Sunday, September 6, 2020

 

மதத் துவேஷம்

(பி. எஸ். சாம்பசிவன்.)

நமது பாரத மாதாவின் வயிற்றில் வெகு காலத்திற்கு முன்பே பல மதங்கள் பிறந்து, வளர்ந்து, அவை இன்றும் சிரஞ்சீவிகளாய் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு தக்க பெரியோரால், - சமயாசாரியாரால், உண்டாகி, பரவி இன்றும் அழியாது நிலை நிற்கின்றது.

      அவற்றுள் முக்கியமானது ஹிந்து மதம் என்பதே. ஹிந்து மதத் துள்ளும் பல கிளை பிரிவுகள் இருக்கின்றன. ஹிந்துக்களுக்குள், சைவன், வைஷ்ணவன், ஸ்மார்த்தன், மாத்துவன் முதலிய பல வகுப்பினர் இருக்கின்றனர்.

      இவர்களில் சைவன், சைவத்தைக் கைப்பற்றியவன். அவனது மதம் சைவமதம். தெய்வம் சிவன். வைஷ்ணவன் வைஷ்ணவ மதத்தைப் பின்பற்றியவன். அவனது கடவுள் விஷ்ணு. சைவம், வைஷ்ணவம் ஆகிய இரண்டு மதங்களும் பல நாட்களுக்கு முன்பே சகோதா பாவத்துடனேயே தோன்றிய போதிலும்; இவ்விரண்டு மதத்தினருக்கும் சகோதரபாவம் கொஞ்சமும் இல்லாமலேயே இருந்தது, இருக்கின்றது. சைவர்களும், வைஷ்ணவர்களும், ஒருவருக்கொருவர் துவேஷித்து, மதச் சண்டையிட்டு வந்தனர்.

      சிவமே பெரிது; சைவமே பெரிது; சிவனைத் தவிர வேறு தெய்வமுமில்லை. சைவத்தைத் தவிர வேறு மதமுமில்லை என்னும் உறுதியுடன் அம்மதத்தின்பால் அதிகப் பற்றுக் கொண்டவன் வீரசைவன். அவ்வாறே, வைஷ்ணவத்தின் பால் அதிகப் பற்றுக் கொண்டவன் வீர வைஷ்ணவன்.

      இவ் விருதிறத்தாரும், தம் தம் தெய்வத்தினிடமும் மதத்தினிடமும் கொண்ட உறுதியாலும், அதிகப்பற்றாலும், அதையே போற்றியதைத் தவிர, அவர்கள் செய்த முக்கியமான வேறு வேலையும் உண்டு. அதாவது வீர சைவன், வைஷ்ணவத்தையும், விஷ்ணுவையும், வீர வைஷ்ணவன் சைவத்தையும் சிவனையும், தூஷித்து தூற்றி அவமதித்து வந்ததேயாகும். மிகச் சிறிய விஷயங்களிலும் அவர்கள் மதத்துவேஷம் காட்டினர். மனோவாக்கு காயம் என்ற திரிகரணங்களிலும் துவேஷமே குடி கொண்டிருந்தது. இஃது பின் வருவனவற்றால் நன்கு விளங்கும்.

I

ஓர் ஊரில் ஒரு வீரசைவரும், ஒரு வீரவைஷ்ணவரும் ஆப்த சிநேகிதர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் மத விஷயங்களில் தம்முள் அடிக்கடி பெரும் விவாதம் விளைவித்துக் கொண்டாலும், ஏனைய விஷயங்களில் இசைந்த நட்பினராகவே இருந்தனர். இவர்களுக்கு உவமை இக்காலத்திய வக்கீல்களேயாவர். நியாயஸ்தலத்தில் இருதரப்பு வக்கீல்களும், தாம் வாங்கும் பீசுக்காகக் கக்ஷிக்காரரை முன்னிட்டு, ஒருவருக்கொருவர் ஜென்மத் துவேஷிகள் போல மண்டையை உடைத்துக்கொண்டாலும், கோர்ட்டு கலைந்த உடன், இரண்டு வக்கீக்களும் கை குலுக்கிக் கொண்டு, ஒன்றாகச் சேர்ந்து சிற்றுண்டிச்சாலை சென்று, சிறு உண்டி உண்டு, சிறு குடி குடித்து, ஒரே வாகனத்தில் போவது போலவாகும்.

நிற்க, வீரசைவர் தமது நண்பர் வீர வைஷ்ணவர் வீட்டுக்கும், வீர வைஷ்ணவர் தமது நண்பர் வீட்டுக்கும் அடிக்கடி போவதுண்டு. இருவரும் கூடுமிடத்தில் முககியமாக மத விவாதமே நடக்கும். ஒருநாள் வீர வைஷ்ணவர் தமது நண்பர் வீரசைவர் வீட்டுக்குச் சென்றார். ஆங்கு, இருவரும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த வீரசைவரின் சிறு குழந்தை மலம் கழித்தது. வீரசைவர் அம் மலத்தை அப்புறப் படுத்துவதற்காக உள்ளேயிருந்த தனது மனைவியை “அடீ காமு! குழந்தை கொல்லைக்குப் போயிருக்கான். ஜல்தியா வந்து எடுவா, ஆபாஸம்! நாங்கள்ளாம் இங்கே உக்காந் தூண்டிருக்கோம். குழந்தையை உள்ளேயே வச்சிக்கோக் கூடாதா? முட்டாள்'' என்று சிறிது கோபத்துடன் கூறினார்.

அவர் மனைவி உள்ளிருந்தபடியே "இங்கே கைவேலையா இருக்கேன். கொஞ்சம் பார்த்துக்கோங்க. இதோ வந்துட்டேன். நானும் எதேன்னு தான பார்ப்பேன்'' என்றாள்.

      இதற்குள் வீர வைஷ்ணவர், ''நமது சிவத் துவேஷத்தையும் காட்டியதுபோல் இருக்க வேண்டும்; கேலி செய்தது போலும் இருக்கவேண்டும்'' என்று நினைத்து, "அவா கைவேலையா இருந்தா இருக்கட்டுமே. கொஞ்சம் மெதுவா வரட்டுமே. நீங்க, இப்போ சத்தியா பார்ப்பதற்கு ஆபாசமாய் இல்லாமல், உங்க பகவான் பிரசாதம் (திருநீறு Or சாம்பல்) அவர் உகந்து பூசிக் கொள்வதை, கொஞ்சம் மேலே கொண்டுவந்து தூவிவிடுங்கோ, போறும்னா என்று சாமார்த்தியமாகக் கூறினார்.

      வீரசைவர் இதைக் கேட்கப் பொறாது, ''நமது பகவான் பிரசாதத்தை இவ்வளவு கேவலமாகப் பேசுகிறாரே, இவரையும் இவர் கடவுளையும் விட்டேனா பார்'' என நினைத்து, மிகவும் அமைதியாக "நண்பரே ! எமது கடவுளின் பிரசாதத்தைக் கொண்டுவந்து அதன் மேல் போட்டாலும், பின் அதை எப்படியும் எடுக்க ஒரு ஆள் வேண்டும். ஆனால் அதைவிட சுலபமான வழி வேறொன்று இருக்கிறதே! அதை மறந்து விட்டீர்களா? நீங்கள் தொழும் வராகாவதாரம் பன்றி) வந்தால், மலம் கழித்த இடமே தெரியாமல், செய்து விடுவாரே. அதை விட்டுவிட்டு மூக்கை என்னமோ சுத்திப் பிடிக்கிறேளே' என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

      அந்தோ! இதைக்கேட்ட வீர வைஷ்ணவர் உள்ளம் பட்டபாட்டையும், அவர் மனம்பட்ட அவஸ்தையையும், அவர் முகம் மாறிய விதத்தையும் இங்கு விவரிப்பதும் இயலாது.

II

                ஓர் ஊரில் சிவன் கோயிம், விஷ்ணுகோயில் ஆகிய இரண்டு கோயில்களும் ஒன்றினருகில் ஒன்றாக அமைந் திருந்தன. அவ்வூரின்கண் இருந்த ஓர் வீர வைஷ்ணவருக்கு தமது விஷ்ணு ஆலயத்துக்குச் சமமாக சிவனாலயம் அருகில் இருப்பது சற்றும் பிடிக்கவில்லை, எப்படியாவது அவ்வாலயத்தை இடித்துத் தகர்த்து, தரையோடு தரையாகச் செய்துவிட வேண்டுமென்று வைராக்கியங் கொண்டார். அதே ஊரில் இருந்த வீர சைவர்களுக்கும் இவ் வித எண்ணம் மனத்தில் இருந்தபோதிலும் வகையறியாது வாளா இருந்தனர்.

வீர வைஷ்ணவர் வைராக்கியம் மேலிட்டு, காலையில் எழுந்து உண்டி யருந்தி, தமது இல்லம் விட்டுப் புறப்பட்டு, சிவன் கோயிலையடைந்து, முதலில் அவ்வாலயத்தின் நாற்புற மதிலையும் இடிக்கக்கருதி, அதிகமாக ஜன நடமாட்டமில்லாத ஓர்புற மதிலினருகில் சென்று, அல்பசங்கியை கழிப்பவர் போல் அமர்ந்து, கையில் ஓர் சூறியைக்கொண்டு, கருங்கற்களின் இடையில் இருந்த சுண்ணாம்பை சப்தமில்லாமல் மெதுவாக கொஞ்சங் கொஞ்சமாக தோண்ட வாரம்பித்தார். அப்படி கற்களின் இடையே இருக்கும் சுண்ணத்தை, தோண்டி விட்டால் காளாவர்த்தியில் கற்கள் ஆட்டங்கொடுத்து ஒவ்வொன்றாக கீழே விழுந்து மதிலிடிந்து விடும் என்பதே அவர் நோக்கம். அந் நோக்கங்கொண்டு பிரதி தினமும், சில சமயங்களில்-- இரவிலும், அவர் தான் மேற்கொண்ட காரியத்தைச் சலிப்படையாது ஊக்கத்துடன் செய்து சிறிது திருப்தியையும் அடைந்தார்.

எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள் , எதையும் அறியவல்ல அற்புதப் பொருள், நமது வீர வைஷ்ணவரின் அறிவீனச் செய்கையை அறியாரோ? தனது ஆலயத்தின் மதிலை இடிக்கும் அன்னவருக்கு அறிவு புகட்டக் கருதி, அக்கோயிலில் எழுந்தருளிய பெய்யான், ஒருநாள் காக்கை யுருக்கொண்டு, வீர வைஷ்ணவர் வேலைசெய்யும் இடத்தில் அவர் தலைக்குமேல் மதிலில் பறந்து சென்று அமர்ந்து, தனது மூக்கினால் ஒரு சிறியகல்லை அசைத்துப் புரட்டி வீர வைஷ்ணவரின் தலையில் விழுமாறு, அதனால் அவர் தனது பிழையை உணருமாறு, மெதுவாகக் கீழே தள்ளினார்.

சிறிய கல்லேயாயினும், கல் விழுந்த வேகத்தால், வீர வைஷ்ணவரின் மண்டை சிறிது பொத்துண்டது. இரத்தம் பெருகி அவர் முகத்தில் வழிந்து ஓடிற்று. அந்நிலையிலும் அன்னார் சளைக்காது, தனது வஸ்திரத்தால் முகத்தில் வழிந்து ஓடிய இரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, பொத்துண்ட இடத்தைத் தன் இடதுகையால் அமுக்கிக்கொண்டு, மேலே நிமிர்ந்து கோக்க காகம் இருப்பதையும், அக்காகம் தனது தலையை ஒருபுறமாகச் சாய்த்துக் கொண்டு, தன்னையே கீழே குனிந்து பார்ப்பதையும் கண்டு மகிழ்ந்து அதுவும் தன்னுடன் சிவன் கோயிலை இடிக்கத் துணை புரியும் வீர வைஷ்ணவக் காகமெனத் தனது அறிவீனத்தால் நினைந்து உவந்து, தனது உடைந்து இரத்தம் வடிவதையும் மறந்து மதியாது, '', வீர வைஷ்ணவக் காகமே ! அப்படி இடி, சிவன் கோயிலை'' என்று கூறினார்.

      காகமாக எழுந்தருளிய கடவுளும், வீர வைஷ்ணவன் அந்நிலையிலும் தனது தவறுதலை உணராது, தன்னையும் அவனது சகாவாகக் கருதிய அவன் மதிதான் என்னே! நம்பாலுற்ற துவேஷம்தான் என்னே! என்று ஆச்சரிய மடைந்து தனது கோயில் எழுந்தருளினார்.

அந்தோ! பாவம், வீர வைஷ்ணவரின் துவேஷமே துவேஷம். மதத் வேஷமும், தெய்வத் துவேஷமும் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பது இதனால் நன்கு விளங்குகிறதல்லவா? இன்னும் இத்தகைய துவேஷம் நமது நாட்டில் இல்லையென்று கூறுவது இயலாததே.

III

ண்பர்களே! வைஷ்ணவக் கோயில்களில் கடவுளுக்குத் திருவமுது சமைக்க தினம் தினம் புதிது புதிதான சட்டிப் பானைகள் தான் உபயோகிப்பார்கள் என்பதை தங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொண்டு, கதையை ஆரம்பிக்கிறேன்.

ஓர் வைஷ்ணவக் கோயிலில் பெருமாளுக்குத் தளிகை தயார்செய்ய தினந்தோறும் காலையில் ஒரு சைவக் குயவன் சட்டிபானைகள் கொண்டு போய்க் கொடுப்பது வழக்கம். அக்குயவன் சைவனாக இருந்தபோதிலும், எக்காரணத்தாலோ அவ் வைஷ்ணவக் கோயிலில் அக்கைங்கரியம புரிய அவனை ஏற்றுவந்தனர்.

ஒருசமயம் அக்கோயிலின் அதிகாரியில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. புதிதாக வந்தவர் வீர வைஷ்ணவர். அவர் ஒருநாள் சைவக்குயவன் நெற்றி நிறைய விபூதியணிந்து, சட்டிபானைகளைத் தட்டில் தலையில் சுமந்து வருவதைப் பார்த்து, “, குயவா! நீ சைவன். வைஷ்ணவக் கோயிலுக்கு பானைகள் நீ கொண்டு வந்து கொடுப்பதை இனி ஏற்றுக்கொள்ள முடியாது. நீயே கொண்டுவந்து கொடுக்க வேண்டுவென்ற விருப்பம் உனக்கிருக்குமே யானால், முதலில் நீ வைஷ்ணவன் ஆகவேண்டும். எங்கள் பெருமாளின் சின்னமாகிய புண்டரீக நாமங்களை அணிய வேண்டும். அணிந்து தான் நாளை முதல் இங்கு சட்டிபானைகள் கொண்டு வரவேண்டும். உன்னை வேலையினின்றும் நீக்கிவிடுவோம்" என்று அவனை வெருட்டினார்.

குயவன் செய்வது யாதென அறியாது, முதலில் கொஞ்சம் சிந்தித்து பின் தெளிந்து, செரி, எஜமாங்க சொல்றபடியே செய்றேங்க, எசமாங்க சொல்லிப்பூட்டே அதுக்குமேல நிக்கீங்களா?” என்று கூறிச்சென்றான். குயவன் அக்கோயிலையே சதியாக நம்பின வனாகையாலும், பிழைக்க வேறுவழி யில்லாமையாலும், தனது மதத்தை விட மனமில்லாமையாலும், ஒரு யுக்தி செய்தான்.

      மறுநாள் பொழுதும் புலர்ந்தது. குயவனும் கைகால்களைச் சுத்தம் செய்து நெற்றியில் பட்டை பட்டையாக விபூதியணிந்து, வயிற்றில் பட்டை பட்டையாக பெரிய புண்டரீக நாமங்களைப் போட்டுக்கொண்டான். எடுத்து வைத்தான் தலையில் சட்டிப்பானை தட்டை. நடந்தான் நேரே வைஷ்ணவக் கோயிலுக்கு.

      வீர வைஷ்ணவக் கோயில் அதிகாரி, மறுநாள் காலையில் குயவன் தான் கூறியது போல், பெருமாளின் திருநாமங்களைத் தரித்து வருகிறானா என்பதைக் காண ஆவலுடன் கோயில் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தார். குயவனும் வந்தான். அதிகாரி குயவன் நெற்றியில் விபூதியும், வயிற்றில் நாமமும் இருப்பதைக் கண்டு பேராச்சரியங் கொண்டு, அதன் காரணத்தை வினவினார்.

      குயவன் பயபக்தியுடன் மிகவும் பயந்தவனைப்போல் பாசாங்கு செய்து கொண்டு, “எசமாங்களே! நெற்றியில் விபூதி அணிந் திருப்பது எங்க மதக் குறிங்க. குல தர்மத்தையும் மதத்தையும் எப்படி விடமுடியுங்க. நீங்க தர்ம எசமாங்க சொன்னத்துக்காவ நான் இந்தக் கோவிலை அண்டிப் பிழைக்கிறத்துக்காவ, உங்களுக்கும் கோபமில்லாம, பெருமாளுக்கும் வஞ்சனை பண்ணாம, பெருமாள் நாமத்தை வவுத்திலே போட்டேங்க. ன்னா வவுத்துப் பிழைப்புக்காகத்தானே இங்கே சட்டிப்பானை கொண்டுவரேங்க. அதனாலத் தானே நீங்க வைஷ்ணவனா யிரூன்னு சொல்றீங்க. அதனாலத்தான் வைஷ்ணவக் குறியை வவுத்திலே போட்டேங்க. அது வவுத்துக்காக நாமங்க. நான் இரண்டு சாமிக்கும், இரண்டு மதத்துக்கும் வஞ்சனை செய்யல்லீங்க. நீங்களே பாருங்க" என்று வெகு பணிவாகக் கூறினான்.

கோயில் அதிகாரிக்கு வந்த கோபமெல்லாம் சிரிப்பாக மாறிற்று. குயவன் யுக்திக்கும் புத்திக்கும் மகிழ்ந்து, முன்போல் அவனையே அவனுடைய சௌகரியம் போல் விபூதியணிந்தே சட்டிபானைக் கொண்டுவரச் சொன்னார்.

ஆனந்த போதினி – 1937 ௵ - பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment