Tuesday, August 25, 2020

 

அங்கதன் அருந்திறல்

 

(தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், பி. ஏ.)

 

"அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன் மை தூதுரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று''


என்பது வள்ளுவர் இன்குறள். பண்டைத் தமிழகத்தின் அரசியலை, ஐம்பெரும் குழுவும் எண் பேராயழம் அழகு செய்தன என்பதைச் சரித்திரம் உணர்ந்த பலரும் அறிவர். ஐம்பெருங்குழுவின் ஒரு பகுதியினராய் அமைந்த தூதுவர்க்கு, தாம் அண்டி வாழும் அரசனிடத்து அன்புடைமையும், அவனுக்கு ஆங்காரியங்களை அறியும் அறிவுடைமையும், அவைகளை மாற்றாரிடத்துச் சொல்லும் போது ஆராய்ந்து சொல்லுதற்குரிய சொல்வன்மையும் இன்றிமையாது வேண்டப்படும் குண நலமாகும் என்று தமிழ்ப் பெரு மகனாம் வள்ளுவர் இலக்கணம் கூறுகின்றார். இவ்விலக்கணத்திற்குப் பொருத்தமாய் அமைந்த தூதுவர் கவியரசர் கம்பர் கவிதையில் அநுமனும் அங்கதனுமாவர் என்று கூறுவது மிகையாகாது.

 

வானர நாட்டின் வீரனாய் விளங்கிய வாலியின் மைந்தனாய் அங்கதன் அமைந்து வாழ்கின்றான். கடல் கடைந்த வெங்கரதலங்களையுடைய வாலி இராமனது அம்பிற்கு இலக்காகி, அமர்க்களத்திடை அலமந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்ட அங்கதன் அகங்குழைந்து அழுகின்றான்.


“தறையடித்தது போல் தீராத் தகைய வித்திசைகள் தாங்கும்
கறையடிக் கழிவு செய்தகண் டகன் நெஞ்சமுன்றன்

நிறையடிக் கோல வாலின் நிலைமையை உன்னுந் தோறும்

பறையடிக்கின்ற அந்தப் பயமறப் பறந்தவன்றே”


 என்றும்,


 “குலவரை நேமிக் குன்றமென்று வானுயர்ந்த கோட்டின்
 தலைகளும் நின் பொற்றாளிற்றழும் பினில் தவிர்ந்தவன்றே
 மலை கொளுமரவும் மற்றும் மதியமும் பலவுந்தாங்கி
 அலைகடல் கடைய வேண்டின் ஆரினிக் கடைவரையா"

என்று கலங்கி யழுது, தன் தாதையின் அரிய செயல்களின் அருந்திறன் அறிந்து போற்றும் அங்கதன் உள்ளம் கற்றார் உளத்திற்கு களிபேருவகைதருவதாகும். மருமத்திடை ஊறு தாங்கி மயங்கிக் கிடக்கும் வானர வீரன் தன் அருமை மகனை அன்புடன் அழைத்து அவனுக்குத் தேறுதல் மொழிகள் பல கூறி இராமனது பெருமையினை எடுத்துரைத்து அவனை ''மால் தரும் பிறவி நோய்க்கு மருந்தென நினைந்து அவனடி வணங்கி வாழ்வாயாக " என்று ஆசி கூறுகின்றான். இத்துடன் தன் அருமந்த மகனை, பொய்யுடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவனிடம் அடைக்கலம் என்று ஒப்புவித்துப் பின் உயிர் நீத்தனன் என்பர் கவியசரர். அங்கதனும் தந்தையின் மொழியைத் தலைமேற் கொண்டு, இராம வீரனது பாதம் பணிந்து அவனது பணியாற்றுதலே தன் பெருந்தவம் என நினைந்து ஒழுகுவானானான்.

 

இராமனது பணியைத் தலைமேற்கொண்ட அங்கதன் சிறையிருந்த செல்வியாம் சீதையைத் தேடும் செம்மை சான்ற செயலில் ஈடுபட்ட வானர வீரர்களில் தென் திசை நோக்கிச் செல்லும் தானைத் தலைவனாய் அமைந்து புறப்படுகின்றான். இவனுடன் சேர்ந்த வீரர் அனைவரும் காடும் மலையும்கடந்து, மகேந்திர மலையின் அடியில் வந்து சேர்கின்றார்கள். இதுவரை புகை புகா வாயிலும் புகுந்து தேடிச் சீதையைக் காணாது அகம் நொந்து அங்கதன் குழைந்து சாய்கின்றான். தான் ஏற்ற பணியைச் செய்து முடிக்க வலிமையற்று, இராமனிடம் சென்று சீதையை எங்குந் தேடியும் காணவில்லை என்றுசொல்லி அவனுக்குத் துயர் விளைவிப்பதைவிடத் தான் உயிர் துறந்து விடுதலே சிறந்ததென வீரன் கருதுகின்றான்.


''எந்தையு முனியும் எம்மிறை இராமனும்
சிந்தனை வருந்து மச் செய்கை காண்குறேம்
நுந்து வென்னுயிரினை நுணங்கு கேள்வியீர்
புந்தியினன்னது புகல் விராம்.''


என்று அங்கதன் அலமந்து கூறும் உரை சாலவும் அழகுடையதாகும். பின்னும். சாம்பன் முதலியோரிடம் கலந்து ஆலோசிக்கு மளவில், தான் புரிய விரும்பிய செயல் நன்றன்று என்பதை உணர்கின்றான். தான் ஏற்ற பணியில் வெற்றிபெறாது மாண்டதை அறிந்தால் தாயாகிய தாரையும் தந்தையாகிய சுக்ரீவனும் உயிர் துறப்பர். அவ்விருவரும் உயிர் துறந்ததைக் கண்டு மனம் பொறாது, இராமனும் இலக்குவனும் உயிர் துறக்க நேரிடலாம். இவ்விரு வீரரும் உயிர்துறக்க நேரின், அயோத்தியில் அமைந்து அருந்தவம் புரியும் அண்ணலாகிய பரதனும் இளையகோவும், மற்றுளோரும் உயிர் தரித்திருப்பர் என்பது ஐயமேயாகும். ஆகவே சீதையெனும் ஒரு பெண்ணால் எத்தனை பேர் நைந்து வருந்துகின்றார்கள் என்பதை ஆழ்ந்து அறிந்து அடங்குகின்றான் அங்கதன்.


"எல்லை நம்மிறுதியாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும்
சொல்லவுங்கூடும் கேட்டாற்றுஞ்சவும் மடுக்கும் கண்ட
வில்லியும் இளையகோவும் வீவது திண்ணம் அச்சொல்
மல்லனீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர்''



"பரதனும் பின்னுளோனும் பயந்தெடுத்த வருமூரும்
சரதமே முடிவர்கெட்டேன் சனகியென்றுலகஞ் சாற்றும்
விரதமாதவத்தின் மிக்க விளக்கினால் உலகத்தியார்க்கும்
கரைதெரி விலாததுன்பம் விளைந்தவாவெனக் கலுழ்ந்தான்.''

 

எனக் கவியரசர் கவியாற்றுகின்றார். இந்த நிலையில் இவர் முன் சடாயுவின் தமையனான சம்பாதி தோன்றி.


"பாகொன்று குதலை யாளைப் பாதக அரக்கன் பற்றிப்
போகின்ற பொழுதுங் கண்டேன் புக்கனன் இலங்கை புக்கு
வேகின்ற உள்ளத்தாளை வெஞ்சிறை யகத்து வைத்தான்
ஏகொன்றிற் காண்டி ரந்தி லிருந்தனள் இறைவி யின்னும்''


என்று சீதையின் நிலையை எடுத்துரைத்ததைக் கேட்ட அங்கதன் மனந்தேறி அநுமனை இலங்கைக்கு அனுப்பி அவன் இலங்கை சென்று திரும்பி வருமளவும் இராமன் முன் செல்ல இசையாது மலையடியிலேயே இனிதிருக்கின்றனன்.

 

“ஈரமென்றொரு பொருள் இலாத நெஞ்சினர்'' வாழும் இலங்கையில் அசோக வனிதையில் அணங்கைக் கண்டு அயலார் ஊரைத் தீக்கிரையாக்கித் திரும்பிய அநுமனைக் கண்ட அங்கதன், தாய் வரக்கண்ட தன்ன உவகையில் தளிர்த்தான். சீதையைக் கண்டு அவளிடம் அநுமன் அடையாளம் பெற்று வந்ததை அறிந்த நற்செய்தியை இராமனுக்கு அறிவிக்க உடனே புறப்படுகின்றான். இவனுடன் புறப்பட்ட வானர வீரர்கள் அங்கதன் அனுமதி பெற்று அருகேயிருந்த மதுவனத்தில் புகுந்து, அவரவரால் இயன்ற மட்டும் மதுவைமாந்தி மகிழ்ந்தனர். மதுவனம் அழிந்ததை அறிந்த ததிமுகன், அங்கதனுடன் பொருது அல்லற் படுகின்றான்.


''மதுவனந் தன்னை யின்னே மாட்டுவித் தனைநீ யென்னாக்
கது மன வாலி சேய்மே லெறிந்தனன் கருங்கற் பாறை
அதுதனைப் புறங்கையாலே யகற்றி அங்கதனுஞ் சீறித்
ததிமுகன் தன்னைப் பற்றிக் குத்தினன் தடக்கை தன்னால்.''


என்று கவியரசர் கூறும் செம்மை சான்ற சொற்கள் அங்கதனது வலியை ஒருவாறு விளக்குவதாகும். பின்னர் கதிரோன் மைந்தன் தன்னை வந்தடைந்த ததிமுகனுக்குச் சமாதானம் பல கூறி அனுப்பவும் ததிமுகனும் தன் தவற்றை உணர்ந்து வாலி சேயைத் தொழுதபோது அவனும் மயக்கம் தெளிந்து அவனை யெடுத்து மார்புடனணைத்து'' உம்மையான் சூழ்ந்ததும் பொறுக்க'' எனப் பணிந்து கூறினான். தான் அரசிளங் குமாரன் என்னும் அகந்தையிலாது அங்கதன் ததிமுகனிடம் தாழ்ந்து கூறிய சொற்கள் அவன்றன் சிறந்த உள்ளத்தின் பெருமையை இனிது விளக்குவதாகும்.

 

இனி, கடல் கடந்து இலங்கை சென்ற இராமன், போர் தொடங்கு முன் அரசியலுக்கு மாறுபடாத முறையில் தூதனுப்ப எண்ணுகின்றான். ''தன் செய்ய செங்கைத்தனுவென'' விளங்கும் அநுமனையே தூதனுப்ப முதலில் இராமன் எண்ணினனேனும், பின்னர் மாருதி முன்னம் ஒரு தரம் தூது சென்று செயற்கருஞ் செயல்கள் பல நிகழ்த்தி மீண்டவன்; அவனையே திரும்பவும் அனுப்பினால் இவனைத் தவிற வலியுடையார் வானரப் படையில் ஒருவரும் இலர் என்று பலர் கருத இடந்தரும்; ஆதலில் அவனை யொத்த ஆற்றல் பொருந்திய அங்கதனையே அனுப்புவோம். வீரஞ்செறிந்த அங்கதன் ஒருவனே பகைவர் அறந்தவறித் தூதனுக்கு இடையூறு செய்தகாலத்தும் அவர்களிடம் போர் செய்து வெற்றி பெற்று மீளும் ஆற்றல் படைத்தவன் என்று கருதி அங்கதனையே தூதுவனாக அனுப்ப விரைகின்றான்.


 "மாருதி யின்னுஞ் செல்லின் மற்றிவனன்றி வந்து
 சாருதல் வலியாரில்லை யென்பது சாலுமன்றே
 யாரினியேகத்தக்கார் இங்கதன் அமையும் ஒன்னார்
 வீரமே விளைப்பரேனும் தீதின்றி மீடல் வல்லான்''


என்று இராமன் கூறும் நயஞ்சான்ற சொற்கள் அங்கதனது ஆற்றலை அளவிட்டுரைக்கப் போதிய சான்றாகும். அங்கதனும்,


''மாருதி அல்லனாகில் நீயெனும் மாற்றம் பெற்றேன்
யாரினி என்னோடொப்பார்.''


என்று தன் தலைவன் தனக்கிட்ட பணியின் பெருமையினை நினைந்து நினைந்து இன்ப முறுகின்றான்.

 

தூது சென்ற அங்கதன், கொடுந்தொழில் மடங்கல் அன்னான் எதிர் சென்று நின்றதும் "இவண் வந்த நீ யார் உன் கருமம் என்ன', என்று அரக்கர்கோன் வினவ அதற்கு,


 "பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் அப்பூமேல்
 சீதை நாயகன் வேறுள்ள தெய்வ நாயகன் நீ செப்பும்
 வேத நாயகன் மேனின் விதிக்கு நாயகன் தான் விட்ட
 தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லியவந்தேன்''


என்று தன் தலைவனது பெருமையையும் தான் கொண்ட கருமத்தையும் நலஞ்சான்ற மொழிகளால் நவின்றான்.


 "இந்திரன் செம்மல் பண்டோர் இராவணன் என்பான் தன்னைச்
 சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றிச்
 சிந்துரக்கிரிகள் தாவித் திரிந்தனன் தேவருண்ண
 மந்தரக்கிரியால் வேலை கலக்கினான் மைந்தன்.''


என்று தன்னை இராவணனிடம் அறிமுகப்படுத்தும் வாயிலாய் அங்கதன் கூறும் அழகிய மொழிகள் அங்கதனது புகழ் குன்றாத பெருவலியையும் அவனது மனத்திட்பத்தையும் பெரிதும் விளக்குவனவாகும். அங்கதன் வரலாறு உணர்ந்த அரக்கர் கோன் இவனை இராமனிடம் இருந்து பிரித்துத் தன்பால் சேர்த்துக் கொள்ள விரும்பிச் சூழ்ச்சி மொழிகள் பல சொல்லியும் அதற்கிணம்காது,


 "வாய்தரத்தக்க சொல்லி யென்னையுன் வசஞ் செய்வாயேல்
 ஆய்தரத்தக்க தன்றோ தூது வந்தரச தாள்கை
 நீதரக் கொள்வன் யானே யிதற்கினி நிகர் வேறெண்ணின்
 நாய் தரக்கொள்ளுஞ்சீய நல்லரசு''


என்று இகழ்ந்து கூறி அவன்றன் ஏழை மதியை நினைந்து நகுகின்றான். தன்முயற்சி பயன்படாதது கண்ட இலங்கை வேந்தன் இவனிடம் நீ வந்த காரியம் உரையென்று சொல்ல, அதற்கு அங்கதன் " தேவியை விடுக, அன்றேல் செருக்களத் தெதிர்ந்து தன் கண் ஆவியை விடுக'' என்று அஞ்சாது கூறும் மாற்றம் போற்றத்தக்கதொரு பொருளாகும். இதற்கு இராவணன் இசையாது, இறுமாந்து சொன்ன சொற்களைக் கேட்ட அங்கதன் மீண்டும் இராமனை யடைந்து, அரக்கர் கோன் உள்ளக் கருத்தை அண்ணலுக் குரைத்து" மூர்க்கன் முடித்தலை அற்றபோதன்றி ஆசையறான்'' என்று அழகாக எடுத்துரைத்து மகிழ்ந்தான். தூதுவனுக்கு இன்றியமையாத, அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை இவையாவும் பொருந்திய தலைமகனாய் மட்டும் அமையாது, "இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு உறுதிப் பயப்பதாம் தூது " என்று வள்ளுவர் அருளிய பொய்யா மொழிக்குத் தலை சிறந்த சான்றாய் அமைந்து அங்கதன் புகழ்குன்றாத பெருமகனாய் இலங்குகின்றான்.

 

இனி வானர சேனைக்கும் அரக்கர் சேனைக்கும் நிகழ்ந்த போரில் அங்கதன் அஞ்சாத நெஞ்சொடும் எஞ்சாத வலியொடும் போர் புரிந்த பான்மையைக் கவியரசர் கம்பர் ஏற்ற இடந்தோறும் போற்றி யுரைக்கின்றார். இவ்வாறு போர் புரிந்த அங்கதன், இந்திரசித்தான் விடுத்த மலரவன் கணையால் மயங்கி வீழ்ந்ததைக் கண்ட இராமன் புலம்புகின்ற நிலையை,


 "விடைக் குலங்களின் நடுவணோர் விடை கிடந் தென்னக்
 கடைக்கண் தீயுக அங்கதக் களிற்றினைக் கண்டான்
 படைக் கலங்களைச் சுமக்கின்ற பதகனேன் பழி பார்த்து
 அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிதென் றழுதான்.''


என்று கவியரசர் கூறுகின்றார். வானர வீரனாய வாலியால் தன்னிடம் அடைக்கலம் என்று ஒப்புவிக்கப்பட்ட அங்கதன் தனக்காக ஏற்ற ஒரு பணியில் மாண்டு மடிந்தனன் என்பதைக் கண்ட இராமன் அடைக்கலம் புகுந்த உயிரைக் காக்கத் தம் ஆருயிர் கொடுத்த ஆன்றோர் பெருமையையும் தன்னிடம் அடைக்கலமாக அளிக்கப்பெற்ற அங்கதனைத் தானிழந்த சிறுமையையும் எண்ணி யெண்ணி யேங்குகின்றான். ஆற்றல் மிகுந்த அநுமன் கொணர்ந்த அருமருந்தினால் உயிர்பெற்றெழுந்த அங்கதன் இளையவீரனுக்கு உற்ற துணைவனாய் இந்திரசித்தன் சென்றுள்ள நிகும்பலைக்குச் சென்று அங்கு இந்திரசித்திற்கும் இலக்குவனுக்கும் நேர்ந்த பெரும் போரில் இலக்குவனது துணையாய் அமைந்து போர் புரிந்தான். இளைய வீரனது அம்பிற்கு இலக்காகி இந்திரசித்தன் தலையும் உடலும் வேறாகி மாநிலத்தில் மாண்டு விழுந்த போது, அன்கதன் அவனது தலையினைத் தன் கைகளில் தாங்கி, இராமன் முன்னே விரைத்து வந்து சேர்ந்தான். இந்திரசித்தனது இணையற்ற வலியையுணர்ந்த இராமன்,


 "தென் தலையாழி சூழ்ந்த திண்மதில் இலங்கை காக்கும்
 புன்தலைக் கள்வன் பெற்ற புதல்வனை இளவல் வீழ்த்த
 வன் தலையெடுத்து நீ முன் வருதலால் வானரேச!
 என்தலை எடுக்கலானேன் இனிக் குடை எடுப்பேன்.''


என்று அங்கதனிடம் அன்போடு கூறிய மொழிகள் அவன்றன் பெருமையை இராமன் மதித்துள்ள தன்மையை விளக்கும்.

 

அரக்கர் கோனையும் அரக்கர் சேனையையும் முடித்து வெற்றி பெற்று மீண்ட வீரனுடன் அங்கதனும் அயோத்தியை அணுகினான். அங்கு இராமன், திருமுடி சூடிய பொழுது வானர வீரனான வாலியின் மைந்தன் உடைவாள் ஏந்தும் உரிமை பெற்றான் என்பது கருதற்பாலது. பின்னர் இராம வீரன் இவனுக்குத் தோளணி யொன்று அன்புடன் அளித்து விடை கொடுத்தனுப்பும் பான்மையை யாரே கணிக்கவல்லார். அங்கதனது அருந்திறலைப் போற்ற விரும்பி,


 "அங்கதமிலாத கொற்றத் தண்ணலும் அகிலமெல்லாம்
 அங்கதனென்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்
 அங்கதங்கன்னற் றோளாற்கு அயன் கொடுத்ததனை யீந்தான்
 அங்கதன் பெருமை மண்மேல் ஆரறிந்தறைய கிற்பார்.''


என்று நயஞ்சான்ற மொழிகளால் நல்லியற் கவிஞர் எடுத் துரைக்கின்றார்.

 

இதுவரை கூறியவற்றால், அங்கதன் வானர நாட்டின் வீரனாய வாலியின் ஒப்பற்ற திருமகனாக இலங்கி, இராமனது செம்மை சான்ற பணியை ஏற்று விளங்கிய பெருமகன் என்பதும், அவனது அஞ்சா நெஞ்சமும் எஞ்சாதவலியும் யாவரும் போற்றும் பெருமையுடையது என்பதும், அவன் அன்பு அறிவுடைமை ஆராய்ந்த சொல்வன்மை முதலிய இன்றியமையாத குணங்கள் நிறைந்து விளங்கி அதனால் ஒப்பற்ற தூதுவனாய் இலங்கினான் என்பதும் விளக்கமுறும்.

 

ஆனந்த போதினி – 1931 ௴ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment