Sunday, September 6, 2020

 

மதம் என்ன சட்டையா?

 

மதம் என்றால் என்ன? மதம் என்னுஞ் சொல்லுக்குக் கொள்கை என்பதே பொருளாகும். நான் யார்? என் உள்ளம் ஆர்? என்னை யார் அறிவார்?' என்பன போன்ற விஷயங்களை விசாரிப்பது எதுவோ அதுவே மதமெனப்படும். அதுவன்றி வாழ்க்கையில் ஒருவித ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் போர்கள் வருணித்துச் சென்றிருக்கின்றனர். மக்களை மாக்களி (மிருகங்களி) னின்றும் பிரிப்பது மதமேயாகும்.

 

அவ்வித மதம் உலகின் பாகங்களிலும் பலவித பெயர்களோடு ஆங்காங்குள்ள மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒன்று பலவாய்ப் பிரிந்து வேற்றுமைகள் மலிந்ததாய்க் காணப்பட்டாலும், எல்லா மதங்களின் அடிப்படையான கொள்கைகளும் ஒரேவிதமாகவே இருக்கின்றன. பரந்த நோக்கமும் விரிந்த சமரச மனோபாவம் முடையோர்க்கு இவ்வுண்மை இனிது புலனாகும்.

 

இம்மதங்களின் உண்மைத் தத்துவத்தை யுணராதவர்கள் தான் அவைகளில் வேற்றுமை கற்பித்து, 'என் மதந்தான் சிறந்கது; உன்மதம் மிகவுந் தாழ்ந்தது' என்று கூறிச் சண்டை போட்டுக்கொண்டு வருகின்றனர்.

 

உலகிலுள்ள பல வேற்றுமைகளோடு, இம்மத வேற்றுமையும், சண்டையும் சேர்ந்து உலகையே கலக்கி வருகிறது. இந்நிலைமை டித்துக்கொண்டே வந்தால் மனித சமூகம் கூடிய சீக்கிரம் க்ஷணித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாபத்தான நிலைமை ஏற்படாதவாறு தடுத்து உலக சகோதரத்துவத்தையும் நல்லெண்ணத்தையும் நிலை நிறுத்துவதற்காகவே, ஐரோப்பாவிலுள்ள அறிஞர் பெருமக்கள் பல வருடங்களாக சர்வமத மகாநாடு நடத்திவருகிறார்கள். அம்மகாநாடுகளில் சர்வதேச மதப் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மதக் கொள்கைகளை எடுத்துச் சொல்லி, உலக சகோதரத்துவத்தையும், ஐக்கிய மனோபாவத்தையும் பரவச் செய்யக்கூடிய வழிகளைப் பற்றி யோசித்து ஒருவித முடிவுக்கு வருகிறார்கள். உலக சகோதரத்துவமே ஜன சமூக விமோசனத்துக்கு ஏற்ற மருந்தாகும்' என்ற பெரு நம்பிக்கையோடு அவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

 

அவ்விதம் மதங்களிலுள்ள முக்கிய கொள்கைகளை ஆதாரமாகக்கொண்டு பல மதஸ்தர்களிடையே ஒற்றுமையுண்டாக்கி மக்களை ஒத்துழைக்கச் செய்யப் பாடுபட்டுவரும், சர்வமத மகாநாட்டுப் பேரறிஞர்களே இப்போது உலகம் போகும் நிலைமையைக் கண்டு மனம் நடுங்குகின்றனர்.

 

சமீபத்தில் லண்டன்மா நகரில் நடைபெற்ற சர்வமத மகாநாட்டைத் திறந்து வைத்த பரோடா மகாராஜா, "பேராசை, பொறாமை முதலிய துர்க்குணங்களால் பீடிக்கப்பட்டு, தற்காலம் கலங்கி நிற்கும் இவ்வுலகத்தின் நிலைமையைப் பார்க்கும் போது நாம் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையால் ஏதாவது பயனுண்டாகுமா என்ற சந்தேகம் நமக்குண்டாகிறது. இருப்பினும், உயர்ந்த லட்சியத்துடனும், திடசித்தத்துடனும் நாம் வேலை செய்து வருகிறோம்," என்று தமது சொற்பொழிவில் குறிப்பிட்டிருப்பதை அன்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

மதங்களின் உண்மையான கொள்கைகளோடு, தற்காலிகமாக சில ஆசாரங்களும் பெரியார்களால் ஏற்படுத்தப் பட்டிருந்தன. அவை பண்டைக்காலத்தில் ஜனங்களிடையே ஒற்றுமையை நிலவச் செய்வதற்கு உதவியாக இருந்தன. தற்காலம், பெரும்பாலான மக்கள் மதக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, ஆசாரங்களையே பெரிதாகக் கருதி வருகின்றனர். இதனால் ஒரே மதத்தை - அதிலும் முக்கியமாக இந்து மதத்தை -ச் சேர்ந்த மக்களிலேயே இந்த ஆசாரங்கள் காரணமாகப் பல பிரிவுகள் ஏற்படலாயின. ஆசாரத்தில் மிகுந்தவர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்றும், தங்களைப் போல் அதை அவ்வளவாகப் பாராட்டாதவர்களைத் தங்களினும் கேவலமானவர்க ளென்றும் நினைத்துப் பேதம் பாராட்டினர். இப் பேதம் நமது இந்து மதத்தில் பலமாக வேரூன்றி படித்தரத்தில் மக்களைப் பல சாதிகளாகப் பிரித்து விட்டது. இச் சாதிகளிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றெல்லா சாதியாராலும் மிகக் கேவலமாகக் கருதப்பட்டு வருகின்றனர். இவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் மேற்கொண்டவர்களாகவும் இருந்தும், உயர்சாதியினரெனத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் வைதீக மனப்பான்மை கொண்டவர்கள் இம்மக்களுக்கு, மற்ற சாதியாருக்குக் கொடுக்கும் உரிமைகளில் சிறிது கூட கொடுக்க மனமிசைவதே யில்லை. இச் சநாதன வைதீகப் பெரியார்கள், நீசர்க ளென்றும், அநாசார முடையவர்களென்றும் இவர்களே இழித்துக் கூறும் கிறிஸ்தவம், முகம்மதியம் முதலிய மதங்களைச் சேர்ந்த மக்களுக்குக் காட்டும் மரியாதையையும், மதிப்பையுங் கூட இத் தாழ்த்தப்பட்ட மக்களிடங் காட்டுவதில்லை. பிறமதஸ்தர்களுக்குச் சமூக சமத்துவ விஷயத்தில் நமது உயர் சாதி மக்கள் அளிக்கும் உரிமை கூட, தங்கள் சொந்த இந்து மதத்தையே சேர்ந்தவர்களான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்க வில்லை யென்றால், அது மிகவுங் கொடுமையல்லவா! என்று நாம் கேட்கிறோம். இவ் விஷயத்தை நமது வைதீகப் பெரியார்கள் சிறிது சிந்தித்துப் பார்ப்பார்களானால், தாங்கள் தாழ்த்தப்பட்டார் விஷயத்தில் மிகவும் நியாயமற்ற முறையில் கடந்து கொள்வது நன்கு புலனாகும்.

 

இந்து மதத்தில் வைதீக மனப்பான்மை கொண்ட ஜாதி இந்துக்கள் செய்துவரும் கொடுமையைச் சகிக்க முடியாமையால் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்தும் பிற்போக்கான வகுப்புகளிலிருந்தும் பலர் இந்து மதத்தை உதறித்தள்ளிவிட்டு, கிறிஸ்தவ, முகம்மதிய முதலிய மதங்களில் நாள்தோறும் போய்ச் சேர்ந்து கொண்டே வருகின்றனர்.

 

மதமாற்றக்கால் இந்திய மக்களின் ஜனத்தொகை நாளுக்கு நாள் நீடிக்கவிட்டிருந்தால் இந்துமதம் இன்னுஞ் சிறிது நாட்களில் இருந்த விடந் தெரியாமல் மறைந்து போய்விடுமோ என்று சந்தேகிக்கவும், அஞ்சவும் வேண்டியிருக்கிறது. வைதீக சநாதனிகளின் பிடிவாத மனப்பான்மையாலேயே இவ்வித நெருக்கடியான நிலைமை இந்து மதத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமை மாறவேண்டுமானால், கால தேச வர்த்தமானங்களை யொட்டி, வைதீகப்யொட்டி, வைதீகப் பெரியார்கள் தாழ்த்தப்பட்டார் விஷயத்தில் தாராள மனப்பான்மை காட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம். அவ்விதம் அவர்கள் செய்ய முன்வராவிட்டால் டாக்டர் அம்பேத்கார் போன்ற தாழ்த்தப் பட்டார் தலைவர்கள் செய்யும் கிளர்ச்சிக்கு ஆதிக்கத்தையே தரும்.

சில காலமாக, தாழ்த்தப்பட்டார் தலைவரான டாக்டர் அம்பேத்காரும் அவரது கோஷ்டியாரும் தாங்கள் இந்து மதத்தைவிட்டு வேறு மதத்துக்கு மாறப்போவதாகச் செய்து துவரும் கிளர்ச்சியை வாசக நேயர்கள் அறிந்திருக்கலாம். அவர் சிறந்த பேரறிஞர். அரசியல் நிபுணர். அவர் பல முறை எடுத்துக் கூறி வந்திருப்பதுதோல, சமூகக் கொடுமைக் காளானவர்; பம்பாய் மாகாணத்திலுள்ள ஜாதிஇந்துக்களால் துன்புறுத்தப்பட்டவர் என்பதை யாரும் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். ஆகவே, அவர் தமது வகுப்பினராகிய தாழ்த்தப்பட்டார் இந்து மதத்தி லிருக்கும் வரை அவர்களுக்கு விமோசனங் கிடைக்கப்போவதில்லை யெனக் கூறிவருவதை யாரும் குறைகூறுவதற்கில்லை. ஆயினும், அவர் ஆத்மீக விஷயங்களைச் சிறிதுஞ் சிந்தியாது லௌகீகப் பிரயோசனங்களிலேயே பெரிதுங் கவனஞ் செலுத்தி   வருவதனால் தான், மதமாற்றம் அவசியம் என்று வற்புறுத்தி வருகிறார். ஆத்மார்த்த நன்மையையும் அவர் கருதியிருப்பாரானால், தாமும் தமது வகுப்பாரும் தங்கள் சொந்த மதமாகிய இந்து மகத்திலேயே இருந்து தங்கள் உரிமைகளைப் போராடிப் பெறவேண்டுமென்று புலப்
பட்டிருக்கும்.

 

டாக்டர் அம்பேத்கார் மதமாறப் போவதாகக் கூறினாரோ இல்லையோ, பிற மதஸ்தர்க ளெல்லாம் "எங்கள் மதத்தில் வந்து சேருங்கள்; எங்கள் மதத்தில் தான் உங்களுக்குச் சமத்துவமும், சகல நன்மைகளும் கிடைக்கும்" என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை ஆவலுடன் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். டாக்டர் அம்பேத்கார் கோஷ்டியார் எந்த மதத்தில் சேர்ந்தால் தங்களுக்கு அந்தஸ்தும் லாபமும் கிடைக்கு மென்று பார்த்து வருகிறார்கள். வைதீக சநாதனிகளுடைய பிடிவாத மனப்பான்மை எவ்வளவு கண்டிக்கத் தக்க தா யிருக்கிறதோ, அது போலவே, இவர்களுடைய இவ் விபரீத மனப்பான்மையும் அழுத்தமாகக் கண்டிக்கத் தகுந்தது. டாக்டர் அம்பேத்கார் மத மாற்றத்தை ஒருவித அரசியல் வியாபாரமாகக் கொண்டு பேரம் பேசி வருகிறார் என்பதற்குச் சமீபகால உதாரண மொன்றை இங்கு எடுத்துக் காட்டுவது அவசியமென நாம் கருதுகிறோம்

 

டாக்டர் அம்பேத்கார் இந்து மதத்திற்கு எதிராக ஆரம்பித்திருக்கும் பிரசாரத்தைத் தடுக்க வேண்டி, சமீபத்தில் பம்பாயிலுள்ள மான் பிர்லா முதலிய பிரமுகர்களும், டாக்டர் அம்பேத்காரும் இந்து மகாசபைத் தலைவரான டாக்டர் மூஞ்சேயை அழைத்து அவரோடு சம்பாஷித்து ஒரு ஒப்பந்தம் தயாரித்திருக்கின்றனர். அப்போது அவ்வொப்பந்த சம்பந்தமாக டாக்டர் அம்பேத்கார் தம் அபிப்பிராயத்தை வெளியிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

“. . . . . இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம் ஆகிய மூன்றிலொன்றில் சேரலாம். இஸ்லாத்தில் தாழ்ந்த வகுப்பினர் வேண்டுவதெல்லாம் அளிக்கப்படுகின்றன. எல்லா மாகாணங்களிலும முஸ்லீம்கள் இந்த மாறுதலடையக் கூடியவர்களுக்குப் பாதுகாப்பளிக்கக்கூடும். இஸ்லாத்திடம் பணம் நிறைய இருக்கிறது. அரசியல் தோரணையில் இத்தாழ்ந்த வகுப்பினர் முஸ்லிம்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெறுவார்கள். விசேஷப் பிரதிநிதித்துவம், உத்தியோகத்தில் சலுகை முதலியன இவர்களுக்குக் கிடைக்கின்றன. கிறிஸ்துவமதமும் இதைப்போலவே ஆகர்ஷிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்திய கிறிஸ்தவர்கள் தொகையில் மிகக் குறைவாக இருப்பினும், தாழ்ந்த வகுப்பினர் கிறிஸ்தவ மதத்தில் சேருவதென்று ஏற்பட்டால், அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய கிறிஸ்தவ தேசங்களிலிருந்து ஏராளமாகப் பணவுதவி கிடைக்கக்கூடும்.......... ஆனால் கிறிஸ்தவ மகத்திற்குக் கவர்ன்மெண்டு ஆதாவிருந்து வருகிறது. அரசியல் தோரணையில் இஸ்லாம் போலவே கிறிஸ்தவ மதமும் தாழ்ந்த வகுப்பினருக்கு உரிமைகளை யளிக்கும். முஸ்லிம்கள் போலவே கிறிஸ்தவருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் சட்ட சபைகளில் அளிக்கப்பட்டிருக்கிறது.

 

இவ்விரு மதங்களை பார்க்கும்போது சீக்கிய மதத்தில் ஆகர்ஷிக்கக் கூடியது அதிக மொன்றுமில்லை ........... ராஜீயத்துறையிலும் மற்ற இரு மதங்களைப் போல இம்மதம் எதுவும் செய்ய முடியாது..........'

 

இதிலிருந்து டாக்டர் அம்பேத்காருடைய மனோபாவமும், அரசியல் போமும் நன்கு தெரியும். ராவ்பகதூர் எம். ராஜா, டாக்டர் அம்பேத்காரது மனோபாவத்தை ஆதியிலிருந்தே, கண்டித்துவருகிறார். இப்போதும் டாக்டர் மூஞ்சே தாங்கள் செய்து வரூம் ஒப்பந்தத்தைப் பற்றி இவரது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி கேட்டதற்குக் கூட ராவ்பகதூர் ராஜா தமது முன்னைய அபிப்பிராயத்தையே வலியுறுத்தி யிருக்கிறார். மேலும் அவர் இந்து மதத்தைக் காப்பதற்காகவே இருப்பதாகக் கூறிக்கொண்டு வரும் இந்து மகாசபைத் தலைவர், தாழ்த்தப்பட்டார்க்கு சமூக சமத்துவமோ, ஆத்மார்த்த சாதனமோ அளிப்பதை விட்டு, அவர்களை மதமாற்றும் தோரணையிலேயே அவர்கள் விஷயத்தைக் கவனிப்
பதைப் பற்றிக் கண்டித் திருப்பதோடு, “தாழ்ந்த வகுப்பினரைப் பிரித்து மதரீதியில் சீக்கியருடனும், அரசியல் விஷயங்களில் இந்துக் களுடனும் சேர்க்கப் பார்க்கிறீர்கள். இவை யெல்லாம் தாழ்ந்த வகுப்பினர் நன்மைக் கேற்றவையன்று .... இந்த மாதிரி பேரம் செய்யப்பட நாங்கள் ஆடு மாடுகளல்ல. நாங்கள் ஒரு வகுப்பாக முன்னேற்ற மடைய விரும்புகிறோம். இதை இந்துக்க ளென்ற பிறப்
புரிமையுடன் தான் நாங்கள் சிறப்பாக நடத்த முடியும்......... இந்த அரசியல் போங்களுக் கெல்லாம் நான் உட்பட விரும்பவில்லை.''
என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். ராவ்பகதூர் ராஜா இந்து மதத்தின்மீது கொண்டுள்ள ஆழ்ந்த பற்றைக் கண்டு நாம் அவரைப் பாராட்டுகிறோம்.

 

டாக்டர் மூஞ்சே, பாவ்பகதூர் ராஜாவுடைய அபிப்பிராயத்தை அலட்சியப்படுத்தாது கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்து மகாசபைத்தலைவரென்ற தோரணையில் டாக்டர் மூஞ்சே, மகாத்மா காந்தி ஆரம்பித்து நடத்திவருவதுபோல் தாழ்ந்த வகுப்பினரின் சமூகக் குறைகளை அகற்ற முற்பட வேண்டுகிறோம். நினைத்தபோது போட்டிருக்கும் சட்டையைக் கழற்றி யெறிந்துவிட்டு, வேறு சட்டையை மாட்டிக்கொள்வது போல், மதம் சட்டையல்ல என்பதைத் தாழ்த்தப்பட்ட வகுப்பாரும், டாக்டர் அம்பேத்காரும் அறிய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம்.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment