Saturday, September 5, 2020

 

பெண்ணின் மூட முன்னேற்றம்

(P. N. வைத்தியநாத சுவாமி, B. Sc.,)

அன்பின் மிக்க மிஸ். டி. எம். குமாரி,

உன் கடிதம் கண்டேன். சகலமும் தெரிந்தது. மிகவும் சந்தோஷம். “நாங்களெல்லாம் சீர்திருத்தம் செய்து வருகிறோம்; மாதரின் மடமை அழிந்து வருகிறது; பெண்ணினம் போற்றப்படப் போகிறது...'' என்றெல்லாம் நீ எழுதி யிருப்பதைப் பார்த்தால் எனக்கு நிஜமாகவே சிரிப்பு வருகிறது. மூட முன்னேற்றத்தில் முர்துகிறீர்கள் போலும்! துக்கமும் பொங்குகிறது.

என் குமாரி! அன்று நாமிருவரும் "சுராஜ்மால் லல்லுபாய்" கடைகுப் போனோம்; உன் நற்றைக்கல் மூக்குத்தியைக் கொடுத்து விட்டு அந்த ஐந்து கல் பேஸ்த்திரி வாங்கினோம். என் கையாலேயே உன் மூக்கில் போட்டேன்; அப்பொழுது உன் முகம் எப்படி இருந்தது தெரியுமா! அழகு வீசியது. உன் முகத்தில் சொட்டிய ஜீவ களையை நான் அறிவேன்; உலகத்திற்கு தெரியும். பயித்தியம் பிடித்த குமாரி! இப்பொழுது வீரப் பேச்சு எழுதி யிருக்கிறாய்; 'பெண்கள் மூக்குத்திப் போட்டுச் கொள்வது மூடப் பழக்கம்; இல்லையானால் என் ஆண்களும் அதை அணியக் கூடாது' என்று கேட்கிறாய்! குமாரி! இங்கு உன் மடமை உச்ச நிலையை யடைகிறது. வேறு நான் என்ன சொல்ல முடியும்! நீ மூக்குத்தியை எடுத்து விட்டாய்; உன் சங்கத்தை சேர்ந்தவர்களும் அதை அகற்றி விட்டனர்; - ஆகா!
எவ்வளவு பெரிய மகத்தான முன்னேற்றம்! வெட்கம்!!.............

கணீர்! கணீர்!! என்று மெட்டி சப்திக்க பெண்ணாசிகளாக நடந்தீர்கள். ஆனால் இப்பொழுது அது புளித்து விட்டது. கிரீச்! கிரீச்!! என்று பலவகையான பாதரக்ஷைகள் போட்டு நடக்கிறீர்கள். என் பிரிய குமாரி! இது தானா முன்னேற்றம்! கேவலம் நாங்கள் அன்னிய நாடினரிடமிருந்து ‘காபி' அடித்தோம்; அந்த எச்சலை நீங்களும் வெட்கமில்லாமல் பங்கிட்டுக் கொள்கிறீர்கள்.

"சைக்கல்" விட்டு வரவேண்டும்; "மோட்டார்” ஓட்ட வேண்டும்; ஆண்களை விட அதிகமாக என்கிறாய் - இதிலெல்லாம் என்ன முன்னேற்றமிருக்கிறது! எங்கள் தொழிலில் எங்கள் பங்கு கொள்கிறீர்கள். பேதை மகளே! அவ்வளவு தானே என்பதை உணர்!

உடலை வளர்க்க வேண்டு மென்கிறாய். இது முற்றிலும் அவசியம், பெண்களும் தோப்பியாசம் செய்ய வேண்டும். ஆனால் நீயோ நல்ல பயில்வான்களைப் போல் உடம்பைக் கட்ட வேண்டுமென்று அபிப்பிராயப் பட்டு எழுதுகிறாய். இது மிகவும் விசனிக்த்க தக்கதாகும். ஆண்கள் செய்யும் அநேகங் குறிப்பிட்ட அப்பியாயங்களைப் பெண்களாகிய நீங்கள் பின் பற்றக் கூடாது. இது எவ்விதத்திலும் முன்னேற்றமல்ல; வீணாக உங்கள் வாழ்வை பாதிக்கும். பெண்மையிலோர் மென்மை; இதிலோர் இனிமை;
இதை யெல்லாம் யோசித்தறிந்தே இறைவன் சிருஷ்டித்துள்ளான், குமாரி, உனக்கு ஞாபக மிருக்கு மென்றே நம்புகிறேன். அன்று நாம் கடற்கரையில் அரைமணி நேரம் உலாவி வந்தோம்; கால்கள் வலிக்கிற தென்றாய்; அது சமயம் தினமும் செய்யும்படி சில அப்பியாசங்கள் காட்டினோன்ல்லவா? அவைகளை மாத்திரம் பழகி வந்தால் போதுமானது. பயித்தியக்கார முன்னேற்றத்தால் பாழ்படாதே!

ஒரு விஷயத்தில் வேண்டுமானால் விட்டுக் கொடுக்கலாம். பிள்ளைகளைப் பத்து மாதம் சுமந்து பெறும் தாய்கள் நீங்கள். ஆகையால் பள்ளிக்கூட உபாத்தியாயினியாக வேண்டுமானால் போகலாம். ஆனால் எத்தனை தாய்மார்கள் உபாத்தியாயினியாகப் போகிறார்கள், உன்னைப்போன்ற ‘மிஸ்'களே அநேகம் அவ் வேலையில் இருக்கின்றனர். ஐயோ! உன் சாந்த குணத்தையும் உங்கள் "மிஸ்" மார்களின் பெருமையையும் நான் அறிவேன். இன்னும் சில இடங்களிலும் நீங்கள் முன்னுக்கு வரலாம். உதாரணமாக வைத்திய சாலைகளி லிருக்கும் தாதிமார்களைச் சொல்வேன். ஆனால் பொதுப்படையாக உங்கள் பொய்யான முன்னேற்றத்தை வெறுக்க வேண்டும்.

இன்னொரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிடுகிறாய். அது என் கண்களில் திராவகத்தைக் கொட்டுகிறது. அன்னிய நாட்டுப் பெண்களை நீங்கள் பின்பற்ற வேண்டிய இடங்கள் இல்லாமலில்லை; ஆனால் என் குமாரி! நீ செல்வதோ...... வேண்டாம்; பாரதநாட்டு பெண்மணிகட்கு பொருந்தாது, குமாரி! மறந்து போயிருக்க மாட்டாய் என்றே நம்புகிறேன். அன்று நாமிருவரும் மிஸ். வி. ஜெ. பாய் வீட்டிற்கு விருந்துக்குப் போயிருந்தோம்; அவள் புது வித கதம்பம் வாங்கி வைத்திருந்தாள்; வேடிக்கையாக மடித்து உன் தலையில் சூடினேன்; ஆனால் அது சமயம் பெண்களின் உத்தலைப் பற்றியும் மிஸ் பாய் பேசினாள். அவைகளை இப்பொழுது யோசி. வெள்ளை மாதர்களை ப்போல் நீட்டுக்கிராப் செய்துக் கொள்வது முன்னேற்றமல்ல; கேவல ‘காபி’யாகும். இதே போல் தான் மற்ற விஷயங்களும் மிக ஆபாசமான 'இமிடேஷன்"கள் என்பதை சத்திய வாக்காகக் கொள்.

மாதர் சங்கம் கண்டு விட்டதால் பெரிதும் முன்னேறி விட்டதாக ஜம்பம் பேசாதே. எத்தனையோ சங்கங்கள் ஏற்படுத்தி பார்த்து விட்டோம்; எங்கள் சிலை உயரவில்லை. இந் நிலையில் ஏதோ ஒரு தினத்தில் பெண்கள் பலர் கூடி விட்டால் உலகமே உயர்ந்து விட்டதாகக் கருதக் கூடாது. நமது - "மாதர் சங்க”'த்தின் விஷயங்களை நாமிருவரும் நேரில் பார்த்திருக்கிறோ மல்லவா! அங்கு கூடி வம்பு பேசுகிறீர்கள். எல்லாவற்றையும் விட இதுவும் எங்களைப் பார்த்து அடித்த காபியே.

என் பிரிய குமாரி! சிறிது காலம் வேண்டுமானால் ஓய்வு எடுத்துக் கொள். பிறகு ஆழ்ந்து யோசனை செய். இன்று இந்தியாவின் நிலையென்ன? இதிலுள்ள பெண்கள் கதி யென்ன! வீரமணிகள் வாழ்ந்த நாடு; உலகம் போற்றும் உத்தமிகள் வாழ்ந்த தேசம்; இன்று அயலார் கண்டு கேலி செய்கின்றனர்! ஏன்! புத்தகழம் எழதி நம்மையே படிக்கும்படி கத்தையாக அனுப்புகின்றனர். இதற்கெல்லாம் பரிகாரம் தேடு. இந்தியத் தாயின் கண்கள் பிரகாசிக்கட்டும்; இந்திய மகளிர் உண்மை நிலையை உலகம் என்றும் அறியட்டும். எல்லாவற்றையும் விட அன்னையை கவனி. அவள் கால்களிலும் கைகளிலும் பிணிக்கப்பட்டிருக்கும் கனத்த சங்கிலிகளைப் பார். தலை குனி, கண்ணீர் விடு, தீராவெட்கத்துடன் திரிந்து வா! இன்னும் எவ்வளவு காலம் தான் உன்னைப் பெற்ற அன்னை அதை சுமப்பது என்பதை முடிவு செய்.

உன் பெற்றோர்கட்கு என் வந்தனம். உன் தம்பிக்கு இக் கடிதத்துடனிருக்கும் படம் பரிசாகும்.

 - ஜெயபாலன்.

ஆனந்த போதினி – 1942 ௵ - ஏப்ரல் ௴

 



 

No comments:

Post a Comment