Thursday, August 27, 2020

 

உயர்வும் தாழ்வும்

 

இம் மலர்தலை யுலகின்கண், ஓரறிவு படைத்த மரம் முதலாக ஆறறிவுபடைத்த மக்கள் ஈறாக வதிந்துவருவது கண்கூடு. இவையாவற்றிலும், மனிதனே உயர்ந்தவனென்று கருதப்படுகிறான். ஏனெனில் ஏனைய உயிர்களை விட அவனுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு மிளிர்ந்திருக்கிறது. ''அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்த லரிது'' என்று முன் னோர்கள் பொன்னே போல் மொழிந்துள்ளார்கள். அங்ஙனம் அடைவதற்கரிய மானிடப் பிறவியி னுள்ளும் சிலர் உயர்ந்தோ ரென்றும் சிலர் தாழ்தோரென்றும் கருதப்படுகின்றனர்.

 

பொதுவாகச் செல்வந்தர்களை உயர்ந்தவரென்றும், வறியவரைத் தாழ்ந்தவரென்றும் இவ்வுலகம் கருதுகிறது. நாம், அதனை ஆராய்ந்து நோக்குமிடத்து, செல்வந்தனை எக்காரணம் பற்றியும் உயர்ந்தோனென்றுதற்கு இடையிலது. செல்வம் ஒன்றினால் அன்றோ உயர்ந்தவனாகின்றான். செல்வத்தின் தன்மை யாது? "சகடக்கால் போல் வருஞ் செல்வம்' என்று கூறியுள்ளார். ஆகையால் நாம் ஒருவனை செல்வத்தினால் உயர்ந்தவனென்று கருதுவது அறிவுடைமையாமோ?

 

அடுத்தபடியாக உயர் குலத்திற் பிறந்தமையினால், உயர்ந்தவ னென்றும், இழிகுலத்திற் பிறந்தமையினால் தாழ்ந்தவ னென்றும் கருதுகின்றனர். நாம் சரித்திரத்தைச் சிறிது ஆராய்ந்து நோக்குமிடத்து, சாதி வேறுபாடு ஏற்பட்டு ஏறக்குறைய 2500 வருடங்களே ஆகியிருக்கலாம். பல்வேறு நாடுகளிலிருந்து நம் நாட்டில் வந்து குடியேறியவர்கள் அவர்களுக்குள் ஜாதி வேறுபாடின்றி ஒழுகிவந்தனர் என்பதை, சரித்திர ஆராய்ச்சியாளர் நன்கறிவர்.

 

நாட்டை எதிரிகளி னின்றும் காத்தற்பொருட்டு ஒரு பகுதியும், அன்னவர்கட்கு, ஊண், உடை இவை கொடுத்தற் பொருட்டு ஒரு பகுதியும், இவர் கட்கு யாதொரு குறைவுமின்றி, சென்ற விடமெல்லாம், வெற்றியுறவும் பொருள் குறைபாடு அடையாதுமிருக்கக் கடவுளை வழிபடுவதற்கு ஒரு பகுதியும் மேற்கூறிய முப்பகுப்பினருக்கும், தொண்டு செய்தற் பொருட்டு ஒரு பகுதியும் ஆக, மக்கள் நான்கு பகுதியினராக பகுக்கப்பட்டனர். அவை முறையே க்ஷத்திரியர், வைசியர், பிராம்மணர், சூத்திரர் என்பவைகளாம்.

 

இவர்களுள் கடவுளை வழிபட்டு வந்தவரையே அந்தணர் (பிராம்மணர்) என்றும், அவர்களே ஏனையோரைவிட உயர்ந்தவரென்றும் அன்று தொட்டு இன்றுவரை கருதப்பட்டு வருகின்றனர்.

[இந்நாளில் தாழ்ந்தவரென்று கருதப்படுபவர் தீண்டாதார் (Un-touchables) என்னும் ஓர் வகுப்பினராவர். இவ்வகுப்பு சரித்திரத்தினுள்ளும் காணப்படாத ஓர் தனி வகுப்பாய் இருக்கின்றது. அஃது பிற்றை நாளில் பிரிக்கப்பட்ட ஒரு வகுப்புப் போலும்.]

 

மேற்கூறிய, அந்தணர்கள் யாரென்று நோக்குழி, எம்மதத்தினராலும் போற்றப்படும் தமிம் மறை,


“அந்தணரென்போ ரறவோர் மற்றெவ் வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.''


என்று கூறுகின்றது. அதை ஆராயுமிடத்து அழகிய தண்மையை யுடையவன் அந்தணன் என்பது புலனாகும். இழிகுலப் பிறப்பாளன் என்று கருதப்படும் ஒரு தீண்டாதார் செந்தண்மை பூண்டிருப்பாராயின், அன்னவர் அந்தணரன்றி வேறாவரோ?

 

இழிகுலப் பிறப்பாளரென்று கருதப்பட்ட திருநாளைப்போவார், தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவராலும் போற்றப்பட்டு கறைமிடற் றண்ணலுக்கும், தனக்கும் வேற்றுமையின்றிக் கலந்தன ரன்றோ? எக்காரணம் பற்றி? அந்தண்மையாகிய செந்தண்மை இருத்தற் பொருட்டன்றோ? காளத்தி வேடனாகிய திண்ணனாருக்கு "கண்ணப்பர்'' என்னும் பெயர் எங்ஙனம் கிட்டிற்று? அந்தண்மை மிக்கிருந்ததினா லன்றோ? இவர்கள் யாவரும் அந்தணரென்று அழைக்கப்படுவதற்கு ஏதேனும் ஐயமுளதோ?

 

அந்தணன் என்று கருதப்படுகின்றவனின் தொழிலை நோக்குழி, வைகறைத் துயிலெழுது, மறையோதி, மன்றலில் நின்றாடும், அரனாரை வழிபடுவதாகும். ஆனால் இக்காலத்திய அந்தணர்களின் தன்மையைப் பார்க்குங்கால் பெரும்பாலும், வைகறைத் துயிலெழுதலை நீத்துக் கதிரவன் ஒளிவீசினதற்குப் பின்னரே துயிலெழுந்து, காப்பி அருந்திப் பின், பல்விளக்கிக் காலையுண்டி உண்டு, மேனாட்டாரின் முறைப்படி உடையணிந்து, தத்தம் தொழில்நிலயங்களுக்குச் செல்கின்றனர். ஆண்டு, தன்னை விடக் குறைந்த குலத்தவனாயிருக்கலாம் தனது மேலதிகாரி. அவன் ஒரு பொழுது இவ்வுயர்ந்தோரென்று கருதப்படுகின்ற அந்தணரை தாழ்ந்தவனென்று கூறுவானாயின், அவ்வந்தணரது மனம் எவ்வாறு இருக்குமென்று எழுதமுடியுங்கொல்? அவன் உண்மையில் உயர்குலப் பிறப்பாளனா யிருந்தும் 'தாழ்ந்தவன்' என்று கூறின், எவ்வளவோ மனம் வெதும்புகின்றான். பின் இழி குலத்தார் என்று கருதப்படுகின்ற “தீண்டா தாரை”த் தாழ்ந்தவனென்று கூறுவோமாயின் அவன் மனம் எந்நிலைப்படு மென்பதை எழுதவும் வேண்டுமோ!

 

சகோதரர்களே! கடவுள் அவரது படைப்பில் உயர்வையும், இழிவையும் காட்டிற்றிலர். ஓர் உயர் குலத்தவனென்று கருதப்படுகின்ற அந்தணனுக்கிருப்பது போன்று, இழிகுலத்தவ னென்று கருதப்படுகின்றன. தீண்டாதாருக்கும் ஒன்றுபோல் இன்பம், துன்பம், அவா, வெகுளி யாவையும் உண்டு. மூன்னவனைப் போலவே பின்னவனும் தசை, எலும்பு, நரம்பு, இரத்தம் முதலியவைகளால் ஆக்கப்படுகின்றான். பின்னவனுக்கும் முன்னவனைப் போன்றே, ஊண், ஊக்கம், பசி உணர்ச்சி, வலி யாவும் ஒரு குறைவுமின்றி உள.

ஆகையால், நாம் ஜாதி வேற்றுமையி னின்றும், உயர்ந்தவ ரென்றும், தாழ்ந்தவ ரென்றும் கூறுவதும் தவறு என்று ஏற்படுகிறதன்றே!

 

பின் எதனால் ஒருவன் உயர்ந்தவ னென்றும், தாழ்ந்தவ னென்றும் கருதப்படுகின்றான் என்றால், அவன் ஒழுகும் ஒழுக்கத்தி லிருந்தாகும் ஒழுக்கம் ஒருவனுக்கு இன்றியமையாதது. அது உயிரை விடச் சிறந்ததாம். இதுனையே பொய்யா மொழிப் புலவரும், “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம், உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியுள்ளார். ஒருவனுக்கு நல்லொழுக்கமே இம்மையிலும், மறுமையிலும் இசையை நாட்டவல்லது. அந்லொழுக்கத்திற்கு இன்றியமையாதது கல்வி.

 

கல்வியின் மாண்பு எத் தன்மைய தென்பது, யாவரும் அறிந்த விஷயம் மனிதனது இயற்கையறிவு, சாணையில் தீட்டப்பெறாத ஓர் மணி போன்றதாம். அஃதை கல்வி என்னும் சாணையில் வைத்து, ஒளி பெறச் செய்தல் வேண்டும்.

 

மனிதனுக்குக் கல்வியே கண், கல்வியே பொருள், கல்வியே கற்புடை பெண்டிர், கல்வியே மழலைச் சொல் மிழற்றும் இளங் குழவியர், கல்வியே அனைத்துமாம். நமது திருவள்ளுவநாயனாரும் "கல்வி" என்னும் அதிகாரத்தில்,


“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தார்"

 

என்று அனுவைத் துளைத்து, எழுகடலைப் புகட்டும் தன்மைத்தாய், சீரிய நோக்கங்களை சிறிய அடிகளில் இனிமையாகக் கூறிப் போந்தார். இஃது, விரிக்கில் பெருகு மென்றஞ்சி இத்துடன் விடுத்தாம்.

 

ஒரு மனிதனுக்கு இரு கண்களுள அவைகளுள் ஒன்று 'எண்' மற்றொன்று 'எழுத்து'. இவை இரண்டுமிலையேல், அவனது வாழ்க்கைப் புண்ணெனத் தக்கதேயாம். எங்ஙனம், கண்ணில்லாத ஒரு மனிதன் செல்ல, வழியறியாது காடு, மேடு, பள்ள முதலியவைகளில் விழுந்து அவதியுறுவானோ, அஃதேபோல், எண் எழுத்து என்ற இரண்டு கண்களையும் படையாத மக்கள் விழிக்குருடர்களாய், வாழ்க்கையென்னும் பாதையில் நடக்க லாது, அறநெறி தவறி, தீ நெறிக்கண் சென்று அவரது வாணாளை
விணாளாக்கியும் பாழ்நாளாச்கியும் துன்பெய்துவர். இதில் நின்று, ஒருவனுக்குக் கல்வி எம்மாத்திரம் இன்றியமையாதது என்று நன்கு விளங்குகின்றது.


"எக்குடி பிறப்பினும் யாவரே யாயினும்

அக்குடி கற்றோரை மேல்வரு கென்பர்.''


"கற்றோர்க்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு''


என்னும் திருவாக்குகளுக்கு இயைய, கற்றவர்களை அவர் எக்குடிப் பிறப்பாளராக இருப்பினும், நன்கு போற்றுகின்றனர். உதாரணமாக, மேனாட்டாரான ஆங்கிலேயர், நம்மவர்களான இந்துக்களினின்றும் தாழ்ந்தவரென்றும், ஸனாதன தர்ம மறிந்தவர்கள் கூறுப. ஆனால், நாம் அவரோடு பழகி அவருக்குச் சமமான இருப்பிடம் கொடுத்து, அவருடன் கை கொடுத்து உடனுண்டு, இன்புறுகிறோம். அது எக்காரணம் பற்றி? அவரது கல்வியின் மிகுதியினா லன்றோ?

 

நமது காளிதாசன் எக்குடியிற் பிறந்தோன்? இராமாயண காதை பியற்றிய கம்பர் எக்குடிப் பிறப்பாளரென்று வரையறுத்துக் கூற இயலுமோ? இவர்கள் மொழியை யெலாம், நாம் பொன்னேபோல் போற்றி அவர்களைப் புகழ்கின்றோ மன்றோ! இவையாவும் அவர் கல்வியாலன்றோ!

 

ஆகையால் கல்வியி னின்றே ஒருவன், உயர்ந்தவனும், தாழ்ந்தவனும் ஆகிறான். பிறவற்றினின்று "உயர்வும்" "தாழ்வும்'' இல்லை யென்பது வெள்ளிடை மலையென விளங்குகின்ற தன்றோ!

 

ஆனந்த போதினி – 1936 ௵ - நவம்பர் ௴

 

 

 



 

No comments:

Post a Comment