Wednesday, August 26, 2020

 

இந்தியாவில் ஜனங்கள் ஆட்சி செய்த விதம்

 

இவ்வுலகம் (1) ஆசியா, (2) ஐரோப்பா, (3) அமெரிக்கா, (4) ஆப்ரிக்கா, (5) ஆஸ்திரேலியா என ஐந்து கண்டங்களாகப் (பாகங்களாகப் பிரிக் கப்பட்டிருக்கின்றன. இந்தியா, சீனா, ஜப்பான், பெர்ஷியா, பிலிப்பைன் தீவு ஆகிய இத்தேசங்கள் ஆசியாகண்டத்திலிருக்கின்றன; இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய சிலதேசங்கள் ஐரோப்பா கண்டத்திலிருக்கின்றன.

 

கிறிஸ்தவப் பாதிரியார் ஜெ. டி. சண்டர்லண்ட் அவர்கள் 'இந்தியன்ரிவியூ' பத்திரிகையில் பின்வருமாறு எழுதியுள்ளார்: -

 

ஆசியாவில் மன்னர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்தனரென்றும், அவர்கள் தங்கள் இஷ்டப்படி அதிக வீம்பு செலுத்தினரென்றும், அரசாங்க விஷயமாக ஜனங்களுக்கு யாதொரு அதிகாரமு மில்லையென்றும், ஜனங்கள் இஷ்டப்படி ஆட்சி நடைபெறவில்லை யென்றும், தங்கள் இஷ்டப்படி ஆட்சி நடைபெறவேண்டு மென்னும் எண்ணம் அந்த ஜனங்களுக்கில்லை யென்றும், தங்கள் நாட்டைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வதற்கு அந்த ஜனங்களுக்குத் திறமையில்லையென்றும் ஐரோப்பா அமெரிக்கா ஜனங்கள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள். விவகாரம். இவ்விதம் இருக்கிறபடியால்தான் இங்கிலாந்து அரசாங்கத்தார் இந்தியாவை ஆட்சி புரிகிறார்களென்று கூறப்படுகிறது. இங்கிலாந்து அரசாங்கத்தார் இந்தியாவில் ஆட்சி புரிவதை விட்டுவிட்டால் இந்தியர்கள் பூர்வம் போல் கொடுங்கோல் ஆட்சியை அங்கு ஏற்படுத்தி வருவார்களென்றும், ஐரோப்பியர்கள் நாகரீகமடைந்ததன் பயனாக அவர்கள் தேசங்களில் தான் ஜன ஆட்சி ஏற்பட்டதென்றும், இன்னும் வருஷம் நூறானாலும் ஆசியா ஜனங்கள் தங்கள் தேசங்களில் ஜன ஆட்சியை ஏற்படுத்தக்கூடுமென்றாவது, அத்தகைய ஆட்சி புரிய அவர்கள் திறமை வாய்ந்தவர்களா யிருப்பார்களென்றாவது அல்லது அத்தகைய ஆட்சி புரிவதற்கு அவர்கள் பிரியப்படுவார்களென்றாவது நினைப்பதற் கிடமில்லை யென்றும் பிறநாட்டார் கூறுகிறார்கள். இந்தியர்களைப் பற்றியும் ஆசியாவிலுள்ள ஜனங்களைப் பற்றியும் இவ்வாறு கூறப்பட்ட விஷயங்கள் உண்மையானவைகளா? ஆசியாவில் நடைபெற்ற விவகாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், மேற்கூறப்பட்ட விஷயங்கள் உண்மையானவைகளல்ல வென்பது இனிது புலனாகும்.

 

பிலிப்பைன் தேசத்தார், தங்கள் நாட்டில் ஸ்பெயின் தேசத்து அரசாங்கத்தார் செய்த கொடுமையான ஆட்சியை விலக்கித் தங்களுக்குரிய சுதந்திரத்தை யடைந்த போது என்ன செய்தனர்? மன்னர் ஆட்சியையா ஏற்படுத்தினர்? அல்ல. அவர்கள், ஜனஆட்சி ஏற்படுத்தி, அத்தகைய ஆட்சி நிகழும் அமெரிக்காதேசத்தில் அரசாட்சி விஷயமாகவும் சட்டசபை அங்கத்தினர்களை நியமிக்கும் விஷயமாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டத்தைப் போன்ற சட்டம் ஏற்படுத்தினர்.

சீனாக்காரர்கள் தங்கள் தேசத்தில் மான்சுகாரர்களின் ஆட்சியை விலக்கிய போது என்ன செய்தனர்? அவர்கள் உடனே மன்னர் ஆட்சியை ஏற்படுத்தாமல் ஜன ஆட்சியை ஏற்படுத்தினர். அவர்கள் நாட்டில் சில அயல் நாட்டு அரசாங்கத்தார்கள் அவர்களுக்குப் பல இடையூறுகள் விளைவிப்பதால், அவர்கள் நாட்டிலுள்ள ஜனங்களை ஒன்றுபட்டவர்களா யிருக்கும் படிக்கும் அவர்கள் நாட்டில் அரசாட்சி செவ்வையாக நடைபெறும் படிக்கும் செய்ய அவர்களுக்குச் சாத்தியப்படாவிட்டாலும், அவர்கள் நாட்டில் ஜன ஆட்சி செவ்வையாக நடைபெறவேண்டுமென்று அவர்கள் கொண்டுள்ள எண்ணத்தை அவர்கள் விட்டுவிட உத்தேசிப்பதாகத் தெரியவில்லை.

 

தங்கள் நாட்டின் ஆட்சியைத் தங்கள் நாட்டாரே நடத்த வேண்டுமென்று பெர்ஷியா தேசத்திலுள்ள ஜனத்தலைவர்கள் நீண்டகாலமாக எண்ணங்கொண்டவர்களா யிருக்கிறார்கள். அந்நாட்டில் சில ஐரோப்பிய அரசாங்கத்தார்கள் ஜனங்களுக்கு விரோதமாகப் பலகாரியங்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்துவராவிடில், பெர்ஷியா நாட்டில் ஜன ஆட்சி பல வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டிருக்கும்.

 

துருக்கிதேசத்தாரைப் பற்றிச் சற்று யோசிப்போம். அவர்கள் 1914-18ம் வருடத்திய யுத்தம் முடிந்து, சில ஐரோப்பிய அரசாங்சுத்தார்களின் சாவகாசத்தை விலக்கியபின் கூடிய சீக்கிரத்தில் தங்கள் நாட்டில் மன்னர் ஆட்சியை ஏற்படுத்தாமல் ஜன ஆட்சியை ஏற்படுத்தினர்.

 

ருஷ்யா தேசத்து ஜனங்களைப்பற்றிச் சற்று இப்போது கவனிப்போம். அவர்கள், தங்கள் நாட்டில் அரசு புரிந்து கொண்டு வந்த மன்னரை விலக்கியதும் என்ன செய்தனர் ? இன்னொரு மன்னரை நியமித்தார்களா? இல்லை. அவர்கள் ஜன ஆட்சியையே ஏற்படுத்தினர்.

 

இந்தியர்களைப் பற்றி யோசிப்போம். அவர்கள் இப்போது, தங்கள் நாட்டில் இங்கிலாந்து அரசாங்கத்தார் ஆட்சி செய்வதை விலக்க எத்தனஞ் செய்வதனால், அவர்கள், தங்கள் நாட்டாரில் ஒருவரை மன்னராக நியமித்து அந்த மன்னர் அதிகாரத்திற்கு உட்பட்ட ஆட்சியையாவது அல்லது தங்கள் நாட்டு ஜனங்களின் ஒரு சார்பாரின் கொடுமையான ஆட்சியையாவது ஏற்படுத்த உத்தேசிப்பதாக ஏதாவது அறிகுறிகள் தோன்றுகின்றனவா? இல்லை. இந்தியாவில் இங்கிலாந்து அரசாங்கத்தாரின் ஆட்சிக்கு உட்பட்ட பாகத்திலுள்ள ஜனங்கள் எல்லோரும் தங்கள் நாட்டில் ஜனங்களுக்கு அனுகூலம் ஏற்படுவதற்கு ஜனங்களால் நடத்தப்படக்கூடிய ஜன ஆட்சியே ஏற்பட வேண்டுமென்று எண்ணங் கொண்டவர்களா யிருக்கிறார்கள். அதாவது: அமெரிக்கா தேசத்திலுள்ள இராஜ்யங்களிலும் கனடா தேசத்திலுள்ள மாகாணங்களிலுமிருக்கும் ஜனங்களைப் போல இந்தியாவிலுள்ள மாகாணங்களிலும், இந்திய மன்னர் இராஜ்யங்களிலுமுள்ள ஜனங்கள் தத்தம் இராஜ்யத்திலும் மாகாணத்திலும் ஆட்சிபுரிந்து அவர்கள் எல்லோரும் ஒன்றுபட்ட ஒரு பெருத்த தேசத்தாராயிருக்க வேண்டு மென்னும் எண்ணங் கொண்டவர்களா யிருக்கிறார்கள். விவகாரம் இம்மாதிரியா யிருக்கையில், ஆசியாவிலுள்ள ஜனங்கள், தங்கள் நாடுகளில் தாங்களே ஆட்சி செய்ய விரும்பவில்லை யென்றும், அவ்வாறு ஆட்சி செய்ய அவர்கள் தகுதியுடையவர்களல்ல வென்றும் , ஆசியாவிலுள்ள ஒரு தேசத்தின் ஜனங்கள், தங்கள் நாட்டின் அரசாட்சியை நடத்துவதற்குத் தகுதியில்லாதவர்களா யிருப்பதனால் இந்தியர்களும் தங்கள் நாட்டின் அரசாட்சியை நடத்துவதற்குத் தகுதியில்லாதவர்களா யிருக்கிறார்களென்றும் கருதப்படுவது தவறென்று நன்றாக விளங்குகிறது. சரியான தகவல் என்னவெனில், உலகில் முதன் முதலில் அரசாட்சி விஷயமாக அதிகாரம் வகித்திருந்து அரசாட்சி புரிந்தவர்கள் ஐரோப்பியர்களல்ல வென்றும், அவ்வாறு ஆட்சி புரிந்தவர்கள் ஆசியாக்காரர்களென்றும் தெரியவருகிறது. பூர்வீக சரித்திரங்கயா வாசிக்கையில், ஆதியில் இந்திய ஜனங்கள், தங்கள் நாட்டில் ஆட்சி புரிந்து வந்ததைக் கண்டு, அமெரிக்கா தேசத்து ஜனங்களும் ஐரோப்பாவில் சில தேசங்களின் ஜனங்களும் தங்கள் நாடுகளில் ஆட்சிபுரிய முற்பட்டார்களென்று விளங்குகிறது. இந்தியாவில் புத்தர் அவதரித்திருந்த காலத்தில், அதாவது சுமார் 2500 - வருடங்களுக்கு முன் இந்தியாவில் ஜனஆட்சி நடைபெற்றது. ஆசிரியர் (புரபசர்) ரைஸ்டேவிட்ஸ் அவர்கள் 'புத்தமத இந்தியர்கள்' என்று பெயரிட்டு வெளிப்படுத்திய புத்தகத்தில், வட இந்தியாவில் ஜன ஆட்சி நடைபெற்ற பத்து இராஜ்யங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த இராஜ்யங்கள், மேற்கே பஞ்சாபிலிருந்து கிழக்கே பீரார் வரையிலும், வடக்கே நேபாளத்திலிருந்து மத்திய மாகாணத்தின் தென்எல்லைப்புறம் வரையிலுமிருந்தன. ஆதியில் இந்தியாவில் ஜன ஆட்சி குறைந்த பட்சம் ஆயிரம் வருடங்கள் வரையில் நடை பெற்றது. அவ்வளவு வருடங்கள் வரையில் அத்தகைய ஆட்சி வேறே எந்தநாட்டிலாவது நடைபெற்றதாகத் தெரியவில்லை.

 

இந்தியர்கள் ஆதியில் தங்கள் நாட்டின் அரசாட்சியை நடத்தியதன்றி, தங்கள் நாட்டின் அரசாட்சியைத் தாங்களே நடத்த வேண்டுமென்றும், தாங்கள் வேறே ஒரு தேசத்து அரசாங்கத்தாருக்கு அடங்கினவர்களாயிருக்கக் கூடாதென்றும் அதிக வைராக்கியங் கொண்டவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஆதியில் இந்த வைராக்கியத்தைப் பல வழிகளில் காட்டியிருக்கிறார்கள். ஆதிகாலத்திய ஆரியர்கள், சுமார் 3500 - வருடங்களுக்கு முன்னர், அரசாங்கத்தார், அதாவது, மந்திரிகள் ஜனங்களால் நியமிக்கப்பட்டவர்களாயிருக்க வேண்டுமென்னும் கருத்து கொண்டவர்களாயிருந்ததாக வேதப்புராணங்களில் காணப்பட்டிருக்கிறது.

 

இந்தியாவில் உதித்து சுமார் 1500 - வருடங்கள் வரையில் வாழ்ந்து வந்த புத்தர்கள், ஜனங்களுக்குரிய விவகாரங்களை, அதாவது, அரசாங்கக் காரியங்களை ஜனங்களே கவனிக்க வேண்டுமென்னும் கருத்து வாய்ந்தவர்களாயிருந்தார்கள். அவர்கள் இந்திய நாட்டிலிருந்து மறைந்த பிறகும் ஜன ஆட்சிக்குரிய காரியங்களை ஜனங்கள் செய்து வந்தார்கள்.
 

வேறே ஒரு நாட்டில் வசிக்கும் முகமதியர்களை விட பன்மடங்கு அதிகமான முகமதியர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். அவர்கள், புத்தர்கள் கருத்து கொண்டிருந்தது போலவே, அரசாங்க விவகாரங்களை ஜனங்களே கவனிக்க வேண்டுமென்னும் கருத்து கொண்டவர்களாயிருக்கிறார்கள். அவர்களையும் கிறிஸ்தவர்களையம் ஜனஆட்சி விஷயமாக ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்கள், அவ்விஷயத்தில் பிந்தியவர்களை விட அதிக பற்று கொண்டவர்களா யிருக்கிறார்கள்.

 

இந்துக்கள் பல ஜாதியர்களாகப் பிரிந்திருந்த போதிலும் அவர்கள், தத்தம் ஜாதியார் விஷயத்தில் அபிமானமும் பற்றும் கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

இந்திய ஜனங்கள், தங்களுக்குரிய காரியங்களைத் தங்களிஷ்டப்படி நடத்திக் கொள்ள வேண்டுமென்னும் வைராக்கியம் அந்த ஜனங்களுக்கு ஏற்படும்படியாகவும், அவர்களுக்கு எந்நாளும் அந்த வைராக்கியமிருக்கும்படியாகவும் செய்தவர்கள் எங்கும் வியாபகமாயிருந்த கிராமவாசிகளாவர். அவர்கள், சுமார் 3000 - வருடகாலமாக ஜனங்களைச் சுயஆட்சிக்குரிய விவகாரங்களில் திறமையுடையவர்களாயிருக்கச் செய்து வந்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்தபடியால் தான், இந்திய ஜனங்கள் அரசாங்கச் சட்டப்படி நடக்கிறார்கள்; நிம்மதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

 

இந்தியா, பெரும்பாலும் ஒரு விவசாய நாடாகும். அந்நாட்டு ஜனங்களில் 100 - க்கு 80 – பேர்களுக்கு மேல் பயிர்செய்து ஜீவனஞ் செய்பவர்களாவர். அவர்கள், இந்தியாவிலுள்ள சுமார் 6,50,000 கிராமங்களில் வசிக்கிறார்கள். அவர்கள், இங்கிலாந்து தேசத்திலுள்ள நகரவாசிகளைப் போல் தங்களுக்குரிய காரியங்களைத் தாங்களே நடத்திக் கொள்ளுகிறார்கள். அவர்களைப் பற்றி சர்சார்லஸ் மெட்காப் பின்வருமாறு கூறியுள்ளார்: -

 

''இந்தியாவிலுள்ள கிராமவாசிகள், மற்றவர்களின் தயவை நாடாமல், தங்களுக்கு வேண்டியவற்றைத் தாங்களே தேடிக்கொள்ளுகிறார்கள். வேறே ஒன்றும் நிலையாய் நிற்காமலிருக்கையில் அவர்கள் ஒரே நிலையாயிருக்கிறார்கள். ஒரு மன்னனுக்குப் பின் இன்னொரு மன்னனாக மன்னர்கள் ஒழிந்து விடுகிறார்கள்; அரசாட்சி விஷயமாக ஒரு மாறுதலுக்குப்பின் இன்னொரு மாறுதலாக மாறுதல்கள் ஏற்படுகின்றன; ஆனால் கிராம வாசிகள் ஒரே நிலையில் நிற்கிறார்கள். அவர்கள் நாட்டு அரசாட்சி விஷயமாகப் பல மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் அந்நாட்டு ஜனங்கள் நிலைத்திருக்கிறார்க ளென்றும், அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களென்றும், தங்களிஷ்டப்படி பலகாரியங்கள் செய்து கொண்டு வருகிறார்களென்றும் நான் நினைக்கிறேன்.''

 

ஆதி காலத்திலிருந்து இந்தக் கிராமவாசிகள், தங்கள் கிராம உத்தியோகஸ்தர்களை நியமித்து, கிராமத்தாருக்குரிய விவகாரங்களைக் கவனித்து வந்தனர். ஆதியில் ஐரோப்பாவில் இங்கிலாந்து பிரான்ஸ் முதலிய நாடுகளில்மன்னர்கள் அதிக கொடுமையாக ஆட்சி புரிந்து வந்ததுபோல் இந்தியாவிலும் மன்னர்கள் ஆட்சி புரிந்தது உண்மைதான். ஆனால், இங்கிலாந்து அரசாங்கத்தார் இந்திய நாட்டில் அரசாட்சி செய்ய முற்பட்ட காலத்திற்கு முன் அந்நாட்டில் இந்திய மன்னர்கள் ஜனங்கள் சுதந்தர விஷயத்தில் அதிக அரிதாகத்தான் தலையிட்டார்கள். தங்களுக்குரிய விவகாரங்களைத் தாங்களே கவனிக்க வேண்டுமென்னும் வைராக்கியங் கொண்டிருந்து, அந்த வைராக்கியத்தை விடாமலிருந்த கிராமவாசிகளின் கிராம நிர்வாக விஷயத்தில் இந்திய மன்னர்களாவது அல்லது சக்ரவர்த்திகளாவது அதிக அரிதாகத்தான் பிரவேசித்தார்கள்.

 

இவ்வாறு, தங்களுக்குரிய விவகாரங்களைத் தாங்களே கவனிக்கும் விஷயமாக சுமார் 3000 -வருடகாலமாகப் பழகி வந்த இந்தியர்கள் இன்று, தங்கள் நாட்டின் அரசாட்சியைத் தாங்களே நடத்தக்கூடுமென்று நினைப்பது தவறா?

 

ஆதியில் அமெரிக்கா ஜனங்கள் வேறொரு தேசத்து அரசாங்கத்தாருக்கு உட்பட்டிருந்த காலத்தில், தங்களுடைய நகர கூட்டத்தில் ஒன்றுகூடி யோசித்து, தங்களுக்குரிய விவகாரங்களைத் தாங்களே கவனித்து வந்ததனால் அவர்களுக்கு ஏற்பட்ட பழக்கத்தையும் அனுபவத்தையுங் கொண்டு அவர்கள் பிறகு தங்கள் நாட்டின் அரசாட்சியை நடத்துவதற்குத் தகுதியுடையவர்களாயிருந்தார்களென்று நமது அமெரிக்கா சரித்திரக்காரர்கள் கூறுகிறார்கள்.

 

அது உண்மையானால், இந்திய ஜனங்கள் அமெரிக்கா ஜனங்களைப் போல், தங்களுடைய கிராம நிர்வாகத்திற்குரிய அலுவல்களைத் தாங்களே கவனித்து, தங்கள் நாட்டின் அரசாட்சியை நடத்துவதற்குப் பயிற்சி பெற்றிருப்பதைப்பற்றி என்ன சொல்வது?

 

ஆதியில் அமெரிக்கா தேசத்தில் நகரவாசிகள் நகர கூட்டத்தில் தங்களுக்குரிய விவகாரங்களைப் பற்றி யோசிப்பதற்கு யாரிடமிருந்து கற்றுக் கொண்டனர்? அவர்கள் இங்கிலாந்து தேசத்தாரிடமிருந்தும், இங்கிலாந்து தேசத்தார். ஜெர்மனி தேசத்தாரிடமிருந்தும் கற்றுக் கொண்டதாக அமெரிக்கா சரித்திரக்காரர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஜெர்மனி தேசத்தாரைக் குறிப்பிட்டுவிட்டு நின்று விட முடியாது. அவர்கள் ஆதிபீடத்தைக் கண்டறிவதற்கு ஆசியாவிலும், இந்தியாவில் கிராமங்களிலும் நிகழ்ந்த விவகாரங்களை அறிய வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியர்கள் அமெரிக்காதேசத்தாருக்கு வழிகாட்டினவர்களாயிருக்கிறார்கள்.

 

மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களிலிருந்து ஆசியாவிலுள்ள ஜனங்களும் இந்திய ஜனங்களும் ஐரோப்பியர்களைப் போலத் தங்களுக்குரிய விவகாரங்களைத் தாங்களே கவனித்து வந்தார்களென்று ஏற்படவில்லையா? இந்த விஷயம் அதிக அவா உண்டாக்கும் விஷயமாகும் எந்தக் கண்டத்தில் முழுவதிலும் ஜன ஆட்சி முதலில் ஏற்படும்? ஐரோப்பாவிலா அல்லது ஆசியாவிலா?

 

M. பார்த்தசாரதி

 

ஆனந்த போதினி – 1927 ௵ - அக்டோபர் ௴

 

 

 

No comments:

Post a Comment