Tuesday, August 25, 2020

அறிவுடைமை

அரிது அரிது மானிடராதல் அரிது" என்பர் பெரியோர். அன்னார் மானிடரை இங்கனம் புகழ்ந்து கூறுவதற்கும், இவர் அங்ஙனம் கூறப்படுவதற்கும் தக்க காரணம் இருக்கவே செய்யும். அஃது யாதாக இருக்கலாம்? தான் இருப்பதனாலேயே தன்னைப் பெற்றிருப்பவனை அனைத்தையும் பெற்றவனாகச் செய்யும் அறிவுடைமையே அஃதாம்.

 

ஒருவன் ஒன்றனை மாத்திரம் பெற்று, அதைக் கொண்டே அனைத்தையும் பெற்றவனாக வேண்டுமாயின், அவனிடம் அறிவுடைமை இருத்தல் வேண்இம். அறிவுடைமை அறிவை உடைத்தா யிருக்கும் தன்மை. இத்தொடருக்குக் "கல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடு உண்மை அறிவினையும் பெற்றவனாயிருத்தல்" என்று பொருள் கூறுவர் ஆசிரியர் பரிமேலழகர்.

 

அறிவு தன்னை உடையவனை உடனிருந்து காக்கும் கருவியாவது மனத்தை எண்ணியவாறே செல்லவிடாமல் அடக்கி ஆள்வது. பிறரிடமிருந்து மெய்ப்பொருளைக் காணத் துணை புரிவது; பிறர் நன்கு மதிக்கத்தக்க சொற்களை சொல்லச் செய்வது; நுண் பொருள்களை ஆராயத் துணையாவது; உலகத்தோடு ஒத்து நடக்கச் செய்வது. விருப்பு வெறுப்பற்று இருக்கச் செய்வது; நிறைவேற்றக்கூடியதையே தொடங்கத் தூண்டுவது; அஞ்சவேண்டியவற்றிற்கு அஞ்சவும், அஞ்சக்கூடாதவற்றிற்கு அஞ்சாமலும் இருக்க அமைப்பது, வரக்கூடியதாக இருந்த தீங்கினை முற்கூட்டி அறிந்து வராவண்ணம் தடுத்துக்கொள்ளும் வன்மையினைப் பெற்றது. “அறிவுடையார் எல்லாம் உடையர்" "நுண் உணர்வு இன்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெரும் செல்வம்" "அறிவின் பெருமை பெரிதும் விரிவானது."

 

உலகத்துத் தோன்றிய மக்கள் ஒரு தலையாக விரும்புவது பேரின்பப் பெருவாழ்வு எய்துவதையே. அந்தப் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற விரும்பினால் அன்னார் அறிவினைப் பெற்றவரா யிருத்தல் வேண்டும். அறிவுடையராய் அறிவைப் போற்றி அறிவு மயமாய் விளங்குபவரே இன்பப் பேற்றினை எய்துதற்கு உரியவராவர்.

 

அறிவு பிறப்பால் வருவதும் அன்று; குலத்தால் வருவதும் அன்று; மொழியால் வருவதும் அன்று; பொருளால் வருவதும் அன்று; அதிகாரப் பதவியால் வருவதும் அன்று; ஆனால், அந்த அறிவு அன்பால் பெறலாவது, ஆசிரியர் அருளால் பெறலாவது; ஆண்டவன் திருவருளால் பெறலாவது.

அறிவை உண்டு பண்ணி வளர்த்துக்கொள்ளுபவன் ஆண்டவனை வணங்குபவன் ஆவன்; அறிவைப் புகழ்பவன் ஆண்டவனை வாழ்த்துபவன் ஆவன்; அறிவைப் புகட்டுகிறவன் தானத்தைக் கொடுக்கிறவன் ஆகிறான். அறிவை உடையவன் “எந்த வழி சரியானது; எந்தவழி தவறானது' என்பதைப் பகுத்தறிந்து உணர்ந்து ஞானத்தைப் பெற்றவன் ஆகிறான்.

 

மனிதர்களின் போக்கு வரவு அற்ற பாலைவனத்திலும் ஒருவனுக்கு அவனிடத்துள்ள ஞானமாகிய அறிவு உற்ற துணையாக நின்று உதவி புரியும்: அறிவு ஒருவனுக்கு உத்தம நண்பனுமாகும்; பகைவர்களை வெல்லத் தக்க சிறந்த ஆயுதமும் ஆகும்; மோட்ச வீட்டை அடைவிக்கும் உண்மையான - நேரான வழியைக் காட்டுவதும் ஆகும்.

 

அறிவைப் பெற்றவனே இம்மை மறுமைப் பயன்களை எய்துதற்கு உரிய இன்பங்களை ஒரு சேர எய்தப் பெறுபவன் ஆவன். அறிவே இன்பம்; இன்பமே அறிவு; அறிவு 'ஒன்றாகக் காண்பதே காட்சி' என்ற உணர்ச்சியை உண்டாக்குவது. அறிவு, எல்லாம் ஒன்றே என்ற உண்மையை உரம்பெறச் செய்வது. அறிவு கைவரப் பெறின், துன்பம் நீங்கும்; இன்பம் பெருகும்; எல்லாம் நன்றாம்,

 

ஆதலின், மக்களாய்ப் பிறந்தவர் சிலவற்றைப் பெற்றுக் குறைவு உள்ளவர்களாக வாழாமல், எல்லாவற்றையும் பெற்று நிறைவு உள்ளவர்களாக வேண்டி அறிவைப் பெறுமாறு முயலுவாராக.

 

ஆனந்த போதினி – 1933 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment