Wednesday, August 26, 2020

 

இயற்கை யின்பம்

 

இயற்கை! இயற்கை! இவ்வுலகில் எங்கு நோக்கினும் இயற்கைக்காட்சியே இன்பமளிக்கிற றது. மாசு மறுவற்ற நீல நிற வானம் மக்களுள்ளத்தில் மகிழ்ச்சியை எழுப்பும். அவ்வானத்தில் இறைக்கப்பட்ட வைரக் கற்களென ஒளிவிடும் மீன் கூட்டங்கள் பார்ப்பவர் மனதிற்குப் பாவசமளிக்கும். பெரிய மரங்களும் சிறிய செடிகளும் பசிய கொடிகளும் படர்ந்துள்ள மலைகளின் தோற்ற மாண்பை என்னென்று வருணித்துக் கூறுவது.

 

மக்கள் வாழ்க்கைக்கு மனவமைதி வேண்டற்பாலது. மனவமைதியிலேயே அறிவின் தெளிவு அமைந் துள்ளது. அறிவு தெளிந் தால் மக்களால் தத்தம் வினைகளைச் செவ்வனே செய்ய வியலும்.

 

மனிதன் இவ்வுலகில் என் பிறந்தான்? நாள் முழுவதும் உழைத்துப் பொருள் தேடி, உண்டு, உடுத்து வீணே இறந்துபடுவதற்கேயோ? இல்லையில்லை. பின் எதற்கு? தன் அறிவின் துணைகொண்டு இறைவனுடன் ஒன்றித்து இன்பமடைவதற் கன்றோ? அங்ஙனமாய இன்பத்தை அடைய வேண்டுமானால் மனிதன் மனவமைதி கொண்டு அறிவின் தெளிவு பெறல் வேண்டும். அறிவின் தெளிவிலேயே ஆண்டவன் காட்சி அமைந்துளதென்று அறிஞர் சாற்றியுள்ளனர்.

 

மனவமைதி யாண்டுக் கிடைக்கும்? இயற்கை நலஞ் செறிந்த இமெங்கோ ஆண்டு மனவமைதியைப் பெறலாகும்.

 

பழங்காலத்தில் இறைவனைக் காண எண்ணங் கொண்ட முனிவர்கள் காட்டுக் கோடியது ஏன்? இதை நாம் சிறிது சிந்திப்போமானால் உண்மையை உணருவோம்.

 

நாடு, நகரம் என்பன மனிதனின் இணையற்ற செயற்கைத் தொழிலால் இயன்றவையாம். காடோ அங்ஙனமன்று. இறைவனின் இன்கருணையால் இயற்கையிலமைந்தது என்போம். மனிதனது செயற்கைக் காட்சி சிறிது நேர இன்பமே பயப்பது. இறைவனது இயற்கைக் காட்சியோ காணுக்தோறும் காணுந்தோறும் உள்ளக் கிளர்ச்சியை யுண்டாக்கிக் குன்றா மகிழ்ச்சியைக் கொடுப்பது; மனவமைதியைத் தரவல்லது. இக்காரணத்தினாலேயே மனவமைதிபெற எண்ணியோர் இயற்கை நலஞ் சிறந்த காட்டுக் கோடினர்; ஓடுகின்றனர்.

 

மலர்களின் வருணங்கள் எத்தனை விதம்! அவற்றின் மீதுள்ள வேலைத்திறத்தை எந்தத் தாவர வல்லுநனால் அறியக்கூடும்? அவற்றின் வண்ணங்களை எந்தச் சித்திரக்காரனால் கண்டுபிடிக்க வியலும்? நறுமண வகைகளை எவராலாவது பிரித்து மொழிய முடியுமா? அவற்றின் பின்னல்களையும், பொருத்துக்களையும், அடுக்குகளையும் எந்த நெய்தல் வேலைக்காரன், எந்தத் தையல் வேலைக்காரன் பிரித்துக் கூட்டுவான்? அவற்றினின்று துளிக்கும் தேனின் சுவையானது இத்துணை விதமென்று பிரித்துச் சொல்லவல்லவன் யார்?

காய், கனிகளின் தன்மைகளையும், ஆகும், ஆகாதென்பதையும் எந்தமருத்துவன் எடுத்துக்கூறி வரையறுக்க மாட்டுவான்? தும்பிகள், வண்டுகள் முதலானவைகளின் பிரிவுகளை எத்தனை யென்று உறுதி செய்ய முடியுமா? அவற்றின் வரிச் சிறைகளை எந்தெந்த மாதிரி யென்று தெரிந்து கொள்வது? வைரமென ஒளிவிடும் சில சாதிவண்டுகளின் வண்ண விநோதங்களை எந்த மொழி கொண்டு வருணிப்பது? அவற்றின் பொற்பூச்சு, பளிங்குப் பூச்சுக்களைப்போல் எந்தச் சித்திரப் பூச்சுக்காரனால் பூச முடியும்? அலர்க்துள்ள மலர்களில் தாவிச் சுழன்றிடும் அவ்வண்டுகளின் தொழிலை என்ன வென்று மதிக்கலாம்? அவைகளின் ரீங்கார ஒலிக்கு எந்த இசை முன்னிற்கும்?

 

பறவைகளின் உருவ வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள யார் திறமை பெற்றிருக்கிறார்கள்? அவற்றின் இறக்கைகளில் தோன்றும் மின்மினிப் பென்ன! கலாபங்களென்ன! தூபிகளென்ன! கழுத்தில் தோன்றும் வானவில்லின் சாயலைப் போன்ற வரிவடிவுகளென்ன! கொண்டைகளின் விநோதமென்ன! கால்களின் நிறங்களென்ன! இவற்றையெல்லாம் யாரால் பிரித்துரைக்கவியலும்? அவற்றின் ஆட்டங்களையும், அசைப்புக்களையும், ஊஞ்சலாடுந் தன்மையையும் எந்த நாட்டியக்காரன் கணக்கிட்டெழுதுவான்? அல்லது எந்தத் தேவதாசி ஆடிக்காண்பிப்பாள்? அவைகளில் ஆணும் பெண்ணும் கூடி ஒற்றுமையாய் வாழ்வதைப்போல் எந்தத் தலைவன் தலைவியிருக்க முடியும்?

 

இங்ஙனமே இறைவனின் எண்ணிறந்த படைப்புக்களின் அதிசய, வேறுபாடுகளைக் கூர்ந்து நோக்க நோக்க நமது உள்ளத்தில் சிந்தனை யூற்றுப்பெருக்கெடுத்து ஓடுவதைக் காண்போம். அதிலிருந்து நமது அறிவு விரிவடைந்து இறைவனின் காட்சியில் விழைவு கொள்வோம். அவ்விழைவு நம்மை இறைவனின் இன்னடிக்கு ஈர்த்துச் செல்லுமென்பதில் ஐயம் யாதுளது? மனிதன் இக்காட்சியில் இன்புறுதற் கல்லது இவ்வுலகில் எதற்குத் தோன்றினான்? மனிதனே! விழிப்படைக! எங்கணும் பரந்துள்ள இயற்கைத் தோற்றங்களைக் கண்குளிர நோக்குக! இயற்கையில் இன்புறுக! இறைவனைக் கண்டிடுக!

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment