Tuesday, September 1, 2020

 

ஞான சிந்தனா சந்திரோதயம்

 

"உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர் அறுசுடர் அடிதொழுது எழு என் மனனே!"

 

அருளே திருவுருக்கொண்ட இறைவன் ஒருவனே, என்றுங் குன்றாத உயர்நலம் உடையவன் ஆவன். 'உயர்வற உயர் நல 'மாவது, தன்னைத் தவிர்த்த வேறு எல்லாவற்றிலும் எவ்வாற்றாலும் எய்தும் எல்லாப் பெருமைகளும் தனது உயர்வின் முன் செஞ்சுடர்க்கதிரவனின் பேரொளியில் இருக்கும் இடம் இடம் தெரியாமல் மறைந்து நிற்கும் நட்சத்திரங்களைப் போன்று சிறுமைப்படுமாறு, ஒப்பும் உயர்வும் அற்றுத் தனிப்பெருஞ் சிறப்புடையதாக விளங்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவனது உயர்வாகும். உலகத்தாரால் சிறப்புடையவைகளாக மதிக்கப்படும் செல்வம் நல்லுடல்வளம் செல்வாக்கு சிற்றின்பம் முதலியன எல்லாம், என்றேனும் ஒருநாள் அகன்று போய்விடும் தன்மையனவேயன்றி என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியன ஆகா. கடல் சூழ்ந்த இவ்வுலகம் முழுவதும் தனது தனி ஆணை ஆழி ஒன்றே செல்லும் வண்ணம் சிங்காசனத்தில் வீற்றிருந்து செருக்குற்றிருக்கும் சக்கரவர்த்தியுங்கூட, வெவ்விய ஊழ்வலியால் பசிப்பிணியின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் செங்கோல் ஏந்திய செங்கரங்களிலே ஓடு ஏந்தி வீடுதோறும் சென் நின்று அன்னம் இரந்து தன்னந்தனியனாய்த் தளர்ந்த நடையனாய் தெருவூடே செல்ல நேர்ந்து, தன்னைத் துரத்திவரும் சிறு நாய்க்கு அஞ்சி ஒட்டையும் கீழே போட்டுவிட்டு 'கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்' ஓடிப் போகக்கூடிய கேவல நிலையை அடையவும் கூடும். "குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்”- என்பது கேவலம் வாய் வேதாந்த வார்த்தை யன்று; சிற்சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுலகத்தினரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து நின்று எண்ணிறந்த மன்னர்களைத் திகைக்கச் செய்த ஜர்மனி வேந்தர், இன்று எத்தகைய செல்வாக்கும் இல்லாதவராய் ஏழைத் தொழிலாளனைப் போலும் வருந்தி நிற்பதொன்றே அம்முதுமொழியின் உண்மையை நன்கு புலப்படுத்தும்.

 

ஆணவம் மிகுந்து எவரையும் மதியாது திரியச் செய்விக்கும் நல்லுடல் வளத்தைப் பெற்றிருப்போர், எதிர் பாராவாறு திடீரென பிணிவாய்ப்பட்டு உடலும் மனமும் ஒருங்கு வருந்த ஏனையோர் தயவை எதிர்பார்த்து ஏங்கிக் கிடப்பவராய் பாயில் படுக்கை கொண்டுவிட நேர்ந்து விடுவதும் சர்வ சாதாரணமான சம்பவமே யாகும். நோய் வாய்ப்பட்டு மருத்துவரின் உதவியை எதிர்பார்த்து அகங்கலங்கிக் கிடக்கும் வேளையில்' அகங்கார மன ஆட்டம் எங்கே? உற்சாகப் பந்தய ஓட்டம் எங்கே? குலவுந் தோழர் கூட்டம் எங்கே? நங்கையர் மீது நாட்டம் எங்கே? எவரையும் மதியாத செருக்கு எங்கே? கவலையை அறியாக் கருத்து எங்கே? சுவைத்துக் களித்த உணவுகள் எங்கே?
துவைத்து உடுத்திய உடைகள் எங்கே? இன்பப் பொருள்களாக கொண்டிருந்தவை எல்லாம் எங்கு ஒளிந்தனவோ? இவ்வண்ணம் நிலையில்லாத இன்பப் பொருள்களை நம்பி நிற்கும் உடல் வளத்தின் நலமும் ஒரு நலமாகுமோ?

 

எவ்வெப் பொருள்களை இவ்வுலகத்தினர் இன்பம் விளைவிக்கக்கூடிய நலமுடையனவாக நினைத்து மதிமயங்கி நிற்பார்களோ, அவ்வப்பொருள்கள் அனைத்தும் விரைவில் மறைந்துவிடக் கூடியனவே யல்லது, என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியன வன்று. ஆதலின் என்றென்றும் குறைவுறாத நல்லின்பத்தை நல்கக்கூடியன எவை? தம்மோடு ஒப்பனவும் தமக்கு மேற்பட்டனவும் எவையும் இல்லாத தனிப்பெருஞ் சிறப்புடையன எவை? ஒரு பிறப்பில் மட்டுமின்றி எப்பிறப்பிலும் தம்மை நம்பினோர்க்கு நலம் செய்யவல்லன எவை? அவையே 'உயர்வற உயர்நலம்' உடைய இன்னருள் வடிவினனாகிய இறைவனது இணையடிகள்!

 

மயக்கத்தைச் சிறப்பாக முப்பிரிவுகளாகப் பிரிக்கலாம். பயன் படுத்திக்கழித்த பழஞ்சட்டையை ஒத்து, அவ்வப்போது ஆத்மாவால் விலக்கப்பட்டு விடுவதும் பின்னர் கட்டையை ஒத்து எரிக்கப்படுவதும் ஆகிய புன் புலாலுடம்பை-பீளை ஒரு வழியாலும் சளி ஒரு வழியாலும் எச்சில் ஒரு வழியாலும் மலம் ஒரு வழியாலும் சலம் ஒரு வழியாலும் இழியும் ஊற்றைச் சரீரத்தை- ஆபாசக் கொட்டிலை-ஊன் பொதிந்த பீற்றல் துருத்தியை-சோறிடும் தோல் பையைப் பேணுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து, கேவலம் உலக சுகபோக அனுபவங்களுக்கு மட்டுமே அவ்வுடலைப் பயன்படுத்தக்கருதுவது ஒரு வகை மயக்கம். தன்னை வழிபட்டு உய்வதற்கு ஏற்றவாறு கடவுளால் கருணைகூர்ந்து அளிக்கப்பட்ட உடலை, புத்தியை மயக்கித் தம்வயப்படுத்தும் உலகப் பொய்யின்பப் பொருள்களை அனுபவிப்பதற்கு ஏற்றதாக எண்ணிச் சிற்றின்பச் சேற்றில் ஆழ்வது பெரும் பேதமையாகும். அவ்வாறு நிலையாப் பொருள்களில் நேயம் மிகுந்து என்றும் அழியா உண்மை இன்பத்தில் சற்றும் நாட்டமின்றி நாட்களைக் கழிப்போர், ஆற்றைக் கடக்கக்
கொடுத்த தோணியைக் கொண்டு கரையேற முயல்வதைவிட்டு நீரோட்டத்தின் வழியே செல்லவிட்டு ஆபத்துக்கு உட்படுவோரையே ஒத்திருப்பர். அத்தகையோர் பிறவிப் பேற்றைப் பெற்றிடா தொழிவர்.

 

அருள் திருமேனி கொண்டு ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் ஆண்டவனது திவ்யமங்கள விக்கிரகங்களை உண்மை யன்போடு சேவித்து ஆனந்திக்கவும் ஆன்ம உய்வுக்கேற்ற உள்ளத்தை உருக்கும் உத்தம அருள் நூல்களைஓதி உணர்ந்து உவக்கவும் இறைவனால் அளிக்கப்பெற்ற கண்களை, மனத்தூய்மைக்கு மாசு செய்யவல்ல சிற்றின்ப காட்சிகளைக் காண்பதிலும் வாழ்வில் பயன்படக்கூடிய சிறந்த நல்லுண்மைகளை உணர்த்தாது படிக்குங் காலத்தில் மட்டும் மகிழ்வூட்டிப் பின்னர் பயன்படா தொழியும் அற்ப விஷயங்களைக் கொண்ட புத்தகங்களைக் கேவலம் பொழுது போக்குக்காக மட்டும் வாசிப்பதிலும் பயன் படுத்துவது எவ்வளவு பேதைமை ! அன்பு கனிந்து ஒழுகும் அருட்பாக்களைப் பாடடவும் உத்தம விஷயங்களைக் குறித்து உரையாடவும் உதவப்பெற்ற வாயை, சிற்றின்பக் கிளர்ச்சியை விளைவிக்கும் இழிந்தபாக்களைப் பாடுவதிலும் அன்புநெறி கைவிட்டு அழுக்காறு மேற்கொண்டு பலரும் வெறுக்கக் கூடியவாறு புல்லுரைகளைப் பேசித் திரிவதிலும் பயன் படுத்துவது எவ்வளவு மதியீனம்! உயிர்க்கு உறுதி பயக்கக்கூடிய உண்மைப் பொருள்களைப் பெரியோரிடம் பன்முறையும் கேட்டுக் கேட்டு உய்வுறுமாறு இறைவனால் அளிக்கப்பெற்ற செவிகளை, கேவலம் ஊர் வம்பு மொழிகளை ஆர்வத்தோடு கேட்டு மகிழ்வதில் பயன் படுத்துவது எவ்வளவு அறியாமை!

 

ஆருயிர்கள் அனைத்தையும் காத்து ஆண்டருளும் தனிப்பெருந் தலைவனாகிய இறைவனுக்கு அடிமைப்பட்டு இன்புறக் கருதாமல், கேலவம் வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு தன் மதிப்பை முற்றும் மறந்து வெட்கத்தைத்துறந்து மற்றொரு மனிதனின் கீழ் குற்றேவல்கள் செய்து அடிமை வாழ்க்கை நடாத்த ஆர்வங்கொண்டு அலைவது அறிவின் மயர்வுப் பெருக்கே யன்றோ! எத்தகைய பிழைகளை இழைத்திருப்பினும் அவற்றை உணர்ந்து கொண்டு அவற்றிற்காக பெரிதும் இரங்கி மனம் உருகிக் கதறி அழுது நின்று மன்னித்தருளுமாறு வேண்டிக்கொண்டால், அப்பிழைகள் அனைத்தையும் பொறுத்து அருள் பொழியும் கருணையங்கடலாகிய கடவுள் ஒருவரே நமது எஜமானனாக இருக்க, கேவலம் நிலைபேறில்லாத செல்வாக்குடைய ஒரு மனிதனுக்கு அடிமைப்
படுத்திக் கொண்டு - அனைவர்க்கும் தனிப்பெருந் தலைவனாகிய ஆண்டவனைச் சிறிது நேரம் சிந்தித்துத் துதிப்பதற்கும் ஓய்வு வாய்க்காதவாறு- காலத்தைக் கழித்துக் காலன் பதி அடையவோ நாம் இப்பூமியில் பிறந்தது!

 

"யான் 'எனது' என்னும் செருக்கு அறுப்பான்-வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்”-எனும் பொய்யாமொழியின் உண்மையை பொருட் படுத்தாது, நிலைத்து நில்லா தன பலவற்றையும் தமக்கே உரிய சொந்த சொத்துகளாகக் கருதி இறுமாந்திருப்பது ஒரு பெரும் மயக்கமாகும். பிணி மூப்பு முதலியவற்றால் உடல்வலி குன்றிப் படுக்கையிற் கிடந்து பரிதவிப்போர்க்கு, 'எனது உடைமை' 'எனது அடிமை' என்று இறுமாந்து கூறிய தெல்லாம் மயர்வின் பயனே எனும் உண்மை நன்கு விளங்கிவிடக் கூடும். நம்முடைய பொருள்கள்' என்று பெரிதும் அபிமானித்திருப்பவை அனைத்தும் இம்மையில் மட்டும் பயன்படக் கூடுமேயல்லது, உயிர் உடலைத் துறந்து சென்ற மறுகணம் முதல் பயன் படுவனவாமோ? 'நம்முடைய மனைவி' 'நம்முடைய மைந்தன்' என்று பெரிதும் அபிமானித்திருந்தவர்கள் அனைவரும் இவ்வுலக வாழ்வில் மட்டும் ஒட்டி நிற்கக்கூடியவர்களே யல்லது, மறுமையில் சிறிதேனும் நமக்கு உதவி செய்யக் கூடியவர்கள் ஆவார்களோ?

 

இவ்வாறு உடலைப்பற்றிய மயர்வு, அடிமை செய்வதைப் பற்றிய மயர்வு, உரிமையைப்பற்றிய மயர்வு முதலிய மயர்வுகளெல்லாம் அறவே அகன்றொழியுமாறு - மெய்யன்பர்கட்கு மதிநலம் அருளக்கூடியவை எவை? 'நில்லாதவற்றை நிலையென்றுணரும் புல்லறி வாண்மை'யைப் போக்கி, மெய்ஞ்ஞானத்தையும் பகவத்பக்தியையும் உண்டாக்கி உயிர்களை உய்விக்கக் கூடியவை எவை? அவைதாம், மெய்யன்பர்க்கு 'மயர்வற மதிநலம்' அருளும் ஆண்டவனின் அடியிணைகள்!

 

("ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு"- என்பது அறமொழி. தொழிலில் தலைப்படுவோர்க்கு, பெரும் பகையாக நிற்பது அயர்வு ஆகும். பயமும் துக்கமும் சிறிதும் இன்றித் திடமாக வேலை செய். தன் குழந்தைகளைப்பற்றி பகவான் கவலை எடுத்துக் கொள்ளுவார். 'நம்முடைய கடமை எல்லாம் வேலை செய்து, பின் மடிவதே ! - நியாயமானதைச் செய்; பலம் அளிப்பதைச் செய்; தூய்மை தருவதைச் செய். உயர்ந்த நோக்கத்தைக்கைக்கொள். அமைதியுடன் உயிர் துற. பெரிய விஷயங்களைப் பேசுவதில் பயனில்லை. உலகம் உன்னை அங்கீகரிக்காமல் இருக்கலாம், அதைப்பற்றி, அக்கரை இல்லை. உன்னுடைய சீரிய குணமே உன்னை ஆனந்தமாகவும் சுகமாகவும் இருக்கச் செய்யும்" - இவை ஒரு பெரியாரின் அருள் மொழிகள். இம்மணிமொழிகள் அறிவுறுத்தும் அரும் பெருமை உண்மைகளை ஒவ்வொரு வரும் தத்தம் உள்ளத்தில் பசுமரத்தாணியெனப் பதியவைத்துக் கொள்ளவேண்டும். நல்வினைகட்குப் பல்வகைய இடை யூறுகள் எய்துவது இயல்பு, கருமத்தின் மேல் கண்ணாயிருப்போர், எத்தகைய இடுக்கண்கள் எதிர்ப்பட்டாலும் சித்தத்திற் சிறிதும் அயர்ச்சி கொள்ளார். கருமத்தின் இடையில் விளையும் தடையைக்கண்டு அயர்ச்சி கொண்டுவிட்டால், தொடங்கிய தொழிலில் வெற்றி பெறுவது அரிதாய் விடும். ஆதலால், இறைவனது இன்னருளைத் துணைகொண்ட வலியால், கருமத்தி னிடையில் விளையும் இடுக்கண்களைக் கண்டு கருத்துரங் குன்றாது - அயர்வை மேற்கொள்ளாது- என்றென்றும் தம் பணிகளில் இன்பம் காண்போரே இறைவனின் மெய்யன்பர்கள் ஆவர்.
அவ்வாறு அயர்வு அறியாது வாழ்வோரே, அந்தமில் பேரின்ப வீட்டில் இறைவனை இடைவிடாது இறைஞ்சி நிற்கும் இமையோர் ஆவர். அத்தகைய அமரர்களது அயர்வறியாத ஆனந்த மனநிலையை இத்தரணியில் வாழும் இறைவனது மெய்யன்பர்களுள் சிறந்தோரும் எய்துதல் கூடும். அவ்வண்ணம், விண்ணுலகில் தம்மைப் போற்றி நிற்கும் அயர்வறும் அமரர்களது ஆனந்த மனநிலையை, மண்ணுலகிலும் உண்மைப் பேரன் பர்கட்கு உறுவிக்கக் கூடியவை எவை? விண்ணுலக வாழ்வில் விளையும் ஆனந்தத்தைக் காட்டிலும் பன்மடங்கு சிறந்த பேரானந்தத்தை, தமது மெய்யன்பர்கட்கு எளிதில் எய்துவிக்கக் கூடியவை எவை? தம்மைச் சரண மடைந்தோர்க்கு உண்மை நெறிகளை விளக்கிச் காட்டி, அவர்களை உய்விக்கக் கூடியவை எவை? அவையே "அயர்வறும் அமரர்கள் அதிபதி" யின் அடியிணைகள்!

 

இவ்வண்ணம், ஒப்பும் உயர்வும் இல்லாத தனிப்பெருஞ் சிறப்புடையனவும், தம்மைச் சரணடைந்தோரது அக இருளை அகற்றி - மயக்கத்திற்கு இடமில்லாத மெய்யறிவு ஒளியைக் காட்டி - அயர்வை அறியாத ஆனந்த வாழ்வை மேற்கொள்ளச் செய்யும் ஆண்டவனது அடியிணைகள், எவ்வகைத் துயரையும் நீக்கிவிடக் கூடியவை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஆருயிர்களின் மேல், கொண்டுள்ள எல்லையில்லாத கைம்மாறற்ற தனிப்பெருங் கருணைப் பெருக்கினாலே, தனது மெய்யன்பர்கட்கு எய்தும் துயரங்களை தனக்கு எய்தியனவாகவே தன் திருவுள்ளத்தில் கொண்டு, அவர்களது துயரங்களை விரைந்து அகற்றுவதில் இறைவன் பெரிதும் முனைந்து நிற்பான்.
அருட்பெருஞ் சோதித் திருவினனாகிய ஆண்டவது அடியிணைகள், தமது ஞானப்பேரொளியைக் கண்டு ஆருயிர்கள் தம் பக்கலில் சரண்புகுந்து உய்வு பெற வேண்டி அருட்சுடர் பரப்பி நிற்பனவாகும். பால் குடிக்கப் புகும் பச்சிளங் குழவி தனது அன்னையின் அங்கங்கள் பலவற்றையும் விட்டுவிட்டு, தனது ஆர்வத்தைத் தீர்க்கக்கூடிய அன்னையின் தனங்களில் வாய் வைப்பதே போல் - இறைவனது இன்னருளை எய்த முயலும் மெய்யன்பர்கள், அவனது 'துயாறு சுடாடிக'ளையே தஞ்சமாக அடைவார்கள். ஆதலால், மனிதப் பிறவி வாய்க்கப் பெற்றதன் சீரிய பேற்றைப் பெற்று உய்யவேண்டுமாயின்- ஒப்புயர்வற்ற தனிப்பெரும் பெருமை பெற்ற நற்றுணையைப்பற்ற நாட்டம்
கொள்வோமாயின் - மயக்கம் நீங்கி உண்மை தெளிந்து உய்வுற வேண்டுமாயின் - அயர்வை அறியாத ஆனந்த வாழ்வைப் பெற்று மண்ணுலகிலேயே விண்ணுலக இன்பத்தை நுகர வேண்டுமாயின் - பல்வகைத் துயரங்களும் பறந்தொழிய வேண்டுமாயின், அருட்பெருஞ்சோதித் தனிப்பெருங்கருணையாளனாகிய ஆண்டவனது திருவடித் தாமரைகளிலே அடைக்கலம் புகுந்து உய்யக் கடவோம்! பொய்யின்பப் பொருள்களிலே மையல் கொண்டு அலையும் மனக்குரங்கை, அருளே உருவாய்க் கொண்ட ஆண்டவனது திருவடிகளைத் தினந்தோறும் உண்மை யன்போடு தொழுது பேரின்பத்தை நுகரக்கூடிய மானஸராஜ ஹம்ஸமாக மாற்றக் கடவோம்! மெய்ஞ்ஞான அறிவு ஒளியாகிய ஆனந்த சந்திரிகையிலே பேரின்பம் துய்க்கக் கடவோம்! நமது நன்முயற்சிக்கு இன்னருள் வடிவினனாய இறைவன் திரு அருள் துணை செய்வதாக!

 

ஆனந்த போதினி – 1932 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment