Thursday, August 27, 2020

 

உரை நடை அல்லது வசன நடை

(Prose Style.)

 

நடை:  மனதில் உதிப்பதை மரபியல் வழாமல் அனைவரும் எளிதில் உணருமாறு வாயான் மொழிந்தும் வரைந்தும் வெளியாக்குவது.

நடைக்குண்டாகும் மேன்மைக்கு ஏது: எழுதுவோனது கல்விநலம் கொள்கைநலம்.
உரைவகை: 1. செறித்துரை, 2. விரித்துரை, 3. அணிந்துரை

நல்ல நடைக்குள்ளன: 1. தெளிவு, 2. ஆற்றல், 3. இசை


 I. தெளிவு.


தெளிவு நடை: நாம் வழங்கும் சொற்களும், சொற் றொடர்களும், வாக்கியங்களும் நமது கருத்துக்களைப் பிறர் வித்தியாசமாகக் கொள்ளா மல் இருக்கும்படி திருத்தமாயும், நேர்மையாயும் வெளியிட்டுரைப்பது. மேலும், பொருள் வெளிப்படையா யிருக்க வேண்டியதே யொழிய, கொள்கை முதலானவைகள் யாவராலும் ஒப்புக்கொள்ளத்தக்கனவா யிருக்க வேண்டுமென்பது கருத்தல்ல. மற்றும், சாமானிய மாந்தர்களுக் கும் நன்கு விளங்குமாறு பொருள்கள் அமைந்திருப்பதுதான் தெளிவான நடை என்பதற்கு ஓர் அடையாளம்.  ஒருவர் நடை வேறெருவருக்குப் பயன்படாமை:

 
 (a) சிலர்க்குத் தெளிவாயிருப்பது வேறு சிலர்க்குத் தெளிவா யிராமை.
 (b) கற்றோர்க் கென்றெழுதிய நடையானது சாமானிய சனங்களுக்குப் பயன்படாமை.
 (c) நியாய வாதியால் அறியப்படும் நடை, வைத்தியனால் அறியப்படாமை.
 (d) சிறுவர்க்கான நடை பெரியோர்க் காகாமை.


 1. சொற்கள்:


 (A) ஆன்றோர்கள் ஆட்சி பெற்ற சொற்களையே வழங்குவது ஓர் வழக்கமாயினும், புதியன புகுதல்' என்ற ஞாயப்படி ஏற்ற ஆக்க மொழிகளைப் பிறரும் அங்கீகரிக்கத் தக்கவாறு வேண்டிய மட்டில் வழங்கலாகும்

ஏனெனில், எந்தப் பாஷைகட்கும், எக்காலத்தும் நிலை மாறுபடல் இயற்கையாதலினாலும், நாளுக்கு நாள் மாந்தர்கட்குப் புதுப்புது விஷ யங்கள் அவரவர் அறிவினுக்குத் தக்கவாறு புலப்படுவதனாலும், மற்றும், கடைவீதியில் நாம் காணாத கொள்ளாத பல பொருள்கள் புதிது புதிதாகக் காணப்படுந்தோறும், அவற்றை நம்முடைய உபயோகத்துக்குத் தக் கவாறு எடுத்தாள் அங்கீகரித்துக்கொள்வது போல், புதிய புதிய வார்த்தைகளைப் பொருளுக்கேற்க அமைத்துக்கொள்வது வழுவாகா.

 

உதாரணம்: - எலக்ட்ரிக் ட்ராம் வண்டி என்றுரைப்பதைப் பார்க்கிலும் மின்சார வண்டி என்று சொல்லுதல் தவறாகாதாம்.

 

(B) செந்தமிழ் நடையில் தள்ளுவன: - (செந்தமிழ் = கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் விளங்கக்கூடிய தமிழ்)

1. திசைச் சொற்களை வழங்காமை

உதாரணம்: - செப்பு என்பதிலும் சொல் எனலே மேன்மை. கேட் வாசற்படி, ஷாப்புக்கடை, வக்கீல் என்று வழங்குதலைத் தவிர்த்து, வாசற்படி, கடை, நியாயவாதி என வழங்கல் வேண்டும்.

2. வடமொழிப் பதங்களை இன்றியமையாத வழியன்றி வழங்குதலைத் தவிர்க்க.
உதாரணம்: - மானமிலான் என்பதற்கு விமானி எனலாகாது.

3. சாமானிய வழக்குச் சொற்களைக் கட்டுரையி லெழுதுதல் சிறப் பின்மையால், அதைத் தவிர்க்க.
உதாரணம்: - ஒத்துமை என்பதினும் ஒற்றுமை என்னல் மேன்மையாம். (சாமானிய வழக்கு = Colloquial Words.)

4. குறியீட்டு மொழிகள் (= Technical words) சாதாரண நடையில் வழங்குதலையும், செய்யுள் விகாரங்களைச் செவிக்கின்பம் தோன்று மிடத்தன்றி வசன நடையில் உபயோகித்தலையும் தவிர்க்க.


 2. சொற்றெடர்களில் தவிர்க்க வேண்டுவன:


 1.ஒரே சொற்றொடரை அடிக்கடி கூறுதல்.

2. ஒரு மொழியை விளக்குமிடத்து, அதே மொழியின் திரிபுகளை உபயோகித்தல்.

3. ஒரே சொற்றொடர், சிலசமயங்களில் சொல்லப்புகும் விஷயத்தை வலியுறுத்திக் காட்டுவதா யிருப்பினும், அதனையே அடிக்கடி வழங்குதலை யொழிக்க.

4. வடநூன் முடிபுகளை ஆன்றோராட்சியின்றித் தமிழிற் பெய்தலைத் தவிர்க்க.

 

தவிர்க்க வேண்டுவனவற்றைத் தவிர்க்காவிடின், அதனாலுண்டாம் பயன்கள் வருமாறு:
   
(a) மயக்கத்துக் கிடனாதல்.

(b) வேறு சில வேளைகளில் மாறான பொருளுண்டாதல். பல சொற்றொடர்கொண்ட வாக்கியத்தின்கண்ணே முடி பிலக்கணத்தை யாவரும் உற்று நோக்க வரும். அங்ஙனம் உற்று நோக்காமற்போனால், எண்மயக்கம், பான்மயக்கம் இவைபோல்வன பிறவும் வாக்கியத்தில் நடைபெறலாகும்.

உதாரணம் - அவன் அப்படிச் சொல்பவ னல்ல'என்று அனேகர் கவனியாமலே உபயோகிப்பர். கவனித்தால் அல்லன்'என உபயோ கிக்கக்கடவர்.

 

3. வாக்கியங்கள்: –


1. தனி வாக்கியம் (= Simple Sentence.)

2. கலப்பு அல்லது சங்கர வாக்கியம் (= Complex Sentence.)

3. தொடர் வாக்கியம் (= Compound Sentence.)

(a) தனிவாக்கியம்: - ஒரு எழுவாயும் ஒரு பயனிலையும் உடையது.

(b) கலப்புவாக்கியம்: - தனிவாக்கியத்தை அடுத்து வரும் சில அடைவாக்கியங்கள்.

(c) தொடர் வாக்கியம்: - இரண்டு மூன்று தனி வாக்கியங்களுடன் கலந்து வரும் அடைவாக்கியங்கள். இம்முத்திற வாக்கியங்களும் கட்டுரையில் விரவியே வரத்தக்கன. ஆனால் தனி வாக்கியங்கள் மிகுந்திருப்பின் உரை நடைக்கு மிகுதியான ஆற்றலுண்டாம். ஆற்றலெனினும் ஆண்மையெனினும் ஒன்றே. தவிரவும், முற்றியல்வாக்கியம், நெகிழியல் வாக்கியம் என மேலும் இரண்டு கூறுவர்.

1. முற்றியல் வாக்கியம்: - வாக்கியத்தி னிறுதிவரை படித்தபின் னர் பொருள் விளங்குவது. 2. நெகிழியல் வாக்கியம்: - பல சிறு வாக்கியங்கள் ஒரே வாக்கிய மாக அமைதல். உதாரணம்: - முற்றியல் வாக்கியம்: - அருமையான ஒரு நூலைப் படிக்குந்தோறும் புதிய நலங்கள் புலப்படுவது போல, பழகுந்தோறும் இருவர்க்கும் மகிழ்ச்சியுண்டாக்குவதே நட்பு.
நெகிழியல் வாக்கியம்: - சில நண்பர்களிடத்து நாம் கிரகிக்க வேண்டிய பொருள்கள் ஒன்றுமில்லாவிடினும், அவர்கள் நம்மைக் கேட்கும் கேள்விகளால் நம் புத்தி தூண்டப்படுகின்றது.
ஷை இரண்டு வாக்கியங்களும் ஒரு கட்டுரையின் கண் கலந்து வருதலே சிறப்பாம். ஒரே விதமான நடை அத்துணைச் சிறப்பைத் தருவதின்று. மாக


 II. ஆற்றல் (ஆண்மை.)


பொருளை உற்று நோக்கச் செய்வதும், மனத்திற்பொருந்தச் செய்வ தும், மனோபாவத்தைத் தூண்டச் செய்வதும், உணர்ச்சியை எழுப்பச் செய்வதும் ஆகிய இந்நான்கையும் அடைவிப்பது ஆற்றல் நடையாம். அடைந்தால் தான் நடைக்கு ஆண்மைத் தத்துவமாம். இத்தகைய நடையாண்மையில் சொல்வழக்கு, சொற்பல்காமை, சொல்லமைப்பு என்பன பெறப்படும்.
சொல்வழக்கு: - பொதுச்சொல்லை உபயோகிப்பதைப் பார்க்கிலும், சிறப்புச்சொல்லை உபயோகிப்பது தான் சிறப்பாம்.

உதாரணம்: - " தண்ணீரிலிட்ட ஈயக்கலம் போல, அவர்கள் ஆற்றில் மூழ்கியாழ்ந்தனர்'' என்ற விடத்தில், ஓர் உலோகத்தைத் தண்ணீரிலிட்டாற்போல் ஆற்றில் மூழ்கியாழ்ந்தனர் என்றால் அது மனவெழுச்சியைத் தராது.


"அத்தகைய விடத்தை இக்கண்களும் பார்த்திருக்கின்றன" என்னு மிடத்தில், அத்தகைய விடத்தை யடைந்தவர் பார்த்தலாகும் என்பது அத்துணைச் சிறப்பன்று. வடமொழிக்கண் பிரதாப ருத்திரீயம் என்னும் அலங்கார நூலெழுதிய வித்தியநாதன், தன் நூலை 'முதன்மகள்' என்று புனைந்து அரயனிடத்துக் கூறினான். அதுபோல என்றும், எங்கும், அணிநலம் விளங்க உரைப்பது மேன்மையாம்.


சொற்பல்காமை: - ஒரு விஷயத்தை எவ்வளவு குறைந்த சொற்களை உபயோகித்து விளக்கலாகுமோ அவ்வளவு சொற்களை உபயோகித்தால், அவ்வளவுக்கும் உரை நடை மேன்மையுறும். வாக்கியச் சிறுமைளைக் கருதிப் பொருளை மாத்திரம் சிதைக்கலாகாது.
''சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலத்தாற் சொல்லுக செவ்வி யறிந்து'என்றார் ஆசாரக் கோவையார். மேலும், ஒரு பொருளைத் தெரிவிக்கப் பல சொற்களை உபயோகித்தலும் பயனில்லை. சந்தர்ப்பத்தால் உய்த்துணரும் வண்ணம் எழுவாயைப் பன்முறையும் காட்டாமல் எழுதலாகாது.

சொல்லமைப்பு: நன்கு விளங்க வுரைக்க வேண்டுமானால், எழுவாயை முதலிலும், பயனிலையை இறுதியிலும், அடைமொழிகளை இடையிலுமே வைத்து ஒரு வாக்கியத்தை உண்டு பண்ணவேண்டும். சில சமயங்களில் இவ்வொழுங்கை மாற்றவேண்டியும் வரும். வாக்கியத்தை வேறு வகையாக மாற்றவேண்டுமாயின், அதற்குத் தக்க பயனிருக்க வேண்டும்.

 

சில இடங்களில் ஒரு விஷயத்தைக் கூறி மறுப்பதும், மாறுதலான விஷயங்களைத் தொடுத்துக் கூறுதலும் உரைநடைக்கு மிக்க அழகுண் டாக்குவனவாம். இவையாவும் சொன் முரணாலும், பொருண் முரணாலும் பெறப்படும்.

உதாரணம்: - (a) சொன்ழாண்: -'சிநேகம் ஓரிடத்திலேயே இரா மற்போனாலும் இருக்கின்றார்கள்; " " வறியர்களேனும் செல்வர்கள் " வலியிலாரேனும் வலியுளார்; " " இறந்தார்களேனும் உயிருள்ளவர்கள்.'' (b) பொருண்மாண்: - "அசுரர்கள் தேவர்களைச் சீரணிக்க முடி யாமையினாலோ, பிராமணர்கள் அற்றை நாட்களிற் செய்யுங் கிரியைகளினாலோ, அசுரர்தம் இரக்கத்தினாலோ அச்சந்திரர் சூரியர் மீட்டும் உமிழப் பெறுகின்றனர்.''

சில சமயங்களில், சாதாரணமாகக் கூறக்கூடிய விஷயங்களை வினா விடையிலுரைப்போமானால் ஆண்மை மிக்கு உண்டாகும்.

உதாரணமாக: - உயிரினுஞ் சிறந்தது உலகத் தென்னுளது? அவ் வுயிரைப் பெற்று அடையும் பெரும்பயன் யாது? "இன்ப வாழ்க்கையே யன்றோ?" என்பதே, உயிரினுஞ் சிறந்தது உலகத்தி லொன்றுமில்லை; அவ்வுயிரைப்பெற்று அடையும் பெரும்பயன் இன்பவாழ்க்கையே யாம் என்பதினும் நடை நலத்தைப் பயக்கின்றது.


 
III. இசை.

 

வாக்கியத்தைப் படிக்கும் போது மெதுவாக ஓடும் அருவி, கரையிற் பரந்து கிடக்கும் பருக்கைக் கற்களோடு மோதுண்டு, இனிய கீதம் செய் வதையொப்பத் தோன்ற வேண்டும். தெளிவு எவ்வளவு அவசியமோ அவ்வளவு இசையும் அவசியம். இசை நலம் உண்டாவதற்கு, இன்ன மாதிரிதான் எழுதுவதென்று வரையாதல், விதியாதல் இயலாது. அஃது, எழுதுவோனது உணர்ச்சி, ஆற்றல் இவற்றைப் பற்றியது. தெளிவு, சொற்பல்காமை, இசையாகிய இம்மூன்றையும் கவனித்து எழுதினால் கட்டுரைச்சுவை எழுதலாகும். தனித்தனி விஷயங்களைத் தனியான பிரிவுகளி (Paragraphs லமைத்தே எழுதவேண்டும். எல்லா விஷயங்களையும் மனத்திற்குத் தோன்றியபடி ஒரே தொடராக எழுதினால் தெளிவினைப் பொருந்தமாட்டாது.

 

கட்டுரை வகுக்கும் விதம்.

 

ஒரு விஷயத்தைக் குறித்துக் குறித்த காலத்தில் நன்கு எழுதி முடிக்கவேண்டுமானால், முதன் முதல் எந்தெந்த விஷயங்களைப்பற்றி இக்கட்டுரையின் கண் எழுத வேண்டுமென்பதை ஆலோசிக்கவும். அங்ஙனம் யோசித்தபின்னர், அவைகளை ஒரு துண்டுக் கடிதத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். பிறகு அவ்வவ் விஷயங்களுக்குத் தனித்தனி ஒவ்வொரு பிரிவாகப் பகுத்து எழுதினால் மாணவர் முதல் எத்திறத்தினரும் திருப்தியடைவதுடன் எவரும் சந்தோஷ மெய்துவர். அத்துடன் கையெழுத்தும் நன்றாயிருத்தல் அவசியம்.

 

சுகவனம் - சிவப்பிரகாசன்

தமிழ்ப் பண்டிதர்,

ஆத்தூர்.  

 

ஆனந்த போதினி – 1923 ௵ - செப்டம்பர் ௴

 



 

No comments:

Post a Comment