Tuesday, August 25, 2020

 

அறிவின் தன்மை

A. S.

      அறிவு இரு வகைப்படும். ஒன்று இயற்கை யறிவு; மற்றொன்று செயற்கை யறிவு. இவற்றுள் இயற்கை யறிவினுள்ளும் இரு பிரிவுகளுண்டு. அவை   ஐயறிவு பகுத்தறிவு என இருவகைப்படும். இவ் விரண்டினுள் ஐயறிவென்ப ஐம்பொறிகளின் வழியாக மனிதரும் விலங்காதிகளும் சமமாகப் பெற்றுள்துளது. பகுத்தறி வென்பது ஐம் பொறிகளின் வழியாகவன்றி மன வுணர்ச்சியா லறியப் பெறுவது. இப் பகுத்தறிவினுள்ளும் சாதாரணப் பகுத்தறி வென்றும், விசேடப் பகுத்தறி வென்றும் இரு பிரிவுகளுண்டு. உதாரணமாக,
 நெருப்புச் சுடும், வெள்ளம் இழுத்துச் செல்லும், நாகம் விஷமுடையது என்பன போன்றவை சாதாரணப் பகுத்தறிவாகும். இச் சாதாரணப் பகுத் தறிவானது மனிதர்க்கும் விலங்குகட்கும் பொதுவாக இயற்கையிலேயே அமைந்துள்ளது. விசேடப் பகுத்தறி வென்பது செய்யத்தக்க தின்னது, செய்யத்தகாத தின்னது, இன்னது செய்தால் இன்னது விளையும் என்பன வாதியாகப் பொது வகையில் நுட்பமாக உணரும் மன வுணர்ச்சியே யாகும். இவ் வுணர்ச்சி விலங்கினங்கட்கின்றி மக்கட்கே விசேடமாக அமைந்துள்ளது.
இனி நூலறி வென்பது புண்ணிய பாவங்கள், மோக்ஷ நரகங்கள் இவற்றினிலைகளை யறிதலும், அவ் வறிவை இடனறிந்து செலுத்தலும், இதனை, இவ்வமயம், இன்னவாறு, இதனாற் செய்தல் வேண்டும், இச் செயலின் அளவிது, இச் செயலால் விளையும் பயனிது, செய்யாத விடத்து நேரும் தீங்கிது என்பனவாதி நுட்பங்களையும், நமது முன்னோர் கூறி வைத்தருளிய விதிகளையும் நூல் வழியாகத் தெரிந்து கொள்ளலும் பிறவுமாம். தவிர, குரு தேசத்தாலும் இடைவிடாத பயிற்சியாலும் நிலைமை, நிலையாமை என்பவற்றை யுணர்ந்து உலகைத் துறந்து வீட்டை விரும்பி விரதம், தவம் முதலியவற்றைப்பற்றி நிற்கச் செய்வதே தத்துவ அறிவெனப்படும். மேற்கூறிய இரண்டினுள் இயற்கை யறிவின் பாற்பட்ட பகுத்தறிவும், செயற்கை யறிவின்பாற்பட்ட நூலறிவும் ஒன்றோடொன்று சேர்ந்தே பெரும் பயன் விளைக்கும். பகுத்தறிவு ஒரு முளை போலும், நூலறிவு மழை போலும், பகுத்தறிவு கண்ணொளி போலும், நூலறிவு கதிரொளி போலும், பகுத்தறிவு ஒரு புரவி போலும், நூலறிவு அதனை நடத்தும் பாகன் போலும். ஆகவே, பகுத்தறி வில்லார் எத்தனை நூல்களைக் கற்கினும் பயிரில்லாவிடத்து மழையும், கண்ணில்லார் முன்பு இரவியும், புரவியில்லா விடத்துப் பாகனும் போன்று பயன்படுமா றில்லை. அங்ஙனமே, நூலறிவில்லாத போது பகுத்தறிவானது, மழை முகங் காணாப் பயிரும், மதியொளி காணாழியும், பாகனில்லாப் பரியும் போன்று பயன்படுமாறில்லை. சிலர் பல நூல்களைக் குருட்டுப் பாடஞ் செய்து உருப் போட்டிருந்தும் அந்நூல்களா லடையும் பயனை அவரும் பிறரும் ஒரு சிறி தும் அடையாமையும், பின்னுஞ் சிலர் போதிய மதியுற்றிருந்தும் நூலறிவின் மையால் அவர் அறிவு நேர்வழியிற் செல்லாது போதல் பற்றி அவர்க்கும்
 பிறர்க்கும் பயன் படாமற் போவதையும் நாம் நேரிற் காண்கிறோமன்றோ?  ஆதலின் இவ்விருவகை அறிவும் ஒருங்கே சேரப் பெற்றாரே அறிவுடையாராவர். அவரெய்தாப் பொருள் எதுவுமில்லை. அவரையே எவரும் மதித் துப் பின்பற்றுவர்.

            "அறிவுடையா ரெல்லா முடையர் அறிவிலார்

            என்னுடைய ரேனு மிலர்.''ஆனந்த போதினி – 1929 ௵ - பிப்ரவரி ௴

ஆனந்த போதினி – 1929 ௵ = பிப்ரவரி

 

No comments:

Post a Comment