Tuesday, September 1, 2020

 

சோம்பேறித்தனமும் உழைப்பும்

 

 மனிதனாகப் பிறந்த எல்லோரும் நெற்றிவியர்வை நிலத்தில் விழ பிரயாசைப்பட்டே ஜீவனஞ் செய்ய வேண்டும். நமது உணவுக்கும் இன்னு மிதர சௌகரியங்களுக்கும் வேண்டியவைகளை யெல்லாம் கடவுள் உண்டாக்கியிருக்கிறார். ஆனால் நாம் வேலை செய்யாவிட்டால் அவைகளை யடைய முடியாது. தானியங்களை விதைத்துத்தான் அறுவடை செய்யவேண்டும். உலோகங்களைப் பூமியிலுள்ள சுரங்கங்களிலிருந்து வெட்டி யெடுத்துத்தான் நமக்கு வேண்டிய சாமான்களைச் செய்து கொள்ள வேண்டும். உரோமம் பஞ்சு முதலியவைகளை நூற்றுத்தான் பிறகு நெய்யவேண்டும். ஒவ்வொருவரும் வேலை செய்யாமல் சும்மாவிருந்தால் நமக்குக் கட்டிக்கொள்ள உடைகள் கிடைக்கா, பசிக்கு ஒரு விதமான ஆகாரமுங் கிடைக்காது, வசிக்க வீடுங்கிடைக்காது. ஆகையினால் நாம் வேலை செய்யும் பொழுது ஒருவிதமான ஆசையும், செய்தான பிறகு திருப்தியும் சந்தோஷமும் உண்டாகும்படியாக கடவுள் செய்திருக்கிறார். ஒரு வேலையு மில்லாமல் வெட்டியாய் உட்கார்ந்திருப்பதைப் போல வேறொன்றும் நமக்கு விசாரத்தையும் அதிருப்தியையுங் கொடுக்கக் கூடியது இல்லை.

 

சாதாரணமாய் நாம் தினந்தோறும் பார்க்கிற ஒவ்வொரு சாமானும் உழைப்பினாலேயே வந்திருக்கிறது; யாராவது நமக்காக வேலை செய்திருக்கவேண்டும். இல்லாவிடில் அந்தச் சாமான்களை நாமடைய முடியாது. காகிதமும், பேனா, மசி முதலிய எழுதுவதற்குபயோகமாயுள்ள கருவிகளுங்கூட மனிதர்கள் கஷ்டப்பட்டதனாலேயே கிடைத்திருக்கின்றன. மானிடராகப் பிறந்த நாம் ஒரு கூட்டமாக வசித்து வருகிறோம். நம்மில் ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்துவர வேண்டுமென்று நாம் நம்முள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறாக நாம் ஒருவருக்கொருவர் வேண்டும் பொழுது உகவுகின்றோம். ஜனங்கள் நாகரீகமடையவே அவர்களுக்குத் தேவையான சாமான்களும் அதிகமாயின்; ஆனால் ஒருவனே வேலை செய்து அவனுக்குத் தேவையான எல்லாச் சாமான்களையும் சம்பாதித்துக் கொள்ளுதல் முடியாத காரிய மாயிற்று, ஆகையினால் எல்லாருமாகச் சேர்ந்து அவரவர்களால் முடிந்த வேலையைச் செய்து ஒருவருக்கொருவ ருதவி வந்தனர். இம்மாதிரியாக வியவசாயிகள் நிலத்தை உழுது விதை தெளித்து தானியங்கள் விளைந்தவுடன் அறுவடை செய்து நமது ஆகாரத்திற்குக் கொடுக்கிறார்கள். தவிர, சேணியர் நமக்கு வேண்டிய ஆடைகளை நெய்து கொடுத்தும், கொத்தர் நமது வீடுகளைக் கட்டிக்கொடுத்தும், தச்சர் மேஜை, நாற்காலி முதலிய சாமான்களைச் செய்து கொடுத்தும், வண்ணான் துணிகளைச் சுத்தமாய் வெளுத்துக் கொடுத்தும், உபாத்தியாயர் நமது சிறுவர்களுக்குப் பாடஞ் சொல்லிக்கொடுத்தும், போலீசார் நமது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொடுத்தும், நியாயாதிபதி நமது வழக்குகளைத் தீர்த்துக்கொடுத்தும், வைத்தியர் நமது தேகஸ்திதி கெடாமல் பாதுகாத்தும் இவ்வாறாக இன்னும் பல வகுப்பினர் பல காரியங்களைச் செய்து கொடுத்தும் உதவுகின்றனர். நாமும் மனித வர்க்கத்தினர்க ளாகையினால் நம்மைச் சேர்ந்த கூட்டத்தினர்களுக்கு நம்மா லியன்ற மட்டும் நாமும் வேலை செய்து உதவி வர வேண்டும்.

 

இவ்வுலகத்தில் பொதுவாகப் பிறர் கஷ்டப்பட்டு வேலை செய்த சாமான்களை வைத்துக்கொண்டு ஒருவன் தான் ஒரு வேலையுஞ் செய்யாமல் சுகமாகக் காலங்கழிப்பதென்பது கூடாது. ஒருவன் வியாதியாயிருந்தாலுஞ் சரி, அல்லது அவனது சரீரத்திலுள்ள அவயவங்கள் பின்னப்பட்டிருந்தாலுஞ்சரி, அவன் வேலை செய்யாதிருந்தால் அவனைச் சேர்ந்தவர்கள் அவனைக் கோபித்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் தேக சௌக்கியமுள்ள ஒருவன் சோம்பேறியாயிருந்தால் உலகம் சம்மதியாது. இத்துடன் கூட அவனது சோம்பேறித்தனமே அவனுக்குத் தண்டனை விதிக்கும். சோம்பேறியாயிருந்தால் மனம் துருப்பிடித்துப்போம். ஆனால் ஒருவன் சதா உழைத்துக்கொண்டே யிருப்பானாயின் அவன் மனம் மேன்மேலும் விருத்தியடையும். நாம் எப்பொழுதும் உபயோகப்படக்கூடிய வேலையேதேனு மொன்றைச் செய்து கொண்டிருக்க வேண்டும் இல்லாவிடில் சோம்பேறியா யிருக்கும் நம்மைச் சைத்தான் பிடித்து கொடிய பல விஷயங்களைச் செய்யுமாறு நம்மைத் தூண்டும். நாம் ஒரு வேலையு மில்லாமற் சும்மா விருந்தால் கொடிய எண்ணங்கள் பல நமது மனத்திலுதிக்கும். நமது மனமானது சதா வேலை செய்துகொண்டேயிருக்கிறது. நாம் தூங்கும்பொழுது கூட நமது மனம் சும்மாவிருப்பதில்லை. நாம் நல்ல வேலைகளைச் செய்து நமது மனதில் நல்ல எண்ணங்களுக்கும் வண்ணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் கெட்ட எண்ணங்கள் பல உதித்து நம்மைக் கெட்ட வழியில் திருப்பு மென்பதிற் சந்தேகமில்லை. சோம்பேறித்தனமுள்ள ஒருவன் இவ்வாறாகக் கெட்ட எண்ணங்களால் கவரப்பட்டுத் தன்னாயுள் முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே யிருப்பான்.

 

சுறுசுறுப்பா யிருக்கும் தன்மையே நல்ல அதிட்டத்திற்குத் தாயார். உழைப்பாளிக்குக் கடவுள் சகல சம்பத்தையுங் கொடுத்துதவுகிறார். இவ்வுலகிலுள்ள ஜனங்களில் எத்தேசத்தினர் மிகுதியாக உழைத்துப் பாடுபடுகின்றனரோ அத்தேசத்தினரே பணக்காரராயும் அதிகாரமுடையவராயு மிருக்கின்றனர். இங்கிலாந்து, பிரெஞ்சு. ஹாலண்டு, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா முதலிய தேசங்களிலுள்ள ஜனங்கள் மிகுதியாக உழைத்துச் சம்பாதித்தே முன்னுக்கு வந்திருக்கின்றனர். இந்தியாவிலுள்ள ஐனங்கள் பயிர்த்தொழில் செய்வதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இங்கிலாந்திலுள்ள ஜனங்கள் செய்வதில்லை. அப்படி யிருந்தும் அவர்கள் இந்தியர்களைக் காட்டிலும் நூறு மடங்கு பணக்காரர்களா யிருக்கிறார்கள்.

 

இந்தியாவைப்போல் பயிரிடுவதற்குத் தகுதியான தேசம் இப்பூலோகத்தில் வேறெங்குங் கிடையாது கடவுள் தகுந்த எல்லா வசதியு மேற்படுத்தி யிருக்கிறார்; அப்படி யிருந்தும் கேவலஸ்திதியி லிருந்த ஐரோப்பியர்கள் நம்மைவிடப் பன்மடங்கு பணக்காரர்களா யிருப்பது ஆச்சரியமாகவே யிருக்கிறது. ஏன்? இந்தியாகள் ஐரோப்பியர்களைப்போல் தேகசிரமப்பட்டு வேலை செய்வதில்லை. நல்ல அதிட்டமும் கெட்ட அதிட்டமும் நம்மாலேதா னேற்படுகின்றன. நல்வாழ்வு முழுதும் நம்முடைய உழைப்பினாலேயே கிடைக்கிறது நாம் ஏழைகளாக விருந்தாலாவது அல்லது வேறு எந்த விதத்திலாவது நாம் கஷ்டப்படும்படியாக நேரிட்டால் நாமதற்காகக் கடவுளைப் பிரார்த்திக்கவேண்டும். ஏனென்றால் நாம் ஏழையாயிருந்தாலும் செல்வவந்தரா யிருந்தாலும் சோம்பேறியாயிராமல் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்.

 

பலர் மிகவும் ஏழைகளாக விருந்து பிறகு அவர்களுடைய உழைப்பினால் மிகுந்த பணக்காரர்களாகி உன்னத பதவியை யடைந்திருக்கிறார்கள். ஒரு மனிதன் சிறப்படைவதற்கு உழைப்பும் அழிந்து போவதற்கு சோம்பேறித்தனமும் முக்கிய காரணமா யிருக்கின்றன. ஆகையினால் நாமெல்லாரும் நன்றாகக் கஷ்டப்பட்டு வேலை செய்து வரவேண்டும்.


கே. யஸ். சுப்ரமண்யம். (முள்ளங்குடி.)

 

ஆனந்த போதினி – 1923 ௵ - நவம்பர் ௴

 

   

 

No comments:

Post a Comment