Thursday, August 27, 2020

 

உயிரினுஞ் சிறந்த தெது?

 

 உலகிற் றோன்றிய சகல ஜீவராசிகளும் தத்தமது உயிரையே சிறந்ததாக மதித்து நடப்பதை நாம் அனுபவமா யறிந்து வருகிறோம். அவ்வாறிருந்தும் சாதாரணமாகத் தாய்மாருந் தந்தை மாரும் தாங்களருமையாகப் பெற்றெடுத்த தங்கள் குழந்தைகளைத் தங்களுடைய உயிர்போற் கருதி வருகிறார்களே அது பொய்யோவெனில், ஆழ்ந்து நோக்குமிடத்துப் பொய்யேயாம். உலகோபசாரமாக அவர்கள் அப்படி நடிக்கச் சம்பவிக்கின்றதே யல்லது வேறல்ல. அக்குழந்தைகளின் பொருட்டுத் தங்கள் பிராணனுக்குக் கெடுதி நேரிடுவதாயிருந்தால் பராமுகமாகத்தான் இருப்பார்கள்.

 

ஒரு காலத்தில் ஓரூரில் ஒரு குழந்தையை இழக்க நேர்ந்த அதன் பெற்றோரும், பாட்டன் பாட்டி மாரும், மற்றுமுள்ள சுற்றத்தாரும் சகிக்கவொண்ணாத துக்கங்கொண்டு " எங்கள் குலத் தை விளக்கவந்த இப்பிள்ளையைப் பாழும் எமன் கொண்டுபோகத் துணிந்தானே; எங்களில் எவரை யேனுங் கொண்டுபோகக்கூடாதா?'' என்று பல பல சொல்லி, "இக்குழந்தை போனால் இனி நாங்கள் உயிர்வைத்திருக்கமாட்டோம்'' என்று வாய்விட்டுரைத்துப் புலம்பிப் பரிதபித்தார்கள். இதைக்கண்ட எமதர்மராஜன் '' ஆஹா ! இவர்கள் இச்சிறு மகவின் நிமித்தம் கண்டோருங் கண் கலங்கும்படி இப்படியழுது வருந்துகிறார்களே, இதன் உண்மையை நாம் கண்டறிய வேண்டும் " என்றெண்ணினான். உடனே அவன் ஒரு விருத்தாப்பிய புருஷனாக உருவெடுத்துக் கொண்டு, இவர்கள் முன்தோன்றினான். தோன்றியதும் அவர்களைப் பார்த்து " கொஞ்சம் நிதானியுங்கள், ஏன் வீணாக மண்டையை உடைத்துக்கொள்ளுகிறீர்கள்; இக்குழந்தை பிழைத்துக் கொள்ளும் மார்க்கம் ஒன்றிருக்கிறது. அதாவது உங்களில் எவராவது இக்குழந்தைக்குப் பதிலாக உயிர்துறக்க முன்வருவதாயிருந்தால், நான் எனது மந்திரபலத்தால் இதனை எழுப்பிவிடுகிறேன்; சீக்கிரம் இந்த யோசனைக்கு ஒருவர் உட்படுங்கள்'' என்றான்.

 

இம்மொழியைக் கேட்டதும் அவர்கள் ஒருவர் முகத்தை யொருவர் நோக்கலானார்கள். அந்தநிமிஷமே அக்குழந்தையின் பாட்டனும் பாட்டியும் ஏதோ அவசர வேலையாக எழுந்து செல்வது போல வெளியே சென்று ''நமக்கென்ன! நாம் இன்னும் கொஞ்சநாளிருக்கப்போகிறோம். அதற்குள் என் நாம் அகால மரணத்துக் காளாக வேண்டும்? இந்தக் குழந்தை போனாலென்ன! இன்னொரு குழந்தையாகிறது'' என்று பேசிக்கொண்டு வெளியிலேயே காலஹரணம் செய்து கொண்டிருந்தார்கள். பெற்றோரும் பிறரும் இவ்வண்ணமே தங்களுக்குத் தோன்றிய அபிப்பிராயப்படி முடிவு செய்துகொண்டு, விருத்தாப்பியர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமலே மௌனஞ்சாதித்துவிட்டனர்.

 

வந்த வயோதிகரான எமதர்மராஜனும்'' இந்த உபசாரத்திற்கா இப்படி நீங்கள் எவரும் பிரமிக்கும்படி ஏங்கி ஏங்கிப் புலம் பிரீர்கள்'' என்று சொல்லிவிட்டுத் தன திடம் போயினான். இதனால் ஒவ்வொருவரும் தம் தம் உயிரையே எவற்றினும் சிறந்ததாக மதிப்பது நன்றாக வெளியாகின்றது.

 

இப்படி உயர்வாக மதிக்கப்படும் மக்களுயிர்க்கு உறுதியாகிய பெரும் பயனை யளிப்பதில் சிறந்தது எதுவோ அதனை நம்மிற் பலர் சிந்திப்பதில்லை. சிந்தித்தால் "அதுவே நாம் பற்றத் தக்க நல்ல அறம்'' என்று அக்கொள்கையில் வழுவாது நிற்கவும், அப்படி நின்று இகத்துக்கும் பரத்துக்கும் உரிய சுகவாழ்வை எளிதிலடையவும் கூடுமல்லவா? அதனால் கீர்த்தியும் வெள்ளிடை மலைபோல எங்கும் பரவுமன்றோ? மற்றும் அதுவே, பிரம க்ஷத்கரிய வைசிய சூத்திரரென்னும் நான்கு வருணத்திற்கும், அவ் வருணத்துள்ள பிரமசரிய, கிருகஸ்த, வானப்பிரஸ்த, சந்நியாசமென்னும் நான்கு நிலைமைக்கும் சிறப்பாகவும் பொதுவாகவும் இருந்து நலத்தைக் கொடுப்பதாம். அதுவே, பிறர் குற்றத்தைக் காண்பது போலத் தமது குற்றத்தையுங்காணவல்ல சமநோக்கத்தில் நின்று, மறந்தும் மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கரணங்களாலும் கெட்ட மார்க்கத்தில் பிரவேசியாதவரிடம் நிலையாகப் பொருந்துவதாம். அன்பர்களே! இவ்வாறு விளங்கும் அது எது?

 

அதுதான் ஒழுக்கம் என்பது. அதனையே நாயனார், உயிரினுஞ் சிறந்த தென்றும், ஒவ்வொருவரும் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம் என்றும் உயர்த்திக் கூறினார். ஏன்? அதனைக் கைப்பற்றிய உயர்ந்தவர்க்கும் தாழ்ந்தவர்க்கும் அது சமமான மேம் பாட்டைக் கொடுக்க வல்லது; எல்லாத் தருமங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் இகத்துக்கும் பரத்துக்கும் துணையாவதெது வென்று மனத்தை யூன்றி நோக்குவோர்க்குத் துணையாக நிற்பது; தாழ்ந்த குலத்தவரையும் உயர்ந்த குலத்தவராக்கும் வல்லமையுடையது; தன்னைக் கைப்பற்றாத உயர்குலத்தாரைத் தாழ் குலத்தவராகச் செய்து விடுவது; பொறாமையுள்ளவரிடம் செல்வந் தங்காததன்மை போலத் தன்னைப் பற்றாதாரிடம் உயர்வைத் தங்கவிடாதது; இவை முதலிய நற்குணங்கள் அதனிடம் குடி கொண்டிருத்தலால் என்க.

 

நமது பரதகண்டமானது ஆதியிலிருந்து நல்லொழுக்கத்தைக் கையாண்டு வரும் பாக்கியத்தைப் பெற்றிருத்தலினாற்றான் புண்ணிய பூமி என்று யாவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. பரதகண்டத்திலும் தென்பாகமே இம்மேன்மைக்குரிய தாய் விளங்குகின்றது. தெய்வ வழிபாடு, குலாசாரம், மதாசாரம், பெரியாரைப் போற்றல், தூய்மை, காருண்யம், பரோபகா ரம், பிறர்பொருளை இச்சியாமை, பயனற்ற சொல்வழங்காமை, தீயாரைச் சேராமை முதலிய நற்பழக்கங்களே நமது முன்னோர் நமக்குத் தேடிவைத்த அழியாத ஆஸ்தி. இவற்றில் நாமே பிற தேசத்தாரைப் பெரும்பான்மையும் தோற்கடிக்கக் கூடியவராயிருக்கிறோம். ஸ்ரீமத் விவேகாநந்த சுவாமிகள் முதலிய பெரியோரால் மேல் நாட்டாரில் மேதாவியரான பலர் நமது ஞானநூல் களையும் உலக நூல்களையும் வியந்து நல்லொழுக்கத்தில் பழகி வரும் விருப்பத்தை மேற்கொண்டிருக்கின்றனர்; வடமொழியிலுள்ள உபநிஷத் முதலியவற்றை அமெரிக்கரும் ஜெர்மானியரும் பெரிதும் புகழ்ந்து, சிரோபூஷணமாகக் கொண்டு அந்திய காலத்தில் மக்களை யுய்விப்பதற்குரிய உத்தம நூல்கள் அவைகளே என்று வற்புறுத்திக் கூறியிருக்கின்றனர்.

 

மேலும் பரதகண்டத்திலுள்ளவர்கள் புண்ணியரும் புனித ஒழுக்கம் வாய்ந்தவருமெனக் கேட்டு அவர்களைக் கண்ணாரக் கண்டு, அக்காட்சியளவொன்றாலேயே பாபரகிதராய் நற்பே றடையலாமென்னும் உத்தேசத்தைக்கொண்டு, சில வருஷங்களுக்கு முன், அமெரிக்காவிலிருந்து ஒருவர் பெரும் பொருட்செலவில் இங்கு வந்ததாகவும், வந்தவர் முதல் முதல் வட இந்தியாவிலிருந்த இந்தியரையும், மகம்மதியரையும், பிறரையுஞ் சந்தித்ததாகவும், அப்படிச் சந்திக்கப்பட்டவர்களிடம் தாம் கேள்வியுற்ற நல்லொழுக்கங்கள் இல்லாதிருந்ததை நோக்கி வருந்தியதாகவும், உடனே தென்தேசம் வந்து ஆங்குள்ளவரிடம் அத்தூய ஒழுக்கங்களைப் பார்த்து மகிழ்ந்ததாகவும், தேவாலய ஒழுங்குகளையுங் கண்டு வியந்ததாகவும், அதனால் தமது முயற்சி பயன்பட்டு மீண்டும் அவர் தம்மூர்க்குத் திரும்பியதாகவும் ஒரு பத்திரிகை பேசக்கேட்டிருக்கிறோம். நமது நாட்டாராலும் பிற நாட்டாராலும் பரதகண்டம் இப்படிப் பலவாறு புகழ்பெற்றிருக்கின்றது.

 

இப்போது நாகரிகமுடையவர்களாகக் கொண்டாடப்பெறும் மேல்நாட்டாரும் 2000 வருஷங்களுக்கு முன் வனாந்தரங்களிலிருந்து மரவுரியணிந்து பறவைகளின் முட்டைகளையும் மச்சங்களையும் பச்சையாக வுட்கொண்டு வந்ததாகவும், பிறகு நமது தேச மூலமாகவே சீர்திருத்தம் பெற்றதாகவும் அவர்கள் சரித்திரமே புகல்கின்றது. ஆனால் அவர்கள் நமது தேசத்திற்கு வந்த பின் ஊருக்கு வெகு தூரத்தில் பங்களாக்களமைத்துக் கொண்டு நந்தேயத்தவரிற் றாழ்வான ஆசாரத்தையுடையவர்களைத் தம்மிடம் குற்றேவல் செய்ய வைத்துக்கொண்டமையால் அப்படி வைத்துக் கொள்ளப்பட்டவரின் ஆசாரமே நம் எல்லோரிடமும் உண்டு எனத் தீர்மானித்து அதைத் தம்மவர்க்கு வெளிப்படுத்தி நம்மைச் சீர்திருத்தத் தலைப்பட்டனர்.

 

இதனைக் கண்டு மயங்கிய நம்மவரிற் சிலர் அவர்கள் பாஷையைப் பெரிதுங் கற்று, சுய பாஷையை அலக்ஷியம் செய்து, அவர்களுடைய நடையுடை பாவனைகளையே பின்பற்றத் தொடங்கிவிட்டனர். அந்தந்தத் தேசங்களுக்கும் சீதோஷ்ணஸ்திதியை யொட்டி நடையுடை பாவனைகள் ஏற்பட்டுள்ளன. சுதேசத்துக் கடுத்தவைகளை விடுத்துப் பிறதேசத்தாரது ஆசாரங்களை நாம் மேற்கொள்வது பரிகசித்தற்கான விஷயமன்றோ? ஒரு தேசத்தான் மற்றொரு தேசத்தானது பழக்க வழக்கங்கள் முதலியவற்றை யனுசரிக்கத் தொடங்கினால் அது பழிப்புக்கிடமானதே என்பதை ஏன் நாம் உய்த்துணரக்கூடாது நமது 'ஆனந்தபோதினி' தைமாத (1925 ஜனவரிமீ 13s) சஞ்சிகையில் வந்துள்ள 'நம் நாடும் பத்திரிகைகளும்' என்னும் விஷயத்தை நன்கு கவனித்து இனியாவது பிசகிய நம்மவர் நமது பூர்வீக அனுஷ்டானங்களைப் பின்பற்றி நமது நாட்டை முன்னேற்றமடையச் செய்வார்களாக. இத்தகைய விஷயங்களை நம்மவர்க்கு அறிவாளர் இப்போது அடிக்கடி தெரிவித்து வருவதால், நாம் இதை வளர்த்தாது நிறுத்துகின்றோம். சர்வ வல்லமை பொருந்திய பகவான் நம்மவர்க்கு இது சம்பந்தமான நல்ல நாட்டத்தைக் கொடுத்து ரக்ஷித்தருள் வானாக. சுபம்.


ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment