Sunday, September 6, 2020

 

மதமும் மார்க்கமும்

(ம. ஆறுமுகம்.)

இப் பரந்த உலகம் பல மதங்களையும் மார்க்கங்களையும் கொண்டது. உலக மொத்த ஜனத்தொகை சுமார் இரு நூறு கோடியாகும். இவர்களுட் பலர் பற்பலவித மார்க்கங்களையும் மதங்களையும் அனுட்டித்து வருபவர். நம்மிந்திய நாட்டில் முக்கியமாக உலவும் மதங்கள் ஹிந்து மதம், முகமதிய மதம், கிறிஸ்தவ மதம், புத்த மதம் என்பன.
ஒவ்வொருவனும் தன் தன் பிறவிப் பயனாய் ஒவ்வோர் மதத்தைச் சார்ந்திருக்கின்றான். தந்தை ஓர் ஹிந்துவென்றால் மகனும் அதே மதத்தையே சார்ந்திருக்கின்றான். இது பிறவிப் பயனாய் ஏற்பட்டது; இது உண்மை மார்க்கமாகாது. மதத்திற்கும் மார்க்கத்திற்கு முள்ள வித்தியாசம் வடதென் துருவங்களுக்குள்ள வித்தியாசத்தைப் போன்றது.

மதத்தையும் மார்க்கத்தையும் அறியாது பலர் திண்டாடுகின்றனர். படித்தவர்களும் அறிவாளிகளும் கூட அறிகிலர். இதன் தார தம்மியத்தை உணரக்கூடியவர்கள் ஞானிகளே.

பலர் மதத்தையும் மார்க்கத்தையும் அறியாமை காரணமாக அறிகிலர்; பலர் மார்க்கத்தையும் பலர் மதத்தையுமே யறியா துழல்கின்றனர். அனேகர் இவ்விரண்டிற்கும் வித்தியாசமுளதென்றே காணக்கூடாத நிலையிலிருக்கின்றனர். இந்நிலையில் யாதாமொன்றைத் தத்தமக்கு நேரிய வழியில் கடைப்பிடித்து வருகின்றனர். மத ஆசிரியர்கள் பற்பலவித கொள்கைகள் அபிப்பிராயங்களுடன் போதிப்பார்களே யொழிய, அவர்களது குறிக்கோள் மட்டும் இறைவனையே சாரும்.

நாகரீகம் தோன்று முன், மனிதர்கள் அநாகரீகம் காரணமாய், ஈசரன் ஒருவன் உண்டு என்பதையே அறியாது கல்லையும், மண்ணையும், காற்றையும் கூற்றையும், சூரிய சந்திரர்களையும் வழிபட்டு வந்தனர். அக்காலை நாட்டில் அநாகரீகர்களும், ஞானப் பாலருந்தா மக்களு மிருந்ததனாலே அவைகளைப் போக்கி இறைவன் தமதருளைப் பிரகாசிக்கச் செய்ய வுன்னி உலகின் பல பாகங்களில் பற்பல உருவங்களுடன் தோன்றி ஆங்காங்குள்ள மக்களுக்கு அவ்வப்போது மார்க்க உபதேசம் செய்தாரே யன்றி ஒரு தனி மதத்தைப்பற்றி எந்த மத ஆசிரியரும் உபதேசித்ததில்லை. மக்கள் ஆங்காங்கு அவரது உபதேசங்களுக்குத் தக்கவாறும், தத்தம் கொள்கைகளுக் கொப்பவும் அவரைப் பின்பற்றி, ஒவ்வோர் மத குருவைப் பின்பற்றியவர்களும் அவ்விதம் பல பிரிவுகளாய்ப் பிரிந்து ஆங்காங்கு பல மதங்களென ஏற்படவே, இப்போது மனிதன் உலகின் பல பாகங்களிலும் சஞ்சாரம் செய்யத் தொடங்கவே மதங்கள் இடையூருய் நிற்கின்றன. இது போன்றே
ஆதியில் ஒன்றாயிருந்த ஜாதி யான்காகி எட்டாகி இப்போது நூற்றுக்கணக்கான ஜாதிகளையும் ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகளையும் காண்கின்றோம். எனவே, மதம் என்பது மார்க்க ஞானிகளும் அவர்களைப் பின் பற்றியவர்களும் தங்கள் பழக்க வழக்கங்கட்கும் கொள்கைகளுக்கும் தக்கவாறு அமைத்துக்கொண்ட ஓர் வேடமே தவிர வேறல்ல. மேலும், மத குருக்கள் ஆங்காங்கு தேவையானவைகளை மட்டும் போதிப்பார்களே யொழிய, கணக்குப் பாடம் வராத ஒருவனுக்கு ரசாயனம் படித்துக்
கொடுக்கும் ஆசிரியரைப் போலிரார். இதை வைத்துக்கொண்டு மதத்தை வேறு படுத்தலாமா?

இன்று மகாத்மா காந்தி பம்பாயில் ஹிந்தியில் ஓர் சம்பவத்தைக் குறித்துச் சொற்பொழிவாற்றி யிருக்கலாம். சென்னையில் நாளை ஆங்கிலத்தில் வேறு காரியம்பற்றிப் பேசியிருக்கலாம். அங்குள்ளவர்கள் ஓர்வித அறிவை யடைந்திருப்பார்கள்; இங்குள்ளவர்கள் வேறொரு விஷயத்தை யறிர்திருப்பார்கள். இதனால் சென்னைவாசி தான் பார்த்தவர் தான் காந்தியென்றும் அவரது சொற்பொழிவு (அங்கே) தான் சத்தியவாக்கென்றும், பம்பாய் வாசி சொல்வது தவறு என்றும் புறக்கணிக்க நீதியுண்டோ?
எனவே, காந்தியும் காந்தியமும் அவர் ஒருவரிடமே இருக்கின்றது. அதைப் பற்பல விடங்களில் பற்பல ஜனங்களிடையே பேசியதனால், அவர்கள் தாங்கள் கற்றதே கல்வி, பெற்றதே புலன், அதே உண்மை மதம் என்று கூறுவது கிணற்றுத் தவளையின் கர்வத்தையும் வீண் பெருமையையும் ஒக்கும். எனவே, மதம் வேறு; மார்க்கம் வேறு. ஆனால் இரண்டிற்கும் சிறிதே சம்பந்தமுண்டு.

மதம் பல பிரிவுகளைக் கொண்டு 'முடிவில் ஒன்று உண்டு' என்பதை மட்டும் காட்டி நிற்குமே யொழிய, அப் பரம்பொருளை யடைவதற்கான வழியில் நம்மை நிறுத்தாது. ஆனால் மார்க்கமோ பல பிரிவுகளைக் கொண்டாலும் இறைவனின் அம்சங்களைப் பிரித்துக் காட்டி உண்மைப் பொருளை வெளிப்படுத்தி நிற்கும். இன்று நாம் புராணங்களிலோ மற்றும் நூல்கள் வாயிலாகவோ பார்ப்போமே யானால் 'எந்த மத வைதேகியும், ஓர் உண்மை மார்க்கத்தை யனுட்டியாமல், முத்தி பெற்றிருக்க முடியாது' என்ற உண்மை தெள்ளிதிற் புலப்படும். மதம் மார்க்கத்தை யறிவுறுத்துமே யொழிய இறைவனைப் பிரத்தியட்ச மாக்காது; ஆத்மஞானம் பிரகாசிக்கச்
செய்யாது. ஓர் ஊருக்குப் போக வேண்டுமென்ற மூன்று இடங்களினின்றும் மூவர் புறப்பட்டு அதே இடத்தை நோக்கி ரயில்மூலம் வருவதாக வைத்துக் கொள்ளுவோம். மூவரும் அதை ரயில் மூலம் அடைன்றனர். ரயிலை மதத்திற்கு ஒப்பிடுவோம்; தண்டவாளம் மார்க்கத்தை அறிவுறுத்தட்டும்; குறிப்பிட்ட இடம் குறிக்கப்பட்ட இறைவனாகட்டும். தண்டவாளமின்றி ரயிலில் பிரயாணம் செய்யவியலாது. ரயில் இல்லாவிடினும் நடந்து தண்டவாளப் பாதையை அனுசரித்துச் சென்றாவது சிறிது
சிரமப்பட்டு குறிப்பிட்ட இடத்தை யடையலாம். அதே இல்லை யென்றால்?
இப்போது விளங்குகிறதல்லவா?

இதைக் குறித்து சுவாமி விவேகானந்தாவர்கள் தமது 'சிகாகோ பிரசங்க'த்தில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. அதாவது: - வெவ்வேறிடங்களிலே உற்பத்தியாகும் வெவ்வேறு நதிகளுக்கெல்லாம் சமுத்திரமே சங்கமஸ்தானமா யிருப்பது போல, அபிருசி பேதத்தால் ஜனங்கள் கைப்பற்றும் மார்க்கங்கள், நேராயும் கோணலாயும் வெவ்வேறு விதமாகச் காணப்படினும், அவைகளுக்கெல்லாம் ஈஸ்வான் ஒருவனே ப்ராப்திஸ்தான
மாய் விளங்குகின்றார்' என்பதாகும்.

எனவே மார்க்கத்தை யனுட்டித்து நம்மைப் புனிதப்படுத்துவது நாம் இறைவனைச் சமீபிப்பது போலாம். மார்க்கமின்றி மதமில்லை. மேலும் உலகத்தில் பிறந்த எல்லோரும் ஒரோர் மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். அங்ஙனமாயின் யாவரும் மார்க்க ஞானிகளா?

அன்றியும், மார்க்கத்தை யனுட்டிப்பதிலும் ஓர் புனிதமான வழியைக் கைக்கொள்ள
வேண்டும். மார்க்கத்தினின்று சிறிது பிறழ்ந்தாலும் உண்மை நிலை மாறிவிடும். ரயில் தண்டவாளத்தினின்றும் வண்டி விலகினால் ரயில் என்ன பாடுபடும்?  அதிலிருப்பவர்க்கென்ன ஏற்படும்? இதே போல மார்க்கர்களும் தம் நிலை மாறினால் தம்மையும் கெடுத்துக்கொள்வதான்றி, தம்மை யண்டியவர்களையும் கெடுத்துவிடுவர்.

கானகம் புகுந்து தவம் புரிவதும் ஓர் மார்க்கமேயாம். விசுவாமித்திரர் மேனகை யெனும் தேவமாதால் தவலை கெட்டுழன்றது இதிகாசங்களில் புலப்படுமே?

கிறிஸ்தவ மதத்துக்கும் மகமதிய (இஸ்லாம்) மதத்திற்கும் ஏதோ சில விஷயங்களில் ஒற்றுமை இருப்பதாகவும், அங்கனமே புத்த சமண மதங்களும் சம்பந்தம் கொண்டுள்ளன வென்றும் நம்மவர் சொல்வதுண்டு. அதன் ரகசியம் இதுதான். இரண்டு இடங்களினின்றும் இருவர் புறப்பட்டுச் சென்று, அப்புறம் ஒன்றாய்ச் சேர்ந்து தாங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்திற்குப் போகலாமல்லவா? கடைசியாகப் பார்த்தால் எல்லா மதத்நிற்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருந்தே தீரும். பல உபாதிகள் சேர்ந்தொரு பெரு நதியாகிப் பாய்வதுண்டல்லவா? இதை யறியாது தன் பிறவிப் பயனாலோ, அல்லது அறியாமையாலோ கைப்பற்றும் மதமே மேலானது, உண்மையானது என்று இயம்புவது அசம்பாவிதம். உலகப் பற்று மிகுந்துள்ளவரே அவ்ஙனம் இறுமாந்து கூறுவர். முக்திக்கும் உலகப்பற்றுக்குமுள்ள வித்தியாசம் நாம் மேலே காட்டியதைவிடப் பன்மடங்கு அதிக தூரமுள்ளது.

சிலர் ஓர் மதத்தை விட்டு வேறொரு மதத்திற்குச் செல்கின்றனர். அதில் ஏதோ சௌகரிய மிருக்கின்றதென்று நினைக்கின்றனர் போலும்? சௌகரியம் என்றால் என்ன அர்த்தம்? அவனவன் சுய முயற்சி வேண்டும் போது அதில் சௌகரியமென்ற வார்த்தைக்கே இடமில்லையென நினைக்கின்றேன். மேலும் ஓர் மதத்தில் காணாத செளகரியம் ஆத்மார்த்த விஷயமாக அடுத்த மதத்தில் என்ன இருக்கிறது? சீக்கிரமாக முக்தி பெற்றுவிடலாம் என்று எண்ணுகின்றனர் போலும். மதங்களில் கஷ்டம், கஷ்டமில்லையென்று எதுவும் கிடையாது. அஃதெல்லாம் நாமாகப் பாவித்துக் கொள்வதுதான்; அல்லது பாதிரிமார்கள், மத குருக்கள் முதலியவர்கள் யுத்தத்திற்கு ஆள் சேர்ப்பதுபோல், பாமர ஜனங்களை ஏமாற்றித் தத்தம் மதங்களிற் சேர்ப்பதற்காகச் செய்யும் ஓர்விதச் சூழ்ச்சியாகும். அவர்களே சரியாய் மார்க்கத்தை யறியாதிருக்கையில் மற்றவர்களுக் கெங்ஙனம் மார்க்கத்தை உபதேசிக்க வியலும்? ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்குச் செல்பவர்கள் பின் கண்டவைகளை யனுசரித்தே செல்வார்கள்: -

(1) தங்களுக்கு உத்தியோகம், கௌரவம் கிடைக்குமென்ற எண்ணம்,

(2) பாதிரிமார்களோ, குருக்களோ தங்களுக்கு உணவும், உடையும், கல்வியும் அளிப்
பார்களென்ற எண்ணம்;

(3) இன்பமான வாழ்க்கையைத் தம் வாழ்நாள் முழுதும் அனுபவிக்கலாம் என்ற ஆசை.

இம்மாதிரியான ஓர் ஈனத்தொழில் முக்கியமாகக் கிறிஸ்தவ மத சம்பந்தமாகவே காண்கின்றோம். முற்காலத்தில் வசித்திருந்த முகமதிய அரசர்களும் இவ்வாறே நடந்து வந்தனர். எவ்வெக் காலத்தில் எவ்வெவ்வரசாங்கம் நடைபெறுகிறதோ, அவ்வவ் வரசாங்கத்தின் இயல்புக்கியைய மாறுவது குடிகளின் இயல்பன்றோ?

எம் மதத்தைச் சேர்ந்தாலென்ன? மார்க்கத்தை யறிந்தவர்களுக்கு மதமே தேவையில்லையே? ''மதம் எங்கே முடிவடைகின்றதோ அங்கே தான் மார்க்கம் ஆரம்பமாகிறது'' என்று ஸத்சங் மகாராஜ் கூறவில்லையா?

மேலும் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்குச் சென்று அதன் மூலம் முக்தி பெற்று விடலாம் என்பது சுத்த அபத்தம். அதைவிடத் தன் சுய முயற்சியால் தம் மதத்தின் மூலமே முக்தி பெறலாமே? இது எப்படி இருக்கிறதென்றால் மூக்கை சேராகத் தொடாது கழுத்தைச் சுற்றித்தொடுவது போலவும், குறிப்பிட்ட ஓரிடத்திற்கு நேரிய பாதையிற் செல்லாது வேறு வழியைத் தேடுவது போலவுமாம், மேலும், புதிதாக ஓர்
மதத்துட் புகுந்ததும் அம்மதக் கோட்பாடுகண யுணராது தவிக்கின்றனர். இதுகாறும் மதத்தின் விவரங்களைப்பற்றி யறிந்தோம். இனி மார்க்க விவரங்களை யாராய்வோம்.

பல சமய உண்மைகளையும் அறிந்து, உண்மைப் பொருளை யுணர்ந்து, காம குரோத லோப மத மாச்சரியம் என்னும் பாசங்களினின்றும் விடுபட்டு, புலன்களை யடக்கி யாள்வதே உண்மையான மார்க்க நிலைக்கு அடிப்படையாம். இதைச் சேவித்துக்கொண்டே வந்தால் விருத்தியடைந்து, சரியான ஓர் பக்குவ மெய்தியவுடன் ஈசுர கடாட்சம் சித்தியாகும்; அதையும் கடந்து தான் ஈசரதரிசனம்; எளிதன்று.

பகவான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுவதென்னை? ''மானிட ஜன்மம் ஈசுர தரிசனத்துக்குச் சற்றே பொருந்தியதாய் இருக்கின்றதே! என் அன்பர் அதற்குப் பொருந்துவரோ" என்றார் அம் மகானுபாவர். இதன் பொருள் விளக்கம் யாதாமெனில், ''ஒருவன் பிறவி முதலே ஈசுர ஞானத்தில் உலவி வந்தாலே அவன் ஆயுளிறுதியில் தான் பகவத் தரிசனம் சித்தியாகும்படி அவ்வளவு சரியான காலத்தை அளித்திருக்கிறாரே! மனிதர் யாவரும் அதைப் பெறுதல் எங்ஙனம்?'' என்பதாகும்.

எனவே, உண்மை மார்க்கத்தை யனுட்டிப்பவன் எந்த மதத்தையும் சேர்ந்திருக்கலாம். அவனது ஆத்மா தான் விழிப்படைய வேண்டும்!   ஸ்ரீ இராமகிருஷ்ணர் மார்க்க ஞானிகளுள் சிறந்த ஞானி. மற்றவர்களுக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கினார். மகாத்மாவும் ஒரு வழியில் மார்க்கஞானியே! பட்டினத்தார், ரமண ரிஷிகள், விவேகானந்தர், லெயின்ட் ஸேவியர், கிறிஸ்துநாதர், நபிநாயகம் எவ்வளவோ உதாரண புருடர்கள் தரலாமே?

மார்க்கத்தை யனுட்டிப்பவன் உண்மையில் ஓர் பைத்தியக்காரன் போலவே இருப்பான். இவ்வுண்மையை ஸ்ரீ இராமகிருஷ்ணர் தெளிவு படுத்தினார். ஆத்மார்த்த ஞானத்தி லீடுபட்டு உடலுணர்ச்சி யற்றிருந்த னாலேயே மற்றவர்கள் என்ன செய்தாலும், சொன்னாலும் – அடித்தாலும் கூட - ஒன்றும் தன்னை ஊறு செய்யவில்லை என்று கூறினார். சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ இராமகிருஷ்ணரது தொண்டைப் புண்ணிலிருந்து
வந்த புழுக்களையும் சீழையும் ஏந்தி, மற்ற பக்தர்கள் ஆச்சரியத்துடன் திகைப்புற்று நோக்க, தாம் அதைத் தேவாமிர்தமென ஏற்றுக்கொண்டு, தம் குரு சேட்டருக்கு ஓர் உண்மைச் சீடனாசத் தொண்டு புரிந்தார். இது வன்றோ உண்மை ஞானம்? உண்மை மார்க்கம்? நிர்வாணம் என்பதைத் தம் விரதமாகப் பூண்டொழுகுபவரே சன்மார்க்கர்க ளெனப்படுவர்.

எனவே, மார்க்க ஞானிகளுக்கு வரம்பொன்றும் கிடையாது மத வைராக்கிய முள்ளவரிடமே உலகப்பற்றும் துஷ்ட குணங்களும் அதிகமிருக்கும். மார்க்க விவேகிகள் உலகப்பற்றைவிட்டுப் பரந்த இறைவனது அம்சங்களாக உலகில் சஞ்சரிப்பார்கள். அவர்கள் இவ் வுலகிலிருப்பதாகக் காணப்படினும் அவர்களது உடல் பொருள் ஆவி மூன்றையும் விடுத்து ஈசுர தியானத்திலீடுபடுவார்கள். உலகத்திலுள்ள சராசரப் பொருட்களால் அவர்கட் கிடரொன்றும் நேராது. ஆகவே, நம் நாட்டிற் பெருகிவரும் சமயச்சண்டைகள் காட்டுத் தீபோற் பரவாமல், தீப்பற்றிய வீட்டில் தண்ணீர் வார்த்தாற்போன்று அணைந்துகொண்டே வருமாக! நாம் நன்மார்க்கத்தில் - சன்மார்க்கத்தில் - நின்று, நம்முடைய எண்ணங்களை ஈசுர தியானத்திற் செலுத்தி, முடிவில் பேரின்ப வெள்ளத்திடை நீந்திக் கரை
சேர்ந்து அந்தமில் இன்பம் என்றும் உருகப் பெறுவோமாக!!

ஆனந்த போதினி – 1942 ௵ - ஏப்ரல் ௴

 



No comments:

Post a Comment