Tuesday, August 25, 2020

அதிருப்தி

(P. N. வைத்தியநாதசுவாமி, B. SC.,)

அதிருப்தி! இதுதான் வாழ்க்கைக்கு ஜீவநாடி; இதிலிருந்துதான் வெற்றி மேல் வெற்றி; இதிலிருந்து தான் புதிய ஊக்கம்; இதிலிருந்து தான் வாழ்க்கையின் உயர்வு; இதிலிருந்துதான் புகழ்.

அதிருப்தியில் பேராசை முதலிய பேய் குணங்கள் கலக்கலாகாது. அதிருப்தி கொண்டோன் வாழ்க்கைக்கடலில் இறங்குகிறான். அவன் வழிமாளவில்லை. இதனால் அதிருப்தி கொள்கிறான். கடைசியில் அதிருப்தியின் காரணமாக கடலைக் கடந்தும் விடுகிறான். ஆனால் பேராசை மகன் இப்படியில்லை. 'அவன் கடக்கிறான் இவன் அக்கரை சேர்ந்து விட்டானே’ யென்று மாத்திரம்; மனம் வெந்து வாடுகிறான். இவன் கடலில் இறங்கனேயில்லை; இனியும் இரங்கப் போவதில்லை; இவன் அழிவு இத்தோடுதான்.

அதிருப்தியின் அரிய பெருமையை பழைய சரித்திரங்களும் விளக்கும். குறிப்பிட்ட அரசர்களை எடுத்துக் கொள்வோம். ஏதோ சில நாடுகளைப் பிடித்தனர். இத்தோடு அவர்கள் மனம் திருப்தி கொண்டது. வேறு நாடுகளை நாடவில்லை. இதற்கு மாறாக அவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருக்குமாகில் என்ன நடந்திருக்கும்? பெரும் சாம்ராஜ்யங்கட்கு சக்கர வர்த்தியாக வந்திருப்பார்கள். அவர்கள் புகழ் உலகில் படர்ந்து வளர்ந்திருக்கும். இதேபோல் தான் உள்நாட்டு விஷயங்களிலும். ஏதோ சில நன்மைகளை பொதுஜனங்கட்கு அரசன் செய்து விடுகிறான். இத்துடன் அவன் மனது திருப்தி அடைகிறது. ஆனால் இதற்கு மேலாக நன்மைகள் மக்கட்குக் கிடைப்பதில்லை. அரசன் மனதில் அதிருப்தி தோன்றி யிருந்த
தென்று வைத்துக் கொள்வோம். இன்னும் எவ்வளவோ நன்மைகள் நடை பெற்றிருக்கும்; இன்பக்கடலில் எல்லோரும் குளித்திருப்பார்கள்.

இன்னும் பாருங்கள். முன்னணிக்கு வரும் நாடுகள் எவை? அதிருப்தி கொண்டவைகளே. (அதிருப்தி கொண்டு-அதாவது பேராசை கொண்டு அயலான் மீது போர் தொடுப்பதல்ல). தங்கள் நாட்டில் இந்திந்த சீர்திருத்தங்கள் வரவில்லையே; தங்கள் நாட்டில் இந்திந்த விளை பொருள்களில்லையே, தங்கள் நாட்டில் இந்திந்த நூல்களில்லையே! -  இவ்வாறெல்லாம் அதிருப்தி கொண்ட நாடுகளே எதிர்காலத்தில் இன்னும் சிறப்புற்று விளங்கும். இதற்கு மாறாக பூரண திருப்தி கொண்ட நாடுகளைக் கவனிப்போம், அவைகளை சோம்பல் பற்றுகின்றன; கடைசியில் சோர்ந்தும் சாய்கின்றன.

ஏன் இன்று நமது இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். ஆங்கிலேயர்கள் நம்முடன் இரு நூற்றாண்டாக இருந்தவர்கள் தான்; இன்று அவர்கள் ஆட்சி நமக்கு அவசியந்தான்; இது சமயம் அவர்கள் இல்லாவிட்டால் வேறொரு அன்னியன் நம்மைப் பிடித்து இன்னும் இம்சிப்பான் தான் ஆனால் இதை யெல்லாம் கண்டு திருப்தி அடைந்து விடுவதா! அன்னையைப் பிணைத்திருக்கும் விலங்குகள் என்னாவது? அவள் கண்ணீரை யார் துடைப்பது? மற்ற நாட்டு எழில் மங்கைகளைப்போல் இந்தியமாதும் அழகு சொட்ட
விளையாடி வரவேண்டாமா? ஏதோ அவர்கள் காட்டும் பிச்சை சுதந்திரத்தில் நாம் திருப்தி யடையலாமா! அதிருப்தி யன்றோ அவசியம் வேண்டும்!

வாழ்க்கையில் எடுத்துக் கொள்வோம். ஏதோ ஒரு சிறிய உத்தியோகம் கிடைத்து விட்டது; கொஞ்சம் சொத்துமுண்டு. - இத்துடன் மகனின் மனம் சாந்தி யடையலாமா? அது அவனின் முன்னேற்றத்துக்கு அடிகோலுமா! மற்றவர்களைப் பார்; எவ்வளவு செல்வாக்கோடு இருக்கிறார்கள்! இதைக்கண்டு அவன் அதிருப்தி கொள்ளவேண்டும்; ஆனால் இது பொறாமையாக மாறக்கூடாது.

பெரிய முதலாளி; அவனிடம் சிறு குமாஸ்தாவாக ஒருவன் சேருகிறான்.
அவன் மனதிலும் அதிருப்தி உலவவேண்டும். சே! இதென்ன வேலை? நாமும் நம் எஜமானைப்போல் உயரவேண்டும், அதற்கென்ன சரியான வழி? இன்றிருந்து அதைக் கவனிப்போம். இவ் வேலையில் அதிருப்தி யடைவோம். நம் எஜமானைப் போல் வா நல்ல வழியில் முயற்சிப்போம். அப்பொழுதொரு ஊக்கம் பிறக்கிறது; அவனது வாழ்க்கை உயர்கிறது.

வீட்டிலுள்ள மகளைக் கவனிப்போம். இன்றோர்வித கரி சமைத்து நாதனுக்கு இடுகிறான். அவனும் சந்தோஷமாக சாப்பிடுகிறேன். இதைக் கண்ட அவன் பூரண திருப்தி கொண்டு விடக் கூடாது. குறிப்பிட்ட இந்தக் கரியை இப்படி சமைத்திருக்கக்கூடாது; நாளைக்காகட்டும் இந்த மாதிரி சமைத்து வைப்போம். - இவ்வாறு அவள் மனதிலோர் அதிருப்தி இடம் பெறவேண்டும். இல்லையேல் அவள் மனதில் அதிகமாக அன்பு வளர இடமில்லை.

தெருவில் சுற்றிவரும் சோம்பேறிக்கும் அதிருப்தி அவசியம். ஏதோ இம்மாதிரி நம் காலம் நடக்கிறதென்று அவன் எண்ணி விடக்கூடாது. இவ்வித வாழ்க்கை இனியும் கூடாதென்று அவன் அதிருப்தி கொள்ள வேண்டும். அப்பொழுதே அவன் வாழ்க்கை உயரும்.

கடவுளை வணங்கும் விஷயத்திலும் அதிருப்தி அவசியம். ஏதோ வருஷங்கள் பல கடுந்தவம் செய்தான்; இமயமலைச் சாரலிலிருந்தும் யோகம் பயின்று வந்தான்; பெரிய மகான்களிடமிருந்து ஆசி பெற்றிருக்கிறான்; இதெல்லாம் அவனுக்கோர் சாந்தி யளிக்கலாகாது. வெகுதூரம் கால்நடையில் பிரயாணம் செய்யவேண்டியவன்; கொஞ்ச தூரம் வந்து விட்டான்; வழியிலொரு ஆலமரம்; அதன் பக்கத்திலோர் குளிர்ந்த குளம்; வெயிலின் கொடுமையைப் போக்க குளிர்ச்சியும். பசியின் தாபத்தைத் தணிக்க பலவித பழங்களும் கிடைக்கும். இதை யெல்லாம் கருதி, அவன் அங்கேயே தங்கி விடலாமா! அவன் நோக்கமென்ன? அவன் போய்ச் சேர வேண்டிய இடமெது! அற்ப சுகத்தில் திருப்தி கொண்டு என்றும் அழியாத பெரும் சுகத்தை கைவிட்டு விடலாமா!

ஆனால் ஒரேவித அதிருப்தி இருக்கிறது. அதை மாத்திரம் அலட்சியஞ் செய். அதாவது-உன்னை அணையும் மனைவிக்கு எவ்வளவு தான் செய், அவள் மனம் அதிர்ப்தியே யடையும்; புருஷன் வீடு சென்ற உன் மகன், எவ்வளவுதான் கொடு, அவளும் அதிருப்தியே கொள்வாள்; உன் மகனை மணந்தவள், அவளுக்கும் என்ன தான் கொடு; அதிருப்தியே எற்படும். இதை யொத்த அதிருப்திக்கு இங்கு இடமில்லை.

ஆக, அதிருப்தி ஓர் அரிய வரம்; பரமன் அளித்த சஞ்சீவி; இதில் பொறாமையில்லை; சோம்பல் கிடையாது; பேராசை வந்து சேராது; ஆனால் நல்ல உழைப்புண்டு; ஊக்கமும் உணர்ச்சியும் தோன்றும்; வாழ்க்கையின் ஜீவகளை வளரும். அதிருப்தி பரவுக; நாடு செழிக்கும்; நன்மை செடிகள் எங்கும் பூத்து மலர்கள் சொட்டும்.

ஆனந்த போதினி – 1942 ௵ - அக்டோபர் ௴

 


No comments:

Post a Comment