Saturday, September 5, 2020

 

பொது ஜன ஊழியம்

 

தமக்கென வாழாமல் மற்றவர்களுக்காக ஊழியஞ் செய்யும் சுயநலமற்ற மக்கள் எல்லாத் தேசங்களிலும் எக்காலத்திலும் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். தான் மாத்திரம் வாழ வேண்டும் என்று பிறர் நலம் பேணாது வாழ்பவன் என்றைக் கேனும் வீழ்ச்சியுற்றே தீருவான். இவன் பிறரை அடிமைப்படுத்தவே முயல்வான்; செல்வாக்கிருக்கும் வரை வாழ்க்கை ஒருவாறு நடக்கும். இவன் மற்றவருடைய அநுதாபத்தையும் அன்பையும் பெறாமையால் நாளாவட்டத்தில் பல தொல்லைகட் குட்படுவான். மனிதசமூகம் பரஸ்பர ஒத்துழைப்பினாலேயே வாழவேண்டி யிருக்கிறது. நமது சாஸ்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை மக்கட்கு விதித்திருக்கின்றன. அவற்றுள் முதலிலிருப்பது அறம். அறம் என்பது விதி விலக்குகளை உணர்த்துமாயினும் உலகவழக்கிற் பெரும்பாலும் ஈகைப் பொருளிலேயே வருகின்றது. சமூகம் அல்லது தேசம் முன்னேற்றமடைந்து யாருக்கும் எந்தக் குறைவும் இருக்கக்கூடாது என்பதற்காகவே ஈகை பிரதானமாக வற்புறுத்தப்படுகிறது. "தேசத்தோ டொத்துவாழ்' என்ற அமுதமொழி எத்தகைய விரிவான நோக்கத்தோடு உபதேசிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சிந்தியுங்கள்? இக்காலத்தில் தன்னலமற்ற பொதுஜன ஊழியர் நமது நாட்டிற்கு மிகத் தேவை. இது கீழ்நாட்டு நாகரிகம் மழுங்கி மேனாட்டு நாகரிகவெள்ளம் உரமாகப் பாயும் சமயம். நமது சாஸ்திரநுட்பங்களும் ஒழுக்கங்களும் விளக்குவாரின்மையால் மங்கிக் கிடக்கின்றன. இவற்றைப் பொதுஜனங்கட்கு விளக்கக் கடமைப்பட்டவர்களான மடாதிபதிகளும் பிறரும் வாளா உறங்குகின்றனர். மடங்களுக்கு மானியமாக விடப்பட்ட பொருள்கள் பொது ஜனங்களுக்குச் சொந்தம். இவை கல்வி வளர்ச்சிக்கும் அறிவுவளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் பயன்படுமாறு விடப்பட்டன. ஆனால் அப்பொதுப் பொருள்கள் கோர்ட்டுகளுக்கும் களியாட்டங்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. மேனாட்டு கிறிஸ்தவ பாதிரிகளைப் பாருங்கள். உலகத்தில் அவர்கள் இல்லாத இடமேயில்லை. உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் மற்றவர்களுக்கே அர்ப்பணம் செய்து விடுகின்றனர். இந்தியாவில் அவர்களுடைய வேலை, எத்தகைய பலன் கொடுத்திருக்கிறது என்பது தெரிந்தும் நம்மனோர்க்கு இன்னும் அறிவு ஏற்படவில்லை. எத்தனை பள்ளிக்கூடங்கள்! எத்தனை வைத்தியசாலைகள்!! ஏழைகளின் அறிவு வளர்ச்சிக்கு எவ்வளவு பொருள் தருமம்!!! எங்கேயோ பிறந்து வளர்ந்து வந்தவர்கள் இங்கே வந்து இவ்வளவு வேலை செய்கிறார்கள். ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கானவர்களைத் தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். நமது சைவ வைணவ மடாதிபதிகளுக்கு இவ்வுணர்ச்சி ஒரு சிறி தாவ துண்டா? "இது கலிகாலம். உலகம் இப்படித்தானிருக்கும். நாம் என்ன செய்யலாம். இக்காலத்தில் ஒன்றுஞ் செய்ய முடியாதென்றுசாஸ்திரங்களே சொல்லுகின்றன' என்று சொல்லிக் காலங்கழிக்கிறார்கள். தங்கள் கடமையாகிய தொண்டு அல்லது ஊழியத்தைஒரு சிறிதும் லட்சியம் செய்கின்றார்களில்லை. தன்னலங் கருதா ஊழியம் எங்கும் பரவினால் உலகில் கொடுமையேது? நடுக்கமேது? கவலையேது? நாம் பிறர்க்கு ஊழியஞ் செய்யவே படைக்கப்பட்டோம் என்று ஒவ்வொருவரும் நினைத்துத் தங்கடனாற்றினால் உலகந் தெய்வலோகமாய் விடாதா? எனக் கேட்கின்றோம்.

 

முற்காலத்தில் தோன்றிய நமது சமயப் பெரியார் பலரும் இந்த ஊழியத்தையே அறிவுறுத்திச் சென்றனர். எந்த மதத்தை எடுத்து ஆய்ந்தாலும் அதன் கண் தன்னலமறுப்பும் பிற நலச்சேவையும் பேசப்படுதல் காணலாம். மதங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவைகளின் மத்தியில் ஊழியம் என்னும் ஒருபெ ருஞ் சமரசம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊழியத்தை மனிதன் மறந்தநாள் முதல் கொண்டு தான் இந்தியா துக்கத்திற்குட்படலாயிற்று. நம் முன்னோர்கள் மனித சமூகவளர்ச்சிக்கும் அமைதிக்கும் ஊழியத்தைத் தமக்குரிய மதமாகக் கொண்டனர். வருணாசிரம் தருமப்பாகுபாடு ஊழியங்கருதி அமைக்கப்பட்உது என்று சிலர் வாதிக்கிறார்கள். ஆனால் அது விவகாரத்திற்குரிய விஷயமாகையால் அதைப் பற்றி இங்கே ஆராய இடமில்லை. ஒருவருக்கொருவர் ஊழியராகும் தெய்வீக மதம் தொலைந்து ஒருவருக்கொருவர் தலைவராக வேண்டுமென்னும் ஜடத்தன்மை வாய்ந்தமதம் வளர்ந்து வருகின்றது. ஊழியத்தை மறக்கவும் தலைமையை நினைக்கவும் தூண்டும் நிலைமை எங்கணும் பரவிவருகிறது. இந்தமதத்திற்குப் பொருள் தான் பிரதானமானது. இந்தக் காலத்தில் பொதுஜன ஊழியம் என்றால் அது ஒரு பொருள் சம்பாதிக்கும் சூழ்ச்சி என்ற எண்ணம் எல்லாருடைய உள்ளத்திலும் பதிந்திருக்கிறது. இந்த எண்ணத்திற்குக் காரணங்களும் இல்லாமலில்லை. பொதுஜன சேவையின் பேரால் வசூலிக்கப்பட்ட அளவில்லாத திரவியம் வீண்விரயம் செய்யப்பட்டிருக்கிறது. விளம்பரப்படுத்தப்பட்ட பொதுநலப் பலன் காரியத்தில் ஒன்றுமில்லை.
 

பொதுஜன ஊழியத்திற்கு தியாகம் இன்றியமையாதது. தியாகபுத்தியில்லா விட்டால் பொதுஜன ஊழியம் சூழ்ச்சியாகவே கருதப்படும். பொதுஜன ஊழியர்கள் தங்கள் உண்மை ஊழியத்தால் ஜனங்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்க வேண்டும். இராஜீய சம்பந்தமான பொதுஜன ஊழியமே சிலருக்கு உற்சாகத்தை அளிக்கிறது. சாதாரண பொது ஜனங்களின் கல்வி வளர்ச்சி அறிவு வளர்ச்சிகளுக்கான ஊழியத்தில் யாரும் அவ்வளவாக சிரத்தை காட்டுவதில்லை. நமது நாட்டு நிலைமையைப் பார்க்குமிடத்து இது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். சமூக முன்னேற்றம் தேசமுன்னேற்றத்திற்கான எல்லாத் துறைகளிலும் ஊழியம் புரிய வேண்டும். உண்டிக்கும் உடைக்கும் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கட்கு அவற்றைப் பெறும் மார்க்கத்தையும் சௌகரியத்தையும் ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டும் தொண்டு ஊழியமாகாதா?'' அந்நிய அரசாங்கம் போய் விட வேண்டும், நாமே நம்மை ஆள வேண்டும்'' என்று அசந்தர்ப்பமாகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவது தானா உண்மை ஊழியம்? என்ற விஷயத்தை நேயர்கள் சிந்திப்பாராக.

 

தற்காலம் நமது தேசத்தில் கிராமாந்தரங்களில் செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருக்கின்றன. கிராமாந்தர மக்கள் தற்கால உலக விவகாரங்களையே அறிந்து கொள்ள முடியாத நிலைமையிலிருக்கின்றனர். 100 - க்கு 99 கிராமங்களுக்கு இன்னும் வர்த்தமானப் பத்திரிகைகளே எட்டவில்லை. ஆரம்பக்கல்வியும் சரியான பலனைத் தந்து வரவில்லை. இந்த ஈன ஸ்திதியில் தேசமுன்னேற்றம் தேச விடுதலை எங்கேயிருந்து குதித்து விடும்? ஆனால் தேசத்துக்காகப் பாடுபடுவோர் கூட்டத்துக்குக் குறைவில்லை.

"சாதாரண மக்களுடைய உள்ளங்களைப் பண்படுத்தத் தக்க தொண்டர்கள் தற்காலம் கிளம்ப வேண்டும். இவர்கள் பிற நாட்டு முன்னேற்ற வரலாறுகளைத் தெரிந்தவர்களா யிருக்கவேண்டும். இவர்கள் தங்கட்கென ஒரு சங்கங்கண்டு அதன் ஆதரவில் கட்டுப் பாடாகக் கொஞ்சக் காலம் கிராமாந்தரங்களில் வேலை செய்தால் கூடிய விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். சென்னையில் இளைஞர்களின் பேரால் இரண்டொரு சங்கங்கள் இருக்கின்றன. அவை நாம் குறிப்பிட்ட முறையில் தொண்டாற்றுவதாகச் சொல்லக் கூடவில்லை; பொருள் முட்டினாலோ, சிரத்தைக் குறைவினாலோ தங்களுக்கு வேண்டிய யாரோ ஒவ்வொருவருக்குப் பாராட்டுதலோ வரவேற்போ அளித்துவிட்டு மறுபடியும் உறங்க ஆரம்பித்து விடுகின்றன. இந்தச் சங்கத்தாரைக் குறை கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் எதையும் சொல்லத் துணியவில்லை; இவர்கள் ஏதேனும் உருவான ஊழியம் ஜனங்களுக்குச் செய்யவேண்டு மென்றே ஆசைப்படுகிறோம். இச்சங்கத்தார் விரைவில் ஜில்லா, தாலூகா, கிராம சங்கங்களை ஏற்படுத்தத் தீவிர முயற்சி எடுக்க வேண்டுமாய் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்போது வேலையில்லாத் திண்டாட்டம் எங்கும் அதிகமாய்ப் பரவி வருகிறது. படித்த பட்டதாரிகள் என்ன செய்வதென்றறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். 20, 30 ரூபாசம்பளத்தில் ஏதாவதொரு உத்தியோகம் கிடைக்காதா என்பதே இவர்கள் கவலை. என்ன செய்வார்கள் பாவம்! வேறு வேலை செய்து பிழைக்க இவர்கள் கற்ற கல்வி இடங் கொடுக்கிறதில்லை. சிறிது பூஸ்திதியுள்ள ஆங்கிலங் கற்றவர்கட்குத் தங்கள் சொந்த உழவுத் தொழிலை மேற்கொள்வதற்கும் முடிகிறதில்லை. இவர்கள் எல்லாரையும் ஒன்று கூட்டிக் கட்டுப்பாடாக இவர்களைத் தொண்டாற்றச் செய்யும் ஒரு இயக்கம் நமது நாட்டுக்குப் பெரும்பயன் விளைப்பதாகும். கிராம புனருத்தாரண நிபுணர்கள் இதை ஊன்றிச் சிந்திப்பாராக
 

ஆங்கிலங் கற்ற நமது வாலிபர் பிற தூண்டுதல் இல்லாமலே பொது ஜன ஊழியம் புரிய வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது முடியாது. ஏனென்றால் அவர்கள் கற்றுக் கொண்ட கல்வி இத்தகைய உணர்ச்சியைக் கிளப்பிவிடக் கூடியதாயில்லை. பட்டப்படிப்பு முடிந்தவுடன் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆங்காங்கு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்ற விதி சர்வகலாசாலைக் கல்வித் திட்டத்தில் இருக்க வேண்டும். பிரசார முறைகளைக் கல்வியின் ஒரு பகுதியாக அவர்கள் முன்னரே கற்றுக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். இந்த முறையைக் காரியத்தில் கொணர்ந்தால் சமூக முன்னேற்ற விஷயத்தில் ஆச்சரியமான பலனை மிகவிரைவில் அடையலா மென்பதிற் சந்தேகமில்லை.

 

இந்த முறையில் கல்வித் திட்டத்தில் விதி ஏற்படுத்துதல்தகுமா? சரியா? என்று பலர் கேட்கலாம். பலவிதத்திலும் இந்த விதி சரியான தென்றே வற்புறுத்துவோம். ஊழியமே சல்வியின் லட்சியமாகும். ஒவ்வொரு உயிரினிடத்தும் அன்பு செலுத்துதல் மனிதனுக்குரிய முதற்கடமை. நாம் குறிப்பிட்ட படி தொண்டு செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியைக் கிளப்பக்கூடிய கல்வியைக் காட்டிலும் சிறந்த படிப்பு எது இருக்க முடியும்? நிற்க, இன்னொருவகையிலும் பட்டதாரிகள் பொது ஜனங்களுக்கு ஊழியம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள். கல்லூரிகளும் கலாசாலைகளும் பொது ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்தாலேயே நடைபெறுகின்றன. பொது ஜனங்களின் பணமில்லா விட்டால் சர்வகலாசாலை ஏது? பி. ஏ., எம். ஏ. பட்டங்கள் எப்படி அடைய முடியும்? ஆகையால் கல்விக்குப் பொருள் கொடுத்து உதவி செய்த நன்றிக்காவது அவர்கள் நாட்டு மக்கட்குக் கைம்மாறு செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள் அல்லவா? தவிர,

 

கல்லூரிப் படிப்பு முடிந்து வெளியில் வருகின்றவர்கள் உலகியல் ஞானம் பெற வேண்டியவர்களாயிருக்கிறார்கள். நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று இவர்கள் சற்றிப் பார்க்க வேண்டும். அப்போது தான் ஜனங்களின் வாழ்க்கை நிலைமையையும் தங்கள் நிலைமையையும் இவர்கள் நன்கு உணர முடியும். நேரில் காணும் பல அநுபவங்கள் இவர்களுடைய பிற்கால வாழ்வுக்கு அநுகூலம் செய்வதாயிருக்கும். ஆதலால் இந்த வகையிலும் தங்கள் சொந்த நலங்கருதியேனும் இவர்கள் பொது ஜன ஊழியம் செய்ய வேண்டியவர்களே.

 

அரசினரும், பொது ஜனத்தலைவர்களும், கிராம் சீர்திருத்தநோக்கமுள்ளவர்களும் நாம் மேலே எடுத்துக்காட்டிய அபிப்பிராயங்களைக் கவனிப்பார்களாக.

 

நகரங்களில் மாத்திரம் மேடைகளில் நின்று ராஜீய விஷயங்களையோ பிறவற்றையோ ஊக்கத்தோடு பேசிவிடுவதால் எவ்வளவுபலன் விளைந்துவிடும்?

 

காங்கிரசும் பிற பொதுச் சபைகளும் இவ்வளவு காலம் வேலை செய்தும் கிராமாந்தர ஜனங்களுக்குப் பத்திரிகை படிக்கும் ஞானங்கூட ஏற்படுத்த முடியவில்லை. ஆதலால் உண்மையாகப் பொது ஜன ஊழியம் புரிய விரும்புவோர் வீணாகக் கழியும் ஆங்கிலப் பட்டதாரிகளின் சக்தியை ஒன்றாகத் திரட்டி நாட்டு முன்னேற்ற விஷயத்தில் பிரயோகிக்க முயற்சி செய்வாராக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - நவம்பர் ௴

 

 

No comments:

Post a Comment