Wednesday, August 26, 2020

 

ஆங்கிலமும் தமிழும்

 

      1. பஞ்ச காவியங்களில் முதன்மை பெற்றதும், சங்க நூல்களிலொன்று மாகிய ஜீவக சிந்தாமணி' என்னும் செய்யுட் காவியத்தை, செம்பூர் - வித் வான் ம - - ஸ்ரீ வீ. ஆறுமுகஞ் சேர்வையவர்கள் எளிய வசன நடையில் எல்லோரும் படித்தறியுமாறு 'ஜீவகன்' என்னும் பெயருடன் வெளியிட்டிருக்கிறாரென்று கேட்டு சந்தோஷங்கொண்டு, அப்புத்தகத்தை நமது ஆனந்தபோதினி ஆபீசிலிருந்து சில நாளைக்கு முன் வரவழைத்து, ஒரு நாட்காலை சுமார் 9 - மணிக்கு நான் அதை வாசித்துக்கொண்டிருந்த சமயம், என்னிடம் ஏதோ காரிய நிமித்தமாக வந்தவரும், S.S.I.C. பரீக்ஷையில் தேர்ச்சியடைந்து, தற்சமயம் உத்தியோகத்திவிருப்பவருமான என் நண்பரொருவர் பார்த்து ஆச்சரியமடைந்து, "இந்த திராவைகளை ஏன் கட்டிக்கொண்டு அழுகிறீர்? ஒரு அரை டஜன் ரயினால்ட்ஸ் நாவல் களை வரவழைத்தாலும் எல்லோரும் படிக்கலாமே" (Why do you bother yourself with these stuffs? Why not purchase some balf a dozen novels of Reynolds which may be useful to one and all?) அமரிக்கையுடன் வேடிக்கையாகவே தாம் கொண்ட கருத்தை வெளியிட்டதைக் கேட்டு எனக்கு ஆற்றொணாத் துயர முண்டாயிற்று. அந்தோ! முதல் இடை கடைச் சங்கப் புலவர்களாலும், சேர சோழ பாண்டிய மன் னர்களாலும், மற்றோராலும் நன்கு மசித்துக் கொண்டாடப்பெற்ற நம் தமிழ்ப் பாஷைக்குக் கடைசியில் இக்கதிவர நேர்ந்தது. ஈதல்லவோ காலத்தின் கொடுமை! நம் தமிழ்ப் பாஷைக்கு எக்குறைவினால் இது நேர்ந்தது? இராஜ பாஷையாயும், வயிற்று பாஷையாயுமில்லாத குறையினால் என ஒருவாறு தேர்ந்தேன்.

 

2. அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்ததும், முப்பாலை நமக்கறவே போதிப்பதுமாகிய தேவர் திருக்குறளுக்குச் சமமான நூல் ஆங்கிலத்திலுண்டா? நாலடியார், நால்வர் தேவாரம், தாயுமானவர், பட்டினத்தடிகள், இவர்கள் பாடிய பாடல்கள், ஆழ்வாராதிகளிய பற்றிய பாசுரங்கள் முதலியவைகளெல்லாம் நமக்கு மெய்ஞ்ஞானத்தைப் போதிக்கவில்லையா? இராமாயணம், பாரதம், பாகவதம், பக்தவிஜயம் முதலிய வசனநூல்கள் நாம் ஈடேறு மார்க்கத்தைக் காண்பிக்கவில்லையா? ஷேக்ஸ்பியர் முதலிய ஆங்கிலக் கவிகளால் இயற்றிய காவியங்களையும், ஸ்காட் முதலியவர்களால் இயற்றிய நாவல்களையும் வாசித்துத் தேர்ந்து சர்வகலாசாலையில் உயர்தரப் பட்டம் பெற்றதனாலேயே, ஆங்கிலத்தில் பூராவும் கரைகண்டு விட்டதாக எண்ணி, தமிழ் இருக்கும் இடத்தையே திரும்பிப் பாராதவர்களும், தமிழில் இன்ன புத்தகங்கள் தாமிருக்கின்றன, அவற்றில் இன்ன விஷயங்கள்தா மடங்கியிருக்கின்றனவென்று கண்டறிந்து கொள்ள சிரமப்படாதவர்களுமாகிய நம் தேயத்து ஆங்கிலப்பட்டதாரிகள னேகரிருக்கின்றார்கள். அவர்கள் தமிழ்ப் புத்தகத்தைக் கையில் தொடக் கூசுகிறார்கள். இவர்களா நம் தேயத்து நன்மையைக் கோருபவர்கள்? இவர்களால் நம் தமிழ்ப் பாஷை விருத்தி அடையுமா? ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்று உயர்ந்த பதவியிலிருக்கும் ஒருவரை, அவர் சிநேகரொருவர் இவர்தானா உமது பிரிய தந்தையார்' என வினவியதற்கு, இவர் எனது தூரபந்து' எனத் தன்னையீன்று பாதுகாத்து வந்த தந்தையையே வெறுத்துக் கூறின அறிவிலாக் கோடரிக்காம்பின் நடத்தையை ஒக்குமன்றோ இவர்கள் நடக்கை! இவர் தம்செயல்! ஏதோ வயிற்றுப்பிழைப்பிற்காக வேண்டி நம் ராஜபாஷையாகிய ஆங்கில பாஷையைக் கூடுமானவரை கற் றுத் தேர்ச்சியடைந்து உத்தியோகத்தி லமர்ந்து மெயில்'முதலிய ஆங்கிலப் பத்திரிகைகளன்றி, 'சுதேசமித்திரன்' ஆனந்த போதினி' முதலிய தமிழ்ப் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் ஏறெடுத்துப் பாராமல்'கண்டதே காக்ஷி, கொண்டதே கோல'மென்பதற்கிணங்க காலங் கழிக்கிறார்கள். இவர்களுக்குத் தாய் பாஷை எக்கதியாயினென்ன? ஆங்கிலப் பாஷையில் தேர்ச்சியடைந்தவரும், தமிழில் பாண்டித்யமடைந்த காலஞ் சென்ற டாக்டர் ஜீ. யூ. போப் என்ற ஆங்கில வித்வான் நம் தேவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சீமையில் வாசக சாலைகளிலொன்றில் வைத்திருக்கிறாரென்பது நம் தமிழின் பெருமையை விளக்கவில்லையா! ஆங்கிலேயரே நம் பாஷையைச் சிறப்பித்திருக்க, தமிழர்களாகிய நாம் ஏன் தமிழ்ப் பாஷையை அலட்சியம் செய்ய வேண்டும்? இஃது என்ன அறிவீனம்!

 

3. காலஞ்சென்ற மிஸ்டர் வீ. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரவர்கள் சர்வகலாசாலைப் பட்டம் பெற்றவராயிருந்தும், கிருஸ்துவ கலாசாலையில் தமிழ்ப் போதகாசிரியரா யிருந்திருக்கவில்லையா! மிஸ்டர் செல்வ கேசவராய முதலியாரவர்கள், மிஸ்டர் அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் ஆங்கிலப் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தும், இன்னும் தமிழ்ப் பாஷைக்காக உழைத்து வரவில்லையா! காலஞ்சென்ற மிஸ்டர் டி. இராம கிருஷ்ண பிள்ளையவர்கள், எக்ஸிகியூடிவ் இஞ்சினீயர் மிஸ்டர் மாணிக்க நாயகரவர்கள், காலஞ்சென்ற போஸ்டாபீசு சூபரிண்டண்டு மிஸ்டர் கன கசபை பிள்ளையவர்கள், சர்வகலாசாலைப் பட்டம் பெற்று துரைத்தன உத்தியோகஸ்தர்களாயிருந்தும் தமிழ்ப் பாஷையின் வளர்ச்சிக்காகப் பாடுபடவில்லையா! அப்படியிருக்க நாமேன் அலக்ஷியம் செய்யவேண்டும். நிறை குடம் நீர் தளும்பலில்', நாம் ஆங்கிலத்திலும் தேர்ச்சிபெறாது, தமிழிலும் தேர்ச்சி பெறாது இரண்டிலும் அரை குறையாகத் தெரிந்த இப்பந்திகளாகி இருதலைக் கொள்ளியிடர்ப்பட்ட எறும்பு போல் இங்குமங்கும் விழித்து காலத்தோடொத்து வாழ்'என்ற முதுமொழிக்கிணங்க ஆங்கிலத்தை விசேடித்து தமிழை அலக்ஷியம் செய்யும் பெருமை ஒரு பெருமையாமோ! வெளவால் கதி நமக்கேன்!

 

4. இந்து சாஸ்திரங்களை ஆராய்ச்சி செய்யாமலே இந்துமதம் உண்மையான மதமன்று என்ற பொய்யுறுதி கொண்டு, கிறிஸ்துமதமே உண்மையான மதம்; பக்தி மார்க்கத்தைப் போதிக்கும் மதமென்று யாதொரு உணர்ச்சியில்லாமல் பிதற்றும் பேதையரை யொக்குமன்றோ நம்மனோர்கள் ஆங்கிலத்தைச் சிறப்பித்துத் தமிழை இகழ்வது? நாம் நம் மதலைப்பருவத்தில் அம்மா'' அப்பா' என்று எந்தப்பாஷையில் உச்சரிக்கப் பெருமை கொண் டோமோ அந்தப் பாஷையை இடையில் அலட்சியம் செய்வதென்றால் அது இடையிலே வந்து துர்போதனைகளைப் போதித்து தலையணை மந்திரத்தை ஏற்றிய மனையாளின் வார்த்தையைக் கேட்டு, நம்மைப் பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டிப் பாலூட்டிக் காப்பாற்றிய தாயைக் கண்டபடி தூஷித்து இகழ்வதற் கொப்பாமன்றோ!

 

5. நேயர்களே! சுயநலங்கருதாது, யாதொரு ஊதியத்தையும் கவனியாது தமிழின் அபிவிர்த்தியே தன் நோக்கமென்று சுட்டாது சுட்டிக் குறைந்த சந்தாவிற்கு நமது ஆனந்தன்'மாதாமாதம் நம் எல்லோருக்கு முதவி வருகிறான். அதன் பத்திரிகாசிரியரைப் போல், நாமெல்லோரும் ஒருங்குகூடி ஆங்கிலத்தைக் கற்றபோதிலும் நம் தாய்ப் பாஷையாகிய தமிழ்ப்பாஷையை விருத்தியடைய வேண்டி, சிரமப்பட்டு தமிழ் மாதைப் போற்றினா லன்றோ நம் தமிழ் நாடு செழிப்படையும்.

 
                           வெ. பா. குப்புசாமி, பி. ஏ.

 

குறிப்பு: - நேயர்களே! இராஜ பாஷையாகிய ஆங்கில பாஷையை நம்மவர் கற்பதைப்பற்றி இப்போது நாம் குற்றங்கூறவில்லை. ஹிந்துக்களாகிய நமக்கு ஆன்மார்த்த பலன் முக்கியமானது. அந்த ஆன்மார்த்த நூல்களனைத்தும் நம் தாய்ப்பாஷையில் தான் இருக்கின்றன - வேறு பாஷைகளால் அவற்றிலுள்ள விஷயங்களை விளக்கிக்காட்ட முடியாது. அவ்வாறிருக்க ஹிந்து மதத்திற் பிறந்த ஒருவன் எங்கேனும் தன் தாய்ப்பாஷையை யலட்சியம் செய்வானோ? இத்தகையோர் தம் தாய்ப் பாஷையை இழிவு படுத்தி ஆங்கிலம் கற்றதால் தாங்கள் உயர்ந்த பாஷா நிபுணரெனக் கருதுவது " என் தாய் அவிசாரித்தான், நான் பத்தினி'' என்பது போலன்றோ விருக்கிறது. அத்தகையோர் ஆண்டவனருளுக்குப் பாத்திரராவாரோ நமது நண்பர், நிறைகுடம் நீர்தளும்பலில்' என்று மேலே கூறியது போல், அவர் குறித்துள்ள பி. ஏ., யம். ஏ. பட்டம் பெற்ற மேதாவிகளென்ன, டிப்டி கமிஷனர் ம - - - ஸ்ரீ திவான் பஹதூர் S. பவானந்தம் பிள்ளை யென்ன, இன்னும் அவர்போல் உயர்ந்த பதவியிலுள்ள ஆன்றோர்களென்ன, இவர்களெல்லாம் தங்கள் உத்தியோகத் தொழிலோடு தம் தாய்ப்பாஷையாகிய தமிழின் அபிவிர்த்திக்காக எவ்வளவோ சிரமமெடுத்துக்கொண்டு உழைத்து வருகிறார்கள் - தங்களுக்கு என்று மழியாப் புகழுடம்பைத் தாங்களே சிருட்டித்துக்கொள்கிறார்கள்.

 

அவ்வாறிருக்க, ஒரு ஆங்கில வாக்கியத்தைச் சரியாகத் தமிழ்ப்படுத்த வும் தெரியாத அரைகுறை ஆங்கிலங்கற்றவர்களில் பலர், தாய்ப்பாஷையை யலட்சியம் செய்து அவமதிப்பது என்ன துன்மதியாலோ நாமறியோம். நம் சகோதரர்களாகிய இவர்கள் இத்தகைய அழிவிற்கு ஆளாவது மிகவும் துக்கிக்கத்தக்க விஷயமாகும். அந்தோ! இவர்கள் தங்கள் இயற்கை அறிவால் ஆலோசித்துப் பார்க்கலாகாதோ.

 

இவ்வுலகில், தங்கள் தாய்ப்பாஷையை யலட்சியம் செய்த எந்தச் சாதியாரேனும் க்ஷேமமடைந்த துண்டோ? பிரத்தியட்சத்தில் உலகில் சிறப்புற்றிருக்கும் ஜாதியாரனைவரும் தங்கள் தாய்ப்பாஷையைப் பக்தியோடு போற்றி வழிபடுகிறவர்களல்லவோ? தாய்ப்பாஷையை யலட்சியம் செய்வோன் பெற்றதாய்க்கே துரோகம் செய்பவனல்லவோ? அவனடையும் தண்டனையே யிவனு மடைவானன்றோ. அன்னியபாஷையை யெவ்வளவு கற்றாலும் ஜீவனத்திற்கு மட்டும் அது இவர்களுக்குதவு மன்றி மறுமைப் பயனுக்கு எள்ளளவேனு முதவாதென்று இவர்கள் புத்தியில் புலப்படாத தென்னையோ? இவர்கள் புண்ணிய பூமியாகிய இந்நாட்டில், என்று மழிய முடியா உண்மைகளையுடைய சத்தியமதத்திற் பிறந்து, கடைசியில் ஹிந்துக்களுடைய சுபாவத்திற்கு மாறாக ஆன்மார்த்த பலனை யலட்சியம் செய்து, "கண்டதேகாட்சி, கொண்டதே கோலம்" என்னும் உலகாயுதப் படுகுழியில் விழவிரும்புகிறார்களோ? அந்தோ!

 

பெற்றோர்கள் தம்மக்களுக்கு ஆரம்பத்தில் தாய்ப்பாஷையையும், மதக்கல்வியையும் முன்னாடிக் கற்பித்தால் நமது சந்ததியார் இத்தகைய கேடடையும் பாதையில் பிரவேசிக்க நேரிடாது. பாடசாலைகளிலுள்ள உபாத்திமார்களெல்லாம் சற்றேறக் குறைய ஹிந்துக்களே. இவர்களும் நமதுமதம், தாய்ப்பாஷை, தாய்நாடு இவற்றின் க்ஷேமத்தைக்கருதி, இவ் விஷயத்தில் சற்று முயற்சி யெடுத்துக்கொண்டு நம் மாணவர்களுக்குத் தக்க போதனையைச் செய்வார்களாயின் இந்த ஆபத்து நம்மக்களையணுகா தென்பது நிச்சயம். கருணாநிதி யருள் புரிவாராக.

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - அக்டோபர் ௴

 

   

 

No comments:

Post a Comment