Friday, September 4, 2020

 

பண்டித ஶ்ரீ மதன மோகன மாளவ்யா

 

பாரத தேவியின் பரமபக்த சிகாமணிகளாய் காங்கிரஸ் மகாசபையின் ஆரம்ப காலந்தொடங்கி, தண்பணியாற்றி வரும் தேசாபிமானிகளுள் பண்டித ஸ்ரீ மதன மோகன மாளவ்யா அவர்களும் ஒருவராவார். இப்புனிதர் மால்வா வைச் சேர்ந்த பிரபல பழங்கால வடமொழிப் பண்டிதர் வம்சத்திலே அந்தணர் மரபி லவதரித்தவர்.

 

குடும்பப் பெருமை

 

சுமார் நானூறாண்டு கட்கு முன்னர் அவருடைய மூதாதையர்கள் மால்வாவை விட்டு அலகபாத்தில் குடியேறினவர்கள். அவ்வமிசத்தார் பரம்பரையாக வடமொழி மகோபாத்தியாயர்களென விளங்கி வருபவர். மாளவ்யா அவர்களின் தந்தையாரான பண்டித ஸ்ரீ பிராஜ் நாதரும் ஆரிய மொழியில் அரிய புலவராயிலங்கியவர். அப்பெரியார் பழுத்த பழமாய்ப் பல்லாண்டுகள் ஆரோக்ய திடகாத்திரராய் உலகத்தில் வதிந்திருந்து சமீபகாலத்தில் சிவபத மெய்தினார். அவர் வடசொற்கடற்கெல்லை கண்டவராய், பாகவதம், புராண இதிகாசங்களுக்கு உரைவகுப்பதில் வல்லுநராயிருந்தார். அவருடைய பாண்டித்யத்தைக் கண்டு புகழாதவரில்லை. தர்பங்கா மகாராஜாவும், காசிதேச மன்னரும் அவருடைய பக்தி, வித்வத்துவம், சாதுத்தன்மை, இவற்றோடு கூடிப் பொலியும் ஒழுக்கம் முதலியவற்றைக் கண்டு அவரைத் தமது குலகுருவெனக் கொண்டாடுவாராயினர். அவர் வரைந்த வடமொழி நூல்கள் பல. அவற்றைப் பின் மாளவ்யா அவர்கள் வெளியிட்டருளினார். இப்பண்டித ஸ்ரீ பிராஜ்நாதருக்குப் பல ஆண் பெண் மக்களுண்டு. அவர்களையெல்லாம் அப்பெரியார் சிறிதும் சிரமத்தையோ, தமது சௌகரியக் குறைவுகளையோ பொருட்படுத்தாமல் போஷித்து அவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தார்; தம் கண் முன்னிலையில் தமது குமாரரான மாளவ்யா அவர்கள் சான்றோராய் விளங்குதல் கண்டு மகிழும் பாக்கியத்தையும் அவரே யடைந்தவர்.

 

இளமையிற் கல்வி

 

மாளவ்யா இம்மகானுபாவருடைய மூன்றாவது திருக்குமாரராய் 1861 - ம் ஆண்டு டிசம்பர் 25 - ம் நாள் அலகாபாத்தில் பிறந்தவர். இளமையில் வளர்பிறைச் சந்திரனென வளர்ந்து, முறைப்படி உரியாரால் அக்ஷராரம்பம் செய்விக்கப் பெற்றார். அப்பால், அவர் தர்மஞானோபதேசப் பாடசாலையிலும், 'வித்யா தர்ம வர்த்தினி' சபையாரின் ஆதரவில் நடைபெற்ற மற்றொரு கழகத்திலும் வடமொழியாந் தாய்மொழிப் பயிற்சி யடைந்தார். அதன்பின், அவருடைய தந்தை அவரை ஆங்கிலங் கற்குமாறு 'வில்லா' என்ற கலாசாலைக் கனுப்பினார். அப்பள்ளிக்கூடத்திற் சேர்ந்து அவர் பிரவேசப்பரீக்ஷையிற் றேறி, பின்னர் மியுர் மத்திய கலாசாலை (Muir Cential college) மாணவராகிப் பயில்வாராயினர். மாணவரா யிருக்கும் பொழுதே வித்யாபி விருத்தியிலும், சமயத்தொண்டிலும் அவருக்கதிக ஊக்க மிருந்து வந்தது. அதன் பயனாக அவர் அலகபாத் கலையாராய்ச்சிக் கழகத்தையும், ஹிந்து சமாஜத்தையும் ஸ்தாபித்தார். அவர் மாணவர் நிலையில் விசேஷ கியாதி யேது மடையவில்லை. இதற்குக் காரணம் அவர் படிப்பிலும், பொது விஷயங்களிலும் சமதிருட்டியுடனிருந்து வந்தமையே. 1879 -ல் அவர் பிரவேசப்பரீக்ஷையிலும், 1881 – ம் ஆண்டில் சிறுகலா குமாரப் பரீக்ஷையிலும் (F. A.) தேர்ந்து 1884 - ல் கலாகுமாரரானார்.

 

உபாத்திமை

 

பி. ஏ. பரீக்ஷையிற் றேர்ந்த அவ்வாண்டி னிறுதியிலேயே அவர் அலகபாத் அரசாங்கக் கலாசாலையில் ஓர் ஆசிரியராக விருந்து வந்தார். அப்பொழுது அவருக்கு ஆரம்பத்தில் ரூ. 50 தான் சம்பளமாக அளிக்கப்பட்டது. அச்சம்பளத்திலிருந்து ரூ. 75 வரையிலும் உயர்த்தப்பெற்று அவர் அவ் வேலையிலேயே 1887 - ம் ஆண்டு ஜூன் வரையிலிருந்தார். அரசாங்க உத்தியோகஸ்தராயிருந்தது, தேசநலத்திற் கேற்ற துறைகளிற் புகுந்து உழைத்தற்கு அவருக்கு சுவாதந்திரமற்றதாயிருந்தது. ஆயினும் அவர் 1886 - ல் கல்கத்தா நகரிற் கூடிய காங்கிரஸ் மகாசபையில் ஓர் சொற்பொழிவு நிகழ்த்தினார். அம்மகாசபைக் கெழுந்தருளி வீற்றிருந்த அவர் ஆசிரியரும், சுயேச்சை வாதியும், மகா மேதாவியுமான பண்டித ஆதித்யராம் அவர்கள் தமது மாணவரின் புத்திக் கூர்மையை வியந்து அவரை உற்சாகப்படுத்தினார். இதனால் அவர் பதவிக் கெவ்வித மாறுபாடும் நேரவில்லை. அக்கால காங்கிரஸ் நோக்கங்களெல்லாம் அரசாங்கத்தாரை வேண்டுந் தன்மையனவாயிருந்தன.

 

காங்கிரஸ் இயக்கத்தில் அவர் கலந்து கொண்டது முதல் அவரது பெருமையைப் பொதுஜனங்க ளுணர்ந்து போற்றத் தொடங்கினர். கலகங்கர் (Kalakankar) ராஜாராம்பால் சிம்ஹர் அப்பொழுது 'ஹிந்துஸ்தான்' என்ற ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். வந்தவர் மோகனரைக் காங்கிரஸ் மேடையிற் சந்தித்தது முதல் அவருடைய நண்பராகி, அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியை யேற்குமாறு அவரை வேண்டினர். மோகனர் அதற்கிசைந்து உபாத்திமைத் தொழிலை விட்டு 1887 -ல் பாங்குடன் அப்பத்திரிகாசிரியரானார். உபாத்திமைத் தொழில் சாலப் பரிசுத்தமானதென்று, அவர் அதனை விரும்பியிருந்தாராயினும், அத்துறையில் தாம் அதுவரையிற் செய்துவந்த சேவையைப் பத்திரிகையின் வாயிலாகப் புரியலாமென்று நம்பி, ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அதனை நடத்திவரலாயினர். இவ்வாறு இரண்டரை யாண்டுகள் வரையில் அத்தொழிலில் 200 ரூபாய் சம்பளத்திலிருந்து வந்தார். அவர் பத்திரிகை நடத்துந் திறனை அரசாங்கத்தாரும் புகழ்ந்து, அப்பத்திரிகையைப் பொதுஜனங்கள் வாங்கிப் படித்து ஆதரிக்கவேண்டுவது அவசியமெனத் தமது வருடாந்தர அறிக்கையில் குறித்தனர்.
  

பத்திரிகாசிரியர் பதவி

 

பின்னர், அவர் சில அசௌகரியங்களை முன்னிட்டு அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியினின்றும் விலகி 'இந்தியன் யூனியன்' என்ற வெளியீட்டின் உப பத்திரிகாசிரியரானார். அப்பத்திரிகைக்குப் பல அறிவாளிகள் கூட்டாளிகளாகச் சேர்ந்து அதனை ஆதரித்து வந்தனர். பண்டித அஜீத்னியா நாதரும், பண்டித பல்தியோ ராம் தேவரும் அதன் முன்னேற்றத்திற்காகப் பெரும் பாடுபட்டு வந்தனர். இந்நாட்களில் மோகனர் நேராக அப்பத்திரிகையின் ஆசிரியராயில்லாவிடினும், அதன் அபிவிருத்தித் துறையில் உழைத்துப் பல இனிய கட்டுரைகளை வரைந்து வந்தார். பாபு பிரம்மநாத சின்ஹா அவர்கள் அப்பத்திரிகையின் தலைமை யாசிரியராயிருக்க, மோகனர் மதக்கல்வி சம்பந்தமான ருசிகரமான வியாசங்களை அதில் எழுதி வந்ததால், அந்த 'இந்தியன் யூனியன்' சிறந்து விளங்கலாயிற்று. பின்னர் இவ்வித தினசரியை நடத்துவதால் தேசத்தில் கிளர்ச்சியே தலையெடுத்தலையும், சமயநெறிகள் சரிவர அனுட்டிக்கப்படாமல் கை நழுவ விடப்படுதலையும் அவர் தமது சுயானுபவத்தி லறிந்து அதினின்றும் விலகித் தாய்மொழி, மதம், ஜனாசாரம் முதலியவற்றை உள்ளபடி ஒளியாமல் ஓதும் ஓர் சஞ்சிகையை வெளியிட ஆவல் கொண்டு அப்யுக்தா என்ற வாரப்பத்திரிகை நடத்த ஆரம்பித்தார்.

 

சட்ட நிருபண ராதல்

 

இவ்வாறு பத்திரிகையை நடத்திவருங் காலங்களில் அவருடைய அன்பர்கள் அவரை, சட்டகலாசாலையிற் சேர்ந்து வாசித்துப் பரீக்ஷை கொடுக்குமாறு தூண்டினர். ஸ்ரீ. ஓ. ஏ. ஹியூம், பண்டித அஜீதியநாத், ராஜா ராம்பால் சிங், பண்டித சுந்தரலால் சிம்ஹர் ஆகிய அந்தரங்க விசுவாசமுள்ள நண்பர்களும் அவரை நியாயவாதியாக முயற்சி செய்யுமாறு ஊக்கினர். ஆனால், மோகனருக்குப் பொருளீட்டும் ஒரே உபாயமுள்ள அத்தொழிலிற் சிறிதும் விருப்பமில்லை. சமய வளர்ச்சிக்கும், கலையுணர்ச்சிக்குமே பாடுபட வேண்டுமென்ற அவா அவர் மனத்திற் குடி கொண்டிருந்தது. ஆயினும், அன்பர்கள் விருப்பத்திற் கிசைந்து அவர் சட்டகலாசாலையிற் சேர்ந்து 1891 - ல் 'எல். எல். டி'பட்டம் பெற்று 1893 - ல் உயர்தர நீதிமன்ற நியாயவாதியாகத் தம்மைப் பதிவு செய்து கொண்டார். ஸ்ரீ. ஓ. ஏ. ஹியூம் என்பவர் ஒரு பெரிய மேதாவி. அவர் எப்பொழுதும் தமது மாணவரான மாளவ்யா அவர்களின் வித்யாபிவிருத்தியிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தார். ஒருசமயம் ஓரன்பர் மாளவ்யா அவர்கள் அருகேயிருக்க, ஹியூம் அவர்களைப் பார்த்து, சட்டப்பரீக்ஷைக்கு மானவ்யா அவர்கள் கற்கத்தொடங்கியது முதல் காங்கிரஸ் அலுவல்களில் அத்துணை ஊக்கங் கொள்ளுகின்றார்களில்லை' என, அவரும், அது சரிதான், மனிதர் எந்த விஷயத்திலும் தமது முழுக்கவனத்தையும் செலுத்தி நிற்றல் தானே முறை' என்றியம்பி மகிழ்ந்தார். அப்பால், அவ்விருத்தர் மாளவ்யா அவர்களைப் பார்த்து, " மதன மோகன்! கடவுள் உமக்குச் சிறந்த அறிவை வழங்கியுள்ளார். ஏகமனதோடு இவ்வக்கீல் தொழிலில் நீர் பொறுமையுடன் சுமார்பத்தாண்டு கட்கு உழைப்பீரானால் மகோன்னத நிலையை யடைவது திண்ணம். பிறகு அந்தப் பதவியிலிருந்து சுலபமாக தேசசேவை புரியலாம் "என்று நல்லுரை பகர்ந்தார். ஆனால், மாளவ்யா அவர்கட்கு, பதவியிலோ பொருளீட்டுவதிலோ இயல்பாகவே விருப்பமில்லை. உயர்ந்த பதவிகள் பன்முறை யளிக்கப்பட்டும் அவர் அவற்றை ஏற்க மனமிசைந்திலர்.

 

காங்கிரஸ் தொண்டு.

 

 

மாளவ்யா அவர்கட்குச் சிறுபிராயம் முதல் தேசிய இயக்கங்களி லொத்துழைக்க அதிகப்பிரிய முண்டென்று நாம் முன்பு கூறினோமல்லவா? அவ்வியல்பு இப்பொழுது முதிர்ந்து நின்றது. அகில இந்திய காங்கிரஸ் மகாசபையின் இரண்டாமாண்டு விழா 1886 - ம் ஆண்டில் கல்கத்தாவில் ஸ்ரீ தாதாபாய் நௌரோஜியின் தலைமையின் கீழ் நடைபெற்ற போழ்து, ஆங்கு வீற்றிருந்த தேசாபிமானிகள் மேடையில் நின்று தாய்நாட்டின் அன்பினைச் சிறப்பித்துப் பேசுவது கேட்ட அவருக்குத் தாமும் பேச வேண்டுமென்ற அவா வுண்டாயிற்று. பண்டித ஆதித்யராம் என்பாரும் மாளவ்யாவை உற்சாகப்படுத்தினார். அதற்கிணங்க அவரும் எழுந்து பேசினார். இச்சொற்பொழிவை அச்சபை உபசரணைக் கழகத்தலைவரான ஹியூம் துரை யென்பார், "காங்கிரஸ் மேடையில் அனைவரையும் உற்சாகப்படுத்திப் பேசியதில் பண்டித மதன மோகன மாளவ்யா அவர்களின் சொற்பெருக்கே மிக்க ஆர்வத்தோடு ஏற்கப் பெற்றதாகும். அவர் ஓர் உயர்ந்த பிராம்மண குலத்தைச்சார்ந்தவர். அவருடைய பிரகாசவதனமும், சொல்லணியும், துரிதமாகவும், சாதுரியமாயும், வன்மையோடும் பேசிய வளமும் ஒவ்வொருவர் மனத்திலும் ஆழமாகப் பதிந்துவிட்டது. சிங்கக்குட்டியைப் போல் அவர் குதித்தெழுந்து, அமுதமின்னு மெழுமெனு மாசையால் ஆரவாரித்திருந்த அன்பரனைவரையும்ஆனந்திக்கச் செய்தார்.'' என்று அவ்வாண் டறிக்கையில் வரைந்தார்.

 

மாளவ்யா அம்மகாசபையிற் பேசிய பொருள், 'சட்டச் சபைச் சீர்திருத்தம்' என்பதே. அதில் அவருடைய ஓரரிய வாக்கியத்தை மட்டும் ஈண்டுக் குறிப்பிடுகின்றோம். அவர் சொன்னதாவது: - "பிரதிநிதித்துவமின்றி வரி விதித்தலில்லை. அதுதான் ஆங்கிலேயர்களது ராஜீய வேதத்தின் முதல் ஏற்பாடு.'' என்பதுதான். இதே விஷயத்தைக் குறித்து அவர் அடுத்த மூன்றாவது ஆண்டு விழாவில் சென்னையில் பேசினார். அப்பொழுது ராஜா. சர். டி. மாதவராவ் அவர்கள், திவான் பகதூர். ஆர். ரெங்காராவ் அவர்கள், எல்டொலி நார்டன், முதலாயினோர் புகழுரை தந்தனர். ஹியூம் துரையவர்களும், ''இவ்விஷயத்தைக் குறித்து மாளவ்யாவை விடச் சிறப்பாகப் பேசும்வன்மை வேறு எவருக்கு மில்லையென்று நான் உறுதியாகச் சொல்லுவேன்' 'என்றெழுதினார் தமதறிக்கையில். அதுமுதல் காங்கிரஸ் மகாசபையின் பேருறுப்பினராக மாளவ்யா கொண்டாடப்பட்டு வந்தார். தர்க்க முறைகளாலும், உபந்நியாசங்களாலும், அவர், காங்கிரஸ் அறத்தை மக்கள்தம் கருத்தினிற் புகவைத்தார். கல்கத்தாவில் இரண்டாவது காங்கிரஸ் மகாசபையின் வருட மகோத்ஸவம் நிகழ்ந்தபின், ஹியூம் துரையவர்களின் வேண்டு கோட்படி அவர் வடமேற்கு மாகாணங்களில் சுற்றுப்பிரயாணஞ் செய்து பலரையும் காங்கிரஸ் தொண்டிலீடுபடச் செய்து அம்மாகாணங்களில் தேசாபிமானத்தைப் பெருக்கி வந்தார். அதன் பலனாக, அடுத்தபடி சென்னையில் நடைபெற்ற காங்கிரசுக்கு வடமேற்கு மாகாணங்களிலிருந்து நூற்றுக்கணக்கில் பிரதிநிதிகள் வரத்தொடங்கினர். அப்பொழுது அவர் சேவையைப் பாராட்டி வடமேற்கு மாகாணங்களின் காங்கிரஸ் காரியதரிசியான பதவி அவருக்களிக்கப்பட்டது. அதனை அவர் பலகாலம் வகித்து வந்தார். சென்னைக் காங்கிரசுக்குப் பிறகு ஹியூம் அவர்கள் அவாவிற்கிணங்க 1888 - ம் வருட காங்கிரஸ் விழா அலகபாத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பெற்றது. ஒரு காங்கிரஸ் வருடோத்ஸவம் நடத்தி முடிப்பதெனில் எத்துணைப் பொருளும், சிரமமும், உழைப்பும், ஏற்பாடுகளும் வேண்டியிருக்கு மென்பதை, சென்னையில் நிறைவேறிய சென்ற காங்கிரசுக்குப் போயிருந்த நம்மில் பலரும் அறிவர். மாளவ்யா அவ்விஷயத்தில் மிகுந்த பாடுபட்டு நின்றார்; பண்டித அஜீதிய நாதருடன் சேர்ந்து அவர் அரும்பாடு பட்டார்; பொருள் சேகரிக்க ஊர்ஊராகச் சுற்றுப் பிரயாணஞ் செய்தார். அக்காலத்தில் மக்கள் தேசநல உணர்ச்சியை இக்காலத்தைப் போல் பெற்றிருக்கவில்லையாதலின் பொருள் கூட்டுவது சிரமமாகவே யிருந்தது. பண்டித பிஷம்பர் நாதரும் வரவேற்புக் கழகத்தலைவராய் பெருந் தொண்டு புரிந்தார். ராய்பகதூர் லாலாராம் சரன்தாஸ், பாபு சநசந்திர மித்திரர் ஆகியோர்அவருடன் ஒத்துழைத்தனர். அப்பால் 1892 - ல் அலகாபாத்தில் காங்கிரஸ் மகாசபை கூடுமாறு அம்மாகாணத்தாரால் வேண்டப்பட்ட பொழுது, பல தேசாபிமானிகளும், ஒரு சார்மக்களும் பண்டித அஜீதிய நாதரின் மரணத்தால் நிராசையுற்று, மனந்தளர்ந்து, தம்மாலொன்று மியலாதென்று மறுத்தனர். அவ்வமயம் மாளவ்யா அவர்கள், அவர்களைத் தேற்றி, தீரநெஞ்சுடன் திடம் படப் பேசி, 'இறப்பும் பிறப்பும் உலக இயல்பன்றோ? இதனால் தேசசேவையைப் புறக்கணித்தல் நமது மதியீனத்தை வெளிப்படுத்தும்' என்றியம்பி அவர்களை ஊக்கினார். இவ்விதம் எக்காரணத்தாலும் மனந்தளராதுழைத்து அப்பெரியார் 1908 - ல் ஐக்கியமாகாண காங்கிரஸ் மகாநாட்டிற்குத் தலைமை வகித்தார்; அப்பால் 1909 - ல் அகில இந்திய காங்கிரஸ் மகாசபையின் அவைத்தலைமையையடையும் பாத்தியதையையும், பாக்கியத்தையும் பெற்றார்.


பொது கௌரவ பதவிகள்.

 

நிற்க, பல ஆண்டுகட்கு முன்னரே மாளவ்யா அலகபாத் நகர பரிபாலன சபையின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சிலகாலம் அச்சசபையின் தலைவராகவும் அவர் வேலை பார்த்து வந்தார். அதன் பின் அலகபாத் சர்வகலாசாலையார் அவரைக் கல்விச் சபை உறுப்பினராக்கிக் கௌரவித்தனர். அலகபாத் சட்டசபையில் ஸ்ரீஜத் பண்டித பிஷாம்பருடைய ஸ்தானத்தில் அவர் சட்டசபை யங்கத்தினராக 1902 - ல் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அந்நாட்களில் சட்டசபையில் உண்மையான தேசாபிமானத்துடனும், சுதந்திர வேட்கையுடனும், பொறுப்புடனும் பாடுபட்டு வந்தார். அரசாங்கத்தார் கொண்டு வந்த பண்டில் கண்ட் நிலப்பராதீனப் படுத்துமசோதா (Bundelkhand Land Alievation Bill), சுங்க மசோதா (Excise Bill), வருடாந்தர வரவு செலவுத் திட்டம் முதலியவற்றை அவர் எதிர்த்து விளங்கினார். ஆனால் அவருடன் பக்கபலமாயிருந்து போராட ஒருவருமில்லை. அப்பொழுது அடுத்த புதுச் சட்ட சபையிலே அவருடைய அன்பர்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்பெற்று வந்தனர். அவர்களுள் செப்பருஞ்சீர்த் தொண்டர் பண்டித மோதிலால் நேரு (அவர் சுதேச பக்திக்கு இணை யார்?) அவர்களும், பாபு கங்கா பிரசாத வர்மரும் அவரைப் போன்றே அஞ்சா நெஞ்சினராக உழைக்க வாரம்பித்தனர். அவர்களது ஒத்துழைப்பைக் கொண்டு மாளவ்யா அவர்கள் மாகாண அரசாங்க நிர்வாகத்தைப் பற்றியும், அரசாங்க நிதிச்செல்வின் பொறுப்புள்ள அதிகார ஸ்தானத்தைப் பற்றியும் நல்ல சாக்ஷியங் கொடுத்தார். இத்தகைய உழைப்பால் அவருக்கு" இம்பீரியல் 'சட்டசபை அங்கத்தினராக நியமனமுங் கிடைத்தது.  


மாணவர்க் குதவி.

 

கல்வி வளர்ச்சியில் மாளவ்யா கொண்ட ஊக்கத்திற் களவின்று. சுற்றுப் புறங்களிலிருந்து வித்தையை விரும்பி அலகபாத்திற்கு வரும் மாணவர்கட்கு இருக்கத்தக்க விடுதி யொன்றை, கனம் பண்டித அந்தரலாலருடன் கூடியாலோசித்து அவரது தக்க கூட்டுறவால் கட்டிக் கொடுத்தார். அங்குச் சுகாதார முறைப்படி ஏற்ற உணவளிக்கவும் ஏற்பாடாயிற்று. அவருடைய பிரயாண குடும்பச் செலவிற்குப் போதிய பொருள் கிடைத்துவிட்டால் அதற்கு மேல் அவர் பொருளீட்ட முயற்சி செய்வதில்லை. அம்மாணவர் விடுதி நாளடைவில் வளர்ந்து கலைமகளைப் போற்றும் கருத்துள்ள மாணவர்களான இளவரசர்கள் வசிக்கும் அரண்மனையைப் போலமைக்கப் பெற்று இன்றும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

 

மாளவ்யா அவர்கள் அதிவைதீக பிராம்மண வகுப்பைச் சேர்ந்தவரென்றும், தீவிர சமயப்பற்றுள்ளவரென்றும் நாம் முன்பே வரைந்தோம்.

 

அவர் தேசநன்மைக்கும், பல்துறை விருத்திக்கும் சமயாநுசாரமே அடிப்படையானதென்ற தீவிர நம்பிக்கை யுடையவர்; மதப்பற்றில்லா மனிதரெவரும் மாட்சி யடையாரென்ற சிறந்த கொள்கையினர். 'பிராம்மணர்களின் அதிவைதீக மதஅனுஷ்டானங்களின் உட்கருத்துகளை விளக்கி அவற்றை அவர்கள் கைக்கொள்ளுமாறு செய்வதால் சமயமேன்மை தோன்றும்' என்ற விருப்பமவருக்குண்டு. கலாசாலைகளில் மதக்கல்வி போதிக்கப்படவேண்டு மென்று அவர் கருதி, அதற்கேற்ற பல பாடப் புத்தகங்களையும் வரைந்தார். சனாதன தர்ம மகாசபை யொன்று அவருடைய முயற்சியால் 1906 - ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அலகபாத்தில் கூட்டப்பெற்றது. ஏராளமான பொருட்செலவு செய்து, உழைத்து மாளவ்யா அவர்களே அச்சபையை நன்கு நடைபெற வைத்தார்கள். சமய உணர்ச்சியுடன் தேசீயக்கல்வியும், எந்த வித்தை அறம்பொருளின்பமாம் மூன்றையும் அளிக்குமோ அவ்வித்தையும் மாணவர்களுக்கு அளிக்கப் பெற வேண்டுமென்ற பெருநோக்கத்துடன் அவர் ஸ்ரீ காசியில் ஹிந்து சர்வ கலாசாலை யொன்றை - பாரதீய விஸ்வ வித்யாலயம் எனும் பெயருடன் ஸ்தாபிக்க யத்தனங்கள் செய்தார். சத்காரியத்தை ஆரம்பித்தால் அதற்கு இடையூறு விளைக்கப் பலர் முன் வருவது வழக்கந்தானே? மற்றும், நமது நாட்டில் மூலை முடுக்குகள் தொறும் அபிப்பிராய பேதங்கள் நிலவுவது நிதர்சனமல்லவா? ஆகவே, அதற்குப் பலர் பலவாறு மாறான ஆலோசனை கூற வாரம்பித்தனர். இக்காரியம் ஏராளமான பொருட்செலவில் நடைபெற வேண்டியதாயிருந்தாலும், மாளவ்யா அவர்கள் சிறிதும் மனந்தளராது, தாம் சிரமேற் கொண்டது மத, பாஷாபி விருத்தியைப் பொறுத்ததாதலின் எவ்விதமும் அதனை நிறைவேற்றி விட வேண்டுமென்று கங்கணம் பூண்டிருந்தார்கள். சாஸ்திரிய ஆராய்ச்சி (Scientific research), கைத்தொழிற் பயிற்சி, வடமொழி இலக்கண இலக்கியக் கல்வி முதலியவற்றையும் மாணவர்களுக் கூட்ட அவர் தக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். இறைவனருளால் அவருடைய சத்காரியமும் கைகூடிற்று.

 

சுதேசி இயக்கம்

 

கடந்த நாற்பதாண்டுகளாக அவர் சுதேசி இயக்கத்தில் முக்கியஸ்தராயிருந்து வந்தார். தேசீ திஜாத் கம்பெனி யானது அலகபாத்தில் 1881 - ம்ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது முதல் பண்டித மாளவ்யா அதனை அபிமானித்து வந்தனர். அக்கம்பெனி, நமது நாட்டில் சர்வஜன உபயோகமானசகல சாமான்களையும் கைத்தொழிலால் செய்து விற்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நிறுவப் பெற்றது. அது ஸ்தாபிக்கப் பெற்ற காலம் முதல் அவர் தமது சுற்றுப்பிரயாணங்களிற் செய்யும் உபந்நியாசங்களிலெல்லாம் 'மேல்நாட்டாரனுப்பும் சாமான்களை விட சுதேசப்பொருள்கள் வனப்புக் குறைந்தனவாயும், அதிக விலையுள்ளன வாயு மிருப்பினும், சுதேச கைத்தொழி லபிவிருத்தியைக் கோரி அவற்றையே உபயோகிக்கும்படி மகா ஜனங்களை வேண்டி வந்தார். சுதேசக் கைத்தொழிற் சாமான்களை ஆதரிப்பது ஓர் வித சமயாசார மென அவர் கருதுவாராயினர்.
.வரவர அவர் அதில் அதிக உறுதியுடையாராய்த் தேசீய இயக்கத்தின் முன்னணியில் நின்றுழைத்தார்; 1905 - ல் காசியில் நடை பெற்ற இந்தியக் கைத்தொழில் மகாநாட்டிலும், 1907 - ல் அலகபாத்தில் நிறைவேறிய ஐக்கிய மாகாணக் கைத்தொழில் மகாசபையிலும் அவர் முக்கியஸ்தராயிருந்து அவற்றை நடத்தி வைத்தார். பலதுறைக் கல்வியபிவிருத்தியை அவர் ஊக்கமுடன் நடத்தி நல்ல நிலைக்குக் கொண்டு வந்தார். நைநிதாலில் 1907 - ல் சர்ஜான் ஹீவட் - அரசாங்கத்தாரால் நடத்தப் பெற்ற கைத்தொழில் மகாநாட்டில் அவருக்கோர் அங்கத்தினர் பதவியு மளிக்கப் பெற்றது. அம்மகாநாடு நடைபெற்றதன் பயனாக ஆரம்பமான பிரயாகைச் சர்க்கரைக் கம்பெனியில் அவர் பாத்தியஸ்தராயும் விளங்கினார்.

 

குண பாவங்கள்

 

இனி, அவரது இயற்கைத் தயாள குணத்தை வெளியிடும் சில நிகழ்ச்சிகளை ஈண்டெடுத்து வரைவோம். அவர் உள்ளங் கனியச் செய்த உதாரச் செயல்கள் பற்பல. தங்களைப் பிறர்மதிக்க வேண்டுமென்னும் கருத்துடையார் பிறரறிய உதவி செய்து பெயரீட்ட முயல்வர். மனப்பூர்வமாகத் துயருறும் மக்களுக்கிரங்கித் தொண்டு செய்வாரோ எவ்வித பிரபல்யத்தையும் கருதுவதில்லை. ஆகவே, மாளவ்யா அவர்கள் பொது ஜனங்களுக்கு உதவி செய்யச் சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம் 'வலதுகை கொடுப்பதை இடது கை யறியவேண்டாம்' என்பதற்கிணங்க நடந்து வருவது வழக்கம். ஒருசமயம் அலகபாத்திற்குப் 'பிளேக் " என்னும் 'எலிவிழு நோய்' விஜயம் செய்த போது அப்பாகக் கலெக்டர் போர்டு துரையவர்கள் வேண்டு கோட்கிணங்கி அவ்வமயம், அலகபாத் நகர பரிபாலனக் கழகத்தின் உபஅக்கிராசனாதிபதியாயிருந்த மாளவ்யா அவர்கள் அந்நோயினின்றும் மக்களைக் காப்பாற்ற அரும்பாடு பட்டார். அவர் தாமே பிளேக் நோய்கண்ட வீடுதொறுஞ் சென்று வியாதியஸ்தருக்கு மருந்து கொடுத்து ஹிதவசனம் பேசி வருவார். அந்நோய் கூற்றுவனை அந்நகரிற் குடிபுக வைத்தது; 'கோ' வென்ற கூக்குரல் நகரெங்கணும் கேட்க, மனிதருயிரைக் கொள்ளை கொண்டது. மாளவ்யா அவர்களே இவ்விதம் தொண்டியற்றுவது கண்டு பிற நகரபரிபாலன கழக அங்கத்தினர்களும், அவரைப் போலவே வீடுகள் தோறுஞ் சென்று மக்களைத் தேற்றி அவர்களுக் குதவி புரிந்து வந்தனர். மேற்கூறியவர்கள், 'சோபாதியா பாகம்' என்ற ஒரு சுகாதார தாத்காலீக வாஸஸ்தலத்தை நிர்மாணித்து அதில் ஜனங்கள் சௌகரியமாய்க் குடியிருக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். ஆங்கு அவர்களால் ஆடை யற்றவருக்கு உடையும், உணவற்றவருக்கு உண்டியும் இனாமாகவே வழங்கப் பெற்றன. அதில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இரட்சிக்கப் பெற்றன. அவ்விடத்திற்கு மாளவ்யா அனுதினமும் காலையிலும் மாலையிலுஞ் சென்று ஜனங்களுடைய யோக க்ஷேமங்களை விசாரித்து வருவது வழக்கம். இதுவன்றிப் பிளேக் வைத்தியசாலை யொன்று அவருடைய பெருமுயற்சியால் ஏற்படுத்தப் பெற்றது. அதற்கடுத்த ஆண்டில் சுமார் 3000 குடும்பங்கள் சகல சௌகரியங்களுடன் அப்புதிய நகரில் வசித்து வந்தனர்.

 

 

 

முடிவுரை.

 

மாகாண சட்டசபையில் அவர் சுகாதார முறைகளுக் கேற்ப, மக்கள் வசித்தற்குரிய வீடுகளை அமைத்துத் தரும்படி அரசாங்கத்தாருடன் மன்றாடினார். அதனால், 'லூகர்கஞ்ஜ்' எனும் அழகிய இல்லங்கள் அரசாங்கத்தாரால் அமைக்கப்பெற்றன, மிகவும் தெரு கடியான நகரங்களில் போதிய காற்றோட்டமின்றி ஜனங்கள் சுவாகாஸயத்தைப் பற்றிய நோய்களால் பீடிக்கப்படுவது கண்டு, விசாலமான கட்டிடங்களைக் கட்ட அரசாங்கத்தார் உதவி செய்ய வேண்டுமென்று அவர் பிரரேபித்தார். அதன்படி அலகபாத்திலும், கான்பூரிலும் இப்பொழுது வீடுகள் கட்டப்படுகின்றன. நைனிதால் சுகாதார மகாநாட்டில் அவர் ஓர் விசேட உறுப்பினராயு விருந்தார். இப்பெரியாருடைய உண்மையான தொண்டின்பயனாக இரண்டு பெரிய நன்மைகள் விளைத்தன. அவை அகல ஹிந்து மகாசபை, ஸ்ரீ காசி விதவா விவாஹ சபை ஆகியவைகளாம். அவருடைய பெருமையை நன்கு கண்டு கொண்ட அரசாங்கத்தார் அவரை டில்லி சட்டசபையின் உறுப்பினராக்கி மேன்மேலும் உயர்ந்த பதவிகளை அவருக்களித்து, அவர் அபிப்பிராயத்தை ஒருவாறு தழுவி - ஆதரித்து வருகின்றனர். அவரும் இப்பொழுது எழுபதாமாண்டை எய்த விருப்பினும், சிறிதும் தளர்ச்சியடையாமல் தாய் நாட்டின் தொண்டில் ஈடுபட்டுழைந்து வருகின்றார். இப்பெரியார் இன்னும் பலகால மிருந்து நமது தேசத்தின் சமயப்பற்றையும், ஆசாரஒழுக்கங்களையும் வளர்த்து வா இறைவன் அருள்பாலிப்பானாக.

 

ஸ்ரீ. லக்ஷ்மி காந்தன்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ -

ஏப்ரல், மே, ஜுன், ௴

 

 

 

 

No comments:

Post a Comment