட்டதென்றால், தேவர்களுக்கே யென்பது தெளிவு. மற்றை யோர்க்கில்லை. உலகிலுள்ள மற்றவர்களும் அத்தகைய மேம்பாட்டினையுடைய அமுதத்தை அடைய எண்ணுவதியற்கையே. அதனால் உலகோர்க்குப் பூமியானது அரிவைப் பருவத்தாளாய் அவ் வணங்கை அமுதமாக அளிக்கிறது. அன்று திருப்பாற் கடலில் அமுதம் பிறந்தது. இன்று பூமியில் அமுதம் பிறந்தது. பாற்கடலில் தோன்றிய அமுதம் தேவர்கட்கே உரித்தானது. இன்று இவ் வமுதம் உலகோர்க்கு உரித்தாகிறது.


. . . . . . .. . கடையும்
உவரிதரு மமிர்த மன்றி யுலகோர்க்
கவனியுதவு மமிர்தம்."


எனக்கூறப் படுவது சிந்தித்து இன்புறுதற் குரித்தாம்.


சிலேடை

இந் நூலில் சிலேடைகள் எங்கும் பொதிந்துள்ளன.


'ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிவுதர வருவது சிலேடை'


எனக் கூறுகிறார் இலக்கண விளக்க ஆசிரியர். ஒருவகையான தொடர்ச் சொற்கள் பல பொருள்களைத் தருதல் சிலேடையலங்காரம் எனப்படும். மங்கைப் பருவத்தாள் தன்மையைக் கூறுமிடத்து,


'கரையழியா வாவி கலக்கி'


எனக் காணப்படுகிறது. ஆவி என்பதற்கு உயிர் என்றும், குளம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆசிரியர் மங்கைப் பருவத்தாள் உயிரை வருத்த முறச் செய்கிறாள் என்றும்
குளத்தைக் கலங்கச் செய்கிறாள், என்றும் இரண்டு பொருள்தரும் மாட்சிமை யுன்னுதற் குரியது. மற்றும், சொக்கநாதரின் வீரத்தைக் கூறு முகத்தான்,


'பாத்துரையா மித்திரரைப் பல்லுதீர்த்து மாமடலிற்
சாய்த்த விதியைத் தலைகெடுத்து'


எனக் காணப்படுகிறது. பகுத்தறிந்து கூறாத நன்பர்க்கப் பல்லுதிர்த்தும் அழகிய பூவிதழ்களில் வெம்மையர் இருது கிடத்தப்படுமாறு செய்த ஊழ்வினையைப் போக்கியும் என்ற பொருளுடன் பகுத்துரையாத சூரியரைப் பல்லுதிர்த்து ஸரஸ்வதியுடன் வீற்றிருக்கும் பிரமனின் தலையைக் கெடுத்தவர் என்ற பொருளுங்காண்க.


நீதிகள்

இந் நூலின் கண் பல நீதிகள் மிளிர்கின்றன. பேதைப் பருவத்தாளைப் பற்றிக் கூறுமிடத்துக் காண்பதாவது: பேதையின் கூந்தல் அங்குமிங்கும் அலைகிறது. அது எவ்வி தமாகக் காட்சியளிக்கிறதென்றால், பொய்வாழ்வடைந்தோர் பொய்வாழ்வடைந்தோர் புலன்கள் போல் எனக் கூறுகிறார். பொய்வாழ்வடைந்தோர் எவ்வாறு காணப்படுவர்.? அகத்தில் மகிழ்ச்சியுண்டா? முகத்தில் குளிர்ச்சியுண்டா? புலன்கள் ஒன்றோடொன்று தத்தம் நிலையிலிருந்து வேலை செய்கின்றனவா? இல்லை. கண் மருள்கிறது. எதையோ கேட்கிறது. மனம் பலவற்றையும் நினைந்து நினைந்து புண்படுகிறது. அமைதியே யில்லை. அதுபோல அப்பேதையின் கூந்தலும் அலைகின்ற தென்கிறார்.

 

நிற்க. உலகத்தில் அறம், பொருள், இன்பம் என்பதை நன்குணர்ந்து நன்மையிது, தீமையிது என்று பகுத்தறிந்தபின் உலக நிலையாமையை அறியா திருப்பரோ பெரியோர்? அங்ஙனம் உலக மயக்கத்தை நீத்த உத்தமர்கள் தம் மனம் எவ்வாறு மாசற்று அமைதியாகக் காணப்படுமோ அதுபோல் கலகம் ஒரு சிறிதும் உண்டர்காத கண்களையுடையாள் எனக் கூறப்படுகிறது.

இதையே,

'பொய் வாழ் வடைந்தோர் புலன்கள்போ லொன்றோடொன்
றொவ்வா தலைகின்ற வோதியாள்- பவ்வத்
துலக மயக்க மொழிந்தோர் மனம் போற்
கலகஞ் சிறிதறியாக் கண்ணாள்'

எனக் கூறுகிறார் கவிஞர்.

 

மடந்தைப் பருவத்தாளாய ஒரு பெண்ணின் கண்களின் தன்மைக்ளைக் காட்டவந்த புலவர் அரசியற் றுறையிலழகான நீதியை எடுத்துக் காட்டுகிறார்.

 

உலக மக்கள் மகிழ்வது நல்ல அரசாட்சியினாலே என்பது வெளிப்படை. கொடுங் கோலால் என்னாகும்? பெருந்துன்பமல்லவா? செங்கோலைச் சிதைத்து மக்கள் எல்லோர்க்கும் இன்னல் புரியும் கொடுங்கோல் நிலவுமாயின் இதைவிடத் தீமை படைக்கக் கூடியதொன் றுண்டோ? உண்டு என்கிறார் புலவர். அதுவே அம்மடந்தையின் கூர்விழி.


'செங்கோ லொழித் தெவர்க்குத் தீங்குபுரி வேந்தர்
வெங்கோ லினுங் கொடிய வேற் கண்ணாள்.'


எனக் கூறப்படுகிறது. இவள் கண் மயக்குந் தீமைபோல் கொடுங்கோலும் பயக்காது. எனவே, கொடுங்கோ லரசனால் குடிகளுக்கேற்படுந் தீங்குகளை எடுத்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர் திருமலை நாதர்.

 

ஆதலால், மதுரைச் சொக்கநாதர் உலா படித்து இன்புறத் தக்க ஒரு சிறந்த நூலாம்.

 

ஆனந்த போதினி – 1944 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment