Friday, September 4, 2020

பாரதி சித்திரம்-கண்ணம்மா எனது குலதெய்வம் 

 

அன்பர்களே! இப்பொழுது, முத்திதரும் புண்ணிய தலங்கள் ஏழில் ஒன்றாகிய துவாரகாபுரிக்குச் செல்லவேண்டும். தமிழ் நாட்டிலிருந்து துவாரகைக்குப் போய்ச்சேரப் போதிய பொருள் இல்லையே யென்று எவரும் சிறிதும் கவலையுற வேண்டுவதில்லை. மணிக்கு அறுபது மைல் வேகத்தில் செல்லக்கூடிய பஞ்சாப் மெயிலைக் காட்டிலும் பன்மடங்கு வேகமாகப் போகக்கூடிய ஞானரதம் ஒன்று, எப்பொழுதும் நம்மை ஏற்றிச் செல்லச் சித்தமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. அது தான், தேசீயக் கவிச்சக்கரவர்த்தியாகிய பாரதியாரின் கவிதைத் திருத்தேர். ஆதலின், பணச் செலவைக் குறித்த பயம் சிறிது மில்லாமல் துவாரகைக்குப் போய் வருவோம் வாருங்கள்!

 

நீலத் திரைக்கடல் ஓரத்திலே, அழகிய உயர்ந்த கட்டிடங்கள் நிறைந்து காணப்படும் இதுவே நவீன துவாரகாபுரி. எங்கு நோக்கினும் கண்ணுக்கினிய அழகிய காட்சிகள்! எங்கணும் செவிக்கினிய மங்கள ஒலி முழக்கம்! இத்திரு நகரத்திலே, செல்வத்திறைவியாகிய திருமகளும் கல்விக் கிறைவியாகிய கலைமகளும் சிறிதும் பிணக்கின்றிக் கைகள் கோத்துக் கொண்டு களிநடம் புரிகிறார்கள் போலும்! அதோ பாருங்கள், உச்சியில் வீர-சக்கரம் அமைந்திருக்கும் அந்த உன்னத மாளிகைதான் கண்ணபிரானது திருமாளிகை. வாருங்கள், முதன் முதலில் கண்ணபிரானைக் கண்குளிரச் சேவித்துக் கையாரத் தொழுது வாயார வாழ்த்தி மகிழ்வோம்.

 

அதோ பாருங்கள், அந்த சபாமண்டபம் எவ்வளவு அற்புதமாக விளங்குகிறது! அம் மண்டபத்தின் நடுவிலமைந்துள்ள சீரிய சிங்காசனத்திலே, கம்பீரமாக வீற்றிருப்பது யார்? என்ன விந்தை இது? அப் பெண்மணி யார்? அப் பெண்மணியினெதிரில் கூப்பிய கைகளுடன் நின்று துதிக்கும் அந்த மனிதர் யார்? அவர் தமது தேசீய ச வியாசர் பாரதியாரைப் போலல்லவா காணப்படுகிறார்! ஆம், அவரேதான்! சந்தேகமில்லை; உஸ், முணு முணுக்காதீர்கள்! அவர் அப் பெண்மணியை நோக்கி என்னவென்று முறையிடுகிறா ரென்பதைக் கவனிப்போம்: -

 

"நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!''


- என்றல்லவா அவர் முறையிடுகிறார்! என்ன விந்தை இது? தனது மெய்யன்பர் எவ்வண்ணம் தன்னைப் பாவிக்கின்றனரோ அவ்வண்ணமே அவர்களுக்குக் காட்சி அளித்தருளும் அருள் வள்ளலாகிய கண்ணபிரானே இப்பொழுது 'கண்ணம்மா' எனும் திருநாமத்துடன் செக்கையில் செங்கோல் தாங்கி மோகனப் புன்னகை பூத்தொளிரும் மலர் முகத்துடன் கூடிய ஜகன்மாதாவாகக் காட்சியளிக்கிறார் போலும்! அருளே உருவாகிய அந்த செல்வரின்-இல்லை-செல்வியின் முன்பு, பாரதியார் என்னவென்று முறையிடுகிறா ரென்பதைக் கவனியுங்கள்: -


"பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று-
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!''

"கருணையே வடிவாகக் காட்சியளிக்கும் அன்னையே! உனது இன்னருட்படைப்பாகிய இப் பூவுலகிலே, நீ என்னை எதற்காகப் படைத்தாய்? கேவலம் -வயிற்றை வளர்ப்பதற்காக நெஞ்ச உறுதியை இழந்து - பல விடங்களிலும்  அலைந்து - தினந்தோறும் வயிற்றுப் பெருமானைப் பூசிப்பதிலேயே கவலைமிகுந்து - ஓய்வு வேளைகளில் பலவகைப்பட்ட வம்புரைகள் அளந்து - பலவகைப்பட்ட விவகாரங்களில் சிக்கி உழன்று - சுயநல மொன்றிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்து - வஞ்ச வினைகள் பலவும் புரிந்து - முடிவில் கொடிய மூப்பை அடைந்து - அங்கம் தளர்ந்து-- அகம் குலைந்து-தினந்தோறும்
பெருந்துன்பங்கள் பலவும் அனுபவித்து வவருந்தி - கடைசியில் கால - பாசத்திற்கு இறையாகி உலகவாழ்வை இழந்து மறைந்தொழியும் விந்தை மிகுந்த வீணர்களைப்போலே, என்னையும் விட்டுவிட எண்ணிவிட்டாயா என்ன? தாயே! இப் பூவுலகிலே, அடியேன் எனக்காக- எனது நலத்திற்காக-எனது மன மகிழ்ச்சிக்காகவா வாழ விரும்புகிறேன்? இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களிடமும் உனது இன்னருளைக் கண்டு, எவ்வுயிர்க்கும் தொண்டு செய்து இன்புறுவதற்காகவே யல்லவா அடியேன் இவ்வுலக வாழ்வை இன்னும் விரும்பி நிற்கிறேன்!


“அருள் இல்லார்க் (கு) அவ் வுலகமில்லை - பொருள்
இல்லார்க் (கு) இவ்வுலகம் இல்லாதியாங்கு''


- என்பது பொய்யா மொழியல்லவா? நான் ஒருவன் மட்டும் அனுபவிப்பதற்காக, பொருளின்மேல் நான் மையல் கொண்டுவிட்டேனா என்ன? வறுமையின் கொடுமையால் வாடித் தவிக்கும் பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள், தங்களது கொடுந் துன்பங்களைக் கொஞ்சமேனும் மறந்து வாழும்படி உதவி செய்யவும்- தற்காலப் பாரத சமுதாயத்திலே பெரிதும் மங்கிக் கிடக்கும் கல்விச் செல்வத்தை எங்கும் பொங்கிப் பெருகச் செய்யவும் – தற்சமயம் உரிமை இழந்து கவலை மிகுந்து நிற்கும் பாரத - தேவியின் விடுதலை குறித்து இடையறாது உழைக்கக் கூடிய மனவலிமையிற் சிறந்த தேசீயத் தொண்டர்கள் பலரைத் திரட்டவும் - தாய் நாட்டின் முன்னேற்றத்திற்கேற்ற சிறந்த கைத்தொழில்களை மீண்டும் உயிர்ப்பித்துச் சிறப்புற வளர்க்கவுமே யல்லவா, தற்சமயம் அடியேன் பொன்னளிக்குமாறு உன்னை வேண்டிநிற்கிறேன்! தாய் நாட்டின் முன்னேற்றத்திற் கேற்ற சீரிய தொண்டுகளைச் செய்யும் தூய தேச பக்தர்களின் கூட்டத்திலே, எனது தொண்டின் சிறப்பினால் நானும் உயர்வையும் புகழையும் ஒருங்கே அடைய விரும்பி நிற்பது குற்றமாகுமா என்ன?
எனது தொண்டின் சிறப்பினால் என்னை அடையக்கூடிய சிறப்பும் புகழும் எனக்கோ உரியன? அவ்விரண்டும், என்னைத் தேசத் தொண்டில் துணிந்து இறங்கச் செய்வித்துப் பணிகொண்ட உனது ஒப்புயர்வற்ற சிறப்புடைய தனிப்பெருங் கருணைக்கே உரியனவல்லவா?


"கூடும் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளும் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்கு வினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்கக் - கவி
சாடுந் திறன் எனக்குத் தருவாய்! - அடி,
தாயே! உனக்(கு) அரியது உண்டோ? - மதி
மூடும் பொய்மை இருளெல்லாம் - எனை
முற்றும் விட்ட கல வேண்டும்!''

 

இத்தகைய நோக்கங்கொண்டு நிற்கும் உனது தொண்டனாகிய என்னை, இரவும் பகலும் பலவகைப்பட்ட கவலைப்பூச்சிகள் கூடிக்கொண்டு என் உள்ளத்தை அரித்து உடலை உருக்கி, உயிரோடு சித்திரவதை செய்து வருவதை நீ அறியாயோ? அறிந்திருந்தும், என் பக்கலில் இன்னும் நீ பராமுகமாயிருந்து வருவது ஏனோ? அக்கவலைப் பூச்சிகளின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் சிந்தை நொந்து வந்து உன்னைச் சரணடைந்து நிற்கும் என்னை, இன்னும் நீ சோதிப்பது முறைதானோ?


“மிடிமையும் அச்சமும் மேவி என் கெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!''

 

அருளே உருவாகிய அன்னையே! தேசீயத் தொண்டில் தீவிரமாக ஈடுபடமுனைந்து நிற்கும் எனது மனத்தை, பாழும் வறுமைப்பேய் எவ்வளவு கொடுமையாகத் துன்புறுத்துகிறது தெரியுமோ? தேசப் போரில் தலைப்பட ஆசைமிகுந்து விற்கும் நான், தினந்தோறும் வறுமைப் பேயின் கொடுமையால் என் மனைவியுடன் வீட்டில் போர் செய்யும்படி நேர்ந்து விடுகிறதே! ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்ததும், 'அது இல்லை; இது இல்லை; அவனுக்குப் பாக்கி; இவனுக்குப் பாக்கி'- என்று என்னிடம் ஒப்புவிக்கும் குறைகளையும் முறையீடுகளையும் கேட்டுக் கேட்டு என் செவிகள் எவ்வளவு புண்பட்டு வருகின்றன தெரியுமோ? தேசத் தொண்டில் தீவிரமான உற்சாகத்துடன் ஈடுபடுவதற்குப் பெருந் தடையாக இருந்துவரும் வறுமைப்பேயின் கொடுமை இரவும் பகலும் எனது நெஞ்சை எவ்வளவு புண்படுத்துகிறது தெரியுமோ? வீட்டுக்கவலைகள் மட்டும் எனக்கு இல்லாவிட்டால், தமிழர்களைத் தட்டி எழுப்பிப் புத்துயிர் அளித்துப் புத்துணர்ச்சி ஊட்டி புதிய மனோபலத்தை அளிக்கக் கூடிய வீர - மணங் கமழும் தேசீய ஆயிரக் கணக்காகப் பாடிக் குவித்து விடுவேனல்லவா? வறுமைப் பேய் மட்டும் நெருங்காதிருந்தால், நாட்டு முன்னே பற்றத்தின் பொருட்டு நான் மேற்கொண்டுள்ள முயற்சிகள் யாவும் எவ்வளவு விரைவில் வியக்கத்தக்க சிறந்த பயனளிக்கக் கூடும்!

 

வஞ்சகரை அஞ்சி கடுங்கச் செய்யும் வீரத் தாயே! என் மன உறுதியைச் சோதிக்க நீ விளைவித்துவரும் எத்தகைய சோதனைகளுக்கும் நான் அஞ்சவில்லை; அச்சோதனைகளில் தேறி உனது இன்னருளுக்கு இலக்காகி இன்புறக்கூடிய நன்னாள் விரைவில் வருமென்னும் நம்பிக்கையும் எனக்கு ஆதலின், "ஜயழண்டு பயமில்லை மனமே - இந்த – ஜன்மத்திலே விடுதலை உண்டு, நிலை உண்டு --ஜயழண்டு, பயமில்லை மனமே!"- என்று உற்சாகம் பொங்கித் ததும்பும் உச்சக் குரலிலே வீர முழக்கம் செய்யக்கூடிய மனத் துணிவு, இப்பொழுதும் எனக்கு உண்டு. ஆனால்,..... உனது இன்னருட் படைப்பாகிய இவ்வழகிய உலகத்தைப் பலவாறு தூற்றி, கண் முன் காணப்படுவன வெல்லாம் பொய்யென்று பறை சாற்றி, தன் முயற்சியையும் தன்னம்பிக்கையையும் முற்றிலும் கைவிட்டு விடுமாறு தூண்டி சோம்பேறி -ஞானத்தை வளர்க்கும் வெறும் வாய் வேதாந்தம் பேசி உள்ளுக்குள் கணக்கற்ற கள்ள எண்ணங்களைக் கொண்டு திரியும் போலித் துறவிகளையும், உள்
ளுக்குள் பலவகைப்பட்ட வஞ்சக நோக்கங்களையும் சுயநலப் பற்றையும் மறைத்து வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் நடிக்கக் கூடிய போலித் 'தேசாபிமானிக'ளையும் நினைக்கும்போது, எனது நெஞ்சம் மிக மிக அஞ்சுகிறது. அவர்களை ஏறிட்டு நோக்கவே, எனது கண்கள் கூசு உரிமை இழந்து வருந்தி நிற்கும் பாரதத்தாயின் விடுதலைக்குப் பெருந்தடைகளாக இருந்து வரும் அப்போலித் துறவிகளும் போலித் தேசாபிமானிகளும் செய்து வரும் கொடுஞ்செயல்களைச் சிந்திக்கும்போதுதான், எதற்கும் அஞ்சாத எனது நெஞ்சமும் பெரிதும் அஞ்சுகிறது. அத்தகைய அச்சத்தையும் வறுமைப் பேயைப் பற்றிய கவலையையும் எனது நெஞ்சத்திலிருந்து போக்கியருள, நீ தான் திருவுள்ளம் இரங்கியருள வேண்டும்.



“தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து, இங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வணம் -
உன்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!" –

 

உலகுக்கு உண்மையை உணர்த்தியருளிய இன்னருள் வடிவே!


“ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய: |
லிப்யதே நஸ பாபோ பத்ம பத்ரம் இவாம்ப ஸா" ||;


''யுக்த: கர்ம பலம் த்யக்த்வா சாந்திம் ஆப்நோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நி பத்யதே" ||

 

- ("செய்கைகளை யெல்லாம் பிரமத்தில் சார்த்திவிட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன் நீரில் தாமரை யிலைபோல், பாவத்தால் தீண்டப்பெறுவதில்லை; யோகத்தில் பொருந்தியவன் கர்மப்பயனைத் துறந்து நிஷ்டைக்கு உரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன், விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்") - என்று அன்று நீ பார்த்தனுக்கு அறிவுறுத்தியருளிய பேருண்மையை, என் மனம் என்றும் மறவாதவாறு நீயே இன்னருள் செய்யத் திருவுள்ளம் இரங்கியருள வேண்டும். “என் செயலாலாவது யாதொன்று மீல்லை"- என்பதையும்; "அனைத்தும் நின் செயலே"--என்பதையும் என்மனம் ஒருநாளும் மறவாவாறு நீயே திருவருள் புரிந்தருளவேண்டும். நீ ஏவிய செயலைச் செய்வதற்கு உரிய கருவியாகவே நான் இருந்து வருகிறேனென்பதையும்; அச்செயலின் பயனைக் குறித்துக் கவலை கொள்வதற்குதிருக்க வரந்தரவேண்டும். எனது ஆத்மாவுக்குத் தனிப்பெருந் தலைவி
யாகிய நீ, என்னைக் கொண்டு செய்விக்கும் செயல்கள் வெல்லுமோ தோற்குமோ என்று எண்ணி எண்ணித் தவிப்பதை முற்றிலும் விட்டு விட்டு, எனக்கு இட்ட பணியைச் செய்து முடிக்கும் பேறு வாய்த்ததே எனுமளவில் த்ருப்தியடைந்து, மனம் மகிழ்ந்திருக்கக்கூடிய சீரிய நிலையை இனியேனும் அடியேற்கு அருள் செய்வாயென்ற உறுதியான நம்பிக்கையினாலேயே, இப்பொழுது உனது இணையடிகளில் சரணமடைகிறேன்.


“துன்பம் இனி இல்லை; சோர்வில்லை; தோற்பில்லை-

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட –

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!"

 

இன்னருள் வடிவினளாகிய இறைவியே! ஆன்ம முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக இருக்கக்கூடிய அகங்கார மமகாரங்களை அடியேனது அகத்தினிக்தும் நீ. விலக்கி நெடுங்காலமாய்விட்டது. வெற்றி-தோல்விகளில் முறையே விருப்பு - வெறுப்பு மிகுந்திருந்த காலமும் மலையேறிப் போய்விட்டது. உனது அடியவனாகிய எனக்கு - உனது திருவுள்ளத்திற்கு உகந்த சீரிய செம்பணிகளைச் செய்வதற்காகவே இவ்வுலகில் வாழ விரும்புபவனாகிய எனக்கு-தேசத்தொண்டு செய்வ தொன்றையே வாழ்க்கையின் முழு-முதல் நோக்கமாகக் கொண்டுள்ள எனக்கு- அத்தொண்டைச் சிறந்த முறையில் திறம்படச் செய்ய, உனது திருவருள் ஒன்றையே ஒப்பற்ற தனிப் பெருந்ணையாக நம்பி நிற்கும் எனக்கு - இனி என்றும் - எதிலும் - எத்தகைய துன்பமும் இல்லை. “இன்பமே எந்நாளும்; துன்பம் இல்லை" எனும் அருள் மொழியை, வீர ஞானச் செருக்கோடு உச்சக் குரலில் உற்சாகத்துடன் முழங்க நான் என்றும் - எந்நிலையிலும் - சித்தமாகவே இருக்கிறேன்.
ஒப்புயர்வற்ற இன்னருள் ஒன்றையே துணையாக நம்பி நிற்கும் எனக்கு, இனி மேல் சோர்வு ஏது? தோல்விதான் எது? உனது திருவுள்ளம் பூரித்துப் பொங்கும் வண்ணம், இந்நாட்டிலே-அன்பு நெறியிலே-பலவகைப்பட்ட அறங்களையும் செவ்விய முறையில் வளர்க்க வேண்டும் என்பதொன்றே எனது ஆன்மாவின் ஒரு தனிப் பேராசை. அவ்வாசையை இனிது நிறைவேற்றி வைத்தருளத் திருவுள்ளம் இரங்கியருளுமாறு இப்பொழுது உனது திருவடிகளில் சரணமடைகிறேன்.


"நல்லது - தீயது நாம் அறியோம்; அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!!
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!''

 

உனது இன்னருள் விளையாட்டுக்கு உரிய இடமாகிய இப்பூவுலகிலே, உண்மையில் எவை யெவை நன்மை பயப்பவை - எவை எவை தீமை பயப்பவை - என்பதை, சிற்றறிவினராகிய நாங்கள் தெளிவாக உணரவல்லோம் அல்லோம்; எவ்வுயிரிலும் புகுந்திருந்து ஒவ்வொரு உயிரையும் திருவுள்ளப்படி ஆட்டுவித்துவரும் சர்வலோகமாதாவாகிய நீ ஒருத்தியே, எல்லாவற்றையும் தெளிவாக உணரவல்லவள். ஆதலின், கருணையே ஆதலின், கருணையே வடிவினளாகிய கண்ணம்மா! உனது திருவடிகளில் மனப்பூர்வமான உண்மைப் போன்புடன் இப்பொழது சரணமடைகிறேன். எங்களுக்கு உண்மையில் நன்மை பயப்பனவற்றை நிலை பெறுவித்து வளர்க்கும் பொறுப்பையும், தீமை பயப்பனவற்றை விரைவில் ஒட்டி ஒழிக்கும் பொறுப்பையும், கருணை கூர்ந்து இனி மேல் நீயே ஏற்றுக்கொண்டருள வேண்டும்.''

 

ஆனந்த போதினி – 1936 ௵ - ஆகஸ்டு ௴

 



No comments:

Post a Comment