Friday, September 4, 2020

பாரதி சித்திரம்-கண்னன் என் ஆண்டான் 

காலை வேளை. வட மதுரையம்பதியிலே செங்கோல் செலுத்தும் மன்னர் மன்னனாகிய கண்ணபிரான், தனது திருமாளிகை பின் தெருப்புறத்திலுள்ள திண்ணையின்மீது கம்பீரமாக அமர்ந் தகொண்டிருக்கிறான். அப்பெருமா னெதரில சற்று தூரத்தில், முழங்காலளவு சிறுதுண்டொன்றை இடையில் உடுத்தி வலது கையில் நீண்டதொரு தடியைப் பிடித்துக்கொண்டு கரிய மேனியுடைய ஒருவன் மிகுந்த அடக்க ஒடுக்கத் துடன் கூடியவனாக நின்றுகொண் டிருக்கிறான். கண்ணபிரான் அவனைக் கருணை ததும்பும் கண்களுடன் நோக்கிய வண்ணமே, ''என்ன சமாசாரம்? எங்கு வந்தாய்?"- என்று அன்பு நிறைந்த குரலில் வினவுகிறார். அவ்வெளியவன் கண்ணபிரானை நோக்கிப் பின்வருமாறு பேசத் தொடங்குகிறான்: -


"தஞ்சம் உலகினில் எங்கணும் இன்றித்

தவித்துத் தடுமாறி

பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பாரம் உனக்கு ஆண்டே!
--ஆண்டோ பாரம் உனக்(கு) ஆண்டே!"


ஆண்டே! கும்பிடுகிறேன் சாமீ! இந்த உலகத்திலே, இது வரையில் நானும் எங்கெங்கேயோ திரிந்து அலுத்துவிட்டேன். என்னை கண்டவுடன் எல்லோரும் வெறுத்துத் துரத்துகிறார்களே
ன்றி, என்னிம் சிரிதேனும் மனம் இரங்கி என்னை ஆதரிக்கக் கூடியவர்கள் எவரையும் காணோம். ஐயனே! கெஞ்சிக் கும்பிட்டுக் கூத்தாடி நின்றாலும், என்னிடம் எவருமே அன்பு காட்ட மனம் இரங்கவில்லை, ஆண்டவனே! அதற்குப் பதிலாக அவர்கள் கூறிய கொடிய வசைமொழிகளைக் கேட்டுப் பெரிதும் தவித்து செய்வகையறியாது நெஞ்சம் பெரிதும் தடுமாறிக் கலக்கின்ற நான், முடிவில் உங்களது கீர்த்தியைக் கேள்வியுற்று இங்கு வந்து சேர்ந்தேன். ஆண்டே! ஆதரிப்பாரின்றி நிர்க்கதியாக நிற்கும் பஞ்சைப் பறையனாகிய நான், உங்களிடம் அடிமைத் தொழில் செய்து பிழைக்கலாமென்ற ஆவலினால் பெரிதும் தூண்டப்பட்டவனாய் உங்களிடம் அடைக்கலமாக வந்து நிற்கிறேன். சாமி! இனிமேல் இந்த ஏழைப் பறையனை ஆதரித்துக் காக்கும் கடமை உங்களுடையதே!

ஆண்டே! இதுவரையிலும் எனது வாழ்க்கையிலே நான் வறுமைப்பேயின் கொடுமையினால் அனுபவித்து வந்திருக்கும் கொடுந் துன்பங்களைக் கணக்கிட முடியாது. உள்ளத்தை வாட்டும் பலவகைப்பட்ட சவலைகளும் உடலைத் துன்புறுத்தும் பலதிறப்பட்ட நோய்களும் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே துன்புறுத்தும் வறுமைப்பேயின் கொடுஞ் செயல்களும் எக்காலத்திலும் என்னைப் பற்றிக்கொண்டு, உயிருடன் சித்திரவதை செய்துவருகின்றன. அதன் பயனாக, காலையில் தூக்கத்தினின்றும் விழித்தெழுந்தது முதல் இரவில் படுக்கைக்குப் போகும் வரையில், பலவகைப்பட்ட கொடுந்துன்பங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு எனது உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே துன்புறுத்துகின்றன. இந்த ஏழையின் மீது இரக்கங்கொண்டு, அத்துன்பங்களை யெல்லாம் தீர்த்து என்றும் குறையாத-என்றும் சலிக்காத-என்றும் நிலைத்து நிற்கக்கூடிய உண்மைச் சுகத்தை எனக்கு அருள் செய்ய வேண்டும். ஐயனே! தாங்கள் என்னிடம் கருணை கொண்டு நான் படும் கொடுந்துன்பங்களைத் தீர்த்தருளத் திருவுள்ளம் இரங்கியருள்வீர்களானால், தங்களது அருட்பெரும் புகழை வாயாரப் பாடி வாழ்த்தி கவலையை மறந்து களிக்கூத்தாடி, தாங்கள் விதிக்கும் ஆணை வழியே சிறிதும் தவறாமல் நடந்து கொள்வேன்.

 

ஆண்டே! பஞ்சைப் பறையன் புகழ்வதால் என்ன பயனென்று தாங்மனத்தில் நினைத்துக்கொண்டு விடாதீர்கள்! நாங்கள் எல்லோரும் சொற்ப உபகாரத்தைப் பேருபகாரமாக மதித்து மனத்தில் நன்றாகப் பதியவைத்துக்கொண்டு, என்றென்றும் செய்ந்நன்றி மறவாமல் சிறிதும் சலிப்பின்றி உழைக்கக்கூடியவர்க ளென்பதைத் தாங்கள் உறுதியாக நம்பலாம். தாங்கள் என்னை அடிமை கொண்டு ஆதரிப்பதாக வாக்களித்தால், தங்களது அருட்பெரும் புகழை எங்கள் சேரி முழுவதிலும் பறையடித்து முழக்கி, தங்களது அருட்பெருங் குணங்களை வாயார வாழ்த்திப் பாடி மகிழ்வேன்; காற்புறமும் கிடுகிடென்று அதிரும்படியாக பேரிகை அடித்துத் தங்களது திருகாமம் எங்கும் பரவும்படி முழக்கி ஆனந்திப்பேன். அஞ்ஞானத்தில் ஆழ்ந்து கிடக்கும் பேதைகளாகிய எனது சகோதரர்களுக்கும் தங்களது ஒப்புயர்வற்ற தனிப்பெருங் கருணையை நன்கு உணர்த்தி, அவர்களையும் தங்களுக்கே அடிமைப்படுத்திவைத்து ஆனந்திக்கும் தனிப்பெரும்பேற்றை எனக்கு வாய்க்கச் செய்தருள, தாங்கள் திருவுள்ளம் இரங்கியருள வேண்டும்.

 

ஆண்டே! சேரியிலும் வயல்களிலும் எங்கள் சாதியார் கூட்டங்கூட்டமாகக் கூடிப் பேசிக்கொண்டிருக்கும்போது என்னைக் காண்பார்களாயின், “அவன் போன சென்மத்திலே ரொம்பப் புண்ணியம் பண்ணியிருப்பான். அவன் கை மேலே ஓங்கிப் போயிடுச்சி. அவனுக்குப் படியளக்கிற ஆண்டை நம்ம ஆண்டமார் மாதிரி நெஞ்சிலே இரக்கமில்லாதவரா என்ன? கண்ணபிரானுக்கு வேலை செய்யற பண்ணையாளென்கிற சிறப்பு சாமான்யமா என்ன? அவன் பண்ண பாக்கியமே பாக்கியம்!" - என்று என்னைக் குறிப்பிட்டுச் சிறப்பாகப் பேசவேண்டுமென்னும் ஆசைமிகுதியினாலே, இப்பொழுது தங்களிடம் வந்து நிற்கிறேன். அப்படிப்பட்ட பாக்கியம் மாத்திரம் எனக்குக் கிடைத்துவிட்டால், அப்புறம் இந்த உலகத்திலே, எனக்கு வேறு என்ன வேண்டும்?

 

ஐயனே! ஆளைப் பார்த்தால் ஒல்லியாக இருக்கிறானே, இவனால் என்ன வேலை செய்யமுடியுமென்று எண்ணிவிடாதீர்கள்! உங்கள் கழனிகளிலே என்னைக் காவல் வைத்துப் பாருங்கள்; அப்பொழுது தெரியும் என் சாமர்த்தியம். இரவிலும் பகலிலும் சிறிதும் சலியாமல் கழனிகளைச் சுற்றிச் சுற்றி வந்து பயிரைத் தின்னவரும் பறவைகள் மாடுகள் முதலியவற்றை கழனிக்குள் நுழைய வொட்டாதபடி தடுத்து வெருட்டி, எவ்வளவு எச்சரிக்கையுடன் காவல் காப்பே னென்பதை, நீங்கள் கண்ணாரக் கண்டே தெரிந்து கொள்ளவேண்டும். பயிர்காக்கும் வேலையை எனக்குக் கொடுக்க உங்களுக்கு மனமில்லாவிட்டாலும், உங்களுக்கு மிகவும் பிரியமான பசுக்களை மேய்த்து வரும் வேலையையேனும் கொடுத்துப் பாருங்கள். அதற்கும் மனமில்லாவிட்டால், கழனிகளில் ஏர் உழுவது - களை பிடுங்குவது - தண்ணீர் பாய்ச்சுவது முதலிய வேலைகளையாவது கொடுத்துப் பாருங்கள். மற்றவர்களைக் காட்டிலும் நான் கழனிகளில் எவ்வளவு சிரத்தையுடனும் எவ்வளவு உற்சாகத்துடனும் பாடு படுவே னென்பதைக் கண்ணாரக் கண்டறிந்து கொண்ட பின்பு, நான் தாங்கள் கட்டளையிடும் வேலைகளைச் செம்மையாகச் செய்யத் தகுதி உடையவன் தானா என்பதைத் தெரிவியுங்கள். நிலங்களில் செய்யவேண்டிய வேலைகளை என்னிடம் ஒப்படைக்கத் தங்களுக்கு மனமில்லாவிட்டாலும், தங்கள் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டங்களைக் கொத்திப் பதப்படுத்தி காய்கறிச் செடிகளை வளர்க்கச் செய்வித்து, எனது கைத்திநமையையும் சலியாத உழைப்பையும் சோதனை செய்து பாருங்கள். அப்பொழுது தங்களுக்குத் தெரியும், நான் எப்படிப்பட்ட உழைப்பாள னென்னும் உண்மை! அது மட்டுமா! வானத்தைக் கவனித்துப் பார்த்தும் வேறு சில குறிகளைக் கவனித்தும் எப்பொழுது மழை வருமென்பதைக்கூட, நான் திட்டமாகத் தெரிந்து சொல்லிவிடுவேனே! அந்த வித்தையில் எனக்கு நீண்டகாலப் பழக்கம் உண்டு ஐயனே! எப்பொழுதாவது நான் சொல்லும் மழைக்குறி தப்பி விடுமானால், என்னை மரத்துடன் சேர்த்துக் கட்டி அடிக்கச் செய்யுங்கள்.

 

ஆண்டே! நான் ஒண்டி மனிதனல்ல; ஆண்டவனருளால், எனக்கு ஒரு மனைவியும் ஆறு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவாகள் எல்லோரும் என்னொருவனையே முற்றிலும் நம்பியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஒவ்வொரு நாளும் வெளியிற் சென்று பாடுபட்டுச் சம்பாதித்து வந்தால்தான், என் குடிசையில் அடுப்பு எரியும். ஒருநாளாவது நான் வேலை செய்யாமல் குடிசையிலேயே தங்கியிருந்துவிட்டால், நானும் என்னையே நம்பி நிற்கும் மற்றவர்களும் பட்டினி கிடந்து துடிக்கவேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை. ஆதலால், அவர்க ளெல்லோரும் ஒரு வேளையாவது வயிறாரக் கஞ்சி குடிக்கவேண்டுமானால், நான் ஒவ்வொரு நாளும் வெளியிற் சென்று எப்படியாவது பாடுபட்டுச் சம்பாதித்தாக வேண்டும். என்னைச் சேர்ந்த பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவதோடு மட்டும், என் மனம் திருப்தி அடைந்துவிடுவதில்லை. பரோபகாரம் செய்யாத ஒருவன் - அண்டை அயலாருக்குத் தன்னால் இயன்ற உபகாரத்தைச் செய்ய மனம் இரங்காத ஒருவன் - - இந்த உலகத்தில் உயிர் வாழ்வதில் என்ன பலன்? கேவலம் தெருவில் திரியும் நாயும் பனறியுங்கூட, தாமும் சாப்பிட்டுத் தங்களது குட்டிகளையும் காப்பாற்றுகின்றன. பகுத்தறிவிற் சிறந்த மனிதனாகப் பிறந்தும் பரோபகாரம் செய்யாமல் தன்னலம் ஒன்றிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பவன், மிருகத்தைக் காட்டிலும் இழிந்தவனல்லவா? ஆதலால், என்னை நம்பி நிற்கும் எனது பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவது மட்டுமன்றி, அண்டை அயலாருக்கும் என்னால் சாத்தியமான உபகாரங்களை நான் செய்தாக வேண்டும். இந்த எனது நோக்கம், தங்களது அன்புமிகுந்த உதவியினாலும் ஆசீர்வாதத்தினாலுமே நிறைவேறவேண்டியிருக்கிறது.

 

ஐயனே! பஞ்சைப் பறையன் என்னென்னமோ திட்டம் போடுகிறானே, நம்மிடமிருந்து தந்திரமாகப் பணம் பறிக்க முயல்கிறானோ என்று தங்களது திருவுள்ளத்திலே நினைத்துக்கொண்டு விடாதீர்கள்! பகல் முழுதும் வயலில் வேலை செய்து இரவில் குடிசையில் படுப்பவனாகிய எனக்கு, படாதபாடு படுத்திவைக்கும் பாழும் பணம் எதற்காக?


"தேவரீர்-
ஆதரித்தால் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள

காதல் பெரி(து) எனக்கு; காசு பெரிதில்லை!''


படாத பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து வைத்துப் பார்த்து மகிழவேண்டுமென்னும் பைத்தியம் எனக்குச் சிறிதும் இல்லை; கான் எப்பொழுதும் அப்படிப்பட்ட மனக்கோட்டைகள் கட்டியதில்லை. பசித்தபோது மற்றவர்களிடம் சென்று நின்று பல்லைக் காட்டிப் பிச்சை கேட்டு வாங்கி வயிறுவளர்க்க என் மனம் சிறிதும் துணியாது; பிச்சை வாங்கிப் பிழைப்பதைவிட உயிரை விட்டுவிடுவது மேலென்பது எனது எண்ணம்., இந்த பரந்த உலகத்திலே, எனக்கு வேண்டியவை எவை? பசித்தபோது, அப்பசி அடங்க நாழிச்சோறு; மானத்தை மறைத்துக் காப்பாற்ற, ஒரு நாலு முழத் துணி. தங்களையே தஞ்சமடைந்து, தாங்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்யச் சித்தமாக நிற்கும் இந்த பஞ்சைப் பறையனுக்கு, அவ்விரண்டும் கொடுத்துதவுவது தங்களுக்கு ஒரு பொருட்டா என்ன? ஆனால், ஐயனே! வருஷத்தில் இருமுறை தாங்கள் எனக்குத் துணி எடுத்துக் கொடுக்கும் போது, என்னை நம்பிதிற்கும் எனது பெண்டு பிள்ளைகளுக்காக - தர்மத்திற்காக நாலைந்து துணிகள் வாங்கித் தரவும் தாங்கள் திருவுள்ளம் இரங்கியருளவேண்டும். தாங்கள் வழங்கிய தானத்தை, ஒவ்வொருநாளும் அவர்கள் மனம் குளிரப் புகழ்ந்து வாயார வாழ்த்தவேண்டும்,

 

ஆண்டவனே! ஒன்பது வாசல்களுடைய எளிய குடிசிலைப் போன்ற இவ்வுடலை, கோபம்-மோகம்-அகங்காரம் முதலிய பேய்கள் சுற்றிச் சுற்றி வந்து குதித்துக் கூத்தாடுகின்றனவே! அப்பேய்களினால் என் மனம் அனுபவிக்கும் கொடுந் துன்பத்தை, இன்னும் என்னால் எவ்வளவு காலம் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இம்மண்ணுலகில் எண்ணிறந்தவர்களைத் தாம் விரும்பிய வண்ணமெல்லாம் ஆட்டிவைத்து வரும் அக்கொடிய பேய்களின் சேஷ்டைகளை நினைக்கும் போதே, என் மனம் பெரிதும் குமுறுகிறதே! அவற்றின் அகங்காரத்தை அடக்கி ஆளக்கூடிய சக்தி, எளியவனாகிய எனக்கு உண்டோ? தாங்கள் மனம் இரங்கி மந்திரம் செய்து அவற்றின் துடுக்கடக்கி, என்னைச் சூழ்ந்து துன்புறுத்தும் எல்லாவகைப்பட்ட பகைகளையும் தொலைத்தருள வேண்டும். ஐயனே! எவருக்கும் அடங்காமல் திரிந்து கொண்டிருந்த மிகமிகக் கொடிய அரக்கர்கள் பலரை எளிதில் வதைத்தருளிய வீரநாயகனே! அடியேனிடம் தாங்கள் திருவுள்ளம் இரங்கினால், அக்கொடிய பேய்கள் என்னை நெருங்கத் துணியுமோ?


''பேயும் பிசாசும் திருடரும் என்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயும் கையும் கட்டி அஞ்சி நடக்க
வழி செய்யவேண்டும் ஐயே! - தொல்லை தீரும்
வழி செய்ய வேண்டும் ஐயே!"

 

ஆண்டே! கொடிய தீவினைப் பயனாக இம்மண்ணுலகில் அமைதி இழந்து பலவிடங்களிலும் திரிந்துகொண்டிருக்கும் பாபாத்மாக்களாகிய பேய்களும் பிசாசுகளும், பாவத்திற்குச் சிறிதும் பயப்படாமல் திருட்டுத் தொழிலையே தங்களது ஜீவனோபாடமாகக் கொண்டு இரவில் திரியும் திருடர்களும், என் பெயரைக கேட்டவளவிலேயே பெரிதும் அஞ்சி நடுங்கி வாய்பொத்திக் கைகட்டி நான் ஏவியவாறு நடக்கும்படி தாங்கள் தான் ஒரு வழி செய்ய வேண்டும். அந்த கொடிய பாபாத்மாக்களையும் சீர்திருத்தி நல்வழியில் திருப்பி நடக்கச் செய்விக்கக்கூடிய சக்தியை, தாங்கள் தான் எனக்கு அளித்தருள வேண்டும். அவர்களால் இவ்வுலகத்தினருக்கு ஏற்படும் தொல்லைகளை இனியேனும் ஒழித்தருளத் தாங்கள் தான் திருவுள்ளம் இரங்கியருள வேண்டும். ஆணவம் மிகுந்த கொடியவர்களைத் தண்டித்து அன்பு மிகுந்த மெய்யடியவர்களைக் காத்தருள்வதே தங்களது கடமை என்பதை, பஞ்சைப் பறையனாகிய அடியேன் தங்களுக்கு ஞாபகப்படுத்தவும் வேண்டுமோ? தாங்கள் மட்டும் திருவுள்ளம் கொண்டுவிட்டால், இப்பாரதநாடு கூடிய விரைவில் தனது பழம் பெருஞ்சிறப்பை மீண்டும் அடையக்கூடு மென்பதில் ஐயமும் உண்டோ?

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஜுலை ௴

 



 

No comments:

Post a Comment