Tuesday, August 25, 2020

 அசோக மன்னரின் ஆட்சி

    கி. மு. 272 முதல் 312 வரை சுமார் 40 வருடகாலம் இந்தியாவின் தென்பகுதி நீங்க, மிஞ்சிய நிலப்பரப்பு முழுவதும் அசோக மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. தம் ஆட்சியில் ராஜ்ய முழுதும் பக்தி, இரக்கம், சாந்தம், சமரசம் முதலிய உணர்ச்சிகள் நிறைந்து விளங்குமாறு இம் மாண்புற்ற மன்னர் ஆட்சி செய்தார். மிகச் சிறந்த மன்னராகிய அசோகர் ஆண்டுவந்த மௌரிய இராஜ்ஜியமானது முதலில் அவரது பாட்டனாரான சந்திரகுப்தரால் நிறுவப் பெற்றது. சந்திரகுப்தர் திண்ணிய உள்ளமும், கொண்ட கொள்கையினின்றும் திறம்பாத இயல்பும் உடையவர்; தற்போது பீஹார் என்றழைக்கப் பெறும் தமது மகத இராஜ்ஜியத்தைப் பெருக்கி, ஆப்கானிஸ்தானம் உட்பட வட இந்தியா முழுவதையும் தம் குடைக்கீழ் கொண்டுவந்தவர் இம்மன்னரே.

 அலெக்ஸாண்டர் என்னும் அரசரின் சேனா நாயகர்களுள் ஒருவரும், அவருடைய இராஜ்ஜியத்தின் ஓர் பகுதிக்கு அரசராகவும் விளங்கிய சிரியாதேசத்து மன்னராகிய செலூக்கஸ் என்பவர், தமது மாபெருந் தலைவராகிய அலெக்ஸாண்டர் அரசர் செய்தவண்ணம் தாமும் நாடுகளைக் கைப்பற்றி வெற்றி பெற நினைந்து, சிந்து நதியைக் கடந்து பாஞ்சாலத்தின் மீது படையெடுத்து வந்தார். அவரது போர்த்திறன் சந்திர குப்தரிடம் சற்றும் பலிக்காது போகவே, பாஞ்சால நாட்டை மீண்டும் தாம் சைப்பற்றக்கூடும் என எண்ணிய எண்ணத்தை அடியோ டொழித்து, தமது மாற்றானாகிய இந்து அரசனோடு நட்புரிமை கொண்டாரெனில் நம் சந்திர குப்த மன்னரின் பெருமையைச் சாற்றவும் வேண்டுமோ? இச்சந்திரகுப்த மன்னனை ஆங்கில சரித்திரத்தில் படிக்கப் பெறும் வெற்றி வேந்தனான வில்லியம் என்னும் வீரனுக்கு ஒப்பிடலாம். வில்லியம் அரசனைப்போன்றே சந்திர குப்தரும் குடிகளை அன்பினாலும், அருளாலும் ஒன்று படுத்தி ஆளாது, வன்பினாலும், துன்பினாலுமே குடிகளை ஒன்று படுத்தினார்.

 சந்திர குப்தருக்குப் பின் அவரது குமாரர் பிந்துசாரர் அரசரானார். இப்பிந்து சாரரைப்பற்றி எதுவும் தெரிந்து கொள்வதற்குப் போதிய ஆதாரங்கள் கிடையா. எனினும் பிந்துசாரரது புதல்வர்தான் மௌரிய வம்சத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குக் காரண பூதராய்த் தோன்றிய அசோக மன்னர். அசோகர் செய்த அரும் பெருஞ் செயல்கள் அனந்தம். உலக முழுவதும் பௌத்த மதத்தைப் பரவச் செய்து, மற்றெவரும் செய்ததைக் காட்டிலும், அம்மதத்தைப் புவியின் பெரும் சமயங்களிலொன்றாக்கப் பெருமுயற்சி செய்தவர் இவரே. இது மட்டுமோ? தம் ஆட்சி முறையில் தர்மமே தழைக்குமாறு செங்கோல் செலுத்தி வந்தார்; தன்னயம் விடுத்துப் பிறர்க்கென்றே வாழ்ந்து வந்தார். அசோகர் பௌத்த மதக் கொள்கையைப் பின்பற்றிய பின்னர் அவரது வாழ்க்கையில் சாந்தமும், அமைதியும் குடி கொண்டு விளங்கின. செய்வதற் கரிய செயல்களையே அவரது ஜீவியத்தில் காணமுடியும். தமது குடிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், துன்பத்தைத் துடைக்கவும் அவர் செய்த காரியங்கள் பல. பெரும் புகழ் பெற்ற சாலமோன், நெப்போலியன் முதலியவர்களைப் பற்றிக் கூறப்படும்கதைகளைப் போன்றே, அசோகரைப் பற்றிக் கூறப்படும் கதைகளும் அநேகம்உள. ஆனால் அசோகர் வெட்டிய கல்வெட்டுக்களில் தம்முடைய ஜீவியத்

தைப்பற்றித் தாமே கூறும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவைகளிலிருந்தே அசோகரது பெருந்தன்மையான குணங்கள் தெள்ளிதில் புலனாகின்றன.

 அசோகர் பட்டத்திற்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் கடும் போர் முயற்சியில் ஈடுபட்டு, அக்காலத்தில் கலிங்க நாடு என்று பெயர் வழங்கிய நாட்டைத் தம் ஆட்சிக் குள்ளாக்கிக் கொண்டார். ஏறக்குறைய இக்காலத்தில் தான் அசோகர் பௌத்த மதத்தை அனுசரிக்கத் தலை பட்டார். அவ்வாறு தலைப்பட்டதிலிருந்து, துன்புற்றவர்களிடத்து அவருக்குள்ள பரிவும், போர் புரிவதால் குடிகளுக்கு இடர் பெருகும் தன்மையை ஒழிக்கவேண்டு மென்ற உள்ளப் பண்பும் வலியுறுத்தப் பெற்றன வென்றுரைக்கலாம்.

 அசோகர், புத்தர் வகுத்துள்ள புனித மொழிகளையே தம் ஆட்சிக்குரிய அறிவுரைகளாகக் கொண்டு கீழ்நாடுகளில் புத்தமதப் பிரசாரம் செய்வதற்காகப் பல பெரியார்களை அனுப்பினார். அரச குடும்பத்தினரின் உண்டிக்காக அளவற்ற பிராணிகளைக் கொல்லுதல் வழக்கமாயிருந்தது. அசோகரோ அவைகளைக் கூடிய மட்டும் குறைக்கும் படி கட்டளை யிட்டார். பின்னும் சிறிது காலத்திற்குள் இக்கொடுஞ் செயலையும் அறவே நீக்கிவிட்டார். வேட்டை யாடுதலை வெறுத்து நீக்கினார். தேசயாத்திரை செய்யத் தலைப்பட்டார். சென்ற இடங்களிலெல்லாம் மதப் பிரசார வேலையையும் நடத்தினார். மாசற்ற மனத்தினர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். பெற்றாரைப் பேணல், வாய்மையினின்றும் வழுவாமை முதலியவற்றை வற்புறுத்தினார். கற்பாறைகளில் அசோகர் வெட்டியுள்ள மானிடரின் ஒழுக்க சம்பந்தமான உரைகள் பல. அவற்றுள் ஒன்று பின் வருமாறு: - 'தாய் தந்தையரைப் பேணுவாயாக; உயிர்ப் பிராணிகளிடம் அன்பு வை; வாய்மையினின்றும் சிறிதும் வழுவாதே, அசோகரின் அமுத மொழிகளாவன.

     1. எவரும் தம்முடைய மதத்தை பற்றி அளவுக்கு மேல் புகழ்தலோ, பிறர் மதத்தைப் பற்றி இகழ்தலோ கூடாது. ஒவ்வொரு மதமும் ஏதேனும் ஒரு காரணம் பற்றியாவது போற்றத் தக்கதே; எவனொருவன் பிறர் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தூற்றுகிறானோ, அவன் தன்னுடைய கொள்கைகளையே தாழ்த்துகிறான்.


2. என்னுடைய முயற்சிகளில் நான் ஒருபோதும் திருப்தியடையவே இல்லை.


அசோக மன்னரின் சொல்லும் செயலும் ஒத்தே இருந்தன. மனிதர்கள் மனங்கொள்ள வேண்டிய அறக்கொள்கைகள் வரையப் பெற்றுள்ள பாறைகளும் தூண்களும் அவரது பரந்த இராஜ்ஜியத்தின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. ஆங்கில சரித்திரத்தில் அசோகருக்கு ஒப்பான அரசர் உண்டெனக் கூறுவதற்கிடமில்லை. இருப்பினும் சிற்சில சந்தர்ப்பங்களில் மார்க்கஸ் அரீலியஸ் (Marcus Aurelius) என்னும் சக்கரவர்த்தியையும், வேறு சில விஷயங்களில் ஆங்கில மன்னரான ஆல்பிரட்டையும் (Alfred) உவமை கூறலாம். முடிவாகக் கூறுமிடத்து வெளியிலிருந்து வந்த படையெழுச்சி, உள் நாட்டுக் கலகம் முதலியவற்றால் துன்புறாமல் சமாதான முற்ற ஒரு காலம் இந்தியாவில் எப்பொழுதாவது இருந்த துண்டானால், அந்தக்காலம் அசோக மன்னரின் நீண்ட ஆட்சிக்காலமே எனக் கூறலாம்.

ஆனந்த போதினி – 1929 ௵ - பிப்ரவரிச் ௴

 

 

No comments:

Post a Comment