Saturday, September 5, 2020

 

பெண்ணீர்மை

[நா. கோதண்டபாணி]

 

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பெண்மையறம் பிழைத்த பேதையர்களைப் பழித்தலோ டமையாது, ஆண்மையறந் தாழ்த்த அதமர்களையும் வெறுத்துப் பழிப்பதே கொள்கையாக் கொண்டவர்க ளென்பது.

 

பெரியவாள் தடங்கண் செவ்வாய் பிறர்மனை கயக்கு மாந்தர்
மரிய வாய்ப் புறஞ்சொற் கூர்முன் மத்திகைப் புடைப்புமன்றி
ஒருவர் வாயுமிழப் பட்ட தம்பல மொருவர் வாய்க்கொண்டு
அரியன செய்ய வையத்(து) ஆண் பிறந்தார்க ளன்றே.     
சிந்தாமணி - (2821)


காணிற் குடிப்பழியாம் கையுறிற் கால் குறையும்
மாணின்மை செய்யுங்கால் அச்சமாம் - நீணிறையத்
துன்பம் பயக்குமால் துச்சாரீ! நீகண்ட
இன்பம் எனக்கு எனைத்தாற் கூறு.                            
(நாலடி - 64)


என்னு மிவை போன்ற செய்யுட்களால் எளிதிற் போதரும். இஃதொப்ப, பெண்ணீர்மை ன் பெருமகளிரையும் ஆண்மையறம் பிழையா ஆடவர்களையும், ஊரும் நாடும் உவத்தலோடு புலமையறமும் போற்றுதலொரு தலை.

 

பெண்மை யறத்தைப் பிழையாது ஓம்பும் பெருமகளிரைப் போற்றும் அறம் மேற்கொண்ட வில்லியாரும், வடவாரியரின் வரலாற்றினைத் தமிழிற் கூறுங்காலத்து, பாஞ்சாலியைச் சுட்டுந்தொறும் "வடமீனனையாள்" “தெய்வமன்னாள்,'' “அருந்ததிக்கு மெய்தாத கற்புடையாள்,' "தீண்டாத கற்புடைய செழுந்திரு' ''பெண்ணீர்மை குன்றாப் பெருந்திரு," “கற்பு நயந்தணிந்த பூணே யனையாள்'' என்பன போன்ற தொடர்களால் அவளைக் கற்பறங்காத்த பொற்புடையளாகச் சுட்டிப் புலமை யறங் காத்துப் போந்தார்.

 

இவ்வாறு யாண்டும் பாஞ்சாலியின் கற்புக்கு மாசணுகாது காத்து வந்த செஞ்சொற் புலவர்' ''ஐம்புலன்களும்" எனத் தொடங்குஞ் செய்யுளால் ''அவள் கன்னனை யுள்ளுறக் காதலித்தாள்'' எனக் கூறிப் புலமை யறம் பிழைப்பாரா?

 

அவ்வாறு கன்னனைக் காதலித்தமை குறிக்கும் வேறெவ்விதச் செவ்வியும் 'பாரதத்தில் வில்லியாராற் கூறப்படவில்லை. பாரதம் முழுமையும் பாஞ்சாலியின் நற்பண்பை விளக்குவதாகவே யுள்ளது.

 

பாரத வரலாற்றினைச் சுருக்கி யறிவிக்கப் புக்க, பாரதியாரும், “பாஞ்சாலி சபதம்" எனத் தலைப்பிட்டு வரைந்தமை இங்கு உன்னியுவத்தற் குரியது. நிற்க.

 

இம்மங்கை நல்லாள் முற்பிறப்பில் ஆதவனையும் சில நாழிகை உதியாது தடுத்ததாகக் கூறப்படுஞ் செயலும், 'மென் பாவை பங்கனை"க் கண்ட்கன் பெற்றதாகச் சுட்டும் பெரு நீர்மையும், "மூளார் அழலுற்பவித்த" தாகக் கூறுந் தன்மையும், இவளைத் தெய்வீக நங்கை யாக்கியது ஈண்டு அறிதற்குரியது.

 

ஆதியிற் குந்தி மைந்தரைவர்க்கு முரியளா மென்றோதியவிதி" யினாலும், பிறர் தனக்காக்கிய பெருங் கட்டுகளாலும் ஐவரையும் வேட்டனளே யன்றி மனமறிய மணந்தனளல்லள். இவ்வாறு "நெஞ்சினிற் பிழையிலாதவளான' பாஞ்சாலி ஐவரையும் மணந்த ''ஈன்ற காதல் வெவ்வா ரழலில் முறையே மூழ்கி மீண்டு தோன்றி" மணந்தமை யவள் தன் 'பெண்ணீர்மை குன்றாப்' பெருநிலையைக் காட்டுவதாக வுள்ளது.

 

மற்று, அவள் வரலாறும் 'கற்புக் கணிகலனாக' அவளைக் காட்டுவது மகிழ்தற்குரியது.

 

வினைப் பயனால் தருமன், சூதாடித் தன் பொருள்களையும், உரிய தம்பியரையும். தாரத்தையும் ஒருங்கு தோற்றனன். பின்னர், துர்க்குண நேயனான துரியன், பாஞ்சாலியை யரசவைக்குக் கொணரும்படி கூறினனாக, துச்சாதனன் சென்று "அவள் பைங்குழல் பற்றித்" தீண்டானாகிச் செயரசவைக்கு ஈர்த்துச் செல்கின்றான். ஆங்கு அவள், முன்னர் "பேரவையைத் தொழுது அழுது சோர்வுற்று" “எல்லா நெறியு முணர்ந்தார்க் கிதுவோ இயல்பு" என முறையிட்டாள். பின்பு ''மன்றோற்றனன் வெஞ் சூதாகில் வழக்காற் கொண்மின்" "மன் தன்னைத் தோற்ற பின் என்னைத் தோற்றனன். எனவே, முன் தோற்ற பொருள் முன்னும், பின் தோற்ற பொருள் பின்னும் கவரப்படுவதன்றோ முறை" என்னும் நியாயத்தைக் கூறுகின்றாள். தன் கற்பைக் காத்தற் பொருட்டு,


"தற்காத்து, தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற் காத்தல்" தானே பெண்மைக் கழகு.

 

முறையறியர் “ஊமர் கணம்” மோனம் சாதித்தது.

 

“பொல்லா நெறியி லனைவோரும் போகர் வண்ணம்" விகருணன் கூறிய அறவுரை ''புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளா"யிற்று.

 

அவ்விகருணனை, "வாய்மைக் கடவுள்" என்றதோ டமையாது அவ்வவையோர் கூற்றாகத் “தக்கோன்" எனவோர் பேர் சூடி மகிழும் வில்லியாரின் புலமை நலம் போற்றுதற் குரிய தன்றோ! இனித், துரியன் “இவ்வழக்கு வார்த்தை சொன்ன கிளிமொழியைத் துகிலுரிதி" என உருமினான். இவனின் இக்கூற்று ஆண்மையறம் பிழைத்தலையும் நிலையினையும், அரசிலக்கணமறியா ஒழுகலாற்றினையும் சுட்டுவதாக இல்லையா?

 

"தருக துகிலெனத்" துச்சர்தனன் பற்றி யீர்க்க, வேறொன்று மாற்றுதற்கியலாத பாஞ்சாலி “வேறோர் சொல்லும் கூறாமற் கோவிந்தா வென்றரற்றிக் குளிர்ந்த நாவிலூறாத வமிழ் தூறி உடல் புளகித் துள்ளமெலா முருகி" நின்றாள்.

“அன்பா னினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரும்" பரமனு 'முடுத்தநிறம் பற்பல கொண்ட ஆயிரங் கோடி யாடை'களை யருள, "உரிந்தானு மிருகை யிளைத்து" நின்றான்.

 

இஃதோ டமையாத "தந்தை விழியருள் போலத் தகு மனத்தன் , "பைந்தொடியைக் கொணர்ந் தினியென் மடியின் மிசையிருத்துகெனத்" துச்சாதனனுக்குப் பணிக்க "மாயனை மறவா"த்தூய சிந்தையள் வெகுண்டு, "எவரும் வெருவுற" "இப்புன் றொழிலோன், யானிருக்கக் காட்டிய தன் றொடை வழியே புள்வாய் குத்த வாருயிர் சென்றிடுக" எனச் சபித்து,

 

“அரசவை யேற்று அளகந் தீண்டி, அணி துகில் தீண்டி அடாது சொற்ற துரியனை யவன் றம்பியரொடு மமரிற் குருதி பொழிய முடி துணித்து வெற்றி முரசு முழங்கும் போ தல்லது விரித்த குழல் முடியேன்" என வஞ்சினங் கூறிக் குழல் விரித்த
பாஞ்சாலியின் கற்பு மேம்பாட்டை

 

“வீறார் கற்பு'', "மறக் கற்பு' என்ற சொற்களாலன்றி வேறு எச் சொற்களால் விரித்தற்கு இயலும்.

 

பின்னர், "அரிவை யோடகன்று நீவிரைவிரு மட்வி செய்தி"ப் பன்னீராண்டு கழித்துப், பின்னோராண்டு, கரந்துரைந்து மீளின் நாடு பெறுதற் குரியீர்" எனப் “பிதாமகன் முதலா யுள்
றிய அப்போழ்தும், பாஞ்சாலி வணங்கி, “ஐவரரசரும், எனது மைந்தரும் யானும் உரிமையின் றெய்த வெஞ்சூதாடுத்த லுறுதி" என்றனள்.


இவ்வுரையி னுண்மையை யாய்வார்க்கு,

 

"பாஞ்சாலி தனக்கு மட்டு விடுதலை பெற்றுக்கொள்ள அவையேறி வழக்குரைவளல்லள்'' என்பது பெறப்ப இது காறு மறிந்த பாஞ்சாலி வரலாற்றால், அவள் “தற்காத்த" திறனும், "தற்கொண்டாற் பேணிய'' முறையும், "சூதாடுத என மொழிந்து அனைவோரையும் மீட்பதற் குபாயந் தேடிய பெருவீறும் புலனாம்.

 

''உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்" என்ற தெள்ளுரையினையே, இலக்கணமாக் கொண்டு வில்லியார் "கங்கை மகன் முதலான காவலரை" வணங்க வைத்தும், கண்ணனைப் புகழ வைத்தும், பாஞ்சாலியின் பண்பைச் சுட்டியது சுட்டி மகிழ்தற்குரியது. நிற்க.

 

பாஞ்சாலி, “ஓதிய விதியினாலும்," வியாதன் போன் றவரின் வற்புறுத்தலினாலும், மறுக்கொணாது அபலையாகி ஐவரையும் மணந்தனளெனினும், தன்னெஞ்சறிய மனக்கோயிலில் அவர்களுக்கு இடந்தரவில்லைபோலும்.

 

முற் பிறப்பில் கொழுநனை இறைவனாக வழிபட்டமையின் பயன், இப்பிறப்பில் அவ்விறைவனே தனக்குரிய கோயிலாக அவள் மனத்தை யாக்கிக் கொண்டனளோ!

துச்சாதனன், துயிலுரியுங் காலத்து "வேறோர் சொல்லுங்றாது கோவிந்தா என்றரற்றிக் குளிர்ந்தநாவி லூறாத வமிழ் தூறி யுடல் புளகித் துள்ளமெலா முருகி" னமையும், வெகுண்டு வஞ்சினங்கூறிய காலத்தும் "மாயவனை மறவாளாகி" இருந்தமையும், கண்ணன் தூதேகுங் காலத்து "என் மானம் (உனையன்றி) ஆர் வேறு காத்தாரே" எனக் கூறினமையும், மாற்றமாகக் கண்ணன், "ஏத்தரிய பெருங் கற்பினிளையாளுக்கு" "நல்லாய்! உன் பைங்கூந்தல் நானே முடிக்கின்றேன்" என்றமையும் ஆய இவை போன்ற செயல்களை நோக்குவார்க்கு அவள் பேரிதயத்திற் குடிகொண்டவன் றைவனே' எனுமுண்மை வெளிப்படும்.

 

நிற்க, துரோபதை 'உள்ளுற நினைந்து உருகுவதாக வில்லியார் சுட்டும் இடம் ஒன்று அரசவையிற் கண்ணனை நினைந்து கனிதல் இதனைக் கவி தன் கூற்றாக கூறி யுள்ளார். இனி மற்றொன்று பழச் சம்பவத்தில். இது பாஞ்சாலி கூற்றாக உள்ளது.

 

இனி, துரோபதை, "தானொருவளே யன்றித் தன் கொண் கரும் கண்ணனைப் பெருந் துணைவனாகக் கொண்டவர்கள்' என்னுமுண்மையையு மறிந்தவளே! இது,


“வன்பாரதப் போரில் வந்திருந்தே மைவரையும்
நின் பார்வையாற் காக்க வேண்டும் கெடுமாலே"


என்னும், சாதேவன் கூற்றிலும், ஐவரும் கண்ணனை விளிக்கும் சுட்டுகளாலும் நாமறியக் கிடக்கிறது.

பாஞ்சாலி இறைவனை யன்றி வேறெவரையும் நினைந்து உருகா உள்ள முடையவள் என்பதும், பாண்டவர்களும் கண்ணனைத் தம் பெருந் தலைவனாகக் கொண்டு அவன் வழி யொழுகி வந்தவர்களென்பதும் நினைவி லிருத்தற் குரியது.

 

இனி, இதுகாறுங் கூறியவை கொண்டு “ஐம்புலன்க்” ளும் எனத் தொடங்கும் செய்யுட் பொருளின் உண்மை காண முயலுவேரம்.


[கொண்டு கூட்டு]

 

1. அம்புவிதனில் பெண் (ஆக) பிறந்தவர் எவர்க்கும், ஆடவர் (கர்த்தற் குரியராக) இல்லாமையின்;

 

2. ஐம்புலன்களும் போல் ஐவரும் பாதிகள் அல்லால் (அவர்களே என் களைகணோர் என யான) நம்புதற் குளதோ?

 

3. ஆகவும், இன்னும் வேறொருவன் இறைவனே எம்பெருங்கொழுநன் ஆவதற்கு எனது பேரிதயம் உருகும்.


      1. இவ் வழகிய பூமியில் பெண்ணாகப் பிறந்த எல்லார்க்கும் (அவர்களின் ஆடவர்களே (உற்றுழி உதவும் களைகணேராக) இல்லாமையின். (தன்னிலையினை நினைவு கூர்ந்து போலும்)

 

[பிரபந்த பரித்ராணம் என்னும் நூலுக்கு உரை தெளித்துப் போந்த திருவாளர். பண் டித. அ. அரங்க ராமா நுசம் பிள்ளை அவர்களும் "பர்த்தாவும் ரக்ஷகனாக மாட்டான். இத்தை துரோபதி பக்கலிலும்....... ......காண்க என்ற அந் நூற் றொடரின் பொருளில் “பாஞ்சாலியை அரசவையிற் பாண்டவர்கள் காத்தற் கியலாமையும், பரமனே காத்த பண்பையும், ஒரு மகளுக்கு கணவனொருவனே கனைனொனாக மருத்தற் கியலாமையையும் விரித்தமை ஈண்டைக் கியை புடைத்து.)

 

2 (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐம்புலன்களும் போல் (பாண்டவர்கள) ஐ வரும் (எனக்கு)த் தலைவர்களாக உள்ள ரே யன்றி, (அவர்களே என்னை எவ்வமயத்தும் காத்து வழி நடத்தும் களைகணோர் என யான்) நம்புதற் குளதோ!


[பினனரும், பாஞ்சாலி.

“கண்ணிலான் காதல் மைந்தன்

பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்"

என இவ் வுரையினையே கூறுத லுணர்க.]

 

3. ஆகலின், (ஐம்புல னிகாத்த பாண்டவரினும் இன்னம் வேறொருவனான இறைவனே எங்க ளனைவர்க்கும் உரிய (இடுக்கண் நிகழுந் தொறும் நீக்கிப் புரக்கும்) பெருந் தலைவனாக (என்றும்) இருத்தற்கு எனது பேரிதயம் உருகுகின்றது.

 

இன்னம் வேறொருவன் என்ற தொடர் பாண்டவரினும் வேறான ஒப்புவமையற்ற கண்ணனைச் சுட்டிற்று.

 

எம்பெரு கொழுநன்: பாஞ்சாலி "யாங்கள் உரிமை யின்றெய்த வெஞ்சூதடுத லுறுதி" என வன்று கூறி அனைவோரையும் மீட்க முயன்றவ ளாகலின், இங்கும் 'எம்' எனும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையால் பாண்டவரையும் உட்படுத்தி "எங்க ளனை வரையும் நின் பார்வையாற் காக்க வேண்டும்" என முறையிடுபவளாக "எங்களது பெருங் * கொழுதன் இறைவனே நீயே) ஆவதற்கு எனது பேரிதயம் உருகுகிறது என்றனள்.

 

* கொழுநன்: எப்பொருட்கு மிறையோன். (இப்பொருள் சூளாமணி நிகண்டு. 2-வது தொகுதி 10-ம் செய்யுளால் உய்த் துணர்க.)

 

பேரிதயம்: - மாயவனை மறவாத் தூய சிந்தையைப் ‘பேரித்யம்’ என்பதே ஏற்புடைத்து.

 

எனவே, இதுகாறுங் கூறியவற்றான், பாஞ்சாலி பெண்ணீர்மை குன்றாப் பெருமக ளென்பதூஉம், அவள் தன் கற்புக்கு மாசு கற்பிக்கும் நோக்கம் வில்லியாரால் யாண்டும் சுட்டப்படவில்லை என்பதும் ஆகிய இவைபோன்ற இன்னும் சில உண்மைகளும் நாமறியக் கிடக்கின்றது. எனினும்,


“காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்
அறிவுடை யார்க் கண்ணதே.”

 

ஆனந்த போதினி – 1944 ௵ - மார்ச்சு ௴

 

 

 

No comments:

Post a Comment