Tuesday, August 25, 2020

 

அண்ணனும் தம்பியும்

ரகுநாதன்

 

போர்க் பக்களம். குலத்து மானந் தீர்ந்திலனான கும்பகர்ணன் மலைபோல நிற்கிறான். இராமனது பக்கத்தினின்று தன்னந் தனியாக வந்த விபீஷணன், 'மழையின் நீர் வழங்கு கண்ணனாய்' அண்ணன் எதிரில் நிற்கிறான். தருமத்தின் உயர்வை எடுத்துக் காட்டி, அண்ணனைத் தன் பக்கம் திருப்பி, இராமனிடம் அடைக்கலம் புகச் சொல்லுகிறான். இருவர் கண்களிலும் ஒரு சிறு கலவரம்.


தூரத்தில் எங்கேயோ சங்கும், எக்காளமும், முரசறையும் ஏங்கி முழங்குகின்றன.


கும்பகர்ணன்: -     (ஆச்சர்யத்துடன்) என்ன......?

 

விபீஷணன்: -      (குலையாத ஸாந்தத்துடன்) ஆமாம். இராமன் எனக்குத் தரும் இந்த லங்கா சாம்ராஜ்யம் முழுவதையும் உனக்கே தந்துவிடுகிறேன். உனது காலடியிற் கிடந்து நீ இடும் கட்டளை களை நிறைவேற்றவும் தயாரா யிருக்கிறேன். ஐயோ! அண்ணா...!


எனக் கவன் தந்த செல்வத் திலங்கையும் அரசு மெல்லாம்
தினக்கு நான் தருவென்; தந்து உன் ஏவலின் எளிதி னிற்பன்
உனக்கு இதில் உறுதியில்லை, உத்தம உன்பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு வாழி.


இந்தப் போர் வெள்ளத்தினின்று நீ கரையேறுவ தென்னமோறுதியற்ற நினைப்பு! பிறந்த குலத்தையாவது தழைக்கச் செய். அண்ணா! அதர்மமே கோர உருவாகக் கொண்டு விளங்கும் இராவணனைப்போல் வீணாக மடிந் தலையாமல் பிழைக்கின்ற வழி யைப் பின்பற்று. இராவணனை மறந்துவிடு. அவனை விட்டுப் பிரிந்து.........

 

கும்பகர்ணன்: - (தணிந்து) இராவணனை - (உரத்து) இராவணனை விட்டுப் பிரிவதா? தம்பி, அவன் நம்மோடு பிறந்த அண்ண னல்லவா?

 

விபீஷணன்: - அண்ணன் தான். அதற்காகத் தருமத்தை ஒதுக்கி வைத்து விடலாமா? தருமத்துக்காக உழைக்கும் போது, அண்ணன் தம்பி உறவு முறையைப் பார்த்து முடியுமா?

அண்ணா! இது, நான் சொல்லி நீ தெரிய வேண்டிய தில்லையே,

 

கும்பகர்ணன்: - அண்ணனை விட்டுப் பிரிவது, பழியல்லவா?

 

விபீஷணன்: - (இள நகையுடன்) பழியா?... நல்லது. சன்மார்க்க நெறியினில் நடக்கின்றவர்களைப் பழி யென்ன கவ்வி விழுங்கி விடுமா? அண்ணா, உடம்பில் வெடிக்கும் பொக்களத்தை அழகு பார்த்து மகிழ்வாருண்டா? அதை அறுத்துச் சுட்டு, மருந்து வைத்துக் கட்டி ஆற்றுவதல்லவா நல்ல வழி?


உடலிடைத் தோன்றிற் றொன்றை யறுத்து, அதனு திர முற்றிச்
சுடருறச் சுட்டு, வேறோர் மருந்தினால் துயரந் தீர்வர்;
கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கரும மென்றால்
மடலுடை அலங்கல் மார்ப! மதியுடை யவர்க்கு மன்றோ!

 

கும்பகர்ணன்: -(கசந்த நகையுடன்) நீ சொல்லுவதைப் பார்த்தர்ல், அண்ணனை நாமே தீர்த்துவிட வேண்டும் என்று சொல்வாய் போலிருக்கிறதே?

 

விபீஷணன்: - ஊஹும். அப்படியெல்லாம் ஒன்று மில்லை. கூடுமானால், உனது அண்ணனையும் காப்பாற்ற வேண்டியது தான். ஆனால் அது ஆகிறகாரியமா? நீயுந் தான் இவ்வளவு நாளும் கஜகரணம் போட்டுப் பார்த்தாயே, முடிந்ததா? உனது போதனை யெல்லாம் இராவணனது காதில் கொஞ்சமேனும் ஏறியதா? இராவணனைக் காக்காவிடினும், தருமத்தையாவது நிலை நிறுத்தலாமென்றால், அதுவும் (பெருமூச்சுடன்) முடிகிற வழியிலில்லையே!

 

கும்பகர்ணன்: - (பரிதாப ஒலியில்) தருமம்...? இராவணனது ஏகாதிபத்திய நாட்டில் தருமமா? என்று, சீதையைச் சிறையெடுத்து வந்தானோ, அன்றே தரும தேவதையும் இலங்கையை விட்டுப் பறந்தோடி விட்டாளே? இனிமேல் ... கொஞ்சங் கூட, மனமாற்ற மில்லாத இராவணனது ஆட்சியில் தருமம் நிலைக்கவா?

 

விபீஷணன்: - ஏன் நிலைக்காது? நிலைப்பதும், நிலைக்காததும் நமது இஷ்டத்தைப் பொறுத்தது. அண்ணா! இவ்வளவு நாளும் மலைபோலத் தூங்கிக் கிடந்தாயே, அதனால் உனக்கு ஏதேனும் பயன் உண்டா? ஏன் இப்போதும், உனது உயிரை வீணாக இழக்கப் போகிறாய்? தருமத்தை எதிர்த்து, அதைக் கெடுக்க இராவணனுடன் சேர்ந்து உழைக்கவேண்டு மென்பது தானே?

 

கும்பகர்ணன்: - தம்பி! தருமத்தைக் குலைப்பது எனது தொழில் என்று நினைத்துக் கொண்டாயா? தருமத்தைவிட மானம் பெரிய தல்லவா?...... நான் தூங்கி யெழும் காலத்தி லெல்லாம் எனக்கு வேண்டிய மது மாமிச ஆகாரங்களை யூட்டி வளர்த்தவனல்லவர் இராவணன்? என்னை நம்பிப் போர்க் களத்துக்கு அனுப்பிய இராவணனுக்குத் துரோகம் நினைப்பதா? உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைப்பது தான் தரும சாஸ்திரமா?
தன்னை நம்பினவனைக் கைவிடலும் தகும் என்று தான் உனது தர்மம் சொல்லுகிறதா? தம்பி! இராவணனை விட்டுப் பிரிந்து வாழ்வது என்ன சாஸ்வதமான வாழ்வா? அவனை விட்டுப் பிரியும் வாழ்க்கை நீரின் மேல் வரையும் கோலந்தானே!

 

விபீஷணன்: - அண்ணா, என் தருமத்தின் உயர்ந்த இலக்ஷியத்தை.....

 

கும்பகர்ணன்: - தம்பி விபீஷணா! உனது தரும் லக்ஷியம் உயர்ந்தது தான்.
ஆனால், எனக்கு நம்பிக்கை, மானம் இவைதான் உயர்ந்தவை. உனது உயரிய லக்ஷிய சித்திக்காக, நீ தரும பிரானான இராமனுடன் சேர்வது தக்கது தான்...... ஆனால் பாபகிருத்யங்களையே மூட்டையாகச் சுமந்து கொண்டிருக்கும் எனக்கு வீரமரணத்தை விட, வேறு என்ன புகழ் இருக்கின்றது?


விபீஷணன்: - அண்ணா? அப்படி யென்றால், நீ சாகத்துணிந்து விட்டாயா?

 

கும்பகர்ணன்: - ஆம், சாவது என்னமோ சரதம். அதைத்தான் இந்தப் போரில் உபயோகித்தாலென்ன? சாவது தான் எனக்குப் பெருமை. அதுதான் எனக்குக் கொடுத்து வைத்தது. அன்னியன் ஒருவன் எனது நாட்டுத் தலைவாசலில் நின்று கொண்டு, எதிர்க்கத் துணிந்தால், நானும் அவனை எதிர்க்கத் தயார் தான். நாட்டின் சேவையில்-லக்ஷியத்தின் சேவையில் என் உயிர் போனாலும் போகட்டும். திரிலோகங்களுக்கும் சர்வாதிகாரியாக விளங்கும் என் அண்ணன், கடைசியில் தம்பி ஒருவனும் துணைநில்லாது மண்ணைக் கவ்வி மடிவானா? ஒரு காலத்தில் எமனையே ஆட்டிவைத்த என் அண்ணன்-அதே அண்ணன் அதே எமதர்மனின் சபையில், கால பாசத்தால் கட்டப் பட்டுக், கவிழ்ந்த தலையோடு செல்லும்போது, நானாவது அவனுக்குத் துணையிருக்க வேண்டாமா?


தும்பியந் தொடையல் வீரன் சுடுகணை துரப்பச் சுற்றும்
வெம்புவெஞ் சேனை யோடும், வேறுள கிளைஞ ரோடும்,
உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை யாண்டு
தம்பியரின்றி மாண்டு கிடப்பதே, தமையன் மண்மேல்?


விபீஷணன்: - அண்ணா...அப்படியானால், நீ இரர்வணன் பக்கம்
சேர்ந்து...

 

கும்பகர்ணன்: - தம்பீ! வேறு என்ன வழி இருக்கின்றது? நான் இராவணன் பக்கம் சேர்ந்து போரிடாமல், உனது பேச்சைக் கேட்டு, இராமன் பக்கத்திலே சேர்ந்தாலும் எனது கதி என்ன? என் அண்ணனைக் கொன்று பழிதீர்த்த, இரத்தக்கறை படிந்த பகைவனை வாயாரப் புகழ்ந்து தானே நான் அரியணை ஏற வேண்டும். கேவலம், இரு மானிடப் பிறவிகளையும் கூன் விழுந்த குரங்குக் கூட்டத்தையும் வணங்கி வாழ்வதை விடச் சாவது
மிகவும் மேலானது! இலங்கா புரியில் அடிமையாய்ச் சிம்மாசனம் ஏறுவதை விட, நரக லோகத்தில் சுயேச்சையுடைய தோட்டியாக வாழ்வது மிகமிக மேலானது.


விபீஷணன்: - என்ன அண்ணா... அப்படி யெனில் என்னுடைய பேச்சை நீ...

 

கும்பகர்ணன்: - நானா? உன்னுடைய பேச்சையா? தம்பி! அம்புபட்டு நெஞ்சு வகிர்ந்த புண்ணை எப்படியேனும் ஆற்றிவிடலாம். ஆனால், எனது தமையனைக் கொன்ற பகைவனை வாழ்த்தித், தலை வணங்கும் போது என் நெஞ்சினைக் கீறும் அம்புகளின் விஷப் புண்களை எப்படி ஆற்ற முடியும்? உனது இராகவனது
பாணத்தால் ஏற்படும் புண்களென்ன இவைகளை விடப் பெரியதா? தம்பி! அப்படிப் பட்ட நெஞ்சுப் புண்களோடு நான் வாழ மாட்டேன்.


செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி,
வம்பிட்ட தெரியல் எம்முன் உயிர்கொண்ட பகையை வாழ்த்தி
அம்பிட்டுத் துன்னங் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, :ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன்யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்.

 

விபீஷணன்: -அப்படியானால், உனது கடைசி முடிவு... இராவணனுடன் சேர்ந்து போர் புரிவது தானே!

 

கும்பகர்ணன்: - எனது முடிவு அதுதான். அது தான் எனக்கும் முடிவைத் தரப்போகிறது. இந்தப் போர்க்களத்தில், என் கண்ணெதிர்ப்படும் எதிரிகளை உயிர் சுமந்து திரிய விடமாட்டேன். ஆலகால விஷத்தைக் கண்டு, அஞ்சியோடிய தேவர்கள் போல, எனது பகைவர்களும் என்னைக் கண்டு ஓட்ட்டும். இந்தப் போர்க் எனது விளையாட்டு ஸ்தலம். இதில் பம்பரமாகச் சுழன்று, ஒவ்வொரு பகைவனையும் வெட்டி வீழ்த்துவேன். இந்த உயிர் உடலில் இருக்கும் வரை, கும்பகர்ணன் தலை வணங்கும் காலம் ஒருக்காலும் வராது. நான் யுத்தத்தில் இறந்து போவேன். இராவணனும் அப்படியே. அரக்கர் குலத்துக்கே இதுதான் ஊழி வெள்ளம். அவ் வெள்ளத்தினின்று கரை யேறுவது நீ மட்டுந்தான். அரக்கர் குலத்துப், பிதிர்க் கடனைச் செய்ய நீயாவது மிஞ்சினாயே!


விபீஷணன்: - அண்ணா...?

 

கும்பகர்ணன்: - என்னை அண்ணா என்று...வேண்டாம். நீ இராமனுட்ன் - சேர்ந்த அன்றைக்கே எனது உடன் பிறப்பு செ-த்-து விட்டது!


விபீஷணன்: - (பயத்துடன்) என்ன?


கும்பகர்ணன்: -ஆமாம். இராமன் தருகின்ற சாம்ராஜ்யத்தை நீயே ஆண்டு கொள்!


விபீஷணன்: - அண்ணா!


(தூரத்தில் எங்கேயோ, போர் முரசமும், சங்கநாதமும் ஏங்கி மடிகின்றன.)

 

ஆனந்த போதினி – 1944 ௵ - செப்டம்பர் ௴

 

 

No comments:

Post a Comment