Tuesday, August 25, 2020

 

அறிவில்லாதவன்

 

      நண்பனே! உன்னையே நீ'அறிவில்லாதவன்' என்று சொல்லிக்கொள்வது முண்டு. பிறன் உன்னை அறிவில்லாதவன்' என்று கூறுவதை நீ நம்புவதும் உண்டு. இது தான் தப்பிதங்களெல்லாவற்றுள்ளும் தலைசிறந்தது. தன்னையே அறிவில்லாதவன் என்று கருதுகிற ஒருவன் தன்னுடைய வாழ்நாளையே வீணாக்கி விடுவதோடு தனக்குத்தானே குழியுந்தோண்டி புதைக்கப்பட்டுப் போகின்றான். தன்னைக் கெடுத்துக் கொள்ள விரும்புகிற ஒருவன் இதைவிட வேறுவழியைத் தேடவேண்டிய அவசியமேயில்லை. ஆகவே, நீ இந்த எண்ணத்தை விட்டு மாறுதலடைய வேண்டும், மக்கட் பிறவியில் 'அறிவில்லாதவன்' என்று ஒருவனுமில்லை யென்பதே எமது முடிவான எண்ணம். ஆதலின், இதைப்பற்றி இங்கே மிகச் சுருக்கமாக விளக்குகிறோம்.

 

அறிவு: - முதலாவது 'அறிவு' என்பது எது? என்பதை யறிய நீ மிகவும் ஆவலாயிருப்பாய்! அது எதுவாயிருந்தாலும் அதைப்பற்றி நீ இப்பொழுது கவலை யடைய வேண்டாம். பின்னால் குறிப்பிடுகிற முறையில் தான் நீ அந்த அறிவை அறிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொருவருடைய மண்டையிலும் பிரகாசமில்லாத மாணிக்கக்கல்லைப் போன்ற ஒருகல் இயற்கையாகவே அமைக்கப் பெற்றிருக்கின்றது. அதுதான் அறிவு' என்பதை நீ முதலில் உறுதியாக நம்பு. இன்னும் இதை விளக்கமாகக் கூறவேண்டுமானால் சிவப்புக்கல் வியாபாரிகள் 'தலம்' என்று குறிப்பிடுவது போல அது ஒரு பட்டை தீட்டப்பெறாத கல் என்றே கூறலாம். இது இறைவனால் சீவர்களிடத்து அருள்நோக்கங் கொண்டு அமைக்கப் பெற்றதாகும். ஆனால், இதற்கு, இயற்கையாகப் பிரகாசமில்லை. இது பிரகாசிக்கவேண்டுமானால், எந்த மனிதனும் தலகம்' ஆகிய தனது அறிவை 'உலகம்' ஆகிய சாணைக்கல்லில் தீட்டித்தான் ஆகவேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகத் தீட்டுகின்றானோ அவ்வளவுக் கவ்வளவு அதிகமாக ஜ்வலிக்கும். எத்தனை பக்கங்களில் தீட்டினாலும் அத்தனை பக்கங்களிலும் ஒளிவீசும். ஆகவே இந்தப் புதிய முறையினால், கல்லே அறிவு, அறிவே கல்'' என்று நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

இலக்கணம்: - தலத்தைப் போன்ற அறிவு என்ற கல் இல்லாத மனிதன் இல்லவேயில்லை. அத்தகைய கற்களில் வேற்றுமையும் இல்லை. ஆனால், சிறிது தீட்டியவன், சிறிது அதிகந்தீட்டியவன், அதிகமாகத் தீட்டியவன், முற்றிலுந் தீட்டியவன் என மக்களை நால்வகையாகப் பிரிக்கலாம். இனிச் சாணைகளிலும் கருங்கற்சாணை, மாச்சாணை, கற்பலகைக்சாணை, அரக்குச் சாணை, செம்புச் சாணை எனப் பலவகையுண்டு. இவற்றைப்போல உழவுச் சாணை, வணிகச்சாணை அரசுச்சாணை, கைத்தொழிற்சாணை, கல்விச்சாணை எனப் பிரிவுபடுத்திக் கூறலாம்.

 

உட்பிரிவு: - இனி, இந்தச் சாணைகளின் அளவு வேறுபாடுகளும், நிற வேறுபாடுகளும் இருப்பது போல நமது ஒவ்வொரு சாணைவகையிலும் உட்பிரிவுகள் உண்டு. உதாரணமாகக் கவி என்ற செப்புச்சாணைவகையில் சிற்பம், வைத்தியம், கணிதம், வானம், ஞானம் என்ற அளவு வேறுபாடுள்ள சாணைகளும், அந்த அளவுள்ள சாணைகளிலேயே வியாசம் எழுதுதல், பிரசங்கஞ்செய்தல், கவிபாடுதல், ஆராய்ச்சி செய்தல், பிறமொழி அறிதல் ஆகிய நிறவேறுபாடுள்ள சாணைகளும் பல உண்டு. இவ்வாறே மற்ற உழவு, வணிகம், அரசு, கைத்
தொழில் ஆகிய நால்வகைச் சாணைகளிலும் அளவு வேறுபாடுகளும், நிறவேறு பாடுகளும் கூறலாம். இவற்றை விரிக்கின் மிகைபடக்கூறல் என்ற குற்றத்தின் பாற்படுமாதலின் விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறோம். ஆகவே இதனால் ஒரு மனிதன் தனக்கு இருக்கின்ற அறிவு என்ற கல்லை எந்தெந்தப் பக்கத் தில், எந்தெந்தச் சாணைகளில் தீட்டிக்கொள்ளுகின்றானோ அந்தந்தப் பக்கங்களிலெல்லாம் அவன் பிரகாசிக்கின்றான் என்பது புலப்படும்.

 

விளக்கம்: - சிற்பசாஸ்திரியினுடைய அறிவிற்கும், வைத்தியனுடைய அறிவிற்கும் சாணை வேறுபாடுகளைத் தவிர வேறொன்றுமில்லை. அதுபோலவே பிரசங்கஞ் செய்பவனுடைய அறிவிற்கும் கவிபாடுகின்றவனுடைய அறிவிற்கும் தீட்டப்பெறுகின்ற சாணையின் நிறவேறுபாட்டைத் தவிர மற்றொன்றுமில்லை. இவர்கள் எல்லோருமே அறிவுடையவர்கள் தான். இதனால் மக்கட் பிறவியில் 'அறிவில்லாதவன்' என்று எவனுமேயில்லை என்பது உண்மை.

 

சொல்லவேண்டுமானால்: - - குயவனுடைய அறிவு கலெக்டருக்கு இல்லை. தச்சனுடைய அறிவு தாசில்தாருக்கு இல்லை. ஒட்டனுக்கு இருக்கும் அறிவு மந்திரிக்கு இல்லை. நெசவு செய்யும் அறிவு கவர்னருக்கு இல்லை. திருடனுடைய அறிவு ஜட்ஜிக்கு இல்லை. அதிகமாகக் கூறுவானேன்? சிறுபெண்களுடைய ஒப்பாரி வைத்து அழும் அறிவு தொல்காப்பியத்திற்குப் பொருள் கூறும் சிறந்த புலவனுக்கு இல்லையென்றுதான் சொல்லியாகவேண்டும். அவ்வளவுதான். ஆகவே இதில் அறிவுடையவர்கள் யார்? அறிவில்லாதவர்கள் யார்? ஒருவருமில்லை.

 

கேள்வி: - நண்பனே! இதுகாறுங் கூறியவற்றைக் கொண்டு ஒருவாறு உண்மையை உணர்ந்தாயா? இனிமேல் உன்னை அறிவில்லாதவன்' என்று பிறர் சொல்லவோ நீயே கூறிக்கொள்ளவோ முடியுமா? நன்றாய்ச் சிந்தித்துப்பார். நீ அறிவில்லாதவனா?

 

ஒன்று உண்மை: - ஆனால் ஒன்றைமட்டும் ஒப்புக்கொள்ளுதல் வேண்டும். அது, அதிக ஒளியை வீசக்கூடிய அறிவையுடையவன், குறைந்த ஒளியை வீசக்கூடிய அறிவையுடையவன் என்பதே. இவ்வுண்மையான வேற்றுமை ஒன்று இருந்து தான் தீரும், ஒருவன் தனது அறிவுக்கல்லை பல பக்கங்களிலும் பலவித சாணைகளிலும் தீட்டிப் பிகாசிக்கச் செய்து கொண்டிருப்பான். மற்றொருவன் ஒன்றிரண்டு பக்கங்களில் மட்டும் இரண்டொரு சாணைகளில் தீட்டி விட்டிருப்பான். இதை ஒப்புக்கொள்ளாம லிருக்க முடியாது. ஆகவே நீ அறிவில்லாதவன் அல்லை. ஆனாலும், அதிகமான துறைகளில் அழகு பெறத் தீட்டிக் கொள்ளாதவனாக இருக்கலாம். அப்படியானால், அது உன்னுடைய முயற்சியில்லாத குற்றமே ஒழியப் பிறவியின் குற்றமல்ல என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
 

முடிவு: - இந்தச் சுருக்கமான கட்டுரையினால்,'அறிவில்லாதவன் " என்று ஒருவனிருக்க முடியாது என்பதும், எல்லா மக்கட்கும் இயற்கையாகவே அறிவு உண்டு என்பதும், அதைத் தீட்டுவதில் உள்ள துறைவேற்றுமை முயற்சி வேற்றுமைகள் மட்டும் சிறிது உண்டு என்பதும் இனிது புலப்பட்டிருக்கலாம். ஆகவே நண்பனே! உனக்கும் அறிவு உண்டு! நீயும் ஒரு மனிதனே! சிந்தித்துணர நேரமில்லாமல் உன் வாழ்நாளை வீழ்நாளாக்கி விட்டாய். கடந்தகாலம் ஒழியட்டும். எதிர்காலத்தை எதிர்பார். நீ நினைத்தால் இவ்வுலகிற் பற்பல அரிய செயல்களைச் செய்து முடிக்க முடியும். உன்னால் முடியாத காரியம் இவ்வுலகத்தி லொன்றுமில்லை.

 

எழந்திரு: - பகவான் ஸ்ரீ கௌதம புத்தர், மகமது நபிகள், ஏசுகிறிஸ்துநாதர், மெய்கண்டதேவர், இராமாநுஜர் முதலிய அவதார புருடர்களும், ஸ்ரீ இராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞானபுருடர்களும், சிவாஜி, சோழன், பாண்டியன் முதலிய புவி அரசர்களும், கம்பர், வள்ளுவர். இளங்கோவடிகள் முதலிய கலி அரசர்களும், கோபால கிருஷ்ண கோகலே, திலகர் பெருமான், C. R. தாஸ், டாக்டர் நாயர், சர். பி. தியாகராயர் போன்ற இறந்தகால தேசாபிமானிகளும், மகாத்மாகாந்தி, வைக்கம் வீரமூர்த்தி, பனகாலரசர், திரு. வி. கலியாணசுந்தர முதலியார் போன்ற நிகழ்கால தேசாபிமானிகளும் உனது முன்னோர்கள் என்பதை நினைவு கூர்க. நீ அவர்கள் வழிவந்தவீரன் என்பதை உணர்க, அப்பொழுதே - அந்த நிமிடமே உனக்குள்ளேயே ஒரு ஒளிவீசுவதைக் காண்பாய். நீ பிறந்த சமயமும், உன்னைத் தாங்கிய தாய் நாடும், உன்னை வளர்த்த தாய்மொழியும் உனது வீரம் பொருந்திய அருஞ்செயல்களை எதிர்பார்க்கின்றன! தம்முடைய மகிமைகுன்றிய இக்காலத்தில் அவைகள் அழகிய கரங்களை நீட்டி உன்னை நோக்கி அன்போடு அழைக்கின்றன. நண்பனே! எழுந்திரு! உனது அறிவை உலகிற்குப் பயன் படுத்துக –

 

கி. ஆ. பெ. விசுவநாதபிள்ளை,

திருச்சிராப்பள்ளி.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment