Monday, August 24, 2020

 அகம்புறக்காட்சி விளக்கம்

 

சுத்த சத்திய சமரச சன்மார்க்க நேயர்காள்!

 

மகா கடல் சூழ்ந்த இப்பிரபஞ்சத்தின்கண் புறக்காட்சி அகக்காட்சி யென்றிரண்டு வகையுள்ளன. அவற்றில் புறக்காட்சி யென்பது கண்ணுக்கே தோற்று முருவாயிருக்கின்றது. அகக்காட்சி யென்பது கருத்துக்கே தோற்றும் சூட்சும வஸ்துவாயிருக்கின்றது. இந்தக் காட்சிகளிரண்டில் நின்றும் புறக்காட்சியான மழையைப்பற்றி ஆராய்வாம். இது ஒரே இனமாயினும் பல தோற்றங்களைக் கொண்டுளது. அவற்றில் இரண்டு வகையான காட்சிகளை மட்டும் விவகரிக்கின்றேன்.

 

1 - வது தூலாகாயத்திலிருந்து பெய்யும் மழையானது சமுத்திரத்தின்கண் வசிக்கும் சிப்பியின் வாயிற் றங்குஞ் சிறு திவலையாய் நாளடைவில் முத்தாய்விடுகின்றது. அதன்கண் வெண்மேகம் போன்ற சோதி பிரகாசிப்பதினால், அது, அரசர்கள் முதல் தாழ்ந்த மனிதர்கள் வரையிலுள்ள எல்லாருடைய மனதையுங் கவர்ந்து கொள்ளும் ஒருவித சக்தியும், அழகும் வாய்ந்திருக்கின்றது. இன்னும் அது இவ்வுலகங்களை யெல்லாம் பகுதி பகுதியாக ஆண்டு கொண்டிருக்குங் கிரீடாதிபதி முதல் சிற்றரசர் வரை தம் தம் சிரமேல் வைத்திருக்கும் படியான கிரீடங்களைச் சூழ்ந்திருந்து சொல்லரிய பிரகாசத்தைத் தருகின்றது. அவர்களின் கண்டத்தில் போடும்படியான சரப்பணி மாலைகளாகவும் விளங்குகின்றது. அவர்களிருந்து அதிகாரஞ் செய்யும்படியான சிம்மாசனத்திற் பதியவைத்து, பார்ப்பவர்களின் கண்களையெல்லாம் மயங்கச் செய்கின்றது. இதுபோல் மற்றும் ஏனையோர்களான சர்வசாதிகளும் தம் தம் தகுதிக்குத் தக்கதாய் வாங்கியவர்களிஷ்டம் போல் பூடணஞ் செய்து அணிவதற்கு மிகவும் விருப்பமுள்ளதாயிருக்கின்றது. வைத்தியர்களால் அனேக மருந்துகளில் சேர்க்கப்பட்டு சக்தியில்லாதவர்களுக்குச் சக்தியும், சரீரதேஜஸும் உண்டுபண்ணத்தக்க தாயிருக்கின்றது.

 

2 - வது. அம்மழைநீர்த் திவலை அரவின் வாய்களிற்றங்கும் போது கொடிய விஷமாகமாறி, சீவராசிகளுக்குப் பிராணாபத்தையுண்டாக்குகிறது. மற்றும் இவ்வரவைக்காணும் ஜீவராசிகள் மிரண்டோடத்தக்க பயமும் திகிலும் அடைய நேர்கின்றது. இதின் பெயர் நல்ல பாம்பென்று உலகத்தில் சொல்லும் வழக்கமிருக்கினும் இதின் கெடுதி காரணமாய் மிகவுங் கொடியதென்று கூறி இகழவு மேற்படுகின்றது. மனிதர்கள் வசிக்குமிடங்களில் சர்ப்பம் காணப்பட்டால் அதைக் கைப்பற்றுமளவும் அவ்விடத்தி லெவரும் பிரவேசிப்பதில்லை. அது சென்றவிடங்களி லதினடையாள மிருக்கக் கண்டாலும் உடனே சந்தேகமுண்டாகி விலகியோட நேர்கின்றது. இன்னுமிதின் வடிவங்காணாத சிறு குழந்தைகளிடத்தில் இதோ பாம்பு வருகிறதென்று பயமுறுத்தினால் அக்குழந்தைகள் உடனே வாய், கை, யுடல் நடுங்கி முகம் பேதலித்து, கண்ணீர் வடிய அழுது வெகு வேகமாய் மிரண்டோடி, தாய் மடிமீது விழுந்து, இருகரத்தால் பற்றிப் பிடித்து முகங் காட்டாது மௌனமாயிருக்கின்றன. ஆனால் ஜலம் ஒன்றாயிருப்பினும் அது தங்கும் பாத்திரங்களெந்நிறமோ அந்நிறத்தையே பகிர் முகமாய்க் காட்டுவது போல் அந்தந்த வடிவங்களி லமைந்திருக்கும் சிற்சத்தியே அந்தந்த வடிவாகார மாறாமல் வெளிப்படுத்தி வைக்கின்றது. இதைக்குறித்துக் கைவல்யத்தில் "கருப்பை முட்டையுட் பறவைகள் பல நிறம் கலந்த சித்திரம்பாராய், அருப்பமாஞ் சத்தி நியமமில்லாவிடி லரசிலா நகர்போலாம்" என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இனி அகக்காட்சியான சூட்சுமப்பொருள் ஒரே தன்மையாயிருக்கினும் அதிலிருவகையான காட்சிகள் தோற்றப்படுகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

 

3 - வது மறைவான ஆன்ம லோகத்தில் நின்றும் பெய்யும்படியான சூட்சும அருள் மழையானது சுத்த சத்துவகுண சாந்த இருதயமுள்ள மனிதர்களிடத்தில் தங்குவதனால் அவர்கள் அருமையான வைதீக சன்மார்க்க ஞானோதயமாகி, சர்வஞ்ஞரான அனாதி யன்புருவ சோதிமயமொன்றையே கருதி, யவரருள் வேதவிதி தவறாதொழுகி, பயபக்தி விசுவாசத்தோடிருந்து தன்னுண்மையறிகின்ற ஞானமென்னும் வெள்ளப்பெருக்கை யெவ்வேளையும் விருத்தி செய்து கொண்டே யிருப்பர். இன்னும் எவ்வகை இதர அத்தாட்சியுமின்றித் தம்மனுபவத்தால் மேலிடும் அருள்ஞானப் பேரொளியினாலுண்டாகும் நம்பிக்கையை விட்டு, அற்ப அளவும் மனமசையாம லெப்பொழுதும் ஸ்திரமாகவு முறுதியாகவு மிருந்து வருவார்கள். இன்னுங் கண்ணாடி யிற்றம் முகங்காணுமாப் போற்றம் முள்ளமென்னுஞ் சுத்த சத்துவகுண கண்ணாடியிற் றோன்றும் ஒப்பற்ற பரிபூரண வகண்டாகார விசேஷஞான விருத்திகளைக் கண்டு அம்மயமான சுயராச்சியப் பேரின்பத்தாற் றாண்டவ மாடிக்கொண்டிருப்பர். இதைக்குறித்து ரிபுகீதையில் (சித்துருவாம் பரப்பிரம சொரூபத்தின் கண்ணீரசால் நியாயம் போற் சேர்ந்து நிற்கும், புத்தியுடை விருத்தியினிற் பிரதிபிம்பிக்கும் பூரண சைதன்னியமே சாட்சாத்காரம்) என்று கூறப்பட்டிருக்கின்றது. இன்னுந் தம்மை யெழுநரகிற் சேர்க்கும் படியான அசுர சம்பத்தென்னும் துற்குணப் போர் வீரர்களைச் செயிக்கத்தக்க மேலான தெய்வ சம்பத்தென்னும் நற்குணப் போர் வீரர்களைச் சேகரித்து, சாத்தியமென்னுங் கச்சையை யரையிற் கட்டி, நீதியென்னும் சன்மார்க்கக் கவசத்தைத் தரித்து, எல்லாவற்றுக்கு மேலான விசுவாசமென்னுங் கேடகத்தைக் கரத்திற்பிடித்துச் சாந்தமென்னுங் கிரீடத்தைச் சிரமேல் வைத்து, நானென தென்னுங் கிருத்தியப் பேய்களிரண்டையுந் தமக்குப் பாதரட்சையாகச் செய்து, ராகத்துவேஷமாகிய இருவர்களையு மூட்டை சுமக்கும்படியான அடிமையாக வைத்து, அருள்வடிவே தாமாகவிருந்து அகமார்க்கப் போர் செய்வதுடன் சர்வ ஜனங்களும் ஒருவர்க் கொருவர் பொறாமை, விரோதம், பகை முதலானவைகளில்லாமல் சமரசபாவனையோ டொருமனதாய் நேசமும் பாசமும் அதிகரிக்கத்தக்க சமாதான மென்னும் அத்துவைதக் கொடியையெப்பொழுதும் நாட்டிவைத்து அதுவே சர்வ விடங்களிலும் பறந்தாடிக் கொண்டிருக்கச் செய்வார்கள்.

 

இன்னும் இவர்கள் எவராலுஞ் சொல்லவும் அறியவும் இயலாத அனந்த சூட்சும உலகங்களில் சென்று அங்குள்ள அரிய பெரிய புதுமையான காட்சிகளைக் கண்டு உள்ளங் களிப்படைந்து தம்முள் சகிக்க இயலாத ஆனந்தத்தால் அடிக்கடி குறுஞ்சிரிப்புள்ளவர்களாயிருந்து வருவார்கள். இன்னும் தேகசம்பந்தமான சாதிபேதமும், அறியாமையால் நேரிடும் வேத வேற்றுமையும் நானென்னு மகங்கார நினைவினாலுண்டாகும் சர்வ தொழிலுமற்று, சிறு குழந்தையின் குணமுள்ளவர்களாகவும் பார்ப்பவர் தம்மை நகைக்கும் படியான பெரும் அசூசியுள்ளவர்கள் போலிருந்தும் வருவார்கள். இன்னும் சர்வஜனங்களும் தெய்வீக இரகசிய உண்மை இன்னதென்றறிந்து அதின்படி நினைப்பும் சொல்லுஞ் செய்கையும் ஒருமைப்பட்டிருந்து மோட்சமடைவதற்கு வேண்டுமான பக்தி, உறுதி, பொறுமை, சாந்தம், அறிவு, அடக்கம், ஒழுக்கம், கருணை முதலான நற்குணங்களைப் பெறவேண்டும். அப்படி அவற்றைப் பெறுவதற்கும் ஒருவர்க்கொருவர் சகோதரவாஞ்சையோடதிக ஆவலும், பற்றும், பிரியமும், பாசமும், நேசமும் மாறாதிருப்பதற்கும் தங்கள் இருதயமென்னும் ஆழிய சாகரத்தில் வியாபகமாய் நிறைந்திருக்கும் பரிசுத்த அன்பென்னும் ஞான ஜீவ தீர்த்தத்தில் நிற்க வேண்டும். நின்று சதாகாலம் ஓயாமலெழுந்து ஒன்றோடொன்று மோதி வெளிப்பட்டுக் கொண்டே யிருக்கும் நிகரற்ற அலைகளான ஞான இரத்னங்களை ஜனங்களின் காதின் வழியாய்ச் செலுத்தி மனமெனும் பூமியிற் பதியவைத்து அது வோங்கி வளர்ந்து ஞானக் கனிகளைத் தந்து கொண்டிருக்கும் படியாகச் செய்ய வேண்டும்.

 

இப்படிச் செய்துவைத்து எவ்வேளையுந் தம்மை யெந்தக் கருமத்திலும் தாழ்த்தியே காணுவார்கள். இன்னும் அவர்கள் போதிக்கும் பரமார்த்த சூட்சும ஞானங்களைக் கேட்பவர் தம் மனதில் பதியும் படியான நன்னோக்கத்தை மனதில் வைத்து ஆமைபோல் கருதிக் கொண்டே யிருப்பார்கள். அன்னியர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அடுத்தடுத்துக் கேட்கினும் தாம் கிஞ்சித்துங் கோபங்கொள்ளாது சுருதி யுக்தி அனுபவ மூலமாய் விடைபகர்ந்து கொண்டே யிருப்பார்கள். ஏனையோர்கள் தம்மைப் புகழ்ந்து கூறுவதற்கு வேண்டுமான பெருமைத் தொழிலெதையுஞ் செய்யார்கள். தெய்வீக சம்பத்தென்னும் நற்குண முத்துகளைத் தெளிந்தெடுத்து மாலையாகக் கோத்துத் தம் அங்கமெல்லாம் அலங்கரித்துக் கொள்வார்கள். அறிவிலார் தம் சிந்தையின் அசுபவாசனையாற் கூறும் நிந்தை யெத்தன்மையான கொடியதாயிருப்பினும் அவ்வித நிந்தைகளைத் தம் செவியுற்றுக் கிஞ்சித்துங் கவனியார்கள். திரிசியமாயிருக்கிற அகங்காராதி பிரபஞ்ச தோற்றங்களில் யாதொரு பற்றும் வைத்துக்கொள்ளார்கள்.

 

இகபரமென்னும் பேதவாழ்வைச் சற்றேனுங் கருதி அதற்கு வேண்டுமான முயற்சிகளெவைகளையுஞ் செய்யார்கள். சராசரம் யாவும் தம் உள்ளத்தில் நின்றும் வெளியானதாகக் கருதி அவைகளுக்கு யாதொரு தீங்குஞ் செய்யாமல் சிந்தை யேகாக்கிர நோக்கமாயிருந்து வருவார்கள். இவர்களுக்குண்டாயிருக்கும் குணாதிசயங்களைப் பற்றி யெவராலுங் கூறவொண்ணாது. கோடிகாகத்துக் கிடையே காணப்படும் வெண்மையுள்ள கொக்கொன்றைப்போல் இவர்களும் மனிதர் கூட்டங்களுக்கிடையே மிக அருமையாய்க் காணப்படுகின்றனர். இவர்கள் தான் உள்ளபடி பரப்பிரம் ஸ்வரூபத்தை அபரோக்ஷமாய் அறிந்தவரும் அறிந்தபடி ஞான சாதனைகளினால் விடா முயற்சியோ டப்பியாசித்து மனோவாசனைகள் நீங்கிப் பாலிலொருமையான ஜலம் போலே மனது ஆன்மாவினிடத்து எகரசமாய் இலயமானவரும் அந்தப் பரமானந்த சொரூபமாகிய ஆன்மா சுயஞ்சோதி யருள்வடிவப் பிரகாச சம்பூரணமாய் வாய்க்கப்பெற்றுத் தாமே அதுவாய் அதுவே அவராய் ஒப்பற்ற ஏக அறிவாய்ப் பார்க்கிறவரும், கேட்கிறவரும், அறிகிறவரும், உணருகிறவரும், விளங்குகிறவரும், பிரகாசிக்கிறவரும், சாட்சியாயிருப்பவருமா யிருப்பார்கள். இது விஷயமாய் குரு ஆனில் (அவனைப்போ லொருவஸ்துவுமில்லை. அவனாகிறவன் கேட்கிறவன்; பார்க்கிறவன்) என்று திருவுளமாயிருக்கிறது. இந்த நிலையில் நார ரூப பேதாபேத மனிதப்பண்பு முதலானவைகளெல்லாம் நாஸ்தியாகிச் சுத்த நிர்வாணமாயிருப்பார். இது விஷயமாய் பிருகதாரணியக உபநிஷத்தில் (அத்விதீயப் பிரஹ்மமுளது. இங்கு நாநா வென்பது சிறிதுமில்லை) என்றும் வராகோபநிஷத்தில் (பிரஹ்மஞானத்தால் மாயையும், அதின் காரியமும் நீங்கியபோது ஈசுவரத்தன்மையுமில்லை, ஜீவத்தன்மையுமில்லை) என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.
இவ்விதமான அனுபவம் வாய்க்கப்பெற்ற மகான்களைப்பற்றிக் குரானில் கடவுளே சாட்சி கூறுகின்றனர். அதில் (தம்முடைய ஆண்டவனைக் கொண்டும் இவர்கள் நேர்வழியிலிருக்கிறார்கள். இன்னும் இவர்களே ஈடேற்றம் பெறுகிறவர்கள்) என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஐயோ இக்காலங்களில் அனேக மனிதர்கள் யாதொரு சாதனையப்பியாசம் நிட்டை முதலானவைகள் அறவே இல்லாமல் முன்னோர்களால் பாடிவைத்த ஞானப்பாடல்களை மனனஞ் செய்து சுருதியுக்தி அனுபவங்களுக் கொவ்வாமல் அவர்களின் கருத்துக்கிணங்கியவா றெல்லாம் பொருள் வைத்து நானே பிரமமென்று மாயா சம்பந்தமான மனக்கோட்டை கட்டி அந்தரத்தில் ஊஞ்சலிட்டாட்டி, வாய் ஞானப்போலிகளாய் வெறும் பதர்களை அளவின்றிப் பெரும்பாரமாய்க் குவித்து வருகின்றனர். அந்தோ அனுபவமாய் வாய்க்கும் சுத்த விருத்தி ஞானமென்னும் சண்டமாருதக் காற்றுக் கெதிரே இது நிலை நில்லாதென் றிவர்க ளறியாதிருப்பதுடன் கடவுளின் திருவருள் வேத விதிவிலக்கு இன்னவென்றுணர்ந்து அவற்றின் வழியும் நடவாமல் தாம் கெடுவதன்றி மற்றப் பேர்களையுங் கெடுத்துவிடுகிறார்கள். இவர்களைக் கண்டால் வேடர் கைதப்பி யோடும் மானைப் போல் மிரண்டோடுவதே நலம். இவர்களின் அறிவீனத்தைப் பற்றி எழுதினால் விரியுமென்றஞ்சிச் சுருக்கமாய்க் காட்டினேன். ஆனால் மேலெழுதிய மகான்களான அனுபவமுள்ள பெரியோர்கள் முத்தைப் போன்றெவரும் உவக்கத்தக்கவரா யிருப்பார்கள்.

 

4 - வது மறைவான ஆன்மா லோகத்தில் நின்றும், பெய்யும்படியான சூட்சும அருள் மழையானது மூடமுள்ள மனிதர்கள் இருதயத்தில் தங்கும். அதனால் அசுப வாசனையான துன்மார்க்கச் சிந்தையுடையவனாகி உலகத்தை மிகுதியாகச் சேர்க்க வேண்டுமென்ற பேராசையான கள்ளைக் குடித்து மயக்கவெறியால் நானென்கிற அகங்கார ஸ்தம்பத்தை நிலையாக நாட்டி எனக்கே சொந்தமென்ற மமதையான கொடியைப் பாசமென்ற கயிற்றினால் கட்டி உயரவேற்றி அஞ்ஞானமென்ற அந்தகார விருளினால் அரண்வளைந்து, பெருமையென்னும் ஆசனத்தில் உட்கார்ந்து எவ்வேளையும் காமவிகாரம் மேலிட்டு விவேகமில்லாத அந்தகனாகவே இருந்து வருவான். இன்னும் இவன் தன்னையும் தனக்கு ஆதாரமாயிருக்கிற பிரமத்தையும் மறந்து மிருகம்போ லெதையுஞ் செய்து இருவினையால் வரும் சுக துக்கச் சுமைகளைச் சேகரித்துத் தன் புயமேல் வைத்துக் காவடி போல் சுமந்து எந்நாளும் தேக சம்பந்தமான நரகத்திலும் சொர்க்கத்திலும் சுழன்று கொண்டிருப்பான். இதைப்பற்றிக் குணங்குடி மஸ்தான் சாஹிப்பவர்களால்
''கனக்கு மிருவினையாங் காவடியைத் தூக்குதற்கு எனக்கு முடியாதினி யெந்தாய் பராபரமே" என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விதமா யிருப்பதன்றித் தான் ஜீவித்திருக்குமிது சமயமே தன் ஆன்மாவானது அந்தகாரமாகிய இருட்கிடங்கில் கட்டுண்டு கிடப்பதை யறிந்து நன்மார்க்க ஞானவழியால் வெளிப்படுத்தி சதா ஆனந்த ஆன்மா சொர்க்கத்திலிருக்க வறியார்கள். இன்னும் இவர்கள் புறம்பேயிருந்து வாயின் வழியாய் வயிற்றினுள் செல்லும் போஜனாதிகளைச் சுத்தமென்றும் அவ்வஸ்துவே செறிந்து ஆசன மார்க்கமாய் வெளிப்படுவதை மட்டும் அசுத்தமென்றுங் கண்டு விலகுவார்களே யன்றித் தன்னிருதயத்திற்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் கெட்ட குணங்களைக் கண்டு விலகி அதை நீக்க முயற்சிக்க மாட்டார்கள். இதைப்பற்றி இஞ்சீல் வேதத்தில் "மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது. அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப் படுத்தும்" என்று சொல்லப்பட்டிருக்கின்றன.

 

இன்னும் இவன் இறந்த பின் நிர்ப்பாக்கியனும், பரதவிக்கப்பட்டவனும், தரித்திரனும், குருடனும் புண்ணியப் பொருளறவே இல்லாத நிர்வாணியாயிருப்பதை அறியாமல் நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு யாதொரு குறைவுமில்லை யென்றும் சொல்லிக்கொண்டு தனக்கு எவரும் பணிந்து நடக்கவேண்டுமென்ற ஆவேசச் செய்கையுடன் பெருமையும் புகழும் அந்தஸ்தும் உயர்தரப் பட்டமும் விரும்பிக் கணக்கற்ற திரவியங்களைச் செலவு செய்வார்களேயன்றி நன்மார்க்கமாய்ச் செலவு செய்து புண்ணியங்களைத் தேடி வைத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் இருதயத்தின் கண்ணுள்ள புத்தியை ஞானமார்க்கத் தேர்ச்சியடையாதிருக்கச் செய்யும் அஞ்ஞானமென்னும் அறியாமையான இருள் மூடியுணர்வில்லாதவர்களாய்ச் சகலவித அசுத்தங்களையும் ஆசையோடு நடப்பிக்கும்படித் தங்களை இச்சா விகார அரசனிடம் ஒப்புக்கொடுத்து அவனுக்கு வழிப்பட்டு நன்மார்க்க வேதவிதியை யனு சரியாமல் மீறி நடப்பார்கள். இன்னும் பகுத்தறிவில்லாத மிருகங்களுக்குக் காமாதி பசி தாகம் வந்தடுத்தபோது கண்ணில் கண்ட எவ்வஸ்து யாருக்குடையதாயிருக்கினும் அதைத் தின்னவும் சுத்தாசுத்த முணராத எந்த நீராயிருக்கினும் அதைப் பருகவும், பகலிரவு பேதமறியா தெவ்விடமாயிருக்கினும் அவ்விடத்திற் காணுந் தன்னின மோடு கலந்து சுகிக்குந் தன்மை போலுள்ள சிற்சில மனிதர்களும் அநியாயமாய் அன்னியருடைய முதல்களைக் கவர்ந்துகொண்டு தின்னவும் முழுதும் அசுத்தம் நிறைந்ததும் துன்மார்க்கத்துக்கு ஏதுவாயிருந்து வருகிற மதுபானம் அருந்தி வெறிகொண்டிருக்கவும் விஷயத் தேள் கொட்டி மோகத்தால் நீதிவழி தவறி மறைவாக வெகு வேகமாய்ப் பிறர்மனை புகுந்து ஆங்குள்ள இடுகாடு இடைநடுவே சூழ்ந்தெரியும் அக்கினிக் குண்டத்தில் உட்கார்ந்து மின்னல் போற் றோன்றி மறையும் விடையானந்த மிச்சா வடிவையே கடவுளாகக் கருதி அது சம்பந்தமான இன்ப ஆடல்கள் முதலான மலர்களைத் தூவி ஓம் ஸ்தூல அகங்கார இச்சையே நமஹா வென்ற மந்திரத்தை உச்சரித்துத் தகனபீடத்தில் வைத்திருக்கும் பிணத்தைப்போலே கீழே விழுந்து தேகாலிங்கன கூட்டுறவு பூசை செய்து வருவதன்றிச் சர்வ வல்லமையுள்ள கடவுளின் திருவருள் பிரகாசிக்கும்படியான தேவாலயங்களில் சென்று ஒரு பொழுதாவது மனமுருகி இருகண்ணீரொழுக அஷ்ட அங்கங்களுந் தரையிற் படிய வணங்கி நிற்க வறியார்கள். இவ்விதமான பழக்க வாசனையே மனதிற் படிந்திருந்து புறம்பே எந்த ஸ்திரீகளைக் காண்கினுங் கடைக்கண் பார்வையோடு இச்சை என்கிற அம்பை வெகு வேகமாய்ச் செலுத்தி அவ்வடிவாகாரமாய் மனதைத் தொடுத்து விஷய அனலை மூட்டிக்கொண்டே இருப்பார்கள். இவ்விதமான வம்பர்களைப்பற்றி சபூர் வேதத்தில் "துன் மார்க்கன் தன் கெர்வத்தினால் தேவனைத் தேடான். அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை யென்பதே. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள். உம்முடைய நியாயத் தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கின்றன' என்று மொழிந்திருக்கின்றன. இப்படிக் கொத்த அக்கிரமச் சேட்டையுள்ளவர்களே எல்லா விடங்களிலும் விசேஷமாய்க் காணுகின்றபடியால் இக்காலத்தில் எக்காலத்திலுமில்லாத நூதன சம்பவங்களும் மகா கல்வியுள்ள டாக்டர்களால் கண்டுகொள்ள ஏலாத ஆச்சரியமான நோய்களும் இன்னும் அநேக விதமான கெடுதிகளும் அடிக்கடி திடுகூறா யேற்பட்டு உயிர் துறக்கச்செய்து மண்ணுக்கிரையாக்குகின்றன. ஐயோ இதைப்பற்றி ஆராயும் போது நன்மார்க்க வழிபெற்று மனிதர்கள் மோட்சம் அடைவதற்காகக் கடவுளின் கருணையில் நின்று உண்டான கோபாக்கினியென்று சொல்வதன்றி வேறில்லை.

 

இது விஷயமாய் சபூர் வேதத்தில் வருமாறு. " ஆதலால் இதோ என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின் மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள் மேலும், வெளியின் மரங்கள் மேலும், பூமியின் கனிகள் மேலும் ஊற்றப்படும். அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'' என்று சொல்லப்பட்டிருக்கின்றன. இன்னும் இவர்கள் எப்பொழுதும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் படியான கடல்ஜலம் தன்னிடத்தில் ஆழ்ந்து கிடக்குஞ் சேற்றையும் அழுக்கையுங் கிளறி மேலே கிளப்பி எல்லா நீரையும் அசுத்தஞ் செய்து கரையில் தள்ளி விடுவது போல் இவர்களின் மனமென்னுங் கடலில் ஆழ்ந்து கிடக்கும் அசுபவாசனைகளென்னும் துற்குணங்களான காமக் குரோத லோப மோக மதமாச்சரியம் டம்பம் இடும்பைக் கோப மிவைபோலொத்த மலினங்களையெல்லாங் கிளறி மேலே கிளப்பி மனோ வாக்குக் காயங்களினால் சர்வ ஜீவர்கள் பேரிலும் தாக்கிக்கொண்டு அறியாத மதியீனராயிருந்து வருவார்கள். இதைக்குறித்து குரானில் ''அவர்களுடைய இருதயங்களில் வியாதி உண்டாயிருக்கிறது" என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஐயோ இவர்களுக்கு சர்வ சக்தியுள்ள கடவுளொருவர் இருக்கிறாரென்ற எண்ணம் சற்றேனும் நெஞ்சில் கிடையாது. ஆடு மாடு போல் தின்னவும், பருகவும், போகிக்கவும், நித்திரை செய்யவுமாயிருந்து வருவார்களே யன்றி இவர்களுக்குப் பின்னால் நேரிடுங் கெடுதிகளை அற்பளவும் உற்றுணர்ந்து நன்மார்க்கப் பிரயத்தினஞ் செய்யமாட்டார்கள். எப்பொழுதும் உலகசம்பத்தையே கருதி யதற்கு வேண்டுமான தந்திரம் -சூது, வாது, கபடு, மாறாட்டம், வஞ்சகம், பொறாமை, பொய், புலை, கோள் முதலானவைகளை தன்னுள்ளத்தில் அமைத்து வைத்து யார் எதிர்ப்படுவாரென்ற நோக்கத்தோடிருந்து வருவார்கள். சிற்சில சமயங்களில் அவர்களின் மன விருப்பத்திற்கு விகற்பமாய் அற்பக் குற்றங்கள் நேர்ந்தபோது தன் போத மறந்து எதையும் யோசியாமல் திடுகூறாய் கோபாக்கினியான நாயானது வெகு வேகமா யெழுந்து பன்றி போலுறுமிப் பாம்பு போல் சீறிப் பாய்ந்து கழுதை போல் கத்தித் தூஷணித்துப் பூனைப் பார்வை போல் மாறாமல் நோக்கி மதங்கொண்ட யானை போல் முன்னேறி நின்று கையாடுவார்கள். இவர்கள் செய்கையைக் குறித்து குரானில் ''உதிரத்தைச் சிந்துவார்கள்" என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் இவர்களை வெளிகோலத்தில் மனிதகோலம் போலும் பிணம்வைத்து மூடியலங்காரஞ் செய்யப்பட்ட கல்லறை போலும் வெளிப்பார்வையால் காணப்படுவதன்றி உட்கோலத்தில் புத்தியாலாராய்ந்து பார்த்தால் கல்லறைக்குள்ளிருக்கும் பிணத்தின் நாற்றம் போலும், ஆடு, மாடு, பன்றி, கரடி, புலி, சிங்கம், ஓநாய் முதலான மிருகங்களின் குணம்போலும் அவர்கள் மனதில் வாசனை மயமாய் குடிகொண்டிருந்து ஏதாகிலும் அதற்குத் தக்க சமயம் நேரிடும் போது எதைச் செய்ய அம் மனம் சங்கற்பிக்குமோ அதையே செய்து தன்னிருதயத்தில் நிறைந்திருக்கும் அந்தகார விருள் மேகம் மறைத்து மந்தப்பட்டுக்கொண்டிருந்த புத்தியினால் திருப்தியடைவார்கள். இதைக்குறித்து குரானில் "மனிதனுடைய மனமே அவனுக்குத் தீய
போதனையை உண்டு பண்ணுவதுண்டு'' என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனாலிவர்கள் உயிருள்ளவர்களா யிருக்கினும் உயிரில்லாத பிரேதத்திற்கும் மிருகத்திற்கும் ஒப்பாகவே இருப்பார்கள். ஏனெனில் பிரேதத்திற்கும் இருதயமிருக்கிறது பகுத்தறியுஞ் சக்தியில்லை. கண்ணிருக்கிறது பார்த்தறியுஞ் சக்தியில்லை. காத்திருக்கிறது கேட்டறியுஞ் சக்தியில்லை. மூக்கிருக்கிறது முகந்தறியுஞ் சக்தியில்லை. நாவிருக்கிறது ருசித்தறியுஞ் சக்தியில்லை. உடலிருக்கிறது பரிசித்தறியுஞ் சக்தியில்லை.

 

இவர்களுக்கோ உயிரும் சர்வதத்துவங்களும் அந்தக்கரணமும் பகுத்தறியும்படியான விவேக முதலானவைகளிருந்தும் அகம்புற மாராய்ந்து மெய்யைக்கொண்டு நிலைப் பட்டொழுகாமல் உலக பராக்கான பொய்யைக் கொண்டு நிலைப்படுகிறார்கள்; அறியாமையான விருள் மூடிக்கொண்டிருந்தபடியால் பிரேதம் போல் கின்றனர்; மிருகங்களுக்கு ஐயறிவு மட்டும் இருப்பதன்றி பகுத்தறியு முணர்வு இல்லாதிருப்பதைப் போல் இவர்களிடத்திலு மையறிவையன்றி பகுத்தறிவு இல்லாமலிருப்பதினால் மிருகம் போல்கின்றனர். இதைக்குறித்து குரானில் வருமாறு: "திட்டமாக நாம் உண்டாக்கினோம் நரகத்திற்காக அனேகரை ஜின்களினின்றும் மனிதர்களில் நின்றும். அவர்களுக்கு மனமிருக்கிறது அதைக்கொண்டறிகிறார்களில்லை. அவர்களுக்குக் கண்ணிருக்கிறது பார்க்கிறார்களில்லை. காதிருக்கிறது கேட்கிறார்களில்லை. இவர்கள் தான் மிருகத்திற் கொப்பானவர்களாகவும் எங்கும் அம்மிருகத்தைக்காண மிகவுங் கீழானவர்களாகவும் இன்னும் மறதியுடையவர்களாகவு மிருக்கிறார்கள்'' என்று சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படிக்கொத்தவர்கள் யாவரும் வெறுக்கத்தக்க நல்ல பாம்புக்குச் சமானமா யிருப்பார்கள். ஆனால் இவர்களைப் போன்ற பரம யோக்கியர்கள் தான் இவர்களை வெறுக்காமல் விரும்பி மிகவும் நேசமோடிருந்து வருவார்கள்.

 

இதைக்குறித்து முன்னோர்களால் "கற்றாரைக் கற்றாரே காமுறுவர், கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை யுகக்கும் பிணம்'' என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகையால் எனதன்பார்ந்த சர்வமத சகோதரர்களே சொப்பனத்திற் கொப்பான அற்ப உலக வாழ்வுக்காக அக்கிரமச் சேட்டைகளைச் செய்து கடவுளின் கோபத்திற்காளாகி யனந்தநாள் தேகத்தாலும் உயிராலும் வேதனைப்படுவதை விட்டு சொல்லரிய பேரின்ப வாழ்வைப் பெற்று சுகஜீவியா யெந்நாளும் இருக்கும் பொருட்டு வேதவிதி ஞாயப் பிரமாண சூட்சும வழிசென்று கடவுளின் விருப்பமும் அன்பும் கருணையும் பெற்று அவரால் கொடுக்கப்படும் சதா வானந்த மதுவருந்தி ஒவ்வொருவரும் சுகதுக்கமற்றுத் தானே தானாயிருப்பதற்கு சர்வ வல்லமையுள்ள கடவுளொருவரையே பிரார்த்திக்கின்றேன்.


K. K. செய்கப்துல் காதிர்,

மேலப்பாளையம்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - மே ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment