Tuesday, September 1, 2020

 

சொற்றூய்மை

 

ஒருவன், உண்மை பேசினால் யாவரும் நம்புவர். நல்லவன் என்று பெயர் எடுக்கலாம். பொய் மொழிவதனால் பாவமும் அப்பாவத்தினால் துன்பமும் ஏற்படுகின்றன. உண்மைக்குக் கேடேகிடையாது. கேடில்லாதவன் துன்பப்பட வேண்டியதில்லை. எல்லாத் தீமைக்கும் காரணமாக இருக்கும் ஆசை யும் கோபமும் பொய்யைத்தான் துணையாகக் கொண்டிருக்கின்றன. அடிபிடி, பகை, கொலை, களவு, அச்சம், துயரம் ஆகிய எல்லாம் பொய்யினால் தோன்றும்; மெய்யினால் அகலும்.

 

சிலர் அச்சத்தினாலும், சிலர் பிறர் தம்மைப் பெருமையாக நினைத்துக் கொள்ளவும் உள்ளதை மறைத்து, இல்லாததைக் கூறுகிறார்கள். பயப்பட்டுப் பொய் கூறக்கூடாது என்பதற்காகத்தான் 'இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்' என்ற வாக்கியம் ஏற்பட்டது. எதற்கும் அஞ்சாத தீரன் தான் உண்மை உரைப்பான். ஒருவன் தன்னைப் பெருமைப் படுத்திக் கொள்ள விளையாட்டாகச் சொல்லும் பொய் விரைவில் வெளிப்பட்டுப் பெருமைக்குப் பதிலாக அவனுக்கு அவமானத்தைத்தான் உண்டு பண்ணும். என்ன வந்தாலும், போனாலும் நாம் ஒருவனுக்குக் கொடுத்த வாக்கைத் தட்டக்கூடாது. பணமோ, வேறு எந்தப் பொருளோ ஒருவரிடமிருந்து நாம் வாங்கிவிட்டு அதை அவருக்கு இன்ன நாளில் தருகிறோம் என்று கூறினால் அன்று கட்டாயம் கொடுத்துவிடவேண்டும். கூட்டம் அல்லது மங்கள காரியத்துக்கு நான் வருகிறேன் என்று ஒருவருக்கு வாக்களித்து விட்டுப் பின் நின்றுவிடுவது அவரை ஏமாற்றுவதாகும். இப்படிச் செய்வது நல்லவர்களுக்கு அழகல்ல.

 

நாமாக வலியப்போய் 'உண்மை கூறுகிறோம்' என்று சொல்லி ஒரு நன்மையும் செய்யாமல் பிறருக்குக் கேடு விளைவிக்கும் சொல்லைச் சொல்லுவதிலும் அவ்வாறு சொல்லாதிருத்தலே மேல். அப்படிச் சொல்வது கோள் சொல்லுவதில் ஒரு பிரிவாகும். பெரியவர்களிடம் அவர்கள் கேட்பதன் முன்னும், பிறருடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதும் பேசக்கூடாது.

 

நல்லவன் பிறரைக் காணாதவிடத்தில் பிறரது நற்குணங்களை எடுத்துச் சொல்லிப் புகழ்வான். தீயவன் காணாதவிடத்தில் பிறர் தீமைகளை எடுத்துச் சொல்லி இகழ்ந்து பலருடன் கூடிச் சிரிப்பான். இப்படிச் செய்பவன் அறிவில்லாதவன். அவனை நேசிப்பவர்களும் மூடர்களே. இவர்கள் தங்களைப் பிறர் பழித்தால் தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை உணராத கடையர்.

 

நல்லவர்கள் நன்மை செய்து இனியதும், நல்லதும், உள்ளதும் சொல்வதன் காரணம், தம்மைப்போல் பிறரை நினைப்பதும், பிறர் செய்கிற குற்றத்தை அறிவது போல் தமது குற்றத்தை யறிவதுமே தான். பிறரைப் பழித்து உரைப்பவனை அவன் நண்பர்களும் கூட விரும்பமாட்டார்கள்; 'நம் மையும் இப்படித்தானே காணாதவிடத்தில் இகழ்ந்துரைப்பன்' என்று எண்ணி வெறுப்பர். ஒருவன் முன்பு அவன் தீச்செயல்களைக் கூறினாலும் அவன் இல்லாத விடத்தில் அவற்றைச் சொல்லவே கூடாது.

 

ஒருபயனும் இல்லாமல் வழ வழ வென்று பேசிக் கொண்டிருப்பது கேட்பவருக்கு வெறுப்பைக் கொடுக்கும். ஆதலால் நல்ல பயன் தரும் சொல்லையே பேசவேண்டும். வீண்பேச்சுப் பேசுகிறவன் யாவராலும் வீணன் என்று இகழப்படுவான். ஒன்றையே பன்னிப் பன்னிப் பேசுவதும் அறிவுடையோர்க்கு அழகல்ல.

 

எவரிடத்தும் இனிய சொல்லையே பேசவேண்டும். இவ்வாறு பேசுவது அன்புடையவர்களிடமே உண்டாகும். ஒருவர் ஏழையாக இருந்தாலும், அரு வருக்கத்தக்க உருவத்துடன் கூடியிருந்தாலும் அவரிடத்தும் உள்ளன்பு ஒழுகும் இன்சொல்லே கூற வேண்டும். தாய், தன் மக்களிடத்து அன்பு கொண்டிருப்பதனால் தான் அவர்களை அருமையாக அழைத்துப் பிரியமாகப் பேசுகிறாள். அதுபோல் உலகில் அன்புடைய பெரியோர்களே இன்சொல் சொல்லுவர். அப்படிச் சொல்லுகிறவர்களே எல்லோருக்கும் தாய் போன்றவர்கள். தீயவரும் அறிவீனருமே கடுகடு வென்று வெறுப்பையுண்டு பண்ணும் பேச்சுக்களைப் பேசுவர். மன நிறைவுடன் இன்சொல் கூற வேண்டும். உள்ளே வெறுப்பும் வெளிக்கு மட்டும் அருமையுமாக நடித்துப் பேசுகிறவன் வஞ்சகன். அவனை நம்பக்கூடாது. பணிவுடன் அன்போடு கூடிய இனிய அருமைச் சொற்களையுடையவனுக்கு வேறு ஆபரணம் வேண்டியதில்லை. அவைகளே அவனுக்கு நல்ல அழகை உண்டுபண்ணும். அவற்றைக் கண்ட வர்கள் அவனிடத்து நட்புள்ளவர்களாவர்.

 

ஆதிநாதன்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஜனவரி ௴

 

 

No comments:

Post a Comment