Thursday, August 27, 2020

 

உயிர்வதை நீத்தல் வினா

 

மேற்கண்ட தலையங்கமிட்டு, ம ள - ஸ்ரீ, பா. நெ. தங்கசாமி நாடார். (சிவகாசி) என்ற நண்பவரால் வரையப்பட்ட கீழ்க்காணும் 13 வினாக்கள் ''க்ஷத்திரிய மித்திரன்” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கக்கண்டோம்.


 
வினாக்கள்.

 

1. உயிருள்ள தெல்லாம் உயிருள்ள பொருளைத் தின்றே ஜீவிக்கின்றன. மேலான பிராணிகளுக்குக் கீழான பிராணிகள் ஆகாரம். கலப்பற்ற கலமண் தவிர மற்றப் பொருட்களெல்லாம் உயிருள்ளவைகளேயாம். ஆதலால் மனிதன் உயிர்வதை செய்யாமல் உயிர்வாழ்வது எப்படி?

 

2. இரத்தம் உள்ள பொருள் யாதும் தின்னக்கூடாது என்றால், பால் குடிக்கலாமா? மிருகத்தின் ரத்தத்துக்கும் காய்கனிகளின் சாரத்துக்கும் வேறுபாடு உண்டோ?

 

3. மச்சமாமிசங்கள் துர்க்கந்தம் வீசுகின்றன வென்றால், காய்கனிகள் துர்க்கந்தம் வீசுகிறதில்லையா? அழுகி நாறுகிறதில்லையா? புழுக்கிற தில்லையா? வயிற்றுக்குள்ளே செல்லுகிற எந்தப் பதார்த்தம் நாறாது?

 

4. சைவசித்தாந்தத்தின்படி தாவர ஜீவனுக்கும் மிருக ஜீவனுக்கும் வேறுபாடு யாது? எல்லாம் ஆன்மாக்களோ? வெவ்வேறோ?

 

5. குறைந்த அறிவுள்ள உயிர்களைக் கொல்வது பாவமில்லை யென்றால், குறைந்த அறிவுள்ள சிசுக்களை வதைப்பது பாவமல்லவே? எப்படி?

 

6. தாவர வுயிரைப் போக்குவதற்குப் பிராயச்சித்தமுண்டென்றால், மற்ற உயிரைப் போக்குவதற்குப் பிராயச்சித்தமில்லையோ? எப்படியும் உயிர் உயிர்தானே! எல்லாம் ஆன்மாக்கள் தானே!

 

7. குடிக்கிற தண்ணீரிலும் சுவாசிக்கிற ஆகாயத்திலும் ஆயிரக்கணக்கான சிற்றுயிர்கள் இருக்கின்றன. ஆதலின் ஒருமுறை மூச்சுவிடுவதாலும் கணக்கற்ற வுயிர்கள் நாசமடைகின்றன. இங்ஙனம் ஒருவன் ஒருநாளில் கொல்லுகிற உயிர்களுக்குக் கணக்கு வழக்கில்லை. இப்பாவம் எப்படித் தொலையும்?

 

8. இருக்கு முதலான வேதங்கள் நமது சிவ மதத்துக்குப் பிரமாணமாகக் கொள்ளப்படுகின்றன. அவ் வேதங்களில் மிருகபலி செலுத்துவது கடவுளுக்கு உகந்த வழிபாடு என்று சொல்லியிருக்கிறது. இதற்கு நியாய மென்ன?

 

9. சிவபெருமான், மகாவிஷ்ணு, பார்வதி தேவி முருகக் கடவுள் முதலியோர் உயிர்வதையை வெறுக்கின்றனர் என்று சாஸ்திரோக்தமாக நிரூபித்தல் கூடுமோ?

 

10. தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கொல்லாமை, புலான் மறுத்தல் என்னும் இரு விரதங்களையும் இல்லறத்தார்க்கு விதிக்காமல் துறவறத்தார்க்கு விதித்த தெங்ஙனம்?

 

11. க்ஷத்திரிய வருணத்தார் மாம்ச போஜனஞ் செய்வது பாவமோ? எங்ஙனம்? இந்தியாவின் வடபாகத்திலுள்ள பிராமணர் மாம்ச போஜனஞ் செய்வதற்குக் காரணமென்ன?

 

12. கொல்லாமை, புலால் மறுத்தல் என்பன புத்தசமயக் கொள்கையோ? சிவமதக் கொள்கையோ? இந்தக் கொள்கை உண்டாகி எவ்வவவு காலமாகிறது?

 

13. சைவன் என்றால் யார்? எவ்வளவு துன்மார்க்கமாய் நடந்தாலும் மாமிச போஜனத்தை மட்டும் நீக்கிவிட்டால் ஒருவன் சைவன் தானா?

 

 

சிலர் இத்தகைகளை கேள்விகளைக் கொண்டு கொன்று தின்பதில் பாபமில்லையெனத் தீர்மானிக்கக் கருதுகிறார்கள். ஆகையால் இதைப்பற்றி வரையவேண்டியது அவசியமெனத் தோன்றியது.

 

மேற்கண்ட வினாக்கள் ஒவ்வொன்றிற்ரும் விடை யளிப்பதாயின் கூறுவதையே கூறவேண்டி வரும். இப்பதின் மூன்று வினாக்களையும் பின் காணும் ஐந்தாறு வினாக்களி லடக்கிவிடலாம்:

 

1. எல்லாம் ஆன்மாக்களாயிருக்க மிருக பட்சிகளைக் கொன்றால் மட்டும் பாபம் தாவரங்களைக் கொன்றால் பாவமில்லை என்பதெப்படி?

 

2. பசுவைக் கொன்று தின்றால் பாவமெனின் அதன் பாலை யருந்துகிறோமே. அது இரத்தமல்லவா?

 

3. நாம் அருந்தும் ஜலத்தில் அனேகம் கிருமிகளிருக்கின்றனவே, அதனால் பாவமில்லையா?

 

4. வேதத்தில் யாகம் செய்யும்போது பலி கொடுக்கச சொல்லியிருக்கிறதே. அது கொலை யல்லவா.

 

5. கொல்லாமை எம்மதக்கொள்கை? நாயனார் துறவறத்தார்க்கு மட்டுந்தானே கூறினார்?

6. சைவன் என்றால் எவ்வளவு துஷ்டனாயிருந்தாலும் மாமிச போஜனத்தை மட்டும் நீக்கிவிட்டால் சைவன் ஆகி விடுகிறானா?

 

விடை

 

1. ஆன்ம சொரூபம் எங்கும் ஆகாயம்போல் உள்ளும் புறம்பும் வியாபித்தேயிருக்கிறது. அது இல்லாத விடரில்). கல்லில் அது இருந்திரா விட்டால் பிரகலாதனுக்காக கற்றூணிலிருந்து பகவான் தோன்றியிரார்.

 

இப்போது புலாலுண்ணல் பாபம் என்பது எதனாலெனில் அதற்காக ஒன்றைக் கொலை செய்வதால்தான். ஒரு ஜீவனைக் கொலை செய்வதால் அது எவ்வளவோ பீதியும் சொல்லொணா இமசையும் அடைகிறது. இதனால் தான் கொலை செய்யலாகாதென்பது.

இயற்கை மரணமடைந்த சவத்தைத் தின்பதால் தமோகுண முண்டாகுமேயன்றி கொலை பாதகம் உண்டாகாது.

 

இனி ஆன்ம சொரூபம் எங்கும் நிறைந்திருப்பினும் அதன் நிலைமையில் மாறுபாடுண்டு. கல் மண் முதலியவற்றில் ஆன்மா துரிய நிலையிலிருக்கிறது. அறிவு விளக்கம் சற்றும் இல்லை. மரம் செடி முதலிய தாவாவர்க்கங்களுக்கு ஸ்பரிச உணர்சசியாகிய ஒரு அறிவு மட்டுமே யுண்டு. அவற்றின் இலை மலர் காய் களியாதிகளைப் பறிப்பதால் அவற்றுக்கு உணர்ச்சி தோன்றாது. நமது தேகத்திலுள்ள உரோமம் நகம் முதலியவற்றைக் கழித்தால் நமக்கு எப்படி உணர்ச்சி தோன்றுவதில்லையோ அப்படியே. அதோடு மனிதன் ஒரு மரத்தை வெட்டிவிட்டால் அது மறுபடி துளிர்த்து உஜ்ஜீவிக்கும். அத்தகையவை யனேகமுள. மேலும் மனிதனும் அவற்றை யுற்பத்தி செய்யக்கூடும். ஆதலின் அவற்றை யுண்பதால் பாபமில்லை. ஒரு சீவன் இம்சைப்படும்படி செய்வதே பாபம் என்பது தான் இதன் முக்கிய நோக்கம்.

 

குறைந்த அறிவுள்ளவைகளைக் கொன்றால் பாபமில்லையெனில் குழந்தையைக் கொன்றால் பாபமில்லையேயென்று நமது நண்பர் கேட்பது நியாயமே. பகுத்தறிவில்லாததாலேயே ஆன்மா இல்லையென்று கருதுவது ஆன்ம லக்ஷணம் அறியாத் தன்மையேயாகும். பகுத்தறிவு அறிவின் வளர்ச்சியில் ஒருபாகமேயன்றி வேறில்லை. எப்போது இம்சைப்படுகிறதோ அப்போது அதில் ஆன்மா இருக்கவேயிருக்கிறது. நித்திரையில் கூட பகுத்தறிவில்லை. அப்படியானால் தூங்குகிறவர்களைக் கொன்றால் பாபமில்லையென்பதோ? அதுதான் பெரும்பாதகம் என்று கூறப்பட்டருக்கிறது. பெரிய ஜீவன்களெல்வாம் சிறு ஜீவன்களை யுண்டே ஜீவிக்கின்றனவென்று கருதலாகாது. அனேக ஜீவன்கள் கந்த மூலாதிகளையே யுண்டு ஜீவிப்பது பிரத்தியட்ச அனுபவம்.

 

2. பசுவின் பாலை யருந்துவதாலேயே அதைக் கொன்றால் பாபமில்லை யென்று கூறுவது விஷயமறியாத தன்மையாகும்.

 

இரத்தமே பாலாக மாறுகிறதுண்மையே. தாயின் பாலை யருந்தினோம். தாயைக் கொன்றால் பாதகமில்லையே? என்ன அறியாமையிது! பாலைக் குடிப்பவனே இரத்தத்தைக் குடிப்பானோ? இல்லை. ஏன்? இரத்தமே பாலாக மாறினும் இரண்டின் குணங்களிலும் நேர்மாறான வித்தியாசமிருக்கிறது அரவின் விடம் கொடிது. வெறுக்கத்தக்கது. அது முதிர்ந்து மாணிக்கமாயின் எவ்வளவு கௌரவமும் முடி மன்னரின் கிரீடத்தில் ஏறும் யோக்கியதையும் பெறுகிறது. ஒரு துளி மழை நீர் பயனற்றது. அது இப்பியின் வயிற்றில் சேர்ந்து முத்தாய் மாறியபோது மிக மதிப்புள்ள தாய் விடுகிறது. அவ்வாறே இரத்தம் அசுத்த பதார்த்தமே. ஆனால் அது பாலாக மாறியதே அமிர்தமாகிறது. மிக்க யோக்கியதையும் மதிப்புமுடையதாய் விடுகிறது. மகாவுத்தமமும் பரிசுத்தமுமான உண் பொருளாய் மாறி விடுகிறது. பசுவின் பாலை யருந்துவதிலும், கன்றுக்குப் பால் போதுமான வரைவிடாமல் கறந்து கொண்டால் பாதகமேயாகும்.

 

3. மனச் சிந்தனைப்படியே கர்மம் ஏற்படுகிறது. ஆதலின் மனமறிந்து செய்வதே பாபம். நடக்கும் போதும், சல மருந்தும் போதும் கண்ணுக்குத் தெரியாத அனேகம் உயிர்களைக் கொன்று விடுகிறோமென்ற உத்தேசத்தால் எதைக் கொன்றாலும் பாபமில்லை எனக்கருதுவது வீண் குதர்க்க வாதமேயன்றி வேறில்லை. அறிந்து மனம் சம்மதித்துச் செய்யும் கொலையே (அது புழுவாகட்டும் எறும்பாகட்கும்) பாபமாகும்.

 

4. முற்காலத்தில் யாகத்தில் மிருகபலி கூறப்பட்டிருந்தது உண்மையே. அக்காலத்தில் யாகம் செய்வோர்க்கு அம்மிருகத்தின் ஆன்மா வேதனை யின்றி மேலான பதவியை யடையும்படிச் செய்யும் வல்லமையிருந்தது. அது முன் யுகத்தைப் பொருத்தது. இக்கலியுகத்தைச் சேர்ந்ததல்ல. அதோடு போக இச்சை யுடையோரே அதைச் செய்வது. ஞான காண்டத்தில் யாகபலி கூட நிஷேதிக்கப்பட்டே யிருக்கிறது.

5. ஆஸ்திகமத மனைத்துமே சீவ இம்சையை நிஷேதித்துக் கூறுகின்றன. அவற்றில் நமது மதத்திலும், புத்த சமண மதங்களிலும் அது மிக்க அதிகமாய்க் கண்டிக்கப்பட்டிருக்கிறது. சைவமதத்திற்குக் கொல்லாமையே அடிப்படை. அதனாற்றான் சாதாரணமாய் மாமிசம் முதலியவற்றைப் புசியாத ஒருவனை'' அவன் சைவமாய் விட்டான்'' என்று கூறுவது உலக வழக்கமாய்விட்டது.

 

சில மதஸ்தாபனர்கள் அவ்வக்காலத்திற்கும் இடத்திற்கும் தக்க வாறு ஜீவ இம்சையாகா தென்பதை ஒருவித வரையறுப்போடும் கூறியிருக்கிறார்கள். ஏனெனில் மாமிச மச்சாதிகளை ஆதிமுதல் கதா உண்டு கொண் டிருப்போரை யடியோடு அதை விட்டு விடச் சொன்னால் அது ஆகாத காரியமாவதோடு, மதாசாரியர் கூறும் மற்ற போதனைகளையும் அவர்கள் அடியோடு நிராகரித்து விட்டு நல்வழியிற்றிரும்பாமல் அழிந்து போவார்கள் என்பதனாலேயே. காலை முதல் மாலை வரைச் சாராயங் குடித்துக் கொண்டிருப்பவனுக்கு'' நீ போசனம் அருந்தும் போது மட்டுங் குடி'' என்று முதலில் புத்தி கூறுவது போல் கூறினார்கள்.

 

நாயனார் "கொல்லாமையைப் பற்றி கூறியது துறவறத்தார்க்கு மட்டுமன்று. துறவறத்தார்க்கு அது சற்றும் பொருந்தாததாதலின் அதை அருளுடைமியின் பின் வைத்துக் கூறினாரன்றி வேறில்லை. அது பொது விதியேயாகும். அப்படிக் கருதினால், இன்னா செய்யாமை - வெகுளாமை - கள்ளாமை யாவுமே துறவறத்தார்க்கு மட்டும் கூறினாரென்று கருதுவதோ? அது பெருந்தவறு. இவை யாவும் எல்லார்க்கும் பொதுவாகக் கூறப் பட்டவையே.

 

6. மாமிச மருந்தாததனால் மட்டுமே ஒருவன் சைவனாகி விடமாட்டான். குழந்தைப் பருவத்திலிருந்து அப்பழக்கமில்லாமலிருந்தால் யாரும் அப்படி நடந்து கொள்ளலாகும். எவன் தன்னுயிரைப் போல் மன்னுயிரனைத்தையும் கருதும் சீவகாருண்யமும், பரமசிவனிடத்தும், சிவனடியாரிடத்திலும் பூரண பக்தியும் உடைய வனாயிருக்கிறானோ அவன்றான் சைவன். ''சிவனடியாரைச் சிவனென நினைபவன் எவன் அவன் சிவனே'' என்றனர் ஆன்றோர். இன்னும் யாவற்றையும் சக்ஷாத் பரசிவ சொரூபமாகவே காண்பவன் எவனோ அவனே சரியான சைவனெனத் தக்கவன். ஆதலின் ஒரு ஜீவனுக்கு இம்சை யுண்டாகும் படிச் செய்வதே பாதகச் செயல் என்றும் அது தாம் படைத்த எல்லாச் சீவர்களிடத்தும் கருணை நிறைந்தவராகிய பகவானுக்கு சற்றும் ஒவ்வாத காரியமென்றும் நாம் கருத வேண்டும்.

 

ஆன்றோரும் சாத்திரங்களும் கூறியுள்ளவற்றையே நாம் கூறினோமன்றி நாமே யொன்றும் கூறவில்லை.

 

சீடன்.

 

ஆனந்த போதினி – 1924 ௵ - டிசம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment