Wednesday, September 2, 2020

 

திருக்கார்த்திகை தீபம்

(V. சங்கர ஐயர்.)

கைலாசத்தில் சிவபெருமான் பார்வதிதேவியோடு வீற்றிருக்கும் ஒருநாள் அங்கே எரிந்துகொண்டிருந்த திரிவிளக் கொன்று அணைந்து போகும் தருணத்தில், நெய்யை யுண்பதற்காக அவ் விளக்கில் வாய்வைத்த ஒரு எலியால் விளக்குத் திரி தூண்டப்பட்டு
சுடர்விட் டெரிந்தது. அதன் பலனாக அந்த எலிக்கு சிவனுடைய அனுக்கிரகம் கிடைத்தது. மறு பிறப்பில் அந்த எலி மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது. சிவனுடைய ஆசீர்வாதத்தால் சகல ஐசுவரியங்களையும் பெற்று நன்கு ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அந்த சக்ரவர்த்தி மகாபலி சகல ஆடம்பரங்களோடு சிவ தரிசனத்துக்காக தினமும் சிவாலயம் செல்லும் வழக்க முண்டு. அப்படி செல்லுகையில் ஒருநாள் அந்த ஆலயத்திலுள்ள விளக்கு ஒன்றில் தன் ஆடைதட்டி கொஞ்சம் நெய் அவ் விளக்கினின்றும் அவன் உடலில் பட்டது. அந்த இடத்தில் ஓர் புண் உண்டாகி அச் சக்ரவர்த்தியை மிக வாட்டியது. அதற்காக பல அபிஷேகங்களும், பூஜைகளும் சிவபெருமானுக்குச் செய்து அத் தேவரை திருப்தி செய்யப்
பாடுபட்டான்.

பரம கிருபாநிதியான சிவபெருமான் பார்வதி சமேதராக அவன் முன் தோன்றி புண் குணமாவதற்கு ஓர் உபாயம் கூறினார். அதாவது, “உனது அகங்காரத்தால் கோவிலுக்குள் அலக்ஷியமாய் சென்றதனால் உனக்கு இவ்வளவு துன்பம் உண்டாயிற்று. அதை யுணர்ந்து நீ பச்சாதாபப்பட்ட படியால் புண் சீக்கிரம் குணமாகிவிடும். ஆனால் நீ நம்மை உத்தேசித்து
உன் ஆதீனத்தி லிருக்கும் ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் இன்று முதல் நெய் விளக்கு ஏற்றி வரவேண்டும்.'' எனக் கூறி மறைந்தார். சக்ரவர்த்தியும் அவ்வாறே செய்து வந்தான்.

இப்படி யிருக்கையில், கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரமும் பௌர்ணமியும் கூடின தினத்தன்று பகவான் தேஜோ வடிவமாய் அவன் முன் தோன்றி அவனுக்கு சாயுஜ்ய மளித்தார். அப்பொழுது அவ்வாலயத்துக்கு வந்தவர்கள் யாவரும் அச்சோதியைக் கண்டு தோத்தரித்து வணங்கினார்கள். அச்சோதிக்குப் பொரி, அப்பம் முதலியன நிவேதனம் செய்
தார்கள்.

இந்த ஐதீஹத்தை யுத்தேசித்தே கார்த்திகை தீபம் சகல ஆலயங்களிலும் நடத்தப்படுகிறது. யாவரும் கடவுளை ஜோதி வடிவமாக அன்று வணங்குகிறார்கள்.

கார்த்திகை தீப தரிசனம் திருவண்ணா மலையில் மிக விசேஷமாக நடத்தப்படுகிறது. அங்கேயுள்ள மலை யுச்சியில் பெரிய தேர் வடம் போலுள்ள திரிகள் போட்டு குடம் குடமாக நெய் ஊற்றி எரிக்கப்படும் தீபத்தைக் காண வேண்டி திரள் திரளான ஜனங்கள் மனைவி மக்கள் நண்பர்களுடன் ஒவ்வொரு வருஷமும் செல்றுகிறார்கள்.

பூர்வத்தில் பிரம்மனும் விஷ்ணுவும் தனித் தனியே ‘நான் பெரியவன்,' 'நான் பெரியவன்’ என்று வாதிடத் தொடங்கினார்கள். அப்பொழுது சிவபெருமான் ஒரு ஜோதி வடிவமாக அங்கே தோன்றி இதன் அடி முடிகளைக் காண்போரே பெரியோர் எனக் கூற, இருவரில் விஷ்ணு கீழ் நோக்கி அடியைக் காணவும், பிரம்மன் மேல் நோக்கி முடியைக் காணவும் சென்றார்கள். வெகு பாடு பட்டும் இருவராலும் காண முடியவில்லை. அவர்கள் செருக்கும் ஒழிந்தது. உடனே அவர்கள் பணித்து அச் சுடரைப் பிரார்த்தித்து அம் மலையிலேயே இருந்து ஜனங்களுக்கு அனுக்கிரக்க வேண்டுமென்று வினவினர். அங்கே அப்படியே சிவபெருமான் இருந்தனர். ஆனால் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நக்ஷத்திரத் தன்று அம்மலை யுச்சியில் ஒரு ஜோதி காணப்படும் என்றும் கூறினார். கிருதயுகத்தில் அம்மலை யுச்சி அக்னி மயமாகவும், திரேதா யுகத்தில் பொன்மயமாகவும், துவாபர யுகத்தில் செம்பு வடிவமாகவும், இக் கலி யுகத்தில் கல் வடிவமாகவும், இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கடவுள் ஜோதிமயம் என்று வேதங்கள் வாதிக்கின்றன. அக்னியின் நாக்கு வழியாக நாம் கடவுளுக்கு நிவேத்தியம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஹவிர்பாகங்களை நாம் அக்னியில் ஹோமம் செய்தால் அக்னி அந்தந்தத் தேவதைகளிடம் சேர்ப்பிக்கிறது என வேதங்கள் கூறுகின்றன. அதனால் அச் சுடரே முக்கியம்.
அதை வருத்தில் ஒரு நாளாவது தியானித்து பூஜித்து சுக மடையவே இந்த திருக்கார்த்திகை எற்படுதப்பட் டிருக்கிறது. ஆகையால் அன்றைய தினம் யாவரும் கடவுளை ஜோதி வடிவமாக பிரார்த்தித்து சுக மடைவோமாக.

ஆனந்த போதினி – 1942 ௵ - நவம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment