Tuesday, August 25, 2020

அண்ணல் தன் வண்ணம் 

 

"இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனியிந்த உலகுக்கு எல்லாம்

உய்வண்ணமன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ

மைவண்ணத் தரக்கிபோரில் மழைவண்ணத் தண்ணலே உன்

கைவண்ணம் அங்குக்கண்டேன் கால்வண்ணம் இங்குக்கண்டேன்"

 

என்று ''ஐவரை அகத்திடை அடைத்த" கோசிகமுனிவன் மன்னவன் மகனைப் புகழ்ந்து கூறும் உரையாக கம்பரது இராமகாதையில் இச்செய்யுள் அமைந்துள்ளது. கவியரசர் கம்பர் பெருமான் மழைவண்ணத் தண்ணலின் கைவண்ணத்தையும் கால்வண்ணத்தையும் போற்ற எடுத்துக் கொண்ட இடங்கள் மிகவும் நயஞ்சான்ற இடங்கள் ஆகும் எனினும் அண்ணல் தன் வண்ணத்தை, இவ்விரண்டிடங்களில் மட்டுமன்றி இன்னும் பல விடங்களிலும் அமைத்துள்ள பெருமை கம்பருடையதேயாகும். ஆகவே அண்ணல் தன் வண்ணத்தைக் கம்பர் தங் கவிநலத்தில் யானறிந்த மட்டில் எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

அண்ணல் தன் வண்ணம் யாவரும் போற்றும் பெருமை வாய்ந்தது என்று நான் கூறுவது மிகையேயாகும். “நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் " என்று கவியாசர் கம்பர் பெருமான் இராமனது ஒப்புயர்வற்ற அழகினைப் போற்றி யுரைக்கின்றார். அழகே உருவெடுத்ததென்னநின்ற அணங்காம் சீதை மிதிலை மாநகரில் கன்னிமாடத்து மேடைமீது நின்று அண்ணலைக்கண்டு அவனது அழகெனும் தேறலை அமிர்தமாயுண்டு மயங்கி நிற்கின்ற நிலையைச் சித்திரிக்கும் கம்பர் கவிப்பெருமையே பெருமை


 "இந்திரநீல மொத் திருண்ட குஞ்சியும்
 சந்திரவதனமும் தாழ்ந்த கைகளும்
 சுந்தர மணிவரைத் தோளுமேயல
 முந்தி யென்னுயிரை அம்முறுவல் உண்டதே''


என்று சீதை கூறும் செம்மைசான்ற சொற்கள் இராமனது வரம்பில்
பேரழகினுக்கும் ஓர் வரம்பு காட்டுவதாகும். இன்னும் " மையோ மரகதமோ மழைமுகிலோ ஐயோ இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான் " என்று கவியரசர் இராமனது அழகைப் போற்றி யுரைக்கின்றார். அழியா அழகுடைய பெருமகனாய் இலங்கிய பெருமையை இராமன தாக்க விரைகின்றார் நமது கவியாசர். இவனது அழகை மாந்திமாந்திக் களிப்பென்னும் கடலுள் ஆழ்ந்த பெருமக்கள் காவியத்தில் பலருளர். இவனது ஒப்பற்ற திருவடிவின் ஒரு வடிவைக் கண்டவர் அவ்வடிவிலேயே ஈடுபட்டு நின்ற நிலையைக் கவியரசர்கம்பர் போற்றியுரைக்கும் மாற்றம் கற்றோர் உளத்திற்குக் கழிபேருவகை தருவதாகும். இராமன், மிதிலைமாநகர் செய்த மாதவத்திற்கு இரங்கி, மையறுமலரின் நீங்கி அந் நகரில் வந்து வதியும் செய்யவளை மணம் புரிய உலாப் புறப்படுகின்றான். இவன் உலாவருகின்ற பான்மையைக் கண்டு களிப்புறப் பெண்கள் ஓடிவரும் நிலையை ''மானினம் வருவபோன்றும், மயிலினம் திரிவபோன்றும், மீனினம் மிளிர்வ போன்றும், மின்னினம் மிடைவபோன்றும், தேனினம் சிலம்பி யார்ப்பச் சிலம்பினம் புலம்ப, வெங்கும் பூசனை கூந்தல்மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார்" என்று கம்பர் நயஞ்சான்ற மொழிகளால் போற்றி யுரைக்கின்றார். இன்னும்


 “தோள் கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன
 தாள் கண்டார் தாளேகண்டார், தடக்கைகண் டாரு மஃதே,
 வாள் கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக்கண்டார்
 ஊழ்கொண்ட சமயத்தன்னான் உருவுகண்டாரை யொத்தார் "


என்று உலாக்காணப் போந்த மங்கையர் மனநிலையை அழகாக எடுத்துரைத்து அதனால் இராமனது மெய்கண்ணத்தின் மெய்ப்பெருமையினை விளக்கும் கம்பர் கவிாலம் சாலவும் அழகுடையதாகும். இன்னும் " ஆடவர் பெண்மையையவாவும் தோள்களை யுடையவன் இராமன்'' என்று கவிகூறுந் திறன் நயஞ்சான்றதாகும். இம்மட்டன்று. இவ்விராமனைக் கண்டு காமுற்று அதனால் தன்மூக்கிழந்து நின்ற அரக்கர்கோன் தங்கையும் தன் தமையனிடம் சீதையின் அழகினை அழகாக எடுத்துரைக்கின்றாள். அரக்கர்கோனும் தன் தங்கை கற்பித்த சீதையின் உருவத்தையே, தன்முன், உருவெளித் தோற்றத்தில் கண்டு, அத்தோற்றம் சீதையின் உருவா அன்றா என்றறியத் தன் தங்கையை அழைத்து

 

“மைந்நின்ற வாட்கண் மயில் நின்றென வந்தென் முன்னர்
 இந்நின்ற வளாங்கோல் இயம்பிய சீதை"


என்று வினவ அண்ணலை மறவாத அனாங்கும், தான் தனது உருவெளித் தோற்றத்தில் காணும் இராமனது அழகையே போற்றி யுரைக்கின்றாள்.


 "செந்தாமரைக் கண்ணொடும் செங்களி வாயினொடும்
 சந்தார் தடந்தோளொடும் தாழ்தடக்கைகளொடும்
 அந்தார கலத்தொடும் மஞ்சனக் குன்றமென்ன
 வந்தானிவனாகும் அவ்வல் வில் இராமன்''


 என்று கவி கூறுந்திறன் கம்பருடையதேயாகும். இன்னும் இராமனது வரம்பில் பேரழகை எடுத்தெடுத்துரைப்பது மிகைபடக்கூறல் என்னும் குற்றத்தின்பாற் படுமென அஞ்சி இத்துடன் நிறுத்தி மேற் செல்லுதும்.

 

இராமனது மெய்வண்ணத்தை நலமிக்க மொழிகளால் எடுத்துரைத்த கவியாசர் அவனது கை வண்ணத்தைப் போற்றும் திறன் நாம் கண்டு மகிழ்வதற்குரிய ஓர் இடமாகும். முற்றுந் துறந்த முனிவரது வேள்வி காக்கப் போந்தவீரர் இருவரும் அவ்வேள்வியைக் “கண்ணினைக் காக்கின்ற இமையாற் காத்து வந்தனர்'' என்பது வெளிப்படை. முனிவர் தம் பணியைத் தலைமேற் கொண்ட காகுத்தன் வேள்வியைக் காத்ததோடு அமையாது அவ்வேள்வி செய்வதற்கு இடையூறாய் அமைந்த தாடகையையும் அவள் தன் மக்களாம்மாரீசன் சுவாகுவையும் அழித்து அறம் நிறுவிய பெருமையைப் போற்றியுரைக்கும் கம்பர் கவிநலம் சாலவும் அழகுடையதாகும்.

 

''சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரங் கரிய செம்மல், அல்லொக்கும்நிறத்தினாண்மேல் விடுதலும் வயிரக்குன்றக், கல்லொக்கு நெஞ்சிற்றங்காதப்புறம் கழன்று கல்லாப், புல்லார்க்கு நல்லோர் சொன்ன பொருளெனபோயிற்று" என்னும் நயஞ்சான்ற மொழிகளால் இராமன் எய்த வாளியின்திறம் கூறிப் பின் அவ்வொரு வாளி “உலையுருவக் கனலுமிழ கட்டாடகைதன் உரமுருவி, மலையுருவி, மரமுருவி, மண்ணுருவிற்று" என்று முடித்துக்கொடுக்கின்றார் கவியரசர்.

 

இவ்வாறு தாடகையை முடித்துத் தன் கைவண்ணம் காட்டிய அண்ணல் தன் கால்வண்ணம் காட்டவிரைகின்றார் கவியாசர். அவ்வியம் அவித்தசிந்தை முனிவனாம் கோதமனது மனைவியாம் அகலிகையை அமரர் கோமான் வஞ்சனையாய்க் கவர்ந்து அவன் தன் நிறையழித்து நின்றதும், அதனால் கோபமுற்ற முனிவர் பெருமகனது சாபத்தால் இந்திரன் ஆயிரங்கண் பெற்றதும், அகலிகை கல்லாய் அமைந்ததும், கல்லாய் அமைந்த காரிகை காகுத்தனதுபாத தூளியின் பரிசமெய்தத் தன்னுரு வெய்தினன் என்பதும் கர்ணபரம்பரைக் காதை.


"அஞ்சனவண்ணத் தான் றன் அடித்துகள் கதுவா முன்னம்

வஞ்சிபோ லிடையாள் முன்னை வண்ணத்தாளாகி நின்றாள்”

 

என்று கவியரசர் கூற்றாகக் காதை அமைந்துள்ள பெருமையே இராமனது கால் வண்ணத்தை விளக்கப் போதிய சான்றாம். தீவினை நயந்து செய்த தேவர் கோன் தனக்குச் செங்கண், ஆயிரம் அளித்தோன் பன்னி'யாய அகலிகைக் குத் தீதிலா உதவி செய்த சேவடியின் வண்ணத்தையும் இடித்த வெங்குரல் தாடகையாக்கையை முடித்த இவனது கைவண்ணத்தையும் முனிவர் எடுத் தெடுத்தியம்பி மகிழ்கின்றார்.

 

இன்னும் ஆற்றல் மிகுந்த அரனது வில்லை வளைத்து நாணேற்ற முடியாது மன்னர் பலர் மயங்கி நிற்க, வேள்வி காணவந்த மன்னர் மைந்தன் வில்லுங் கண்டு அவ்வில்லை ஒடித்தெறிந்த பான்மையை உன்னும்போது யாரே அவனது கைவண்ணத்தைக் கணிக்க வல்லார்.'' வெள்ள மணைத்தவன் வில்லையெடுத்துப் பிள்ளை முன்னிட்ட பேதமைக்காக'' இரங்குவோர் பலரிருக்கவும் இராமன் அவ்வில்லை தன் தடக்கைளில் எடுத்த தன்மையை


 “ஆடகமால் வரையன்னது தன்னைத்
 தடருமா மணிச்சீதை யெனும்பொற்
 சூடக வாள்வளை சூட்டிட நீட்டும்
 ஏடவிழ்மாலை யிதென்ன எடுத்தான்"

என்று நயஞ்சான்ற மொழிகளால் எடுத்துரைத்த கவியாசர்  .

"தடுத்திமை யாமலிருந்தவர் தாளின்

மடுத்தது நாணுதிவைத்தது நோக்கார்

கடுப்பினில் யாருமறிந் திலர் கையால்

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்''

 

என்னும் செம்மைசான்ற மொழிகளால் இராமன் வில்லிறுத்த அழகினைப் போற்றி யுரைக்கின்றார். இராமன் தனது இளமைப் பருவத்தில் தன் கை வண்ணம் காட்டப் புகுந்த ஒரு செயலாக இவ்வில்லிறுத்துத் தன்வினை முடித்த செயல் அமைந்துள்ளது போற்றத்தக்கதொரு பொருளாகும்.

 

இதுவரை இராமனது மெய்வண்ணம், கால்வண்ணம், கைவண்ணம் இவைகளில் ஈடுபட்டிருந்த, நாம், இனி இவனது சொல்வணணத்தைச் சிறிது ஆராய்வோம். "சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரம்'என்று கவியாசர் கூறும் உண்மையில் இராமனது சொல்வண்ணம் அமைந்துள்ளது என்று யான் கூறுவேனேயானால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. இராம சொல்வன்மை எவ்வளவில் அமைந்துள்ளது என்பதை ஒன்றிரண்டு குறிப்புகளால் விளக்கி இக்கட்டுரையை முடிக்க விரைகின்றேன். மன்னர் மன்னனிடம் வரம் பெற்ற கேகயர் கோமகள்'' நாயகன் உரையான் நானிது பகர்வேன்'' என்று, தன் முன் வந்த இராமனிடம்


 "ஆழிசூழுலகமெல்லாம் பரதனேயாள நீபோய்த்
 தாழிருஞ்சடைகள் தாங்கி தாங்கருந் தவமேற்கொண்டு
 பூழிவெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி
 ஏழிரண்டாண்டின் E ஈவென் றியம்பினன் அரசன்''


என்று கூறுகின்றாள். இராமன் நன் தாதை தயரதன் ஒருநாளும் இவ்வாறு விதித்திரான் என்பதை உணர்வனாய் "அம்ம! இது நின் சூழ்ச்சியே யாகவேண்டும். பரதன் நாடாளவேண்டு மென்பதே உன்னுடைய விருப்பமாயின் அதற்குயான் ஒருகாலும் எதிர் சொல்லேன். ஆதலின் உன் எண்ணத்தை உன்னுரை யாகவே சொல் “பாவம் ஓரிடம் பழியோரிடம் என்பதேபோல் பழியைக் கொண்டுபோய் பாவம் தயரதன் மேல் சுமத்த வேண்டாம் "என்று சொல்வதில் எவ்வளவு வன்மையுண்டோ அவ்வளவு வன்மையையும் உள்ளடக்கி “மன்னவன்பணி யன்றாகில் நும்பணி மறுப்பனோ " என்றிறைஞ்சி நிற்கின்றான். இன்னும் தன்னை விடாது தொடர்ந்து தன் பணியையெல்லாம் செய்துவரும் இலக்குவன் தானொருவனே சகோதரபக்தி மிக்குடையவன், தன்னிலும் பரதன் தாழ்ந்தவனே யாகல் வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அவனது செருக்கை அடக்க எண்ணி அவனது முன்னிலையிலேயே


 "எத்தாயர் வயிற்றில் பின்பிறந்தார்கள் எல்லாம்
 ஒத்தால் பரதன் பெரிதும் உத்தமனாவ துண்டோ''


என்று இராமன் கூறும் செம்மை சான்ற சொற்கள் அவனது சொல் வன்மையைப் பெரிதும் விளக்குவதாகும். இன்னும் வீணைக்கொடியோன் வீரத்தம்பியான விபீடணன் அடைக்கலம் என்று தன்னை வந்தடைந்த காலையில், இராமன் சுக்கிரீவனைப் பார்த்து ''கோதிலாதவனை நீயே என் வயின்கொணர்தி' என்றுரைக்கும் மாற்றம் சாலவும் அழகுடையதாகும். தன்னுடன் பிறந்த முன்னவனைப் பகைவனிடம் காட்டித்தரும் தகவிலாச் செய்கை செய்பவன் வீபிடணன் மட்டுமல்ல நீயுமுளாய் ஆதலின் நீயே நின்னினத்தைச் சென்று அழைத்துவா என்று நயம்பட உரைத்த செஞ்சொற்கள் நாம் கண்டு மகிழ்வதற்குரிய ஓர் இடமாகும். இவ்வாறு 'வாழையுள் ஊசியை வைக்குமாறு போல் தாழ்மையாம் சொற்களால் தைப்பதே'' இராமனது சொல்வன்மையின் திறம் என்று அன்பர்கள் தவறாக நினைத்து முடிவு செய்ய வேண்டாம்.

 

"காழ்முதிர் தடியெனக் கடிர்த சொற்களாலும் " இராமன் தனது சொல்வன்மையைக் காட்டியுள்ளான் என்பது வெள்ளிடைமலை. ஐபிரண்டு திங்களாய்த் தனது உயிரனைய கொழும் நனைப் பிரிந்து ஆற்றாத் துயர்க்கோர்மிரையாய் மாழ்கிப் பின் கொடுந்தொழில் இராவணன் மாய்ந்திடச் சிறைநீங்கிச் சிறந்தோங்கு முவகையொடு வந்த கற்பினுக்கரசினைப் பெண்மைக்காப்பினை பொற்பினுக்கு அழகினைப் புகழின் வாழ்க்கையைத் தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை அமையநோக்கி அக்கற்பின் வாழ்வனையவள் அணங்குறு நெடுங்கண் நீராறுவார வணங்குங் காலையில் பச்சிலை வண்ணமும் பவளவாயுமாய் கைச்சிலையேந்தி நின்ற ஒருவீரன், பணங்கிளர் அரவென எழுந்து


“குலத்தினிற் பிறந்திலைகோளில் கீடம்போல்
நிலத்தினிற் பிறந்தமை நிறப்பினாயரோ''


என்று சீறினானென்றால் அவன் விடுசரமோ வாய்ச் சொல்லோ வெம்மையுடைத்து என்பதை அன்பர்களே உற்று நோக்குங்கள். இராமனது சொல்வன்மையின் திறமறிய இதுவரை எடுத்துக்காட்டிய சான்றுகளே அமையும்,

 

இதுகாறும் கூறிய ஒரு சிலசான்றுகளால் அண்ணல் தன் வண்ணம் அவனது கைவண்ணம் கால்வண்ணம் இவைகளோடு மட்டும் அமையாது அவனது மெய்வண்ணமாயும், சொல்வண்ணமாயும் இலங்க அமைத்த பெருமை கம்பருடையதே யாகும் என்று கூறி என்பணி முடிக்கின்றேன்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment