Saturday, September 5, 2020

 

பெண்*

(“கவிப் பித்தன்'')

* அன்பர் துரை அவர்களின் "மகளிரைப் பழிப்பது தகுதியா?" என்ற அழகிய கட்டுரை என்னைப் பெண்ணைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. அதன் பயனாய் எழுந்த “a loose sally of the mind" இது.

“ஏ, பெண்ணே! நீ இறைவனுடைய சிருஷ்டி மட்டுமன்று, மனிதனுடைய துந்தான். அவன் தன் இருதயத்திலிருந்து வரும் எழிலால் உன்னைச் சிறப்பிக்கிறான், கவிஞர்கள்
உனக்காகப் பொன்மய்மான கற்பனை நிறைந்த நூல்களால் சல்லா நெய்கின்றனர். சைத்ரீகர்கள் உன் உருவத்தை நவநவமாக என்றும் இறவாத தன்மையில் தீட்டுகின்றனர். கடல்கள் முத்துக்களை, நிலக்குகைகள் பொன்னை, சரத்கால பூங்காவனங்கள் மலர்களைத் தருகின்றன, உன்னை அலங்கரிக்க, அழகு படுத்த, அதிகச் சிறப்புள்ளவளாகச் செய்ய. மானிடனின் உள்ளத்திலுள்ள அவா பெருமையை புகழை) உன் இளமையின்மேல் சொரிகிறது. ஒரு பாதி பெண், ஒரு பாதி கனவு.'                     -கவி தாகூர்.

பெண்ணின் பெருமைகளைப் பேசாத மொழி இல்லை. அவள் அழகைப் புகழாத இலக்கிய மில்லை. என்? அவள் அழகை; அவள் பெருமையைப் போற்றாத இலக்கியம் உண்மையில் இலக்கிய மாகவே இருக்க முடியாதே! கவிஞர்கள் உலகிலுள்ள அழகிய பொருள்கள் ஒவ்வொன்றுடனும் அவள் அங்கங்களை ஒப்பிட்டுப் புகழ்வார்கள். இந்த விஷயத்தில் ஒரு பாஷைக் கவிஞனுக்கும் மற்றொரு பாஷைக் கவிஞனுக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. கம்பனும் காளிதாசனும், ஹோமரும் வர்ஜிலும், ஷேக்ஸ்பியரும்
விக்தர் ஹியூகோவும் இதில் ஒன்று. ரோஜா மலர்கள், ஆப்பிள் பழங்கள் அவள் கன்னங்கள்; மேகம் அவள் கூந்தல்; மின்னல் அவள் இடை; சந்திரன் அவள் வதனம்; இளம்பிறை அவள் நெற்றி; இந்திரவில் புருவம்; மல்லிகை மொக்கு நாசி; நீலோற்பலம் கண்கள்; குமுதம் வாய்; முத்து பற்கள்; வலம்புரி கழுத்து; செங்காந்தள் உள்ளங்கை; கரும்பு தோள்கள், தாமரையின் குவிதல்; இளநீரின் திரட்சி இவை கொங்கைகள் இவை கொங்கைகள் ........ இப்படியே புலவன் வருணனையை அடுக்கிக்கொண்டு போகலாம். வருணனை ஒருவன் சொத்தல்ல; எல்லா நாட்டானுக்கும் பொது. 'பந்தினை இளையவர் பயிலிடம் மயிலூர் கந்தனை யனையவர் கலை தெரி கழகம்' என்று அழகுக்கலை பயில்வதற்குப் பெண்கள் பந்து விளையாடு மிடத்தை இளைஞர்களுக்கு சிபாரிசு செய்யலாம் கம்பர் போன்றார்.

பெண் அழகையும் அவள் பெருமையையும் எல்லோரும் புகழ்ந்து விடுவார்களா? எல்லாவற்றிற்கும் இருப்பது போல இதற்கும் விதிவிலக்குண்டு. வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்கள், வாழ்க்கையில் விரக்தி பெற்றவர்கள், உலகத்தை முற்றும் துறந்ததாகச் சொல்லிக்கொண்டு தம்மைத் தாமே துன்புறுத்திக் கொண்டவர்கள்- இவர்களுடைய அபிப்பிராயம் வேறுவிதமாகத் தான் இருக்கிறது. அவர்களில் சிலர் பைப்பிளைக் கொண்டு வந்து, 'பாருங்கள் பெண்களுக் களிக்கப்படும் ஸ்தானத்தை'
என்று காட்டுகின்றனர் இதை: (சாத்தானும் வேதத்தை ஆதாரமாகக் காட்டுவானே என்கிறீர்களா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன், காரண முண்டு. எனக்கே அது திரும்பிவிடக் கூடாது பாருங்கள்); "ஆண் பெண்ணுக் குரியவனல்லன்; பெண் தான் ஆனுக்காகும்; ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்பட வில்லை; பெண் தான் ஆணுக்காக." ஆனால் ஆதிப் பெண்ணைக் கடவுள் எப்படி சிருஷ்டித்தார் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். ஆதித் தந்தையின் விலர் எலும்பிலிருந்து ஆதித்தாயைக் கடவுள் சிருஷ்டித்தார். ஆதாமின் தலை எலும்பி லிருந்தாவது, கால் எலும்பி லிருந்தாவது ஏவாளை என் சிருஷ்டிக்க வில்லை? அப்படிச் செய்தால் பெண் ஆணுக்கு மேற்பட்டவ ளென்றோ கீழ்ப்பட்டவ ளென்றோ ஆகிவிடு மல்லவா? ஆகவே, ஆதித் தாய் ஆதித் தந்
தைக்கு சமம் என்று காட்டுவதற்குத்தான் அவளை அவருடைய விலா எலும்பிலிருந்து படைத்திருக்கிறார் கட்வுள், (விலா எலும்பு எவ்வளவு கோணலோ, அவ்வளவு கோணல் மனம் படைத்தவள் பெண் என்கிறார்கள் தத்துவஞானி - தாமஸ் பிரௌன் போன்ற
கோணல் மனம் படைத்தவர்கள்). பெண் பிறப்புப் பெருமை யில்லாதது (பெண்ணெனப்படுவ கேண்மோ பீடில), பெண்கள் மன அன்பெல்லாம் முயற்கொம்பு தான் (பெண்கள் அக்க்காத
லெல்லாம் பேசு முயற் கொம்பே), பெண்களின் கண்கள் சாளரங்களில் மெய்நெறியை விட்டு விலகுவன என்றனர் நம் நாட்டுச் சைனர்கள். "பெண்களை ஏன் கடவுள் படைத்தார்? மரங்கள் முளைப்பதுபோல், மனிதர்கள் பெண்களின் றியே முளைக்கும்படி
கடவுள் என் செய்திருக்கக் கூடாது?" என்கிறார்கள் ஆங்கில ஞானிகள் சிலர்.

ஆனால் யாரும் மறுக்க முடியாத உண்மை பெண் சக்தி, சர்வ சக்தி, மூல சக்தி என்பது. ஆண் சிவம்; பெண் சக்தி. இரண்டும் சேராவிட்டால் உலகில் தொழிலில்லை. சக்தியின்றேல் சிவமில்லை; சிவமின்றேல் சக்தியுமில்லை தான், ஆனால் சக்தி சர்வ சக்தி. ஆகவேதான் வேதங்கள் புராணங்க ளெல்லாம் சக்தியைப் பெண் என்றன; பராசக்தி என்றன; மஹா மாயா என்றன; தேவர்க்கும் மூவர்க்கும் முதல்வி என்றன.

உலகில் கஷ்டங்கள் வருவதெல்லாம் பெண்ணால், அவள் இன்னல் கொடுப்பவள், இராவணன் அழிந்ததும் பெண்ணால், இந்திரன் அழிந்ததும் பெண்ணால் என்றெல்லாம் கூறுவர் சிலர். ஆண் அறிவுக்கு அரசன், பெண் உணர்ச்சிக்கு ராணி. இந்த
அறிவுக்கும் உணர்ச்சிக்கும் உலகந் தோன்றிய நாள் முதல் போராட்டம் நடந்துகொண்டு வருகிறது.... உலகத்தில் ஞானமார்க்கத்திற்கு வழி காட்டி பெண். மாயக் குழலோசைக்குக் கட்டுப்பட்டு மாளும் சர்ப்பத்தைப்போல், அவள் உணர்ச்சிகளால் விழுங்கப்பட்டு விடுகிறாள்' என்கிறார்கள். சற்று சிந்திக்க வேண்டும். யாரால் யார் அழிந்தார்கள்? பெண்ணால் ஆணா, ஆணால் பெண்ணா? விபசார விடுதிகளை ஏற்படுத்திக்கொண்டு அவளாகவே தொழில் தடத்த ஆரம்பித்து விட்டாளா? ஆனால் தான் அவள் வயிறு கழுவ அந்நிலைக்கு வந்திருக்கிறாள் என்பதை மறுக்க முடியுமா? பருவ வயதடைந்த பெண்கள் பலர் விதவை என்ற விலங்கால் பிணைப் புண்டு ஒருவித சுகமும் அறியா திருப்பதற்குக் காரணம் என்ன?
ஆண்கள் அவ்விதம் விதவைகளாக இருக்கிறார்களா? இராவணன் அழிந்தது ஒரு பெண்ணால் என்றால் அவனால் அழிந்தது எத்தனையேர் பெண்கள். சரி போக்ட்டும். அவன் யாரால் அழிந்தான்? சூர்பனகையால் தானே? சூர்பனகை பெண்மை சிறிது மற்ற பேய்.
பெண்மையற்ற அரக்கியாகிய அவளைப் பெண் என்றழைப்பதே தகாது; இராவணன் சீதையால் 'விளக் கெதிர்வந்த விட்டில் பான்மையன்' ஆனான் என்றால் அவன் அழிந்ததற்கு அவளைக் காரணமாகக் கூற முடியுமா? அவள் கஷ்டப் படத்தான் அவன்
காரணமாய் இருந்தான்.........ஆணின் முன்னால் பெண் மகுடியைக் கண்ட சர்ப்பம்போல் நடுங்குவது ஓரளவுக்கு உண்மைதான். காரணம் மகுடியிலிருந்து எழும் ஜீவநாதம். அந்த இசை வெள்ளத்தில் அவள் அகப்பட்டு விட்டதை அறிந்தால் அதை விட்டு
நீந்த முயல்கிறாள் என்பதும் மறுக்க முடியாதது தான். ஆனால் பெண் மட்டுந்தானா பாவத்திற்கு வழி காட்டி? முழுப் பாரத்தையும் அவள் தலையில் போட் முடியுமா? ஆண் மட்டும்......? பெண்ணில் அறிவுக்கு அரசி இல்லையா? எத்தனையோ துளசிதாசர்கள்
ஏற்பட் அவள் காரணமா யிருக்க வில்லையா? நிற்கட்டும்.

மார்க்ட்வெயின் என்ற ஹாஸ்ய எழுத்தாளர் சொல்கிறார், எந்த வகையில் பார்த்தாலும் சரி, பெண்கள் மனித சமூகத்திற்கே ஒரு அணி கலன்; பூமிக்கே ஒரு முத்து. காதலி என்ற வகையில் பெண்ணுக்கு இணை யார்? பாலூட்டும் தாய் என்ற முறையில் பெண்களுடன் ஆண்களால் போட்டியிட முடியாது' (போட்டி யிட்டுத்தான் பார்க்கட்டுமே என்கிறார் ஒரு பெண்) என்று. ஆகவேதான் 'கற்புடைமை, நாணம், அன்பு, சுயநலத் தியாகம் முதலிய அரும் பெருங் குணங்கள். ஆண்களை விடப் பெண்களிடமே அதிகமாக உள்ளது' என்று தாகூர் கூறுவதை நாமும் ஆமோதிக்கவேண்டிய தாகிறது.

ஆனால் சூர்ப்பனகையைப் பேய், பெண் இல்லை என்றோம். இந்த வகையைச் சார்ந்த சிலர் பெண் என்ற வேஷத்தில் இருக்கலாம். இதை மறுக்க முடியாது தான். ஒரு டால்ஸ்டாய் ‘அப்போது இடி இடித்தது, இப்போது மழை பெய்கிறது' என்று சொல்லும்படியாகக் கொடுமை செய்தவளும், ஒரு குருட்டு மில்ட்ன், 'என் மனைவி ரோஜாவைப்போல் இருக்கிறாள் என்கிறார்களே? நான் ரோஜாவின் முட்கள் குத்துவதைத்தானே அனுபவிக்கிறேன்? ரோஜா மலரின் மணத்தை முகர வில்லையே' என்று ஆற்றாமைகொள்ளக் காரணமாய் இருந்தவளும், பெண்கள் என்ற பெயரால் இல்லாமல் இருக்க முடியுமா? நான் முதலில் சொன்னபடி இதற்கும் விதி விலக்கு உண்டு.

      பெண்ணைப்பற்றிக் காந்திஜி என்ன சொல்கிறார் பாருங்கள். “பெண்ணுரிமை விஷயத்தில் எனக்கு இன்னும் சமாதானம் ஏற்படவில்லை .... நான் மகனையும் மகளையும் சம அந்தஸ்துடனேயே நடத்துவேன்.” “பெண் சுயநலத் தியாகத்தின் உருவம். ஆனால் துரதிஷ்டவசமாக் அவளுக்கு மனிதனின் மேல் உள்ள மாபெரும் சாதனத்தை அவள் உணரவில்லை.” “பெண்ணைப் பலமற்ற ஜாதி (Weaker Sex) என்றழைப்பதே ஒரு சாபக்கேடு." ஆகவே நான் முதலில் சொன்னது போல் பெண்ணின் பெருமைகளைப் பெரியோர்கள் பலர் பேசுகின்றனர்; கவிஞர்கள் தங்கள் திறமை முழுவதையும் காட்டி இருக்கிறார்கள் அவளை அழகு செய்வதில் - அவளைப் புகழ்வதில். அவர்கள் ஆணுடன் பெண்ணும் சரி நிகர் சமம் என்று பல வழிகளிலும் எடுத்துக்காட்ட முயன்றிருக்கின்றனர்.
ஆகவே தான் நாமும் பாரதியுடன் சேர்ந்து,

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்.

என்று சொல்கிறோம்

ஆனந்த போதினி – 1943 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment