Wednesday, August 26, 2020

 அற்பம் அற்பமன்று

 

ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்ப்போமானால் அதில் விசேஷ தத்துவமிருப்பது தெரியவரும். ஜனங்கள் விஷயங்களை அவ்வவ்வாகக் கவனிப்பதில்லை. ஒவ்வொரு மனிதர் பேசும் வாக்கியங்களையும், செய்யும் ஜாடைகளையும் கவனிப்போமானால் ஆஹா! என்னே மனிதனின் அபார சக்தி! இவ்வளவு நுட்பமான வாக்கியத்தில் எவ்வளவு சாராம்சமடங்கி யிருக்கின்றது என்று தெற்றெனப் புலப்படும்.

 

உதாரணமாக ஒரு சங்கதி சொல்லுகிறேன். 7,8 வயதுள்ள சிறுவன், கையில் ஒரு ரொட்டித் தட்டை வைத்துக்கொண்டே ஊரெல்லாம் திரிந்து, ஓடியா, ராஜா, ஒரு அணா விற்ற ரொட்டி ஒன்பது காசு" ஒன்று சொல்லி விற்றுக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். இன்னும் அநேகரும் 'பார்த்தார்கள். இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வாக்கியயத்தில் ஒன்றும் விசேஷ மிருப்பதாக தோன்றவில்லை போலும். அந்தோ! என்னே மனிதரின் பொறாமை! இன்னொருவன் புத்தி சாதுரியத்தைக் கண்டு மனஞ்சகியாதிருக்கிறோமே! இன்னொருவன் நம்மைவிட புத்திசாலியென்று நமக்கு நன்றாகத் தெரிகிறது. நாம் குட்டிக்கரணம் போட்டாலும் அவனைப் போல் ஆகப்போவதில்லை; இருந்தாலும் அவனைக் கௌரவஞ் செய்ய மனம் வருவதில்லை. ஆஹா! ஆஹா!

 

நிற்க, இந்தச்சிறுவனின் வாக்கியத்தில் எவ்வளவு அர்த்தமிருக்கிறதென்பதைக் கவனிப்போம். "ஓடியா, ராஜா, ஒரு அணா விற்ற ரொட்டி ஒன்பது காசு" என்கிறான்; ஒவ்வொரு பதமாக எடுத்துக் கொள்வோம்.

 

"ஓடியா!" அதாவது நடந்துவரக்கூடாது. நடந்துவந்தால் காரியம் மிஞ்சிவிடும். இந்த அருமையான பதார்த்தத்திற்கு எவ்வளவு போட்டியென்கிறீர்கள். பையன் தான் ஊரெல்லாம் காலையிலிருந்து மாலை வரைக்கும் ரொட்டிகளை வைத்துக்கொண்டு திரிகிறானே. இதற்குள் ஜனங்களுக்கு ஆத்திரம் பாருங்கள். நீ முன் நான் முன் என்று வருகிறார்கள். இவர்கள் இப்படிச் செய்வதில் அனேக ஜனங்களுக்குக் கஷ்டமுண்டாகிறது.
அவர்கள் சாதுக்கள். போட்டி போடப் பிரியமில்லை. அதனால் ஏமாந்து போவதோ? வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கவேண்டுமோ? வெகுநன்று. துன்பத்தை நீக்கத் தான் பையன் '' ஓடியா'வென்று எச்சரிக்கை செய்கிறான். ஓடியா வென்றால் கால் தான் ஓடிவர வேண்டுமென்பதில்லை. அது உங்கள் சௌகரியம். ஆமை மாதிரி விடா முயற்சி செய்து ஒரே ஓட்ட நடையாக வந்தால் வாருங்கள், ஸைகிலில் ஏறி வாருங்கள். ஜட்காவில் வாருங்கள். ஏரோப்ளேனில் வாருங்கள். எப்படியாவது வந்து சேர்ந்து விடுங்கள். இல்லை, உங்களுக்குச் சக்தி உண்டானால் நினைக்கும்போது அங்கே வத்து நில்லுங்கள்.

ஜனங்கள் போட்டி மாத்திரம் இருந்தால் பையன் அவ்வளவு கவலைப்படமாட்டான். அவனும் மனித கோஷ்டியில் சேர்ந்தவன் தானே. நீர் சாப்பிட்டால் என்ன நான் சாப்பிட்டாலென்ன, எல்லோரும் சகோதரர்கள் தாமே. அதற்கல்ல, இந்தப் பாழும் ஈக்களும் எறும்புகளும்.......... என்னவென்று சொல்வது! இவைகளை யார் கூப்பிட்டார்கள். மனிதருக்குச் சரியாக இவைகளும் போட்டி போடுகின்றன வென்றால் காலத்தின் கொடுமையை என்ன வென்று சொல்வது. சிற்சில சமயங்களில் பையனுக்கே தெரிவதில்லை-- தான் ரொட்டி விற்கிறானோ அல்லது ஈ எறும்பு விற்கிறானோ வென்று! அப்படிச் சூழ்ந்து கொள்ளுகின்றன. பையனுக்குத் தன்னுடைய கோஷ்டியென்றால் நிரம்ப அபிமானம். ஈ எறும்பு ரொட்டிகளை அடித்துக் கொண்டு போகக்கூடாது நம்முடைய சகோதரராகிய மனிதருக்கே இந்தப் பதார்த்தம் போகவேண்டுமென்று அவன் படும் பாடு இவ்வளவவ்வளவில்லை. அதற்குத்தான் "ஓடியா' என்று நம்மை விளித்துச் சொல்கிறான். பேஷ்! பையா! உன் தேசாபிமானமே தேசாபிமானம்! இன்னொன்று: நாம் ஓடி வராவிட்டால் மிச்சமாகவிருக்கும். ரொட்டிகளையும் ஈ எறும்புகள் நல்லதாயிற்று என்று தாமே தின்று விடுகின்றன. இதற்காகத்தான் நம்மை ஓடியா, ராஜாவென்று சிறுவன் இன்சொல்லால் இனிய குரலோடும் அன்பு ததும்பும் வாக்கியங்களால் அழைக்கிறான்.

 

"ராஜா" ஏன் "ஐயா' வென்று சொல்லக்கூடாது? அல்லது "ஓடியா பிரதர்' என்று சொல்லலாகாதா? அல்லது ''ஓடியா பாய்" என்று சொல்லக்கூடாதா? ராஜாவென்று ஏன் சொல்லவேண்டும்? அதில் தானிருக்கிறது சூக்ஷ்மம். ராஜாவும் இந்த உணவைச் சாப்பிடக் கொடுத்து வைக்க வேண்டுமாம்! பாருங்கள் பையன் சாதுரியத்தை. அரசனிடத்தில்போய், என்ன ஓய், உமக்கு இந்த உணவு அருகதையற்றதோ, நீர்மாத்திரம் என்ன அவ்வளவு உயர்த்தியென்று சொல்வது நியாயமா? ராஜத்துரோகமாகாதா? அதைவிட ஓடியா, ராஜாவென்று விட்டால் ராஜனும் மாளிகையைவிட்டு ஓடிவர வேண்டியதுதான். அப்போது அவனுக்கும் அந்தப் பொருள் போஜனத்திற் குரியதென்று ஏற்படவில்லையா? ராஜாக்களும் இந்தப் பொருளை விரும்பும்படியான அவ்வளவு அருமையானது என்று அர்த்தம். இன்னொன்று, பையன் அனேகமாய் பூர்ண ஸ்வதந்திரக் கக்ஷியைக் சேர்ந்தவனா யிருக்கவேண்டும். அரசன், பிரஜையென்ற மாறுபாடுகள் அவனுக்கு இஷ்டமில்லை. எல்லோரும் சமமே வென்பது அவன் சொள்கைபோலும். அரசனும் மற்ற ஜனங்களோடு கலந்து கொள்ள வேண்டுமென்பது அவனுடைய அபிப்பிராயம். ஜனங்கள் அரசனோடு சமத்துவம் பாராட்டத் தயாராயிருப்பார்கள். அரசனுக்குத்தான் அது கொஞ்சம் கடினமாகவிருக்கும். உன்னத பதவியிலிருந்து கீழே யிறங்குவதென்றால் எவருக்கும் கஷ்டந் தானே. அது தான் பையன்ராஜனுக்குத் தைரியஞ் சொல்லுகிறான். “ஓடியா ராஜா."

 

மேலும் ஜனங்களுக்கு முகஸ்துதியென்றால் பிரியம். எவ்வளவு குரூ பியாக யிருக்கட்டும் “ஏ மன்மதா" வென்று வேறு ஒருத்தனை நோக்கிச் சொன்னால் தன்னைத்தான் என்று நினைத்துக் கொள்வான். அஷ்ட தரித்திரம் சொட்டும் ஒரு மாதிடம், அம்மணி, சாக்ஷாத் லக்ஷ்மி தேவியைப்போல் தங்கள் முகத்தில் காந்தி வீசுகின்றதே என்றால் அவளுக்கு உச்சி குளிர்ந்துவிடுகிறது. பிச்சைக்காரனையும் “தர்ம தாதா" வென்றால், 'ஆமாம்' என்கிறான்' ஆகையால் பையன் ஜனங்களைப் பொதுவாக ராஜாவென்றழைக்கிறான். புருஷேஷ ராஜா வென்று ஒரு வசனமுண்டு. புஷ்பேஷு ரோஜா, புருஷேஷ ராஜா, நாரேஷு லக்ஷ்மி, நகரேஷு காசி யென்று சொல்வார்கள். ஆகையால் நமக்குள் எவ்வளவு குறைவிருந்தாலும் புருஷர்களில் சிரேஷ்டனான ராஜாவென்று விட்டால் உள்ளங்கால் எரிகிறறெது. (அதாவது உச்சி குளிர்ந்தால், உச்சியின் சூடு உள்ளங்காலுக்குப் போய்விடுமல்லவா?)

 

இரண்டாவது ஸ்வராஜ்யம் வந்துவிட்டால், நம்மில் எவராவது ஒருவர் ராஜாவாகிவிடலாம். எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கிறதோ? நாம் வழியில் பார்க்கும் மனிதரில் யார் அரசராவார் என்று சொல்லமுடியும்? ஆகவே, பையன் முன் ஜாக்கிரதையாக எல்லோரையும் ஒருமிக்க ராஜா வாக்கிவிட்டான்.

 

ஒரு அணா விற்ற ரொட்டி, எவ்வளவு இலவசம்! ஒரே அணாதான்! வேறு சந்தர்ப்பத்தில் ஒருமனிதன் ஒரு புத்தகத்தை விற்கும்போது, “கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம், திருவருட்பா, நளவெண்பா, கந்தர் அனுபூதி, பிள்ளைத்தமிழ் இவ்வரிய நூல்கள் அடங்கிய புத்தகம் விலை ஒரே அணாதான்" என்றான். புத்தகத்தை அவசரமாக ஒரு அணா கடனாவது வாங்கி வாங்கினவர்கள் புத்தகத்தைப் பிரித்துப் பார்க்க, அது மெட்ரிக்குலேஷன் பரீக்ஷைக்கு நியமிக்கப்பட்ட பாடல்களிலிருந்து பொறுக்கிய துணுக்குகள் சேர்ந்த புத்தகமாக விருந்தது.

 

ஆனால் பையன் பொருள் அப்படியல்ல. நேர்த்தியான வஸ்து. எல்லா ஜனங்களும் தின்று ஆனந்திக்க வேண்டுமென்றே ஒரு அணாவிற்கு விற்றுவந்தான். இப்போது பாருங்கள் அவன் தயாள குணத்தை; விலையை இன்னும் குறைத்துவிட்டான். ஏன்? இன்னும் அதிகமான ஜனங்கள் வாங்கி யுண்பதற்கே. இந்தியாவில் சராசரி வருமானம் ஒரு அணாவும் இரண்டு மூன்று காசுகளும் என்று அவனுக்குத் தெரியும். இதில் ஒரு அணா போய்விட்டால் மூன்று காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதற்குப் பதிலாக 9 காசு விலை வைத்தால் அரையணா மிச்சமாகும். அரையணாவைக் கொண்டு உலகாளலாம். இன்னொன்று, சில மனிதருக்கு காசுக்கும் அணாவிற்கும் வித்தியாசமே தெரியாது. ஆனால் அவர்களுக்கு விலை அதிகமானதையே வாங்கத்தோன்றும். விலை அதிகமான வஸ்து எப்போதும் நல்ல வஸ்துவாகத்தானே இருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த சிறுவன் தகப்பனார் ஒரு கோர்ட்டில் 3-ம் ஜட்ஜ். அவன் முதல் ஜட்ஜ் பிள்ளையோடு விளையாடிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் சண்டை யுண்டாய்விட்டது. முதலவன் பின்னவனைப் பார்த்துச் சொல்கிறான், அடே, உன் அப்பா ஒரு ஜட்ஜிதானே, என் தகப்பனார் 3 ஜட்ஜியடா வென்று! அதுபோல 1 அணா ரொட்டி, 9 காசுக்கு விற்றால் சில பணக்காரர்கள், சரி, 9 விலை சொல்லுகிறானே வாங்கலாமென்று ரொட்டியை வாங்கிவிடுவார்கள்.

 

அன்பர்களே! பார்த்தீர்களா! எவ்வளவு தாத்பரியம் அடங்கியிருக்கின்றது இந்த சிறு வாக்கியத்தில். ஆகவே விஷயங்களை ஆராய்ந்தறியும்படி உங்களை வணக்கமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். கடவுள் கிருபை கூர்வாராக.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment